Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 102 (The Women Beneath the Cross)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

19. சிலுவையின் அடியில் பெண்கள் (மாற்கு 15:40-41)


மாற்கு 15:40-41
40 சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41 அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.

கலிலேயாவில் இருந்து எருசலேம் நோக்கிய நீண்ட பயணத்தில், பல்வேறு தரப்பட்ட பெண்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தார்கள். (லூக்கா 8:2,3) அவரை விட்டுவிடாமல் தொடர்ந்து வந்தார்கள். இயேசு தமது ஆவியின் வல்லமையினால் பரிசுத்தத்திலும், கனத்திலும் சீஷர்களையும், ஆண்கள் மற்றும் பெண்களையும் வழிநடத்தினார்.

இயேசுவினிடம் இருந்து வெளிப்பட்ட இறைவல்லமையை உணர்ந்த பணக்காரப் பெண்கள் உதாரத்துவமான காணிக்கைகளால் அநேக சமயம் சீஷர்கள் போஷிக்கப்பட்டார்கள். இயேசு அற்புத சுகமளித்ததற்காக பணத்தைக் கேட்கவில்லை. அவர் பொக்கிஷத்தை சேர்க்கவும் இல்லை. அவர் எளிமையாக திருப்தியுடன் வாழ்ந்தார். துன்புறும் நேரத்தில் கலிலோயவில் சீஷர்களைத் தொடர்ந்து இந்தப் பெண்கள் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் இந்த இளம் சீஷர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களை பராமரித்தார்கள்.

அவர்களுடைய பெயர்களைத் தவிர வேறு ஒன்றும் இந்தப் பெண்களைக் குறித்து நமக்குத் தெரியவில்லை. லூக்கா 8:2-3 வேதபகுதி அவர்களில் சிலரைக் குறித்து குறிப்பிடுகின்றது. அவர்கள இயேசுவின் கட்டளையால் பிசாசின் பிடியிலிருந்து விடுதலை பெற்றவர்கள் ஆவார்கள்.

பரிசுத்த ஆவியானவர் இன்னும் அருளப்படவில்லை. அசுத்த ஆவிகள் மீண்டும் தங்களைத் தாக்கி அழிக்கும் என்று அவர்கள் பயந்தார்கள். குறிப்பாக மகதலேனா மரியாள் ஏழு தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டு அவதியுற்றாள். அவளை இயேசு முழுமையாக குணமாக்கினார். இந்த உண்மையுள்ள பெண்கள் வல்லமைமிக்க இரட்சகரின் பாதுகாப்பை நாடினார்கள். இயேசு அவர்கள் பின் தொடர்ந்து வருவதை தடை செய்யவில்லை.

சலோமே என்பவர் கிறிஸ்துவின் வலது புறமும், இடதுபுறமும் அவருக்கருகில் அவருடைய ராஜ்யத்தில் தனது இரண்டு மகன்களாகிய யோவான், யாக்கோபு அமரும்படி வேண்டிக்கொண்ட பெண்ணாக இருக்கக்கூடும். இப்போது அவள் இயேசுவின் வலதுபுறமும், இடதுபுறமும் இரண்டு திருடர்கள் தொங்குவதைப் பார்க்கிறாள். அவள் “யூதர்களின் ராஜா” என்ற தலைப்பை வாசித்தாள். அவருடைய தாழ்மையைக் கண்டு அவள் நடுங்கினாள்.

அநேக பெண்கள் இயேசுவை உண்மையாய் பின்பற்றினார்கள். அவர் தனது மகிமையை வெளிப்படுத்துவார் என்று நம்பினார்கள். அநீதிக்கு எதிராக போராடும் நீதியுள்ளவர்களுக்கு உறுதுணையாய் இருந்தார்கள். இப்போது மிகவும் காயப்பட்ட இயேசுவைக் காண்கிறார்கள். அவர்கள் ஆணிகள் அறையப்படும் சத்தத்தைக் கேட்டார்கள். சிலுவையில் அவருடைய வார்த்தைகளைக் கவனித்தார்கள். எப்படியிருப்பினும் அவர்கள் அங்கிருந்து ஓடவில்லை.

அவர்கள் தைரியமாக அங்கு நின்றார்கள். சிலுவைக்கு அருகில் நிற்பதினால் ஏற்படும் ஆபத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இயேசுவின் மரணத்தைக் குறித்த அநேக விபரங்கள் நமக்குத் தெரியாது. அவர்கள் கண் கண்ட சாட்சிகளாகவும், பிரசங்கிகளாகவும் மாறினார்கள்.

ஒருவேளை நூற்றுக்கதிபதி அந்தப் பெண்கள் அங்கிருக்கும்படி அனுமதித்திருக்கலாம். அவர்கள் இயேசுவை சிலுவையில் இருந்து இறக்கி கொண்டு போய்விடுவார்கள் என்று அவன் பயப்படவில்லை. ஆசாரியர்களும், மூப்பர்களும் அந்த இடத்தை விட்டு கடந்து சென்ற பின்பும், அவர்கள் கொல்கதா மலையில் நடுக்கத்துடன் அழுது கொண்டிருந்தார்கள்.

அன்புள்ள இரட்சகரின் மீது கொண்டிருந்த அன்பினால் இந்தப் பெண்கள் மரண நேரத்திலும் அங்கிருந்து செல்லவில்லை. சாத்தானின் பிடியிலிருந்து தங்களை காப்பாற்றிய அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் மன்றாடி அழுதார்கள். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்தார்கள். அவர்களுடைய உதடுகளை வெப்பமான காற்று உலரப்பண்ணியது. இருள் அவர்களைப் பயமுறுத்தியது. ஆனாலும் அவர்கள் உறுதியாக நின்றார்கள். இறுதிவரை சிலுவையின் அருகில் இருந்தார்கள்.

இயேசு வெற்றி முழக்கத்துடன் தலையை சாய்த்து மரித்தபோது நம்பிக்கையின் கடைசி வாய்ப்பும் மறைந்துபோனது. இறுதி நேரத்தில் அவர்கள் கிறிஸ்துவின் வெற்றி வெளிப்படுவதை எதிர்பார்த்தார்கள். இறைவனின் குமாரன் மரித்ததைப் பார்த்த போது, அவர்களுடைய மனங்கள் செயலற்றுப் போயின. அவர்களுடைய இருதயங்கள் உடைக்கப்பட்டன. அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். மனிதர்களில் எல்லாம் சிறந்தவர் மரித்துவிட்டார். அன்பு சிலுவையிலறையப்பட்டது. இறைவனின் வல்லமை பலவீனமாகத் தோன்றியது. பதிலளிக்கப்பட முடியாத இரகசியத்தைக் கண்டு பெண்கள் திகைத்து நின்றார்கள்.

அந்த நேரத்தில் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஏனெனில் இன்னும் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது பொழிந்தருளப்படவில்லை.

விண்ணப்பம்: பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது ராஜ்யத்தின் இக்கட்டான நேரத்தில் பெண்கள் அடிப்படையான பணிகளைச் செய்தார்கள். ஆண்கள் மட்டுல்ல, பெண்களும் வரலாறு படைக்கிறார்கள். உமது நேச குமாரனின் மகிமை அவர்களை பணிசெய்யும்படி வழிநடத்தியது. அவர்கள் கண்கண்ட சாட்சிகளாக இருக்கும்படி நீர் அவர்களை வழிநடத்தினீர். இயேசுவின் மரணம், அவருடைய கடைசி வார்த்தைகளை நாமும் அறியும்படி செய்தார். இயேசுவின் மரணத்தை மறுப்போருக்கு அதை சாட்சியிடும்படி செய்தீர். இன்றும் அநேக பெண்கள் இயேசுவின் அன்பையும், மகிமையையும் உணரும்படி செய்யும். அவர்கள் உம்மைப் பின்பற்றவும், விசுவாசத்தினால் இரட்சிக்கப்படவும் கிருபை செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. சிலுவையின் போது அங்கு அநேக பெண்கள் காணப்பட்டதின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:36 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)