Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 089 (Paul’s Return to Jerusalem and Antioch)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

9. எருசலேமிற்கும் அந்தியோகியாவிற்கும் பவுல் திரும்புதல் (அப்போஸ்தலர் 18:18-22)


அப்போஸ்தலர் 18:18-22
18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியா தேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள். 19 அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான். 20 அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது அவன் சம்மதியாமல், 21 வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு, 22 செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.

ஆண்டவராகிய இயேசு தம்முடைய பணியாளனாகிய பவுல் மூலமாக மக்கதோனியாவிலும் கிரேக்கத்திலும் திருச்சபைகளை நாட்டியிருந்தார். இந்த திருச்சபைகளில் இருக்கும் தன்னுடைய உடன்வேலையாட்களைப் பலப்படுத்த வேண்டும் என்பது பவுலுடைய விருப்பம். ஒரு கட்டத்தில் கிரேக்கத்திலிருந்த திருச்சபையில் தன்னுடைய பணி முடிவடைந்தது என்று முடிவுசெய்தார். காரணம் ஆண்டவரின் ஆவியானவர் பவுலை ஆதித் திருச்சபைகளாகிய எருசலேமிற்கும் அந்தியோகியாவிற்கும் போகும்படி வழிநடத்தினார். அங்கு அவர் புதிய திருச்சபைகள் தன்னிச்சையாக இயங்காதபடிக்கு அவற்றை பழைய திருச்சபைகளுடன் இணைக்கும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது.

பவுல் திருச்சபையின் ஐக்கியத்தைக் கருத்தில்கொண்டு தன் மூலமாக ஆண்டவர் செய்த பெரிய காரியங்களை எருசலேமிலிருந்த சகோதரர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக்கொண்டார் என்று தோன்றுகிறது. அவர்களும் இதன் மூலமாக கிறிஸ்துவின் வெற்றி பவனியில் தங்கள் கோஷங்களை எழுப்பக்கூடியவர்களாயிருந்தார்கள். எருசலேமிற்குப் பவுல் திரும்பியபோது ஏன் மொட்டையடித்துக் கொண்டார் என்பதற்கான காரணம் நமக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆண்டவருடைய கிருபையைத் தன்னுடைய வாழ்வில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர் மொட்டையடித்துக்கொள்ளவில்லை என்பது மட்டும் உறுதி. அனைத்துக் கிருபையும் நம்பிக்கையினால் மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஒருவேளை பவுல் தனக்கும் தன் மூலமாக நிறுவப்பட்ட அனைத்து திருச்சபைகளுக்கும் இறைவன் காண்பித்த கிருபைக்கு நன்றி தெரிவிக்கும்படி இந்த நேர்த்திக்கடனை அவர் செலுத்தியிருக்கலாம்.

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்தைவிட்டு வெளியேறுகிறார் என்பதை அறிந்துகொண்ட ஆக்கில்லாவும் பிரிசில்லாளும் தாங்களும் அந்நகரத்தைவிட்டு வெளியேற முடிவுசெய்துவிட்டார்கள். அவர்கள் பவுலுக்கு வேலை கொடுத்த காரணத்தினால் அவர்கள் துன்புறுத்தப்பட்ட காரணத்தினால் அவர்கள் இந்த முடிவெடுத்திருக்கலாம். ஆகவே அவர்கள் பவுலுடன் சிரியா வரை பிரயாணம் பண்ணினார்கள். வழியில் கப்பல் எபேசுவில் நங்கூரமிட்டிருந்தது. இந்தத் தம்பதியினர் அங்கு இறங்கி தங்கள் கூடார வேலையைச் செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆசியா மாகாணத்தின் தலைநகராகிய எபேசுவில் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்று பவுல் நீண்ட காலமாக ஏங்கியிருந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஆசியாவிற்குள் செல்லவும் அங்கு பணிசெய்யவும் அவரைத் தடைசெய்திருந்தார். கப்பல் அந்த துறைமுக நகரத்தில் நங்கூரமிட்ட அன்றைய தினமே பவுலும் அந்நகரத்திற்குள் நுழைந்தார். அவர் அந்நகரத்தில் சுற்றித்திரிந்து அங்கு பணிசெய்வதற்கும் பிரசங்கம் செய்வதற்கும் வாய்ப்புகள் எவ்வாறிருக்கிறது என்று ஆராய்ந்தார். அவர் அங்கிருந்த ஜெப ஆலயத்திற்குச் சென்று நீதிச்சட்டத்தை யூதர்களுக்கு விளக்கப்படுத்தினார். அவருடைய விளக்கத்தைக் கேட்ட யூதர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு, அடுத்த ஓய்வுநாளிலும் வந்து அவர்களுக்கு பிரசங்கம் பண்ணும்படி அவர்கள் அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால் பவுல் அவர்களுடைய வேண்டுகோளுக்கு உட்படவில்லை, ஏனெனில் அவருடைய இலக்கு எருசலேமாகவே இருந்தது. எபேசுவில் பணிசெய்வதற்கான வாய்ப்புகள் பவுலுக்கு பிரகாசமாயிருந்தபோதிலும் அவர் எருசலேமிற்குப் போக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இப்போது ஆண்டவருடைய சத்தம் இந்த மையத்திலிருந்து விலகிச் செல்லும்படி பவுலை வலியுறுத்தியது. ஆனால் இந்த மையம் அவருடைய பணியில் பின்னாட்களில் துருக்கி முதல் கிரேக்கம்வரை நிறுவப்பட்ட பல திருச்சபைகளுக்கு முக்கியமான தொடர்புப் புள்ளியாக இருந்தது. ஆயினும் அப்போஸ்தலனாகிய பவுல் அப்போஸ்தலனாகிய யாக்கோபு குறிப்பிடுவதுபோல (யாக்கோபு 4:15) தன்னுடைய விருப்பப்படி பிரசங்கிக்காமல் ஆண்டவருடைய சித்தத்தின்படியே பிரசங்கம் செய்தார். தன்னுடைய மூன்றாவது அருட்பணி பயணத்திற்கான முழுமையான ஆயத்தத்துடன் எபேசு நகரம் இருக்கிறது என்பதை பவுல் தன்னுடைய இரண்டாவது அருட்பணி பயணத்தின் இறுதியில் நன்கு அறிந்திருந்தார். அங்கு அவர் தன் வாழ்வாதாரத்திற்கான தொழிலையும் ஜெப ஆலயத்தையும் கண்டடைந்தார். மற்றவர்களைப் போல அது அவருக்கு முரண்பாடானதாகத் தெரியவில்லை. ஜெப ஆலயத்தின் முக்கிய அங்கத்தவர்களே அதிகநாட்கள் அங்கு தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.

ஆகவே அவர் நன்றியுள்ள இருயத்ததோடு பாலஸ்தீனத்தின் செசரியா கடல்வழியாகப் பிரயாணம்பண்ணினார். அவர் எருசலேமிற்குச் சென்று சகோதரர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, ஒரு விசுவாசமுள்ள யூதனாக தேவாலயத்தில் தொழுதுகொண்டார். அவர் எருசலேமில் அதிக நாள் தங்கியிருக்காமல் தன்னை புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும்படி அனுப்பிய அந்தியோகிய திருச்சபைக்குத் திரும்பிச் சென்றார். கிறிஸ்துவின் நாமம் மிகவும் துதிக்கப்பட்டது, பரிசுத்த ஆவியானவருடைய முன்னறிவித்தல் அற்புதமான முறையில் நிறைவேறியது. ஆரம்பத்தில் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி பர்னபாவுடன் பவுல் ஒரு குறிப்பிட்ட திட்டமில்லாமல் தன்னுடைய முதலாவது அருட்பணி பயணத்தைத் தொடங்கினார். இப்போது பல இடங்களில் திருச்சபைகள் நாட்டப்பட்டு உண்மையுள்ள மூப்பர்கள் அந்தந்த திருச்சபைகளில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் பலரை விடுவித்து பரிசுத்தப்படுத்தியிருந்தார். கிறிஸ்து அருளும் விடுதலை செயலூக்கத்தோடு தொடர்ச்சியாக எங்கும் பரவியது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் உலகமுழுவதும் திருச்சபைகளை நிறுவியுள்ளமைக்காக நாங்கள் உமக்கு துதிசெலுத்துகிறோம். நீர் சிலுவையில் மரணத்தைச் சந்தித்ததே இவை சத்தியமாவதற்கான காரணமாகும். உம்முடைய ஆவியானவரினால் நீர் உமது அப்போஸ்தலர்களை வழிநடத்தி, நம்பிக்கையினால் அவர்களுடைய செய்தியைக் கேட்டவர்களை நீர் பரிசுத்தப்படுத்தினீர். நாங்கள் உம்முடைய நற்செய்தியை உறுதியாகப் பற்றிக்கொண்டு, விடுதலையாளரும் வரப்போகும் ஆண்டவருமாகிய உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி, நீர் எங்களை வஞ்சகர்களுக்கும், மதவெறியர்களுக்கும், தத்துவங்களுக்கும் சமூகத்தின் காரியங்களில் சிக்கும் சுய வஞ்சனைக்கும் எங்களை விலக்கிக் காத்தருளும்..

கேள்வி:

  1. பவுல் தன்னுடைய இரண்டாவது அருட்பணி பயணத்தில் பணிசெய்த நான்கு நகரங்கள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)