Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 012 (Peter’s Sermon at Pentecost)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)


அப்போஸ்தலர் 2:22-23
22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

பரிசுத்த ஆவியானவர் தம்மைப் பற்றிப் பேசாமல் கிறிஸ்துவையே மகிமைப்படுத்துகிறார். அவர் அன்பாக இருப்பதால் அவரிடத்தில் சுயநலமில்லை. பரிசுத்த திரித்துவத்திலுள்ள ஒவ்வொரு நபர்களும் ஒருவரையொருவர் நேசித்து, ஒருவர் மற்றவரிடத்தில் நம்மை நடத்துகிறார்கள். குமாரன் பிதாவை மகிமைப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் குமாரனை மகிமைப்படுத்துகிறார். இரட்சிப்பை நிறைவேற்றும்படி குமாரன் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதைப் போல, வானத்திலும் பூமியிலும் அனைத்து அதிகாரமும் உடைவராக குமாரனைப் பிதா தந்தருளினார். இறைவனை அறிய விரும்புகிறவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரிடையே உள்ள அன்பை கவனித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் இறைவன் அன்பாகவே இருக்கிறார். அவருடைய ஐக்கியம் அன்பில் தொடருகிறது.

பேதுரு அதிக நேரம் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிராமல், இயேசு கிறிஸ்துவைக் குறித்து உடனடியாகச் சாட்சிபகரத் தொடங்கிவிட்டார். தம்மையே பலியாகக் கொடுத்த கிறிஸ்துவினை ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் தனது கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்தவராக தரிசித்த காட்சி சீடர்களுடைய உள்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவர்கள் விண்ணப்பித்து, இந்தக் காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, அவற்றைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை உற்றுப் பார்த்து, ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதலுக்குள் அவர்கள் வந்திருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் ஏன் ஊற்றப்பட்டார் என்பதை அங்கிருந்த மக்கள் புரிந்துகொள்ளும்படி பேதுரு நாசரேத்தூர் இயேசுவை அவர்களுக்கு முன்பாக விளக்கிக் காண்பித்தார்.

இயேசுவைப் புறக்கணித்துக் கொலை செய்த யூதர்களுடைய பாவத்தை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கண்டித்து உணர்த்துகிறார் என்பதை பேதுரு தன்னுடைய ஆழ்மனதில் நன்கு அறிந்திருந்தார். அழகான வார்த்தைகளையும் ஆசீர்வாதமான வாக்குறுதிகளையும் கொண்டு பேதுரு அவர்களுடன் பேசவில்லை. அவர்கள் குற்றவாளிகள் என்பதையே பேதுரு முதலாவது அவர்களுக்கு அறிவிக்க வேண்டியிருந்தது. ஆகிலும் இந்த உண்மையை அவர் கடுமையாகவோ தீவிரமாகவோ எடுத்துரைக்கவில்லை. அவர் அவர்களுடைய பாவத்தை படிப்படியாக உணர்த்தினார். அன்பின் வார்த்தைகளினால் பேசி அவர்களுடைய குற்றத்தை அவர்களுக்கு முழுவதுமாக உணர்த்தினார். பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் இயேசுவைக் குறிப்பதற்கு “கிறிஸ்து” என்ற வார்த்தையையோ “இறைவனுடைய மகன்” என்ற வார்த்தையையோ பயன்படுத்தாமல், “இறைவனுடைய மனிதன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர்கள் கடைசிவரை தன்னுடைய பிரசங்கத்திற்குச் செவிகொடுக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் இடையிலேயே கோபப்பட்டு கொதித்து எழுந்துவிடக்கூடாது என்பதிலும் அவர் அதிக கவனத்துடன் பிரசங்கித்தார்.

தன்னுடைய பிரசங்கத்தின் அடுத்த பகுதிக்குப் போவதற்கு முன்பாக, பெருமூச்சு விட்டவராக, அவர்கள் அதைக் கவனமாகக் கவனிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவர், “உங்கள் அனைவருக்கும் நசரேயனாகிய இயேசுவைத் தெரியும். அவர் இதுவரை வந்த தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் அதிகமான அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் இறைவனால் ஆதரிக்கப்பட்டவராயிருந்தார். அவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். பிசாசுகளைத் துரத்தினார், பாவங்களை மன்னித்தார், ஐந்து அப்பங்களினால் ஐயாயிரம் பேருடைய பசியைத் தீர்த்தார், கடுமையான காற்றையும் புயலையும் அமைதிப்படுத்தினார். இந்த அற்புத செயல்கள் சாதாரண மனிதனுடைய செயல்கள் அல்ல, அவை இறைவனுடைய செயல்கள். மனிதனாகிய இயேசு உன்னதமான இறைவனுடைய சித்தத்தோடு இணைந்து வாழ்ந்த காரணத்தினால், சர்வ வல்லவர் இயேசுவின் மூலமாகச் செயல்பட்டார். இவ்வாறு பரலோகத்தின் வல்லமை பூமியிலே பரவத் தொடங்கியது. இவர் தம்முடைய பிதாவாகிய இறைவனுடைய விருப்பத்திற்கு அப்பாற்றபட்டவராகப் பணிபுரியவில்லை. அவர் முழுவதும் பரிசுத்த பிதாவின் சித்தத்தைச் செய்யும்படி அவருடன் முற்றிலும் ஒன்றுபட்டவராயிருந்தார். “என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து முடிப்பதே என்னுடைய உணவாயிருக்கிறது” என்று அவர் சொன்னார் என்றார்.

இறைவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் யூதர்கள் எதிர்த்து நிற்பது விந்தையாயிருக்கிறது. இயேசு யூதர்களால் புறக்கணிக்கப்பட்டதற்கு சனகதரின் சங்கத்தாரும் பிரதான ஆசாரியர்களும்தான் காரணம் என்று பேதுரு கூறவில்லை. தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே இயேசுவைப் புறக்கணித்தவர்கள் என்று பேதுரு குற்றப்படுத்துகிறார். அவர்கள் தங்கள் தலைவர்களுக்குப் பயந்திருந்தார்கள். அதனால் அவர்கள் நசரேயனாகிய இயேசுவை விட்டு விலகி அவரைக் கொலைகாரர்களுடைய கையிலிருந்து காக்கத் தவறிவிட்டார்கள். அவர்களில் சிலர் “இவனைச் சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள்” என்று கூக்குரலிட்டவர்களாகவும் இருந்தார்கள். பேதுரு பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால் நிறைந்தவராக அவர்களுடைய மனசாட்சியை குத்தும் வண்ணமாகப் பிரசங்கித்தார். “இறைவனால் ஏற்படுத்தப்பட்ட மனிதனை நீங்கள்தான் கொலை செய்தீர்கள். அதுவும் சாதாரணமாக கல்லெறிந்து நீங்கள் அவரைக் கொல்லவில்லை. அவரை புறவினத்து மக்களாகிய ரோமர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தீர்கள். அவர்கள் மூலமாக நீங்கள்தான் அவரைச் சிலுவையில் அடித்துக் கொலைசெய்தீர்கள். இது உங்கள் நிந்தையை இரட்டிப்பாக்குகிறது” என்று அவர்களைக் குற்றஞ்சாட்டினார். தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்பவர்களிடத்தில், கொள்ளை, அசுத்தம், பொய் போன்ற பாவங்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் இயேசுவை நடத்திய முறையே அவர்களுடைய அறியாமையையும், கீழ்ப்படியாமையையும், குருட்டுத் தனத்தையும், இறைவனிடமான அவர்களுடைய பகைமையையும் காண்பிக்கிறது என்று பேதுரு கூறினார். இந்தப் பிரசங்கம் பரிசுத்த ஆவியின் நியாயத்தீர்ப்பை குறிக்கவில்லை. ஆகிலும் அது மனிதனுடைய கீழ்ப்படியாமையிலும் பகைமையிலும் காணப்படுகிற அனைத்து தீய செயல்களையும் உணர்த்தி, தீய நோக்கங்களை வெளிப்படுத்துகிறதாயுள்ளது.

ஆயினும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபடியினால் இறைவன் இந்த யுத்தத்தில் தோல்வியடைந்துவிடவில்லை. அதன் மூலமாக அவர் தம்முடைய முன்னறிவின்படி வழங்கும் இரட்சிப்பை நிறைவேற்றினார். அந்த அதிர்ச்சியளிக்கும் குற்ற நடவடிக்கையின் ஊடாக அவர் தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். இறைவனுடைய திட்டத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. கீழ்ப்படியாமையுள்ள பாவிகளுடைய கரங்களில் தம்முடைய மகனைப் பலியாக ஒப்புக்கொடுப்பதன் மூலமாக மட்டுமே உலகத்தை விடுவிக்க முடியும் என்பதை அறிந்தவராகவே அந்த விடுவிப்பின் செயலை நிறைவேற்றி முடிக்கும்படி இறைவன் தம்மில் தீர்மானித்திருந்தார். சிலுவை இறைவனுடைய முன்னறிவின் வெற்றிச் சின்னமாகவும் உலகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அளவிடமுடியாத அன்பின் அடையாளமாகவும் காணப்படுகிறது. இறைவனுடைய இந்த முன்தீர்மானம் யூதர்களை பகடைக்காய்களாக மாற்றவில்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்து பேதுரு அவர்களைப் பார்த்து, “நீங்களே கொலைகாரர்களாகவும் இறைவனுடைய எதிரிகளாகவும் இருக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியது முற்றிலும் உண்மையாயிருக்கிறது.

பேதுருவின் பிரசங்கத்தின் ஆரம்பமும் முடிவும் எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது பாருங்கள். முதலில் அப்போஸ்தலர்கள் மகிழ்ச்சியினாலும் நன்றியினாலும் நிறைந்தவர்களாக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்தும்படி பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார். இறைவனுடைய அன்பு மென்மையாகவும் மேலோட்டமானதாகவும் இருக்காமல், பரிசுத்தமானதாகவும் மெய்யானதாகவும் இருக்கிறது.

விண்ணப்பம்: ஓ, பரிசுத்த தகப்பனே, உம்முடைய மகன் எங்களுக்காக அவமானமாக இறக்கும்படி அவரை ஒப்புக்கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் அக்கிரமத்தினாலும் கடின இருதயத்தினாலும் அவரைக் கொலைசெய்தோம். எங்களுடைய பாவங்களை மன்னித்து உம்முடைய மகத்துவமான அன்பின் ஆவியினால் முழுவதும் எங்களைச் சுத்திகரியும்.

கேள்வி:

  1. யூதர்கள்தான் இயேசுவைக் கொலைசெய்த குற்றவாளிகள் என்று பேதுரு அவர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:58 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)