Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 099 (The Crucified is Mocked)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

16. சிலுவையிலறையப்பட்டவரை பரியாசம்பண்ணுதல் (மாற்கு 15:29-32)


மாற்கு 15:29-32
29 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, 30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். 31 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை. 32 நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.

மரணதண்டனை நிறைவேற்றப்படும் முன்பு குற்றவாளிகளை பிரதான ஆசாரியன் சந்திப்பது வழக்கம். மரணத்திற்கு முன்பாக அவர்களுடைய அறிக்கை மற்றும் மனந்திரும்புதலை கேட்டு அறிவான். இறைவனுடைய கோபாக்கினையிலிருந்து தப்பும்படி தேவாலயத்தில் தொடர்ச்சியாக செலுத்தப்படும் பலிகளின் அடிப்படையில் பொது மன்னிப்பை வழங்குவான்.

இயேசு சிலுவையில் எந்தப் பாவத்தையும் அறிக்கையிடவில்லை. அவர் மனந்திரும்புதலின் கண்ணீரை சிந்தவில்லை. தனது எதிரிகளுக்காக மன்றாடினார். அவர்களுடைய பாவமன்னிப்பை நாடினார். அவர்கள் செய்வதை அறியாதிருந்தார்கள். இயேசுவின் இந்த விண்ணப்பத்தைக் கேட்ட பிரதான ஆசாரியர்கள் இதை மிகக்கொடிய தூஷணமாகவும், அகங்காரமாகவும் கருதினார்கள். அவர்கள் கோபத்தினால் நிறைந்து, சிலுவையிலறையப்பட்டவரை ஏளனம் பண்ணினார்கள்.

சரீரத்தில் வேதனை அதிகரித்தது. பரியாசக்காரரின் பேச்சுகள் அவருடைய இருதயத்தைக் காயப்படுத்தின. இயேசு தன்னையே காப்பாற்றிக்கொள்ளும்படி பிசாசு சோதித்தான். வழியே நடந்து போகிறவர்களும் தங்கள் தலைகளைத் துலுக்கி பரியாசம் பண்ணினார்கள். இறை ஆலயத்தை இடித்துப் போடுங்கள். அதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவேன் என்று இயேசு கூறியதாக மீண்டும் குற்றம் சாட்டினார்கள்.

அவருடைய உண்மையான வார்த்தைகளை அவர்கள் நினைத்துப்பார்க்கவில்லை. அவர் தமது சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துப் பேசியதை புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உயிரற்ற கற்களினால் கட்டப்பட்ட ஆலயத்தைக் குறித்து எண்ணினார்கள். அவர்கள் தேசத்தின் நடுவில் இறைவனுடைய பிரசன்னம் இருப்பதற்கான அடையாளமாக இதைக் கருதினார்கள்.

பிசாசு பரியாசக் காரர்களை பயன்படுத்தினான். அவர்கள் “சிலுவையில் இருந்து இறங்கிவா, உன்னை நீயே காப்பாற்றிக் கொள் என்று பரியாசம் பண்ணினார்கள்”. எல்லா மனிதர்களுக்குமான பரிகாரபலியின் பாடுகளை நிறுத்திக்கொள். ஒப்புரவாக்குதலின் பணியை விட்டுவிடு. சிலுவையில் இருந்து இறங்கிவா, எதிரிகளை பட்சித்துப் போடு, ஒருவேளை இயேசு இதைச் செய்திருந்தால் சாத்தான் வெற்றி அடைந்திருப்பான். இறைவன் முழுமையாக மனுக்குலத்தை இழந்திருப்பார்.

யூதத்தலைவர்களும், யூதர்களுடைய பிரதிநிதிகளும் இருதயக் கடினத்தினால் இயேசுவின் மீட்பின் செயலைப் புரிந்துகொள்ளவில்லை. அவர் அநேகருக்காக தமது ஜீவனைக் கொடுத்தார். இரவு பகலாக நகரத்தின் தெருக்கள், கிராமங்களில் நடந்து திரளான மக்களை குணமாக்கினார். வேதபாரகர்களும், நியாயசாஸ்திரிகளும் அவருடைய குணமாக்கும் செயலை பிசாசின் செயல்பாடுகள் என்று கூறினார்கள். அவரைப் பரியாசம் பண்ணுவதின் மூலம், ஒருவரும் இயேசுவின் மீது விசுவாசம் வைக்காதபடி தடைசெய்ய எண்ணினார்கள். எனவே அவருடைய பட்டப் பெயரை பயன்படுத்தி ஏளனம் பண்ணினார்கள். வல்லமை இல்லாத அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து என்று அழைத்தார்கள். படையும், மக்களும் இல்லாத இஸ்ரவேலின் இராஜா என்று பரியாசம் செய்தார்கள். அவர்களை ரோமர்களிடம் இருந்து விடுதலை செய்யும் மிகப்பெரிய ஓர் இராஜாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அவர்களுக்கு நாசரேத்தூர் இயேசு பலவீனராகத் தோன்றினார். அவர் யூத அக்கிரமக்காரர்களினாலும், ரோம அதிகாரிகளினாலும் சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரிடம் இறைவன் இல்லை என்பதைப் போல காணப்பட்டது. இறைவனின் கோபம் அவரை அழித்தது என்று கருதினார்கள்.

அவருடைய வல்லமையை நிரூபிக்கும்படி , சாத்தானுடைய தூண்டுதலினால், அவரை சிலுவையில் இருந்து இறங்கி வரும்படி சொன்னார்கள். அப்போது அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்வோம் என்றார்கள். அவருடைய வல்லமையை விசுவாசிப்போம் என்று கூறினார்கள். அவர்கள் ஆசாரியர்களாகவும், வேதபாரகர்களாகவும் தங்களை அழைத்துக் கொண்டாலும் ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை அறியாதபடி குருடர்களாக இருந்தார்கள். சாத்தானின் கையில் கருவிகளாக தாங்கள் செயல்படுவதை அவர்கள் உணரவில்லை.

இயேசு இந்த சோதனைகளை மேற்கொண்டார். அவர் சிலுவையிலிருந்து இறங்கிவரவில்லை. நமது இரட்சிப்பிற்கான பணியை முழுமையாக நிறைவேற்றினார். அப்படியிருக்க சில மத போதகர்கள் இயேசு எடுத்துக்கொள்ளபட்டார் என்றும் இன்னொருவர் அந்த இடத்தில் சிலுவையில் மரித்தார் என்றும் எப்படிக் கூறமுடியும்? இயேசுவின் அன்பும், உண்மையும் யூதத் தலைவர்களின் இருதயங்களை நொறுக்கியது. இயேசு மெய்யாகவே சிலுவையிலறையப்பட்டார். அவர் சிலுவையில் இறுதிவரை இருந்து, முழு உலகிற்கும் இறைவனுடன் ஒப்புரவாக்கும் பணியை நிறைவேற்றினார்.

அவர் அருகே இருபுறமும் சிலுவையில் அறையப்பட்டவர்களும் இணைந்து இயேசுவை சபித்தார்கள். அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஆயத்தமாக இல்லை. தங்களையும் காப்பாற்ற மாட்டார் என்று நினைத்தார்கள். அவர் சிலுவையிலிருந்து இறங்கி அவருடைய படையில் தங்களையும் இணைத்து வெற்றிக்கு நேராக வழிநடத்த வேண்டும் என்று கருதினார்கள். ஆனாலும் அவர்களில் ஒருவன் தனது பாவத்தை உணர ஆரம்பித்தான். இயேசு தன்னைப் பரியாசம் செய்பவர்களை பரியாசம் பண்ணவில்லை. அவரை சபித்தவர்களை ஆசீர்வதித்தார். அவரைப் பகைத்தவர்களை நேசித்தார். அவருடைய எதிரிகளுக்காக மன்றாடினார். கிறிஸ்து பொய்யர் அல்ல என்றும், மற்றவர்களைவிட அவர் வித்தியாசமானவர் என்றும் அவன் புரிந்துகொண்டான். அவர் மெய்யாகவே ராஜா, வெற்றி பெறும் இறைவனின் குமாரன், ஆண்டவர் என்று அறிந்தான். அவரை அறிந்து, அவரை விசுவாசித்தான். அவருடைய ராஜ்யத்திற்குள் வந்தான்.

மதபக்திமிக்க ஆசாரியர்கள் ராஜாவை விட்டு விலகிச் சென்றார்கள். சனிக்கிழமை தங்களுடைய பஸ்கா பண்டிகையைக் கொண்டாட விரைந்தார்கள். தங்களுடைய பஸ்கா ஆட்டுக்குட்டிகள் தங்களை பாதுகாக்கும் என்று சென்றார்கள். அவர்கள் மெய்யான இறைவனின் ஆட்டுக்குட்டியானவரை அறியவில்லை. இன்றும் அநேகருடைய கண்களுக்கு அவரைக் குறித்த சத்தியம் மறைக்கப்பட்டிருக்கிறது. தங்களுடைய குருட்டுத்தனத்தினால் மகாபிரதான ஆசாரியரை, இறைவனுடன் ஒப்புரவாக்குபவரை அவர்கள் விட்டு விலகினார்கள்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, கிறிஸ்துவை அறிந்துகொள்ளாமல், மறுதலிப்பவர்களை மன்னியும். கிறிஸ்து தன்னையே பலியாகக் கொடுத்திருக்கிறார். அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். அவர்கள் கண்களைத் திறந்து ஒப்புரவாக்குதலின் பணியை காணும்படி செய்யும். கிறிஸ்துவின் பெரிய அன்பை உணரச் செய்யும். மற்றவர்களை இரட்சிக்க கிறிஸ்து பாடுபட்டு, மரித்தார். அவர் சிலுவையிலிருந்து இறங்கிவரவில்லை. தமது அழைப்பில் அவர் தொடர்ந்து உண்மையாக இருந்தார். உம்மை உண்மையுடன் பின்பற்ற உதவும். எங்கள் பகைவர்களை நேசிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவும் கிருபை தாரும். ஆமென்.

கேள்வி:

  1. ஏன் தலைவர்களும், மக்களும் இயேசுவை சிலுவையில் இருந்து இறங்கிவரும்படி கூறினார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:26 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)