Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 098 (King Crucified Between Two Robbers)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

15. இரண்டு அக்கிரமக்காரர்கள் நடுவில் இராஜா சிலுவையிலறையப்படுதல் (மாற்கு 15:26-28)


மாற்கு 15:26-28
26 அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள். 27 அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். 28 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.

ஒரு நல்ல ராஜாவின் தன்மைகள் ஞானம், பெலன், நீதி, மகிமை, பொறுமை, நன்மை மற்றும் வல்லமை ஆகும். இவைகளைவிட அதிகமான காரியங்கள் இயேசுவிடம் காணப்பட்டன. அவர் இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர். அவர் எல்லா நேரங்களிலும் சத்தியத்தைப் பேசியவர். அவருடைய ராஜரீகத்தைக் குறித்து பிலாத்து விசாரித்தபோது, அவர் தனது அழைப்பை மறுக்கவில்லை.

அவர் அதை விவாதிக்கவும் இல்லை. விளக்கிக் கூறவும் இல்லை. பிதாவாகிய இறைவன் நமது உலகில் அவரை ராஜாவாக நியமித்தார். அவர் கீழ்ப்படியாதவர்களை குற்றம்சாட்டவில்லை. அவர்களை நேசித்தார். அவர்களுடன் பொறுமையாக செயல்பட்டார். அக்கிரமக்காரர்களின் கைகளில் சாவதை அவர் தெரிந்துகொண்டார். அவர்களை அழிக்க முற்படவில்லை. அன்பின் இராஜா கொல்லப்படுவதை ஏற்றுக்கொண்டார். அவர்களை கொல்ல முற்படவில்லை.

இயேசு பிறக்கும் முன்பு காபிரியேல் தூதன் முன்னுரைத்தான். இரட்சகரின் பெயர் “இயேசு” என்பதாகும். ஏனெனில் அவர் தமது ஜனங்களில் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். அவர் உண்மையான இராஜாவாக மாறினார். தமது மக்களை இறைவனுடன் ஒப்புரவாக்குபவரும் அவரே. கீழ்ப்படியாதவர்களுக்கு அவர் மீட்பை உண்டுபண்ணினார். அவர் ஆசாரியனாகவும், அரசராகவும் இருக்கிறபடியால் மிகக் கடினமான பிரச்சினையையும் தீர்க்கக் கூடியவராக இருக்கிறார். இறைவனின் கோபாக்கினையில் இருந்து தம்மைப் பின்பற்றுவோரை விடுவிக்கிறார். அவர் பிரதான ஆசாரியன் மற்றும் இராஜாவின் பணிகளை இணைத்து செயல்படுகிறவராக இருக்கிறார். அவரிடத்தில் அன்பு, வல்லமை, சத்தியம், மன்னிப்பு, மகிமை மற்றும் மீட்பு உள்ளது.

இயேசுவின் அரசாட்சி பரத்திற்குரியது. அவர் பரிசுத்தமான அன்புடையவர். அவர் தமது சகோதரர்களுக்காக பாடுபட்டார். அவர்களின் பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார். இறைவனுடைய கோபாக்கினையை அவர் சுமந்துகொண்டார். மகா பிரதான ஆசாரியன் இறைவனின் ஆட்டுக்குட்டியாக மாறி தமது சரீரத்தில் நமது பாவங்களுக்காகப் பாடுபட்டார்.

முட்கீரிடம் சூட்டப்பட்ட தலைக்கு மேலாக ஓர் தலைப்பு எழுதி தொங்கவிட்டார்கள். “யூதர்களின் இராஜா”. சிலுவையில் அறையப்பட்ட ராஜாவை பரியாசம்பண்ணும்விதமாக இப்படிச் செய்தார்கள். ஆனாலும் இயேசுவின் பலவீனம் அவருடைய பெலனாக இருந்தது. அவருடைய மரணத்தின் மூலம் எல்லா மனிதர்களையும் இறைவனுடன் ஒப்புரவாக்கினார். தமது மக்கள் வாழும்படியாக மரித்த ஒரு ராஜாவை இந்த உலகில் நீ கண்டதுண்டா?

பொதுவாக ராஜாக்களும், அதிபதிகளும் தங்கள் ஆடம்பர வாழ்விற்காக மக்களை சுரண்டி பிழைப்பார்கள். இயேசு வித்தியாசமானவர். நாம் பாடுபடாதபடி, அவர் நமக்காகப் பாடுப்பட்டார். நாம் மரிக்காமல் வாழும்படியாக அவர் நமக்காக மரித்தார்.

இயேசு யூதகோத்திரத்தைச் சேர்ந்தவர். “யூதா” கோத்திரத்திலிருந்து தாவீது இராஜா தோன்றினார். இறைஅரசர் இந்த சந்ததியில் தோன்றுவார் என்று இறைவன் வாக்குப்பண்ணினார். அவருடைய அரசாட்சிக்கு முடிவில்லை. அவருடைய பிதா இறைவன். இறைவனிடம் இருந்து மட்டுமே நிலைவாழ்வு கிடைக்கிறது.

யூதாஸ்காரியோத்தைத் தவிர மற்ற சீஷர்கள் அனைவரும் கலிலேயர்கள். அதாவது இஸ்ரவேலில் மீந்திருந்த கோத்திரங்களின் கலப்பினால் வந்தவர்கள். யூதாதேசத்திலிருந்து என்ன வருகிறது என்பது இயேசுவிலும், யூதாஸ்காரியோத்திலும் நாம் காண்கிறோம். யூதாஸ் பணம், வல்லமை, பதவியை விரும்பினான். அவன் தனது இராஜாவை, இரட்சகரை காட்டிக்கொடுப்பவனாக மாறினான். இறுதியில் அவன் தற்கொலை செய்துகொண்டான். இயேசு தாழ்மையுள்ளவராக தொடர்ந்து செயல்பட்டார். அவர் உலகின் இரட்சகர். அவர் சுயத்தை வெறுத்தவராக வாழ்ந்தவர் ஆவார்.

யூதாஸ்காரியோத் மட்டுமல்ல, பெரும்பான்மையான யூதர்கள் இயேசுவைப் புறக்கணித்தார்கள். ஏனெனில் அவர்களுடைய பொய்யான பக்தி வாழ்விலிருந்து மனந்திரும்பும்படி அவர்களை அழைத்திருந்தார். அவர்களுடைய நியாயப்பிரமாண அறிவை விட்டுவிட்டு மனம்மாற்றம் அடையும்படி அழைத்தார். அவர்களை இறைவனிடம் உண்மையாகத் திரும்பும்படி அழைத்தார்.

பழைய உடன்படிக்கையின் மக்கள் பெருமையுள்ளவர்களாக பரலோக இராஜாவைப் புறக்கணித்தார்கள். புறவினத்தாரின் கைகளில் அவமானமான மரணத்தை அடையும்படி ஒப்புக்கொடுத்தார்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் தேசத்தை விட்டு இயேசுவைப் புறக்கணித்தார்கள். இரண்டு அக்கிரமக்காரர்களின் நடுவில் அவர் சிலுவையில் தொங்கியது அசுத்தமான இந்த முழு உலகத்தையும் காண்பிக்கும் அடையாளமாக உள்ளது. பரிசுத்தமானவர் விபசாரக்காரர்களின் நடுவில் இருந்தார். தாழ்மையுள்ளவர் கடின இருதயத்தார் மத்தியில் இருந்தார்.

இயேசுவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்படிச் செயல்பட்டார்கள். பரலோக இராஜா குற்றவாளிகளையும், கள்ளர்களையும் நீதியுள்ளவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் மாற்ற விரும்பினார். அவர் அசுத்தமானவர்களை சுத்தமாக்கினார். புறக்கணிக்கப்பட்டவர்களை தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாகவும், ராஜரீக ஆசாரியக் கூட்டமாகவும் மாற்றினார்.

எல்லோரும் பாவிகள். ஒருவனும் நீதிமான் இல்லை. நாம் அனைவரும் சிலுவை மரணத்தை அடைய வேண்டியவர்கள். ஆனால் இயேசு நமது இடத்தை எடுத்துக்கொண்டார். அவருடைய போதனைகளையும், அவரையும் ஏற்றுக்கொள்பவன் எந்த தேசம், மதம் சார்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் மீட்கப்படுவான். அவன் இயேசுவினால் பரிசுத்தமாக்கப்பட்டு நீதிமானாக்கப்படுவான். இன்றும் புறக்கணிக்கப்பட்ட இராஜா தமது கரங்களை முழு உலகிற்கும் முன்பாக நீட்டிக்கொண்டிருக்கிறார். கடின இருதயமுள்ள மக்கள் அவரிடம் திரும்பும்படி எதிர்பார்க்கிறார். உனது விசுவாசத்தையும் எதிர்பார்க்கிறார்.

விண்ணப்பம்: எங்கள் பரிசுத்தமான இறைவனே, பரலோகில் உள்ள எங்கள் பிதாவே; நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் இயேசுகிறிஸ்துவை மெய்யான இராஜாவாக அனுப்பியிருக்கிறீர். அவர் கடினமாக ஆளுகை செய்வதில்லை. தனது அன்பு மற்றும் இரக்கத்தை மனிதர்களுக்கு காண்பிக்கிறார். எங்கள் பாவத்தை அவர் அறிவார். எங்களை அவர் அழிப்பதில்லை. எங்கள் பாவங்களை மன்னித்து, எங்களுக்காக மரித்தார். எல்லா பாவிகளும் தங்கள் ராஜாவை அறிந்துகொள்ளும்படி உதவும். அவரை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளச் செய்யும். உமது ராஜ்யம் இன்று வருவதாக உமது சித்தம் செய்யப்படுவதாக. எங்கள் பிரதான ஆசாரியரின் ஒப்புரவாகுதலின் வல்லமை, தியாக பலி மரணத்திற்காக நன்றி. ஆமென்.

கேள்வி:

  1. “யூதர்களின் இராஜா” என்ற தலைப்பின் அர்த்தம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:59 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)