Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 103 (The Burial of Jesus)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

20. இயேசு அடக்கம்பண்ணப்படுதல் (மாற்கு 15:42-47)


மாற்கு 15:42-47
42 ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, 43 கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 44 அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். 45 நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான். 46 அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். 47 அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

இயேசு மரித்துவிட்டார் என்பதை மிக விரைவாக எப்படி யூத ஆலோசனைச் சங்கத்தின் பிரதான அங்கத்தினராக இருந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு அறிந்துகொண்டான்? ஒருவேளை அந்தப் பெண்களில் யாரேனும் ஒருவர் அவனிடம் ஓடி சொல்லியிருக்கக் கூடும்.

ஏன் அவள் பேதுரு மற்றும் யோவானிடம் ஓடிச் செல்லாமல் ஆலோசனைச் சங்கத்தின் அங்கத்தினரை நோக்கி ஓட வேண்டும்? ஏனெனில் இந்த யோசேப்பு இயேசுவிற்கு இரகசிய சீஷனாக இருந்தான். இயேசுவே மேசியா என்பதை நம்பி, அவர் மீது விசுவாசம் வைத்திருந்தான். எனவே பெண்கள் அவனை நம்பி, அவனுடைய உதவியை நாடினார்கள் (யோவான் 19:38).

இயேசுவிற்கு எதிராக செயல்பட்ட ஆலோசனைச் சங்கத்தில் இருந்து எவ்விதம் யோசேப்பு இயேசுவை கனப்படுத்த முடியும்? ஒருவேளை ஆலோசனைச் சங்கம் கூடியிருந்த போது அவன் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை அங்கு அவன் இருந்திருந்தால் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கக் கூடும். யூத பாரம்பரிய நியாயத்தீர்ப்பின்படி ஒரு ஏமாற்றுக்காரனை முழுவதும் இறைவனுடைய கிருபையை இழந்துவிட்டவன் என்று நினைக்கக்கூடாது. இது இயேசுவிற்கும் பொருந்தும். எனவே எழுபது பேர் கொண்ட ஆலோசனைச் சங்கம் இரண்டு பேர் எதிராக ஓட்டுபோட்டதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை யோசேப்பு, நிக்கோதேமுவும் இயேசு குற்றமற்றவர் என்று தங்கள் கருத்தை பதிவு செய்திருப்பார்கள் (யோவான் 19:39).

யோசேப்பு மிக அற்புதமான குணம்கொண்டவன் அவன் ஆன்டனியா கோபுரத்தில் ரோம தேசாதிபதி பிலாத்துவை சந்திக்க தைரியமாகச் சென்றான். இக்காரியம் பிரதான ஆசாரியர்களை எரிச்சலடையச் செய்யும் என்பதை அறிந்திருந்தான். அவன் ஆலோசனைச் சங்கத்தின் மற்ற அங்கத்தினர்களைக் கண்டு பயப்படவில்லை. பஸ்கா பண்டிகையை அனுசரிக்கும் சடங்கு முறைகளைக் குறித்து கவலைப்படவில்லை. இறந்த சரீரத்தை தொடும் ஒருவன் ஒரு வாரத்திற்கு தீட்டுப்பட்டவனாக கருதப்படுவான் என்பதையும் பொருட்படுத்தவில்லை.

இயேசு விரைவில் மரித்துவிட்டதை அறிந்த பிலாத்து ஆச்சரியப்பட்டான். 24 அல்லது 48 மணி நேரங்களில் சிலுவையிலறையப்பட்டவர்கள் மரிப்பது பொதுவாக நடைபெறக் கூடிய காரியம் இல்லை. சில நேரங்களில் மூன்றாம் நாள் வரைக்கும் உயிருடன் சிலுவையில் இருப்பார்கள். இயேசுவின் சரீரம் மிகவும் துன்புறுத்தப்பட்டது. அவருடைய ஆத்துமா மிகவும் சோர்வுற்றது. நரகம் அவரைத் தாக்கியது. இறைவனின் கோபாக்கினை அவரைப் பட்சித்தது.

இயேசுவின் மரணத்தைக் குறிப்பிடும் ஏசாயா 53:5 ஐ ஆழ்ந்து சிந்திக்கும் போது நீங்கள் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்: “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”

அவரை நொறுக்க கர்த்தர் சித்தம் கொண்டார். அவரை பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்துமா பாவ நிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. அவர் தமது சந்ததியைக் கண்டு நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பார். அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்.

இந்த வழக்கை மேலும் நீட்டிக்க பிலாத்து விரும்பவில்லை. அவனுடைய மனச்சாட்சியை உறுத்திய இந்தக் காரியத்தை விரைந்து முடிக்க அவன் எண்ணினான். மக்களின் நிர்ப்பந்தத்தினால் சட்டத்திற்கு விரோதமாக அவர் கொல்லப்பட்டதை நினைத்துப்பார்த்தான். யூத ஆலோசனைச் சங்கத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒருவன் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்பதை எண்ணிப்பார்த்தான். பிலாத்து ஏற்கெனவே இயேசுவுக்கு எதிராக முறையிட்டவர்களின் கைகளில் அவரை ஒப்புக்கொடுத்திருந்தான். இயேசு உண்மையாகவே மரித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த விரும்பினான்.

எனவே அவன் நூற்றுக்கதிபதியை அழைத்தான். அதிகாரப்பூர்வமாக அவருடைய மரணத்தை உறுதிப்படுத்தினார். பெண்கள் மட்டுமல்ல, சிலுவையில் இயேசு மரித்த வரலாற்றை நூற்றுக்கதிபதியும் சாட்சியிட்டான்.

இங்கு நாம் இறைவனின் பராமரிப்பின் செயலைக் காண்கிறோம். அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு வாழும் இடம் வேறொரு பகுதியாக இருந்தாலும், எருசலேமுக்கு அருகில் ஒரு கல்லறையை தனக்காக வாங்கியிருந்தான். அவன் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பினால், தனது சொந்த கல்லறையில் அவருடைய சரீரத்தை வைத்தான். இயேசுவின் மீது அவன் கொண்டிருந்த உயர்ந்த மதிப்பை இச்செயல் காண்பிக்கிறது.

இயேசுவின் சரீரம் புழுதியில் எறிந்துவிட்படவில்லை. வனாந்தரத்தில் நாய்களுக்கு போடப்படவில்லை. சிலுவையிலறையப்படும் சரீரங்களுக்கு செய்யப்படுவது போல இவர் சரீரத்திற்கு செய்யப்படவில்லை. அவர் சரீரம் ஆயத்தம்பண்ணபட்டிருந்த கல்லறையில் வைக்கப்பட்டது. இயேசு தமது பலி மரணத்தின் மூலம் இறைவனுடைய கோபாக்கினையை ஏற்றுக்கொண்டார். அவர் நமக்கும் ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை கொடுத்திருக்கிறார். இறைவன் அடிக்கப்பட தமது குமாரனைக் கனப்படுத்தினார் என்பதை இச்செயல் வெளிப்படுத்துகிறது. யோசேப்பு தனியாக இயேசுவின் சரீரத்தை சிலுவையில் இருந்து இறக்கவில்லை. நியாயப்பிரமாண மேதை நிக்கோதேமு, மற்றும் சில அன்புள்ள மக்களும் இணைந்து உதவி செய்தார்கள். பெண்களும் அன்புடன் இறுதிச் செயலில் ஈடுபட்டார்கள். அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக முடிக்கப்பட்டன. ஏனெனில் ஓய்வு நாள் நெருங்கியது. அது பன்னிரெண்டு மணிக்கு பின்பு ஆரம்பிக்கும். அதாவது மாலை ஆறு மணி நேரம் ஆகும். இந்த நாளில் ஒருவரும் வேலை செய்யவோ அல்லது நகரவோ அனுமதியில்லை.

இதே சனிக்கிழமை தான் பஸ்கா நாள் ஆகும். அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை புசிப்பவர்கள் இறைவனுடைய கோபாக்கினையில் இருந்து தப்புவார்கள் என்பதற்கான அடையாளம் ஆகும். மெய்யான இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் அமைதியுடன் அடக்கம்பண்ணப்பட்டார். தனது கல்லறையில் சனிக்கிழமை அன்று அமைதியாய் ஓய்ந்திருந்தார். அவருடைய கல்லறை அதிபதியின் முத்திரையினால் முத்திரையிடப்பட்டது. இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய சரீரத்தை திருடிவிடாதபடி இப்படிச் செய்தார்கள். மக்கள் துக்கத்துடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போனார்கள். அந்த நாளில் மிகவும் மனம் கசந்து அழுதார்கள்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது நேசகுமாரன் அடக்கம்பண்ணப்பட அனைத்து ஆயத்தங்களையும் செய்தீர். இயேசுவின் மீதான அன்பை யோசேப்பும், நிக்கொதேமுவும் வெளிப்படுத்தும்படி நீர் வழிநடத்தினீர். அவர்கள் ஆபத்து, இழிபேச்சு எதையும் குறித்து கவலைப்படவில்லை. பரியாசக்காரர்கள், மதவெறியர்களுக்கு நாங்கள் பயப்படாமல் இருக்க உதவும். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் இயேசுவை நேசிக்க கிருபை தாரும். அப்போது அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.

கேள்வி:

  1. இயேசு அடக்கம்பண்ணப்பட்ட செயலில் அற்புதமான காரியம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:39 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)