Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 080 (The Coming of Christ)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

7. கிறிஸ்துவின் வருகையும், வரலாற்றின் முடிவும் (மாற்கு 13:24-27)


மாற்கு 13:24-27
24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; 25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். 26 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். 27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.

இயேசு ஜீவிக்கிறார். அவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். உலகம் முழுவதிலும் அவருடைய ஆவியின் வல்லமையை பிரசங்கிக்கும்படி அவரைப் பின்பற்றுவோரை அனுப்புகிறார். சோதனைகள் மத்தியில் அவர்கள் உண்மையுடன் இருப்பார்கள். கடைசி நாட்களில் அவர்கள் போராட்டங்கள் மத்தியிலும் உண்மையுடன் இருப்பார்கள்.

ஒரு மணவாளன் தன்னுடைய மணவாட்டியைக் குறித்து சிந்திப்பதைவிட அதிகமாக கிறிஸ்து தமது சபையைக் குறித்து சிந்திக்கிறார். அவருடைய எல்லா சிந்தனைகள், திட்டங்கள், நம்பிக்கைகள் அதை மையமாகக் கொண்டுள்ளன. அவருடைய அன்பு தெய்வீகமானது, நித்தியமானது. அது ஒருபோதும் தோற்பதில்லை.

பூமியில் அந்திக்கிறிஸ்து முழுப் பகையுடன் செயல்படுவான். கிறிஸ்துவின் சபையை துடைத்தெறிய முயற்சிப்பான். இருப்பினும் அவள் உயிர்வாழ்வாள். சில உண்மையுள்ள விசுவாசிகள் மரிப்பார்கள். ஆனாலும் மீந்திருப்போர் உயிர் வாழ்வார்கள். நாம் வாழ்ந்தாலும் அல்லது மரித்தாலும், ஆண்டவருடையவர்கள். பாதாளத்தின் வாசல்கள் கிறிஸ்துவின் சபையை மேற்கொள்வதில்லை.

அந்திகிறிஸ்து தனது பெருமையினால் இறைவனுடனும், அவருடைய குமாரனுடனும் யுத்தம் செய்வான் என்று தீர்க்கதரிசனங்கள் குறிப்பிடுகின்றன. அவன் மிகப்பெரிய அணுகுண்டு மூலம் நட்சத்திரங்களையும் அசைக்க முயற்சிப்பான். ஆவிகளின் சேனைகளை விண்வெளிக்கப்பல்கள் மூலம் தாக்குவான். அவன் பூமியை மட்டுமல்ல, அண்டவெளி அனைத்தையும் மாசுபடுத்துவான். அது சூரியனின் முகத்தை ஒரு ஆவியைப் போல மூடி மறைக்கும்.

பனி, இருள், புயல், பஞ்சம் என்று அனைத்தையும் நமது சீரழிந்த உலகைத் தாக்கும். முழு உலகமும் குடிகாரனைப் போல தள்ளாடும். நட்சத்திரங்கள் கீழே விழும்.

இறைவன் தமக்கு அர்ப்பணிக்காதவர்களை அவர்களுடைய அழிவுக்கென்று விட்டுவிடுவார். மனிதன் துன்பத்தையும், நியாயத்தீர்ப்பையும் அவனாகவே உருவாக்கிக் கொள்கிறான்.

அந்த மகா உபத்திரவகாலத்தில் தீமையானது அதனுடைய உச்சக்கட்ட நிலையை அடையும். அப்போது கிறிஸ்து இந்த உலகிற்கு வருவார். ஒவ்வொரு கண்ணும் அவரை நோக்கிப் பார்க்கும். முன்பு அவர் புவிஈர்ப்பு விசையை மேற்கொண்டு தமது பிதாவிடம் இந்தப் பூமியில் இருந்து ஏறிப்போனார். இப்போது எல்லா மனிதர்களின் கண்களும் காணும்படி, அவர் திரும்ப வருவார். இடிமுழக்கத்தின் போது ஏற்படும் மின்னலைப் போலவும், சூரிய பிரகாசத்தைவிட அதிகமான ஒளியுடனும், கிழக்கிலிருந்து மேற்குவரை அவர் தோன்றுவார். பூமியின் இருண்ட பகுதியும் அப்போது வெளிச்சத்தைப் பெறும்.

அவருடைய வருகை இந்தப் பிரபஞ்சத்தை அசையப் பண்ணும். படைத்தவர் நியாயந்தீர்க்கும்படி வருவார். அனைவரும் அவருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். நியாயத்தீர்ப்பு நாளின் போது பிசாசுகள் நடுங்கும். கர்த்தருடைய நாளின் போது உயிருடன் இருக்கும் மக்கள் பயந்து, மலைகளை தங்கள் மீது விழும்படி சொல்வார்கள். இறைவனுடைய முகத்தை பார்க்க முடியாமல் இருளான குகைகளை நோக்கி ஓடுவார்கள்.

இயேசு மிகப்பெரிய வல்லமையுடனும், மகிமையுடனும் வருவார். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் வரும்போது பரலோகத்தின் தூதர் சேனையின் பெருந்திரள் அவருடன் இணைந்து கொள்ளும். வார்த்தைகளின்றி இறைவனுடைய குமாரனின் மகிமை ஒளிக் கீற்றுகள் மக்களை நியாயந்தீர்க்கும். அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்தரிக்கப்படவில்லை. அவருடைய மகிமை ஒளிக் கீற்றுகளின் பெயர்கள் சத்தியம், பரிசுத்தம், அன்பு, தாழ்மை, விசுவாசம், சாந்தம், இரக்கம், பொறுமை என்பவைகளாகும்.

இயேசுவே நமது நியாயத்தீர்ப்பின் அளவுகோலாக இருக்கிறார். அவருடைய அன்பு பரலோகத்தை கட்டியமைக்கின்றது. அவருக்கு முன்பாக ஒருவனும் நீதிமான் இல்லை. அவருடைய இரத்தத்தினால் நீதிமானாக்கப்படுகிறோம். அவருடைய ஆவியினால் வாழ்கிறோம்.

முதலாவது கிறிஸ்து வந்தபோது, நியாயாதிபதியாக வரவில்லை. அவர் மனுஷகுமாரனாகவும், நம்மைப் போல சோதிக்கப்படும் பிரதான ஆசாரியராகவும் வந்தார். நமது பலவீனத்தைக் குறித்து அவர் பரிதவிக்கிறார். இறைவனுடைய குமாரனின் மகிமை ஆறுதலைக் கொண்டு வருகிறது. அவர் மெய்யான மனுஷகுமாரன். அவருடைய கைகளிலும், கால்களிலும் சிலுவையின் அடையாளங்கள் இருக்கும். அவருடைய வருகையானது ஆறுதல், சமாதானம், துதி, மகிழ்ச்சியை, திருச்சபையில் கொண்டு வரும்.

அவர் ஒவ்வொரு விசுவாசியையும் பெயர் சொல்லி அறிந்திருக்கிறார். தமது ஆவியினால் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். “பயப்படாதேயுங்கள். நான் உங்களை மீட்டுக்கொண்டேன். உங்களைப் பெயர் சொல்லி அழைத்தேன். நீங்கள் என்னுடையவர்கள்”. பெயர்சொல்லி அழைக்கப்பட்டவர்களை கூட்டிச் சேர்க்க அவர் தமது ஆயிரக்கணக்கான தூதர்களை அனுப்புவார். கிறிஸ்துவின் வருகையின் போது மிகப்பெரிய பிரிவினை தோன்றும். மறுபடியும் பிறந்தவர்கள் வாழ்வை அடைவார்கள். மரணம் அவர்களை மேற்கொள்ளாது. இறைவனுடைய மகிமையின் ஒளிக்கீற்றுகளின் வல்லமை அவர்களை பட்சிக்காது. அவர்களில் ஆவியின் கனி தோன்றும். அவர்கள் தங்களை இழுக்கின்ற ஆண்டவரை நோக்கி வருவார்கள்.

மத்தேயு நற்செய்தியை வாசியுங்கள் (25:31-42). கிறிஸ்துவின் வருகையின் போது என்ன நிகழும் என்பதை நீங்கள் விபரமாக அறிய முடியும். இந்த வசனங்களின் வெளிச்சத்தில் நீங்கள் உங்களை சோதித்துப் பாருங்கள். நீ எங்கே இருக்கிறாய்? உனது சூழ்நிலை என்ன? உனது கீழ்ப்படியாமையினால் நீ அழிந்துபோவாயா? அல்லது ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கிறாயா?

எவ்வளவு பெரிய சந்தோஷம், பூமியின் பகுதிகளில் இருந்து மட்டுமல்ல, பரலோகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து இறைவனின் மக்களை தூதர்கள் கூட்டிச்சேர்ப்பார்கள். கர்த்தருக்குள் மரித்தவர்கள் எழுந்து இயேசுவுடன் என்றென்றும் வாழ்வார்கள். அவர்கள் பவுல், பேதுரு, யோவான், நற்செய்தியாளராகிய மாற்குவைக் காண்பார்கள். ஆண்டவரிடம் இருந்து வந்தவர்கள் யார்? வராதவர்கள் யார்? என்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்படுவோம். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிறந்தவர்களோ பணக்காரர்களோ, ஞானிகளோ, புகழ் வாய்ந்தவர்களோ அல்ல. கர்த்தருடைய பாக்கியவான்கள் குறித்த வசனங்கள் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறும். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே வாரும். நாங்கள் உம்மைக் காண விரும்புகிறோம். நீர் எங்களுக்காக மரித்தீர். எங்களை நீதிமான்களாக்க எழுந்தும் இருக்கிறீர். நன்றியுணர்வு, அன்பு, துதி ஏறெடுத்தலை எங்களுக்கு கற்றுத்தாரும். உம்மை சந்திக்க எங்களை தகுதிப் படுத்தியிருக்கிறீர். உமது வருகையைக் குறித்த நம்பிக்கையை கடைசி நாட்களில் நாங்கள் இழந்து போகாதபடி உதவி செய்யும். பூமி அழியும் போது, எரிபொருள் மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும். சூரியன் தனது வெப்பத்தை இழக்கும். நீரே எங்கள் வாழ்வின் ஒளி. நாங்கள் அனைவருக்கும் பணி செய்யும்படி எங்களை பரிசுத்தப்படுத்தும். நீர் பாவிகளுக்கு பணிவிடை செய்ய உமது ஜீவனையே கொடுத்தீர். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நீர் எங்களுடன் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவராகிய இயேசுவே வாரும். உமது சபையை பூரணப்படுத்தும். நாங்கள் வலிமையுள்ள சாட்சியாக வாழும்படி உதவும். பாவத்தில் மரித்தவர்கள் நீர் தரும் வாழ்வைப் பெறவும், உம்மை சந்திக்க ஆயத்தம் அடையவும் வழிநடத்தும். ஆமென்.

கேள்வி:

  1. கிறிஸ்துவின் வருகைக்கான கடைசி அடையாளங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 07:55 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)