Previous Lesson -- Next Lesson
4. பாவியான யூதாஸின் இடத்தில் மத்தியா தெரிவு செய்யப்படுதல் (அப்போஸ்தலர் 1:15-26)
அப்போஸ்தலர் 1:15-20
15 அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று: 16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. 17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான். 18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. 19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது. 20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
இயேசுவின் சீடர்களுடைய உயிரோட்டமுள்ள ஐக்கியம் இரண்டு பயங்கரமான நிகழ்வுகளினால் சில நாட்கள் தடைப்பட்டது. அனைத்து மக்களையும் மீட்பதற்காக அவர்களுடைய ஆண்டவர் சிலுவையின் மரணத்தை ஏற்றுக்கொண்டது அவர்களில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. அவருடைய மரணம் அவர்களுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. அதேவேளையில் இயேசுவைக் காட்டிக்கொடுத்த பிறகு, உடைந்துபோன யூதாஸ் தற்கொலை செய்துகொண்டதும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயேசுவோ தெய்வத்துவத்தை எல்லாம் தம்முடைய சரீரத்தில் உள்ளடக்கியவராக இருந்தார். ஆனால் யூதாúஸô தனக்குள் நுழைந்த பிசாசினால் நிறைந்திருந்தான். அன்பார்ந்த சகோதரனே உமது வழியைத் தெரிவு செய்துகொள்ளும். இறைவனுக்காக பல பாவிகளுக்கு சேவை செய்வதில் உங்கள் வாழ்வைச் செலவிடப் போகிறீர்களா? அல்லது பாவமும், நம்பிக்கையின்மையும், இறைவனுடைய கோபாக்கினையின் மீதான பயத்தையும் சுமந்தவராக மரணத்தைச் சந்திக்கப் போகிறீரா?
யூதாஸின் மரணம் சீடர்களுடைய வட்டாரத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது. பன்னிரெண்டு கோத்திரங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியாக இயேசு பன்னிரெண்டு சீடர்களை ஏற்படுத்தியிருந்தார். அந்த பன்னிரெண்டு கோத்திரங்களும் இயேசுவை விசுவாசிக்கவில்லை என்றால் அவர் அவர்களை இறுதி நாளில் நியாயம் தீர்ப்பார். அந்தப் பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அந்த சீடர்கள் ஒன்று கூடி இயேசுவைக் கண்ட சாட்சியாக ஒருவரை ஏற்படுத்த நினைத்தார்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்த விசுவாசமுள்ள நூற்றியிருபது பேர் அங்கே கூடிவந்திருந்தார்கள். அவர்கள விண்ணப்பித்து பிதாவினுடைய வாக்குத்தத்தத்திற்காகக் காத்திருந்தார்கள். அந்தக் கூட்டம் மிகவும் அற்புதமாக இருந்திருக்கும்.
அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும்படி பேதுரு அவர்கள் நடுவில் எழுந்து நின்றார். அங்கிருந்த அனைவருக்கும் பேதுரு இயேசுவை மறுதலித்தவர் என்பது நன்கு தெரியும். நான்கு நற்செய்தி நூல்களிலும் அதைப் பற்றி வெளிப்படையாக நாம் வாசிக்கிறோம். ஆனாலும் அவர் தம்முடைய பாவத்தினிமித்தமாக மனமுடைந்து அழுத காரணத்தினால், இயேசு அவரை மன்னித்து விட்டார் என்பதையும் அனைவரும் அறிந்திருந்தார்கள். தம்முடைய உயிர்தெழுதலுக்குப் பிறகு பேதுருவே அவர்களை வழிநடத்திச் செல்வார் என்பதையும் இயேசு அவருக்கு உறுதிப்படுத்தியிருந்தார். ஆதித் திருச்சபையில் சத்திய ஆவியின் இருத்தலுக்கு இது குறிப்பிடத்தக்க ஆதரவாக இருந்தது. தங்களில் முதன்மையானவருடைய மறுதலிப்பை அவர்கள் பெரிதுபடுத்தவும் இல்லை. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவும் இல்லை. அதே வேளையில் அன்பின் ஆவியானவர் அவர்களில் அதிகமாகச் செயல்பட்டார். தம்முடைய மந்தையை மேய்க்க வேண்டும் என்ற கட்டளையை இயேசு பேதுருவிற்குக் கொடுத்திருந்தார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் இந்தக் கூட்டத்தில் எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் தலைமை தாங்கும்படி எழுந்து நிற்பது எவ்வளவு அற்புதமானது. பேதுரு ஒருவேளை: “நான் மிகப்பெரிய பாவிதான் என்பதையும் கிறிஸ்து என்னை ஏற்றுக்கொண்டார் என்றும் நான் நிச்சயமாக அறிவேன். அவர் என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிற காரணத்தினால், நான் தோல்வியுற்ற சீடனாயிருந்தாலும் அவரை இன்னும் நான் சேவிப்பேன்” என்று சொல்லியிருக்கக்கூடும். பேதுரு தன்னுடைய சொந்தப் பேரில் பேசவில்லை. அவர் தன்னை உயர்த்தவும் விரும்பவில்லை. அவருடைய செயல்கள், பேச்சுக்கள் அனைத்துமே உயிருள்ள கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காகவே இருந்தது.
பேதுரு மற்ற சீடர்களைக் காட்டிலும் தனக்கு அதிகமான அதிகாரம் இருப்பதைப் போல இன்றைய பிஷப்புக்களையோ அல்லது போப்புக்களையோ போல செயல்படவில்லை. மாறாக அவர் ஒரு மூப்பர் இன்னொரு மூப்பருடன் பேசுவதைப் போல சாதாரணமாகப் பேசுகிறார். அவர் அவர்களைச் சகோதரர்களே என்று அழைக்கிறார். காரணம் அவர்கள் அனைவருக்கும் இறைவனே பிதாவானவர். “சகோதரர்” என்பதைப் போன்ற தனிச்சிறப்பான பட்டம் வேறு எதுவும் இல்லை. ஏனெனில் இது இறைவனுடைய குடும்பத்திலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும்.
சீடர்கள் விண்ணப்பித்துக்கொண்டும் தியானித்துக்கொண்டும் இருக்கும்போது, நீதியுள்ளவராகிய கிறிஸ்துவை வஞ்சகமான முறையில் அநீதியுள்ளவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்து, இறைவனுடைய எதிரிகளின் வழிகாட்டியாக மாறிய யூதாஸின் முடிவைப்பற்றி சிந்தித்திருப்பார்கள். இயேசுவோடு அவர்கள் ஐக்கியத்திலிருந்த காலத்தில் யூதாúஸôடு அவர்கள் செலவிட்ட நாட்களை நினைத்துப் பார்த்தார்கள். யூதாஸ் இறைவனுடைய அரசின் உள்ளான அங்கத்தவராயிருந்தார். கர்த்தரால் அவர் அழைப்பையும், ஒரு பதவியையும், அதிகாரத்தையும் பெற்றிருந்தார். ஒரு காலகட்டத்தில் அவர் மற்ற சீடர்களுடன் சேர்ந்து இறைவனுக்கு சேவை செய்தார்.
ஆனால் யூதாஸ பணத்தையே நேசித்து, லூக்கா சொல்வதைப் போல அநீதத்தின் கூலியை நாடிச் சோரம்போனான். பாதிப்புக்குள்ளான தன்னுடைய ஆத்துமாவிற்கு பாதுகாப்பு வேண்டி, நகரத்திற்கு வெளியே ஒரு நிலத்தை வாங்கினான். ஆனால் இறைவனுடைய சாட்டையடி அவனது மனசாட்சியைக் காயப்படுத்தியிருந்த காரணத்தினால், அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. பிசாசும் தொடர்ந்து அவனைக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்த காரணத்தினால் அவன் நம்பிக்கை இழந்தவனானான். ஆகவே அவன் ஓடிப்போய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டான். அவன் தூக்கில் தொங்கிய கயிறு அறுந்தபடியால் அவன் ஒரு கூர்மையான பாறையின் மேல் விழுந்து அவனுடைய குடல்கள் எல்லாம் வெளியேறியது. இப்படிப்பட்ட நிகழ்வு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை மருத்துவராயிருந்த லூக்காவினால் யோசித்து எழுத முடிந்தது.
எருசலேமில் இருந்த அனைவரும் அவனுடைய மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அது இறைவனுடைய கோபத்தினால் துரோகிக்கு கொடுக்கப்பட்ட தண்டனைதான் என்பதை உணர்ந்துகொண்டார்கள். இவ்வாறு சபிக்கப்பட்ட மனிதனுடைய இரத்தம்படிந்த நிலத்தைவிட்டு அவர்கள் விலகியிருந்தார்கள்.
யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்பதை கிறிஸ்து ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தினால் தம்முடைய பிரசங்களில் பலமுறை அவனை எச்சரித்திருக்கிறார். ஆனால் தன்னுடைய வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்கு உயிருள்ள கர்த்தருடைய வல்லமையைக் காட்டிலும் பணத்தின் வல்லமையையே அவன் அதிகமாக நம்பியிருந்தான். அதனால் அவன் தன்னுடைய பரலோக இடத்தையும் பூமியின் இடத்தையும் இழந்து போனான். அவனுடைய அப்போஸ்தல பணி இன்னொருவருக்குக் கொடுக்கப்பட்டது. அவன் புதிதாக வாங்கியிருந்த வீடு பாழாய்ப்போனது. அதன் சுவர்கள் இடிந்துபோய், அங்கே வெளவால்கள் குடிகொண்டன.
கடைசி இரவு உணவு வேளையில் இயேசு அவர்கள் ஒருவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று சொன்னபோது அவர்கள் யார் என்பதை அறியாதிருந்தார்கள். ஒவ்வொரு சீடருமே தாங்கள் அதற்குப் பொருத்தமானவர்களா என்று எண்ணிப்பார்த்தார்கள். ஆனால் காட்டிக்கொடுப்பவனுடைய வழியை இறைவனுடைய ஆவியானவர் முன்னறிந்திருந்தார் என்பதை தங்கள் கூட்டு விண்ணப்பத்தின் போது உணர்ந்துகொண்டார்கள். இந்தத் துரோகியைக் காட்டிக்கொடுக்கும் பாவத்தைச் செய்யும்படி பரிசுத்தமான இறைவன் வழிநடத்தவில்லை. காரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் சுயாதீன சித்தத்தைக் கொடுத்திருக்கிறார். எந்த மனிதனும் தன்னுடைய சுயாதீன சித்தத்தை மீறிப் பாவம் செய்யும்படி வற்புறுத்தப்படுவதில்லை. யூதாஸ் கிறிஸ்துவின் அன்பை உணராமல் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார். அதன் விளைவாக இறைவனுடைய சாபத்திற்குக் கீழாக இறந்துபோனான். இதைத்தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தாவீதின் மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் சொல்லியிருந்தார் (சங்கீதம் 69:26; 109:8).
அன்பான சகோதரனே பரிசுத்த ஆவியின் செயலுக்கு உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள். அவர் உங்களை பண ஆசையிலிருந்து விடுவித்து, தியாகத்தோடு அவருக்குச் சேவைசெய்யும்படி வழிநடத்த அவருக்கு இடம்கொடுங்கள். பணத்தையோ, மதிப்பையோ, அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ உங்களுக்கு நீங்கள் தேடாதீர்கள். தாழ்மையையும், திருப்தியையும், சாந்தத்தையும், எளிமையையும் நாடுங்கள். பொருளாதாரத்தில் ஏழையாகவும் பரிசுத்த ஆவியில் ஐசுவரியராகவும் இவ்வாறுதான் கிறிஸ்து தம்முடைய சீடர்கள் நடுவில் வாழ்ந்தார்.
விண்ணப்பம்: கர்த்தாவே, என்னுடைய சுயநலம், பணஆசை ஆகியவற்றை எனக்கு மன்னியுங்கள். உம்முடைய பராமரிப்பின் செயலை நம்பி உம்மையே சேவிக்கும்படி என்னைப் பரிசுத்தப்படுத்தும். என்னுடைய ஆத்துமாவையும் என்னுடைய சகோதரர்களுடைய ஆத்துமாவையும் நீர் உம்முடைய ஆவியானவரினால் நிரப்பும். உம்முடைய அன்பில் நாங்கள் நிறைந்திருந்தால் எந்த சாபத்திற்கும் உட்படமாட்டோம்.
கேள்வி:
- யூதாஸின் மரணத்திலிருந்து நீங்கள் எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்?