Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 102 (Paul’s Parting Sermon)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

9. பிஷப்மார்கள் மற்றும் மூப்பர்களுக்கு பவுல் அளித்த பிரசங்கம் (அப்போஸ்தலர் 20:17-38)


அப்போஸ்தலர் 20:33-38
33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது.35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான்.37 அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,38 பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.

எபேசுவில் பவுல் மூன்று ஆண்டுகள் செய்த ஊழியத்தில் அவரது போதனைகளைக் குறித்த சுருக்கத்தைக் கூறினான். இந்த ஒப்பற்ற பிரசங்கத்தில் அனடோலியா மற்றும் கிரேக்க நாட்டின் பகுதிகளில் அளித்த எல்லா பிரசங்கங்கங்களின் சுருக்கத்தையும் கொடுத்தான். ஒரு சில வரிகளில் இந்த வசனங்கள் வெளிப்படுத்தும் அளவற்ற ஐசுவரியங்களைக் கூறுவதென்பது இயலாத காரியம். மூன்று ஆண்டு கால பிரசங்கங்களை நிறைவு செய்வதற்கு பவுலின் இந்த வாக்கியங்கள் போதுமானதாக இருந்தன. ஒவ்வொரு வசனத்திலும் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை வெளிக்கொண்டுவர அதிகாரம் 20 வசனம் 17 முதல் 38 வரை மீண்டும் வாசிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

என்ன ஓர் விந்தை. இந்த பிரசங்கத்தின் முடிவில் பவுல் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து பேசவில்லை. பணத்தைக் குறித்த பேசினான். ஏனெனில் பணத்துடன், அதைச் சுற்றியிருக்கும் ஆவியும் காணும்படி வெளிப்படும். பவுல் தனக்காக எந்தவொரு நன்கொடையோ அல்லது காணிக்கையோ பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இல்லை. சபை அங்கத்தினர்களிடம் இருந்து செல்வத்தை அவன் இச்சிக்கவில்லை. அழிந்து போகும் உலகத்தின் செல்வத்தை அவன் வெறுத்தான். கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக அவன் எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணினான். அவன் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டிருந்தான். அவன் சரீர மற்றும் பாலியல் ஆசைகளுக்கு மரித்திருந்தான். இப்போதோ பரலோக காரியங்களுக்காக வாழ்ந்து கொண்டிருந்தான். தனது சொந்த தேவைகளை சந்திக்கும்படி பவுல் தனது கைகளால் வேலை செய்தான். அவனது பணியில் நேர்மையுடனும், திறமையுடனும் இருந்தான். அவனது வார்த்தைகளின்படி அவன் நடந்தான்; “நீங்கள் எதைச் செய்தாலும், மனுஷருக்கென்று செய்யாமல், கர்த்தருக்காக மனப்பூர்வமாய் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:23), அவன் தனக்குத் தேவையானதை விட அதிகம் பெற்றுக்கொண்டான். அதை, அவனுடன் இருந்த மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தினான். அவன் மூப்பர்களிடம் தனது கரங்களை பெருமையுடன் காட்டினான். அவைகள் கடினமாக, வடுக்கள் நிறைந்ததாக, அவனது சரீர உழைப்பால் ஏற்பட்ட ஆழமான வலியைத் தாங்கிக் கொண்டதாக, காய்த்துப் போனதாக இருந்தன. இந்த கனத்திற்குரிய தெளிவான காரியங்களில் பவுல் கவனமாக இருந்தான். அவன் புத்தகம் எழுதும்படி பென்சில்களை எடுக்கவில்லை. அவனது கரங்களினால் வேலை செய்தான். அவனது வாயினால் பேசினான். தனது பாதங்களினால் நீண்ட தூரங்கள் நடந்தான். பவுல் தனது மனதை மாத்திரம் அல்ல, தனது சரீரத்தையும் ஜீவனுள்ள பலியாக, இறைவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவருக்கு உகந்த பலியாக ஒப்புக் கொடுத்தான்.

சோம்பேறியாக, செயலற்று, கர்த்தரின் வருகைக்காக வெறுமனே காத்திருக்கும் எந்த கிறிஸ்தவனோடும் பவுல் ஒத்துப் போவதில்லை. ஏனெனில் சோம்பேறியின் வீடு வறுமையினாலும், மனச்சோர்வினாலும் அழிந்துபோகும். பவுல் இரவும் பகலும் கடினமாக உழைத்தான். தனது வேலையிலும் காலத்தை ஆதாயப்படுத்துவதில் முன்மாதிரியாக இருந்தான். அவனுடைய ஆண்டவரின் நாம மகிமைக்காக செயல்பட்டான்.

தன்னுடைய மற்றும் தன்னுடைய உடன் ஊழியர்களின் தேவைகளை சந்திப்பதில்மட்டும் அவன் திருப்தியடையவில்லை. ஏழைகளுக்காகவும் அவன் தன்னை தியாகம் செய்தான். நமது மாத வருமானம் அல்லது தினசரி சம்பளம் என்பது நமது தேவைகளை சந்திப்பதற்காக மட்டும் சம்பாதிக்கப்படுவது அல்ல, சேவைபுரிய, கொடுக்க தியாகம்பண்ண அவைகள் நமக்கு உதவிடும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். கிறிஸ்து கூறினார்: பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் .(மத்தேயு 25:31-46) தியாகம் மற்றும் சேவையின் வாழ்வைத் தொடங்குவதற்கு இன்னமும் நீ ஏன் காத்திருக்க வேண்டும்? நீ பாதிக்கப்பட்டோரை பார்க்க முடியாத படி இன்னமும் குருடனாக இருக்கிறாயோ அல்லது இருதயம் கடினப்பட்டு உள்ளதோ?

நம்முடைய நற்செய்திகளில் பதிவு செய்யப்படாத கிறிஸ்துவின் ஒரு கூற்றை பவுல் குறிப்பிட்டு தனது வார்த்தைகளை தொகுத்துரைத்தான். இருப்பினும் நற்செய்தி நூல்கள் பவுலின் கடிதங்கள் முழுவதும் அது உள்ளடங்கியுள்ளது. “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்”. மகிழ்ச்சி, சந்தோஷம் நிறைந்த இறைவனுடைய இருதயத்தின் ஆழத்தை இந்த வசனம் வெளிப்படுத்துகின்றது. அவர் நம்மை தொடர்ச்சியாக ஆசீர்வதிக்கின்றார். எல்லா நேரங்களிலும் நமக்கு நல் ஈவுகளைத் தருகின்றார். கிறிஸ்து பாவிகளுக்காகத் தன்னையே கொடுக்க வந்தார்.

கிறிஸ்தவத்தின் ஆவிக்குரிய அஸ்திபாரம் என்பது ஒருவர் வாழ்வை மற்றவர்களுக்கு கொடுப்பது என்ற பலியின் கோட்பாடு ஆகும். இறைவனின் அன்பு சேவை, செயல்பாடு மற்றும் ஈடுபாடு இவைகளை வழங்கும்படி நம்மைத் தூண்டுகிறது. நம்மை நாமே திருப்திபடுத்தும்படியாக அல்ல. இந்த அன்பிற்கு தகுதியற்ற மற்றவர்களை திருப்திபடுத்தும்படி நாம் வாழ வேண்டும். கிறிஸ்து தமது ஜீவனை அநேகருக்காக மீட்கும் பொருளாக கொடுத்ததைப்போல, நாமும் நமது பணம் மற்றும் நேரம் இவைகளை தியாகத்துடன் நமது குடும்பம், பணிபுரியும் இடம், சபை மற்றும் மக்களை இவர்களுக்காக தியாத்துடன் செலவிட வேண்டும் என்று ஆண்டவர் நம்மை அழைக்கிறார். நீ உன்னையே இறைவனுக்கும், மனிதனுக்கும் பலியாக கொடுக்கும் வரைக்கும் உண்மையான மகிழ்ச்சியை அறிய முடியாது. ஆகவே கிறிஸ்துவின் பலியே திருச்சபையின் அடையாளமாக இருக்கிறது. நமது சிந்தனைகள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் இவைகளின் மீதான சின்னமாக இருக்கிறது. உனது இருதயத்தின் ஆழத்தில் நீ மகிழ்ச்சியற்று இருக்கிறாயா? நீ கடினமான உழைக்க வேண்டும், எளியோருக்கும், ஏழைகளுக்கும் உதவிட வேண்டும் என்ற அப்போஸ்தலனின் கூற்றை உணர்ந்து கொள். நீ சபையில் உண்மையுள்ள கிறிஸ்தவனாக, மூப்பனாக அல்லது தலைவனாக இருக்கும் போது, இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது.

பவுல் கோட்பாடுகளைக் கூறும் வெறும் தத்துவஞானி அல்ல, அவர் ஓர் உண்மையான விண்ணப்ப வீரர், விண்ணப்பம் இல்லாமல் கனிகள் கிடையாது. வார்த்தைகளின் திரளினால் எந்த பயனும் இல்லை. இறைவன் மட்டுமே ஆசீர்வதிக்கிறார், பக்திவிருத்தி அடையச் செய்கிறார். சபை மூப்பர்களுடன் அப்போஸ்தலன் முழுங்காற்படியிட்டான். தனது முழு இருதயத்துடனும் விண்ணப்பம் செய்தான். பவுலின் உள்ளான இருதயத்திலிருந்து புறப்பட்டு வந்த அப்போஸ்தல விண்ணப்பத்தை நீங்கள் எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா? எபேசியர் நிரூபத்தில் உள்ள இப்பகுதியை வாசியுங்கள் (1:3-14; 1:17-23; 3:14-21). இந்த அப்போஸ்தல விண்ணப்பங்களில் கவனத்துடன், ஒருமுகசிந்தனையுடன் நீங்கள் பங்குபெறும்போது, நம்முடைய விண்ணப்பங்கள் எவ்வளவு ஏழ்மையாக உள்ளது என்பதை நீங்கள் உணர முடியும். விண்ணப்பத்தின் ஆவியைத் தரும்படி இயேசுவிடம் கேளுங்கள். ஏனெனில் நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகுந்த பலனுள்ளதாக இருக்கிறது. (யாக்கோபு 5:16).

பவுலின் வாயிலிருந்து புறப்படும் இந்த விண்ணப்பத்தின் வார்த்தைகள் தான் அவர்கள் பவுலிடம் இருந்து கேட்கும் கடைசி வார்த்தைகள் என்பதை மூப்பர்கள் உணர்ந்திருந்தார்கள். பற்று, அன்பு, துக்கம் மற்றும் வேதனையால் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் புறப்பட்டு வந்தது. தூய்மையான மற்றும் உண்மையான உணர்வுகளுடன் அழுவது ஒரு மனிதனுக்கு வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அவர்களுக்கு பரலோகத்தின் கதவைத் திறந்த இறைவனுடைய மனிதனுக்காக கண்ணீர் சிந்தினார்கள். அவர்கள் மத்தியில் சரீர பாடுகளுடன் இந்த அப்போஸ்தலன் பணிசெய்திருந்தான். இப்போது இன்னும் வேதனை மற்றும் பாடுகளை நோக்கி அவன் பயணிக்கிறான். ஒவ்வொருவரும் நித்தியமான இறைவனுடைய குடும்பத்தின் அளவற்ற அன்பிற்கு அடையாளமாக அவனை முத்தம் செய்தார்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமக்கு நன்றி கூறுகிறோம். உமது வார்த்தை எங்களுக்கு முழுமையான இரட்சிப்பைத் தந்தது, அன்பின் வல்லமையையும், நம்பிக்கையில் ஆறுதலையும் தந்தது. பள்ளிக்கூடம், எங்களது பணி செய்யும் இடம், வீடு இவைகளில் நாங்கள் சோம்பலாயிராதபடி, கடினமாக உழைக்க எங்களுக்கு கற்றுத்தாரும். எங்களது உடைமைகள் மற்றும் நேரத்தை மற்றவர்களுக்காக தியாகம்பண்ண எங்களுக்கு கற்றுத்தாரும். இழந்து போன எங்களுக்கு உமது ஜீவனை நீர் தந்தீர்.

கேள்வி:

  1. ஏன் வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:14 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)