Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 043 (Jesus offers people the choice)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

4. ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்ற விருப்பத் தேர்வை இயேசு மக்களுக்குக் கொடுக்கிறார் (யோவான் 6:22-59)


யோவான் 6:34-35
34 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். 35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

தனக்கு செவிகொடுத்த மக்களை இறைவனுடைய உணவுக்கான பசியைத் தூண்டிவிட்டு, இவ்வுலக சிந்தையிலிருந்து அவர்களை விடுவித்தார். இரட்சிப்பைக் குறித்த கரிசனையை அவர்களில் உண்டுபண்ணி, இறைவனுடைய கொடையைப் பெற்றுக்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தினார்; தன்னை விசுவாசிப்பதன் அவசியத்தை அவர்களுக்கு அவர் உணர்த்தினார்.

ஆர்வமடைந்த மக்கள் கூட்டம், “தெய்வீக அப்பத்தைத் தருபவரே, நாங்கள் கஷ்டப்பட்டு உழைக்காமல் இருப்பதற்கு, இந்தத் தனிச்சிறப்பான கொடையை நீர் எப்போதும் எங்களுக்குத் தரவேண்டும். நாங்கள் உம்மைச் சார்ந்திருக்கிறோம், முடிவற்ற வாழ்வினால் நிரப்பும், உம்முடைய வல்லமையைத் தாரும்!” என்று கோரினார்கள். அவர்கள் இன்னும் இவ்வுலகத்திற்குரிய உணவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இறைவன் அருளும் கொடை தனிச்சிறப்பானது என்பதையாகிலும் அறிந்துகொண்டார்கள்.

இயேசு தன்னிடம் வரும் எவரையும் புறக்கணிப்பதில்லை. அவர் முதன்மையாக முழு உலகத்திற்கும் இறைவனுடைய உணவைக் கொடுப்பவர்தான், இவ்வுலகத்திற்குரிய உணவைக்கொடுப்பதற்காக அவர் முதன்மையாக வரவில்லை. அவர் மனிதனுக்கு நித்திய வாழ்விற்குரிய அனைத்தையும் கொடுப்பதற்காக மனிதனாக வந்தவர். “என்னையல்லாமல் நீங்கள் முடிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. இறைவனிடமிருந்து உங்களுக்குத் தரப்படும் கொடை நானே. நானின்றி நீங்கள் மரணத்தில்தான் நிலைத்திருப்பீர்கள்.”

“உணவு எவ்வாறு உங்களுக்குள் சென்று வாழ்விற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறதோ, அது போல நானும் உங்களுக்குள் வந்து, உங்கள் மனதையும் மனசாட்சியையும் புதுப்பித்து, ஆவியின் மூலமாக உங்களுக்குள் வாசமாயிருக்க விரும்புகிறேன். நானின்றி உங்களால் எதுவும் செய்ய முடியாது. அனுதினமும் நான் உங்களுக்குத் தேவை, நான் இலவசமாக என்னை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு எந்த விலையும் கொடுக்கத் தேவையில்லை. நான் உங்கள் இதயத்தில் நுழைய மட்டும் இடம் கொடுங்கள்.” சகோதரனே உங்களுக்கு கிறிஸ்து தேவை. அவருடைய வார்த்தைகளை வாசிப்பதும் அவருடைய சிந்தனைகளைப் புரிந்துகொள்வதும் மட்டும் போதாது. அவர் தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தேவை. அனுதினமும் உங்களுக்கு உணவும் தண்ணீரும் தேவைப்படுவதுபோல அவரும் உங்களுக்கு அத்தியாவசிய தேவையாயிருக்கிறார். அவரை பெற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்களைப் பொறுத்தது.

என்னுடைய ஆள்த்தன்மையின் மையத்தில் அவர் எப்படி நுழைய முடியும் என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அதற்கு அவர் கூறும்பதில்: உங்கள் இருதயம் எனக்காக ஏங்கட்டும், என் அருகில் வாருங்கள், என்னை நன்றியோடு பெற்றுக்கொள்ளுங்கள், என்னை நம்புங்கள். இயேசு நம்முடைய இருதயத்திற்குள் வருவது விசுவாசத்தினால் நடைபெறுகிறது. இறைவனுடைய கொடையாக அவரையே உங்களுக்கு இலவசமாகத் தருவதற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். அவர் உங்களில் வாழ ஆயத்தமாயிருப்பதற்காக அவரை மகிழ்ச்சியோடு துதியுங்கள். நீங்கள் கேட்டால் உங்களில் நிரந்தரமாக வாழும்படி அவர் வருவார்.

“நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டபடியால், நான் உங்களில் நிலைத்திருப்பேன், வாழ்வின் மீதான உங்கள் பசியைத் தீர்ப்பேன். இந்த உலகத்தின் மதங்களா அல்லது தத்துவங்களா எது சரியென்று இனிமேல் நீங்கள் விவாதிக்க வேண்டாம். ஒவ்வொரு சேற்று நீரையும் பருக விளையாதீர். நான் உங்களுக்கு வல்லமையையும், அர்த்தத்தையும், சமாதானத்தையும் தருவேன்” என்று இயேசு உங்களுக்கு உறுதியளிப்பார்.

யோவான் 6:36-40
36 நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். 37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. 38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். 39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. 40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

இரக்கத்தின் அப்பத்தை இயேசு ஏற்கனவே கலிலேயர்களுக்குக் கொடுத்திருந்தார். சகல அதிகாரமுமுடையவராக அவரை அவர்கள் கண்டிருந்தார்கள். அந்தப் புரிந்துகொள்ளுதல் அவர்கள் உள்ளத்தில் பதியவில்லை, அதனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும் நிலைக்கு முன்னேறிச் செல்லவுமில்லை. அவர்கள் இன்னும் நிச்சயமற்றவர்களாகவே தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அப்பமாக இயேசுவை விசுவாசிக்க ஆயத்தமாயிருந்த அவர்கள், அவரை ஒரு நபராக நம்பத் தயங்கினார்கள். அவர்கள் அவரை நன்றியோடு ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசு எருசலேமில் சொன்னதைப் போலவே அவர்களைவிட்டுத் தான் விலகிச் செல்வதற்கான காரணத்தை இங்கும் வலியுறுத்திக் கூறினார். ஏன் அநேகர் இயேசுவை நம்புவதில்லை? ஆச்சரியப்படத்தக்க முறையில் “அது உங்களுடைய தவறு” என்று இயேசு சொல்லாமல், பிதாவைக் காரணம் காட்டினார். விசுவாசம் எவ்வாறு ஒரு தெய்வீக செயலாகக் கட்டி எழுப்பப்படுகிறது என்று அவர்களுக்குக் காண்பித்தார்.

வெறும் வாதத்தினாலோ அல்லது தந்திரத்தினாலோ யாரையும் வென்றெடுக்க இயேசு விரும்பவில்லை; பாவிகளைப் பற்றி இறைவன் அறிந்திருக்கிற காரணத்தினால் அவரே விசுவாசத்தை அவர்களுக்குக் கொடுத்து மனந்திரும்புவதற்கும் மனமாற்றம் அடைவதற்கும் தேவையான ஆயத்தத்தைக் கொடுக்கிறார். ஆவியானவரினால் இழுத்துக்கொள்ளப்படுபவர்கள் மட்டுமே கிறிஸ்துவிடம் சேருவார்கள். பொய்யர்கள், விபச்சாரக்காரர், திருடர்கள் போன்ற யார் மனந்திரும்பி அவரிடம் வந்தாலும் அவர்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு அருகில் வரும் எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை, அவருடைய எதிரிகளைக் கூட. அவர்கள் மீது அவர் இரக்கம் வைத்து அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறார்.

கிறிஸ்து தனக்காக வாழவில்லை, அவர் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்றவாறு தன்னுடைய வாழ்க்கையைத் திட்டமிடவுமில்லை. அவர் தன்னுடைய பிதாவின் சித்தத்தைச் செய்யவும், அவருடைய அன்பின் நோக்கங்களை பரிபூரணமாக நிறைவேற்றவும், இழந்துபோன பாவிகளை இரட்சிக்கவும், அவரில் நிலைத்திருக்க விரும்பும் விசுவாசிகளைக் காத்துக்கொள்ளவுமே இறங்கி வந்தார். அவருடைய இரக்கமும் வல்லமையும் மாபெரியவைகள். அவருடைய கரத்திலிருப்பவர்களை மரணமோ, சாத்தானோ, பாவமோ எதுவும் பறித்துவிட முடியாது. அவருடைய இரக்கத்தினால் நியாயத்தீர்ப்பு நாளில் அவர் தன்னைப் பின்பற்றியவர்களை உயிரோடு எழுப்புவார்.

நீங்கள் இறைவனுடைய சித்தத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர் தன்னுடைய குமாரனை நீங்கள் காணவும், அவரை அறியவும், அவரை நம்பவும் வேண்டும் என்று விரும்புகிறார். அவர் ஆவியினால் பிறந்து கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்திருக்கிறார். ஒரு நித்தியமான உடன்படிக்கையில் அனைத்து விசுவாசிகளுடனும், நீங்களும் இரட்சகருடன் இணைந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதன்மூலம் உங்களைப் பற்றிய இறைவனுடைய திட்டம் நிறைவேறும். பரிசுத்த ஆவியானவர் ஒருவருடைய பெலவீனமான சரீரத்தினுள் வருவதன் மூலமாக அவர் உடனடியாக நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார். இயேசுவில் விசுவாசம் வைக்கும்போது இந்த நித்திய வாழ்வு உங்களில் காப்புறுதி செய்யப்படுகிறது. அந்த நித்திய வாழ்வு அன்பிலும், சந்தோஷத்திலும், சமாதானத்திலும், தாழ்மையிலும் வெளிப்படுத்தப்படுகிறது. உங்களிலிருக்கும் இறைவனுடைய வாழ்விற்கு முடிவிராது. இறைவனுடைய சித்தத்தின் இறுதித் திட்டம் இயேசு உங்களை மரித்தோரிலிருந்து எழுப்புவதாகும். இதுதான் விசுவாசிகளுடைய நம்பிக்கை. இறைமகனுடைய மகிமையும் அவருடைய அன்பின் பிரகாசமுமாகிய வாழ்வின் உச்சநிலை இறைமகனாலேயே உங்களுக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியே நாங்கள் உம்மைத் தொழுதுகொள்கிறோம். நீர் எங்களுக்குத் தூரமானவரல்ல. மக்கள் கூட்டம் உம்மை நிராகரித்தபோது நீர் எங்களிடம் வந்தீர். மெய்யான அப்பமாக உம்மை கண்டு, ஏற்றுக்கொள்ளும்படி நீர் எங்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்தீர். எங்களை நீர் புறக்கணியாததற்காக உமக்கு நன்றி. நீர் எங்கள் ஆத்துமாக்களின் தாகத்தைத் தீர்த்தீர். இறுதியில் நீர் எங்களை நித்திய ஆசீர்வாதத்திற்கும் நித்திய மகிழ்ச்சியின் துதிகளுக்கும் எழுப்புவீர்.

கேள்வி:

  1. “ஜீவ அப்பம்” என்றால் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)