Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 077 (Jesus enters Jerusalem)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
அ - பரிசுத்த வாரத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் (யோவான் 11:55 - 12:50)

2. இயேசு எருசலேமிற்குள் நுழைகிறார் (யோவான் 12:9–19)


யோவான் 12:9-11
9 அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். 10 லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால், 11 பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.

இயேசு லாசருவைச் சந்தித்தார் என்ற செய்தி எருசலேமை எட்டியபோது பெரிய குழப்பம் உண்டானது. எருசலேமிலிருந்து மக்கள் புறப்பட்டு இயேசுவின் உயிரளிக்கும் அற்புதத்தைக் காணும்படி ஒலிவ மலைக்கும் பெத்தானியாவுக்கும் வந்தார்கள்.

இயேசு லாசருவைச் சந்தித்தார் என்ற செய்தி எருசலேமை எட்டியபோது பெரிய குழப்பம் உண்டானது. எருசலேமிலிருந்து மக்கள் புறப்பட்டு இயேசுவின் உயிரளிக்கும் அற்புதத்தைக் காணும்படி ஒலிவ மலைக்கும் பெத்தானியாவுக்கும் வந்தார்கள். உயிர்தெழுதலையும் ஆவிகளையும் விசுவாசிக்காத சதுசேயருடன் பிரதான ஆசாரியர்கள் சேர்ந்துகொண்டார்கள். அந்தக் கூட்டணி லாசருவின் அற்புதமான உயிர்த்தெழுதலைப் புறக்கணித்ததோடு மட்டுமின்றி, உயிரோடு எழுப்பியவரையும் எழுப்பப்பட்ட லாசருவையும் சேர்த்துக் கொலை செய்துவிட்டால், உயிர்த்தெழுதல் இல்லை என்று நிரூபித்து விடலாம் என்று கருதினார்கள். அத்துடன் லாசரு உயிருடன் எழுப்பப்பட்டதால் மக்கள் கூட்டம் அவரை மேசியாவாகக் கருதத் தொடங்கியதும் இயேசுவைக் கொல்வதற்கு அவர்களைத் தூண்டியது.

யோவான் 12:12-13
12 மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, 13 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.

எருசலேமில் எங்கும் இயேசுவைப் பற்றிய பேச்சுத்தான். அவர் என்ன செய்வார் என்பதைக் குறித்து மக்கள் யூகிக்கத்தொடங்கினார்கள். “அவர் ஓடிப்போய்விடுவாரா அல்லது நகரத்தைக் கைப்பற்றுவாரா?” அவர் அன்றிரவு பெத்தானியாவில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் தன்னுடைய சீஷர்களுடன் எருசலேமை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். “புதிய அரசன் வருகிறார். தெய்வீக இராஜா அருகாமையில் நெருங்குகிறார்.” அவர் மேலும் அற்புதங்களைச் செய்வார் என்று வெற்றிகளை ஈட்டுவார் என்றும் கருதினார்கள். சிலர் குருத்தோலைகளை வெட்டிக்கொண்டு வந்து அவரை வரவேற்றார்கள். மற்றவர்கள் அரசர்களையும் வீர சாகசம் புரிந்தவர்களையும் வரவேற்கும் பாடல்களைப் பாடினார்கள். “நாங்கள் உம்மைத் துதித்து மகிமைப்படுத்துகிறோம். நீர் சர்வ வல்லமையுள்ளவர். நீர் கர்த்தருடைய அதிகாரத்துடன் அவருடைய நாமத்தினால் வருகிறீர். நீர் கொண்டுவரும் ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. எங்களுக்கு உதவி எங்களுடைய அனைத்து அவமானங்களிலிருந்தும் எங்களை விடுவியும். நீரே எங்கள் விடுதலையாளரும், சாகசவீரரும், தலைவருமாயிருக்கிறீர். நீரே எங்கள் உண்மையான அரசன்” என்று பெரும் சத்தமாக அவரை வாழ்த்தினார்கள்.

யோவான் 12:14-16
14 அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, 15 இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். 16 இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

இந்தப் பாராட்டுக்களைக் கண்டு இயேசு மயங்கிவிடவில்லை. ஏனெனில் மக்கள் கூட்டம் ஆரவாரிக்கும்பொழுது தெளிவாகக் கேட்கவோ சிந்திக்கவோ முடியாது என்றும் வெற்றுக்கூச்சல் போட்டுக்கொண்டு தெருக்களில் திரிவார்கள் என்றும் அவருக்குத் தெரியும். மாறாக அவர்களோடு அடையாள மொழியில் பேசும்வண்ணம் கழுதைக் குட்டியின் மீது ஏறி பிரயாணம் செய்தார். அதன் மூலம், “சகரியா 9:9-ல் வாக்குப்பண்ணப்பட்ட அரசன் நான்தான். பயப்படாமல் மகிழ்கொண்டாடுங்கள். நான் சுவர்களையும் நகர மதில்களையும் உடைப்பதில்லை. நான் கொல்லுவதுமில்லை, இறைவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதுமில்லை. நான் பாரபட்சமின்றி நீதியை நிறைவேற்றுவேன். நான் அநாதைகளுக்கும் நீதியைக் காண்பித்து, விதவைகளுக்கு கருணை காட்டுவேன்” என்று அறிவித்தார்.

“எல்லா மனிதர்களும் நீதியுள்ளவர்கள் அல்ல என்பது துக்கமான காரியம். பெரும்பான்மையானவர்கள் நேர்வழியை விட்டு விலகுகிறவர்களாகவே இருக்கிறார்கள். நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள், ஆனால் நான் உங்களை அழிக்கப் போவதில்லை. உங்களில் உள்ள தீமையை அழிக்கப்போகிறேன். நான் வெற்றியாளனாக உங்களுடைய பாவங்களை என்னுடைய சரீரத்தில் சுமக்கப்போகிறேன். ஆனாலும் நான் தோல்வியடைந்த பெலவீனனைப் போல காட்சி தருவேன். இவ்விதமாக நான் உங்களை இறைவனுடைய கோபத்திலிருந்து விடுதலை செய்வேன். இவ்விதமாக நான் ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றி பெறுவேன்.”

“நீங்கள் வாளேந்தி வெற்றிபெரும் சாகச அரசனை எதிர்பார்க்கிறீர்கள். நானோ தாழ்மையான ஆட்டுக்குட்டியாக தீவிரவாதமின்றி வருகிறேன். நான் என்னுடைய விருப்பங்களை என்னுடைய பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறேன். நீங்கள் போராட்டத்தையும் வெற்றியையும் எதிர்பார்க்கிறீர்கள். நானோ உங்களுக்கு இறைவனுடன் ஒப்புரவாகுதலையும், விடுதலையையும், சமாதானத்தையும் கொடுக்கிறேன். நான் வரும் வாகனத்தைப் பாருங்கள். நான் குதிரையையோ, ஒட்டகத்தையோ பயன்படுத்தாமல் கழுதைக் குட்டியைப் பயன்படுத்துகிறேன். நான் பணத்தையோ கனத்தையோ எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நான் நித்தய வாழ்வுடன் வந்து, பரலோகத்தின் வாசலைத் திறந்து, மனந்திரும்புகிறவர்களை இறைவனோடு ஒப்புரவாக்குகிறேன்.” இவ்வாறு இயேசு தன்னுடைய செய்கையின் மூலமாகப் பேசியதை மக்களோ அவருடைய சீடர்களோ புரிந்துகொள்ளவில்லை. இயேசு உயிரோடு எழுந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய கண்களைத் திறந்தபொழுதுதான் அவர்கள் தங்கள் ஆண்டவருடைய தாழ்மையையும் இறைவனுடைய மகிமையையும் கண்டார்கள். இவை மனிதனுடைய பொருளாதார மற்றும் அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் வித்தியாசமானது. ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் அந்தத் தீர்க்கதரிசனத்தின் பொருளையும் அதன் எழுத்தின்படியான நிறைவேற்றத்தையும் அறியாமலேயே மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரைக் குறித்துப் பாடி மகிழும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார்.

யோவான் 12:17-19
17 அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள். 18 அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள். 19 அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.

பெத்தானியாவிலிருந்து இயேசுவுடன் வந்தவர்களை எருசலேமிலிருந்து வந்த ஊர்வலம் இயேசுவை வரவேற்பதற்காக கிதரோன் பள்ளத்தாக்கில் சந்தித்தது. பெத்தானியாவிலிருந்து அவருடன் வந்தவர்கள், “இவர் லாசருவை உயிரோடு எழுப்பியுள்ளதால் இவர்தான் மேசியா, இவரை வரவேற்று உபசரியுங்கள்” என்று சத்தமிட்டுக் கத்தினார்கள். ஐந்து அப்பங்களைக் கொண்டு இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்ச்சிக்கு பெருந்திரளான மக்கள் கூடிவரக் காரணம் இயேசு பெதஸ்தாவில் குணமாக்கியதே. அதேபோல இங்கு பெருந்திரளான மக்கள் அவரைப் பின்பற்றுவதற்குக் காரணம் அவர் லாசருவை உயிருடன் எழுப்பியதேயாகும். இந்த இரண்டு தருணங்களிலும் உலக காரணங்களினாலேயே மக்கள் இயேசுவை நேசித்தார்களே தவிர நீதியினிமித்தமாகவோ மனந்திரும்புதலின் நிமித்தமாகவோ அல்ல.

இந்தக் கூட்டத்திற்குப் பின்பாக பரிசேயர்களும் மக்களுடைய தலைவர்களும் கோபத்துடனும் பொறாமையுடனும் இயேசு நகரத்திற்குள் நுழையும்வரை காத்திருந்தார்கள். அவர்கள் பயந்து நடுங்கி தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள். இரகசியமாக இயேசுவைப் பிடிக்க வேண்டும் என்ற அவர்களுடைய திட்டம் நிறைவேறவில்லை. இயேசு வெற்றிபவனியாக எருசலேமிற்குள் நுழைந்தார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே எங்களுடைய இருதயத்தையும் சிந்தையையும் திறந்து, பரிசுத்த ஆவியானவரினால் எங்களை உம்முடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றும். பரிசுத்த ஆவியானவர் வந்து எங்கள் இருதயத்தில் வாசம்பண்ணுவதற்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல. இருப்பினும் அவர் எங்கள் இருதயத்தில் வருகிறார். நீர் எங்களை நேசித்து, இறைவனோடு ஒப்புரவாக்கி, உம்முடைய சமாதான இராஜ்யத்திற்குள் எங்களை கொண்டுவந்திருக்கிறபடியால் உமக்கு நன்றி. “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று நாங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறோம். நீர் என்னுடைய இராஜா; நான் உம்முடைய சொத்து. ஆமென்.

கேள்வி:

  1. இயேசு எருசலேமிற்குள் வெற்றிபவனியாக நுழைந்தது எதைக் குறிக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:40 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)