Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 082 (Founding of the Church at Philippi)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

4. பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34)


அப்போஸ்தலர் 16:29-34
29 அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,30 அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,32 அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். 33 மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.

சிறைக்காவலன் சத்தமிட்டான். “எனக்கு விளக்கை கொண்டு வாருங்கள்!” இந்த வேண்டுதல் ஒரு காரியத்தை உருவகப்படுத்திக் காண்பிக்கிறது. அவன் தனது இராணுவ வாழ்க்கை முழுவதும் இருளில் வாழ்ந்தவனாக இருந்தான். இப்போது பவுலின் வார்த்தைகளால் அவன் ஒளியூட்டுதலைப் பெற்றான். அவன் உடனடியாக பரலோகத்தின் ஆவியானவரின் ஒளியை உணர்ந்தான். தன் உயிரை பாதுகாத்த அப்போஸ்தலனின் பாதத்தில் விழுந்தான். அவர்கள் தெய்வங்கள் என்று ஒருவேளை அவன் நினைத்திருப்பான் ஏனெனில் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள தப்பிச் செல்லவில்லை. அவர்கள் அவனை மிகவும் அதிகமாக நேசித்தார்கள், அவனது உயிரை பாதுகாத்தார்கள். இந்த உலகில் மிகப்பெரிய ஆவிக்குரிய புரட்சியை கிறிஸ்துவின் இரக்கம் கொண்டுவருகிறது.

இந்த அதிகாரியின் பயத்தை சாதகமாக பவுல் எடுத்துக்கொண்டு பெருமை பாராட்டவில்லை. அவன் தானும் மனிதன் தான் என்பதை மிகவும் தெளிவாக விளக்கினான். கிறிஸ்துவின் கிருபையே அவனை மாற்றியிருப்பதையும், அவன் மனந்திரும்பியிருப்பதையும் பற்றி கூறினான். குழப்பமுற்ற மற்றும் பயத்துடன் இருந்த அந்த மனிதன் அப்போஸ்தலனின் வார்த்தைகளைக் கேட்டான். அவன் நீதிமன்றத்திற்கு அவனையும், அவனது கூட்டாளியையும் அழைத்துச் சென்றான். அவர்களது இரத்தம் வடிந்த சரீரங்களை அவன் கண்டான். இறைவனின் நியாயத்தீர்ப்பை எண்ணி பயந்தான். ஏனெனில் அவனும் இந்த கனத்திற்குரிய அப்போஸ்தலர்களை சித்ரவதைப்படுத்துவதில் பங்கெடுத்திருந்தான். அவன் மிகவும் பயத்துடன், நடுக்கத்துடன் கேட்டான்: “பரிசுத்தமானவரின் கோபாக்கினையில் இருந்து நான் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?” பவுல் இந்த குழப்பமுற்ற மனிதனுக்கு நற்செய்தியை சுருக்கிக் கூறினான். பரிசுத்த வேதாகமத்தின் சிறந்த வாக்கியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும், உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்”. இந்த கூற்று சிறைக்காவலனுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. இறைவன் அவனை அழிக்கவில்லை. பரலோகத்தில் இருந்துவந்த இடியினால் அவனைத் தாக்கவில்லை. இயேசுகிறிஸ்து என்னும் நபரில் அவனுக்கு கிருபையின் கதவுகளை அவர் திறந்தார். அங்கே கூடியிருந்த ஆண்கள், பெண்கள, அடிமைகள், சிறைக்கைதிகள், முதியோர், வாலிபர் அனைவருக்கும் பவுல் கிறிஸ்து இயேசுவே வல்லமையுள்ள ஆண்டவர் என்று சாட்சி பகர்ந்தான். இறைவனே பூமியதிர்ச்சிகளை கொண்டுவருகிறார். அவரே பாவங்களையும் மன்னிக்கிறவர். இரட்சிப்பை அருளுகின்றவர்.

மரணத்தில் இருந்த உயிர்த்தெழுந்த ஆண்டவர் மனந்திரும்புபவனை பரிசுத்தமான மற்றும் மேன்மையான ஆவியானவரால் நிரப்ப ஆயத்தமாய் இருந்தார். அவரே மனிதனுடைய பாவங்களின் வல்லமையில் இருந்து அவனை விடுவிக்கின்றார். விசுவாசித்து இரட்சிப்பை பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், அவர்கள் முன்பாக அப்போஸ்தலர்கள் நடுவில் இறைவன் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தார்கள். நித்தியமான ஒருவர் அவர்களுடன் இப்போது பேசியது போல வேறு ஒருவரும் இப்படிப் பேசவில்லை. அவர்களுக்கு வாழ்வையும், ஒப்புரவாகுதலையும் அவர் அருளினார். வசனங்களைக் கேட்டவர்களின் இருதயங்களில் பரலோக நற்செய்தியின் ஒளி சுடர்விட்டு பிரகாசித்தது. அந்த அதிகாரி அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவர்களது காயங்களைக் கழுவினான். சுத்தமான துணிகளால் அதைக் கட்டினான். அன்பின் அதிபதி இயேசுகிறிஸ்துவிற்கு அவன் முழுமையாக ஒப்புக் கொடுத்ததற்கு அடையாளமாக, தனக்கு ஞானஸ்நானம் தரும்படி கேட்டுக்கொண்டான்.

ஒய்வு பெற்ற இந்த அதிகாரியான சிறைக்காவலன் தனது வாழ்வில் காணப்பட்ட மீதமுள்ள பகுதிகள் அனைத்திற்கும் தெளிவை பெற விரும்பினான். இந்த புதிய ஆவியானவருக்கு அவன் தனது வீட்டை திறந்து கொடுத்தான். தனது குடும்பத்தார், வேலைக்காரர்கள், உடன்பணியாட்கள் அனைவரையும் அவன் கூட்டிச் சேர்த்தான். அன்றைய இரவிலே அவர்களும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இறைவனின் அழைப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதை இந்த அதிகாரி அறிந்திருந்தான். அதற்கு கீழ்ப்படியாமல் இருக்கும் எந்தவொரு தாமதமும் பாவம் ஆகும். அவன் உடனடியாக பதிலளித்தான், மனந்திரும்பினான், உயிருள்ள ஆண்டவருக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்தான். ஞானஸ்நானம் எடுத்தவர்களின் வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் உட்பிரவேசித்தார். அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக மாறினார்கள். அவர்களது இருதயங்களை துதியின் பாடல்கள் நிறைத்தது. இருள் நிறைந்த, துர்வாசனையுள்ள சிறைச்சாலைக்குள்ளும் இறைவன் தங்களை சந்தித்ததை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் தங்கள் வீட்டு மேல்அறையை ஆயத்தப்படுத்தினார்கள். அவர்கள் மிகப்பெரிய விருந்திற்காக சமைக்க தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து கிறிஸ்துவிற்குள் களிகூர்ந்தார்கள். கிறிஸ்து அவர்களது பாவங்களிலிருந்து அவர்களது மனச்சாட்சியை கழுவி, சுத்திகரித்து, விடுவித்திருந்தார். குற்றவாளிகளாகவும், பாவிகளாகவும் இருந்தவர்கள் தற்போது அந்த இருண்ட இரவின் மத்தியிலும் இறைவனுடைய ஒளியின் பரிபூரணத்தில் வாழ ஆரம்பித்தார்கள். என்ன ஓர் அருமையான காட்சி! நடுராத்திரியில் ஒரு மாபெரும் விருந்து! அவர்களைச் சுற்றி இருந்த அந்த இருளின் மத்தியிலும் விசுவாசிகளை கிறிஸ்து பிரகாசிக்கப்பண்ணினார். அவர்களை மிகப்பெரும் மகிழ்ச்சியினால் நிறைத்தார். பாடுகள், நீடியபொறுமை, விசுவாசமுள்ள கீழ்ப்படிதல் ஆகியவற்றின் கனிதான் இது. பவுல், சீலா, லீதியாள், லூக்கா மற்றும் தீமோத்தேயு ஆகியோர் தொடர்ந்து விண்ணப்பம் செய்து கொண்டே இருந்தார்கள்.

அப்போஸ்தலர் 16:35-40
35 பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.36 சிறைச்சாலைக் காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.37 அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம்விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.38 சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து, 39 அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.40 அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

நீதிபதிகளின் கடைசி தீர்ப்பிற்காக ஆர்வத்துடன் சிறைக்காவலன் காத்திருந்தான் ஏனெனில் அவர்களது அனுமதி இல்லாமல், அவன் அவர்களை விடுவித்திருந்தான், அவர்களோடு நேரம் செலவழித்துக் கொண்டிருந்தான். நீதிபதிகள் அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்ததை கேட்டு, அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். உடனடியாக அவன் ஓடி சந்தோஷத்துடன் பவுலுக்கு இதை அறிவித்தான். அவர்கள் தொடர்ந்து தாக்கப்படாதபடிக்கு சமாதானமாய் போகும்படி கேட்டுக்கொண்டான்.

இருப்பினும் பவுல் எழுந்து நின்று, போவதற்கு மறுத்தான். தனது ரோமக் குடிமகன் என்ற சட்ட உரிமையை சுட்டிக் காட்டினான். அவனது உரிமைகள் வெளிப்படையாக மீறப்பட்டதைக் குறிப்பிட்டான். அவன் தனது சுயநலத்திற்காக மட்டும் இதை சொல்லவில்லை. மாறாக புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சபையின் நன்மை கருதி இதைச் சொன்னான். அவனும் சீலாவும் திருடர்கள் அல்ல, அவர்கள் மூன்று முறை தவறுதலாக துன்புறுத்தப்பட்ட ரோமக் குடிமகன்கள். அவர்கள் அடிக்கப்பட்ட செயல் ரோம சட்டத்திற்கு எதிரான ஒன்று. ஏனெனில் அடிமைகள் மட்டுமே தண்டனைக்காக அடிக்கப்டுவார்கள். இப்படிப்பட்ட தண்டனைகளில் இருந்து ரோமக் குடிகள் காக்கப் பட்டிருந்தார்கள். மேலும் அவர்கள் பொது இடத்தில் வைத்து அடிக்கப்பட்டார்கள். எந்தவொரு சட்ட ஒழுங்குமுறையும் இல்லாமல் அவர்கள் அடிக்கப்பட்டார்கள். முறையான சட்ட ஒழுங்குமுறையைக் கையாண்டு அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட அநீதி மிகவும் பெரிய குற்றமாக ரோம மன்னனால் கருதப்படும். அந்த நீதிபதிகளின் முழுமையான, கவன குறைவற்ற இந்த செயலுக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டனை கொடுக்கப்படும். அவர்கள் நிரபராதிகளாக, குற்றம் சாட்டப்படாதவர்களாக இருந்தபோது சட்டவிரோதமாக அவர்களை சிறையில் அடைத்திருந்தார்கள். இந்த காரியங்கள் எல்லாம் சேர்ந்து நீதிபதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமையை பவுலுக்கு தந்தது.

பவுல் இவ்விதமாகக் கூறியதால் சிறையில் தனிப்பட்டவிதத்தில் வந்து அவர்களிடம் நீதிபதிகள் மன்னிப்பு கேட்டார்கள். மேலும் கனத்திற்குரிய விருந்தாளிகளாக அவர்களை நடத்தி, பட்டணத்து தெருக்களின் மையப்பகுதிகளில் இணைந்து சென்றார்கள். பவுலின் நோக்கம் அவர்களை பழி வாங்குவது அல்ல. ஒரு உண்மையான விசுவாசியாக அவர்களது குற்றங்களுக்காக நீதிபதிகளை அவன் மன்னித்திருந்தான். அவன் பிலிப்பி பட்டணத்தில் இருந்த சிறிய கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதியை நிலைநாட்ட இந்த நிலையை எடுத்தான். அதன் மூலம் சபை வளர்ந்து பெருகுவதற்கான அடித்தளம் அமைத்தான். குகைகளிலும், நிலவறைகளிலும் தன்னை மறைத்துக்கொள்ளாமல் நேர்மையான ஒரு இயக்கமாக இந்த சபை காணப்படவேண்டும் என்று பவுல் விரும்பினான்.

இதன் விளைவாக நீதிபதிகள் பயத்துடன் அவனை நோக்கி விரைந்து வந்தார்கள். அவர்கள் பணிவுடன் புறஜாதிகளின் அப்போஸ்தலனிடத்தில் பேசினார்கள். அவர்களுடைய பட்டணத்தை விட்டு சமாதானமாக போய்விடும்படி கெஞ்சி கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் குறிச்சொல்லுபவனின் எஜமான்கள் மூலம் வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க விரும்பினார்கள். கிருபையின் செயல்பாட்டினால் அந்த எஜமான்களின் பணவரவு தடைப்பட்டிருந்தது.

பவுல் அவர்களது வார்த்தைகளில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவன் மறுபடியும் இரத்தாம்பரம் விற்கிற லீதியாளின் வீட்டிற்குப் போனான். அங்குதான் சபை அங்கத்தினர்கள் விண்ணப்பத்திற்காக கூடினார்கள். அவருடைய வீட்டில் விசுவாசிக்கும் சகோதரர்கள் அநேகர் கூடிவிட்டார்கள். ஐரோப்பாவின் முதல் விசுவாசி மனந்திரும்பிய நேரத்திற்கும், சிறைக்காவலன் இரட்சிப்பின் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் நீண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இந்த நேரத்தில் அப்போஸ்தலன் பிலிப்பியர்களுக்கு வசனத்தை பிரசங்கித்தான். உயிருள்ள ஒரு சபை அங்கு ஸ்தாபிக்கப்பட்டது. பின்பு அவர்கள் லீதியாளின் வீட்டில் சந்தித்தபோது, துன்பப்பட்ட சகோதரர்களை மற்றவர்கள் ஆறுதல்படுத்தினார்கள். அவர்களது எல்லா பிரச்சினைகளின் மத்தியிலும் அவர்கள் மத்தியில் இருக்கும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து பவுலும் சீலாவும் புறப்பட்டார்கள். தீமோத்தேயும் அவர்களுடன் இணைந்து கொண்டான். பிலிப்பி பட்டணத்து சபையில் ஊழியம் செய்யும்படி மருத்துவனாகிய லூக்காவை அங்க விட்டுவிட்டு சென்றார்கள். ஏன் லூக்கா படர்க்கை நிலையில் அவர்களைக் குறித்து பேசினார் என்பதை இது நமக்கு வெளிப்படுத்துகிறது. அவர்களுடன் அவன் இல்லை என்பதையும் இது குறிப்பிடுகிறது.

விண்ணப்பம்: ஆண்டவரே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது வார்த்தை இரட்சிக்கிறது, மனந்திரும்புதலை கொண்டுவருகிறது. எங்கள் வீட்டார் அனைவரையும் நீர் இரட்சிக்க விரும்புகிறீர் என்ற நாங்கள் விசுவாசிக்கிறோம். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீக்கி, எங்கள் இருதயங்களை சுத்திகரியும். பரிசுத்த ஆவியின் ஒளியூட்டுதலால் எங்கள் மனங்களை முழுமையாக தூய்மைப்படுத்தும். எங்கள் உறவினர்கள் மற்றும் அயலகத்தார்கள் உமது அன்பைக் காண உதவும். அழியாத சமாதானத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள உதவும்.

கேள்வி:

  1. பரிசுத்த வேதாகமத்தில் இந்த புத்தகத்தின் அதிகாரம் 16 வசனம் 31 மிகவும் முக்கியமானது ஏன்?

வினாக்கள் - 5

அருமையான வாசகரே,
நீங்கள் இந்த சிறிய புத்தகம் மூலம் அப்போஸ்தலர் நடபடிகளுக்கான எங்களது விளக்கங்களை படித்துள்ளீர்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதுங்கள்.நீங்கள் 90 % கேள்விகளுக்கு சரியான பதில் எழுதினால், நாங்கள் இதனுடைய தொடர்ச்சியை உங்களுக்கு அனுப்பி வைப்போம். உங்களது பக்திவிருத்திக்கு இது உதவியாக இருக்கும். தயவுசெய்து உங்களது முழுப்பெயர் மற்றும் முகவரியை தெளிவாக பதில் தாளில் எழுதுங்கள்.

  1. மனிதனுடனான இறைவனது வரலாற்றின் தூண்டுதல் மற்றும் நோக்கம் என்ன?
  2. இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பவுல் என்ன பிரசங்கித்தான்? அவருடைய உயிர்த்தெழுதலை ஆதாரமாக வைத்து அவன் கூறிய நற்செய்தி என்ன?
  3. புறஜாதிகளுக்கு பிரசங்கிப்பதற்கான தனது உரிமையை பவுல் எவ்விதம் சாட்சியிட்டார்? இந்த விசுவாசம் விக்கிரக ஆராதனைக்காரர்கள் மத்தியில் எப்படி உணரப்பட்டது?
  4. பவுலும், பர்னபாவும் ஏன் ஒரு பட்டணத்தை விட்டு மறு பட்டணத்திற்கு ஓடிப் போனார்கள்?
  5. எல்லா தெய்வங்களும் மாயை என்று ஏன் பவுல் கூறினான்?
  6. பவுலும், பர்னபாவும் திரும்பி வந்த போது புதிய சபைகளுக்கு எவ்விதம் ஊழியம் செய்தார்கள்?
  7. இரண்டு அப்போஸ்தலர்களும் தங்களுடைய முதல் மிஷெனரி பயணத்தின் போது அனுபவித்த புதிய உண்மைகள் என்ன?
  8. ஏன் அந்தியோகியோ சபை பிரச்சினையை தானாகவே தீர்த்து கொள்ள முற்படாமல், எருசலேமின் அப்போஸ்தலர்களைக் கேட்டு இறுதி முடிவை காண நினைத்தார்கள்?
  9. பேதுருவின் பிரசங்கத்திற்கு பொருளாக அமைந்த அவரது கூற்று என்ன? ஏன் கிறிஸ்தவ சபை இரட்சிப்பின் அஸ்திபாரமாக அதைக் கருதுகிறது?
  10. அன்பிற்காக சில காரியங்களை கடைபிடிப்பதற்கும், இரட்சிப்பிற்காக நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
  11. எருசலேமில் கூடிய அப்போஸ்தல ஆலோசனைக் குழு எடுத்த முடிவில் இருந்த முக்கியமான காரியங்கள் என்ன?
  12. பவுலின் இரண்டாவது மிஷெனரி பயணத்திற்கான காரணம் மற்றும் அடிப்படையான திட்டம் என்ன?
  13. தீமோத்தேயுவிற்கு செய்யப்பட்ட விருத்தசேதனம் அவசியமானதா? இல்லையா? ஏன்?
  14. தாங்கள் விரும்பியபடி ஊழியத்தில் விசுவாசிகள் முன்னேறிச் செல்வதை பரிசுத்த ஆவியானவர் தடுப்பதின் பொருள் என்ன? புதிய ஊழியத்திற்கான அவரது அழைப்பின் பொருள் என்ன?
  15. லீதியாளின் வாழ்க்கையில் ஏற்பட்ட அற்புதம் என்ன? ஏன் பவுல் அவளது வீட்டார் அனைவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்?
  16. பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த குறி சொல்லுபவளின் வார்த்தைகளில் காணப்பட்ட பொய் என்ன? பவுல் பேசிய காரியங்களைக் குறித்த உண்மை என்ன?
  17. துன்புறுத்தப்பட்ட சிறைக்கைதிகள் ஏன் நடுராத்திரியில் கீதங்களைப் பாடினார்கள்?
  18. பரிசுத்த வேதாகமத்தில் இந்த புத்தகத்தின் அதிகாரம் 16 வசனம் 31 மிகவும் முக்கியமானது ஏன்?

அப்போஸ்தலர் நடபடிகளுக்கான தேர்வை நீங்கள் எழுதிமுடிக்க நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். நீங்கள் நித்திய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறோம். உங்களது பதில்களுக்காக காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் செய்கிறோம். எங்களது முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)