Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 100 (The Father’s Separation From the Son)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

17. குமாரனிடம் இருந்து பிதாவின் பிரிவு (மாற்கு 15:33-36)


மாற்கு 15:33-36
33 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 34 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 35 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 36 ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.

மாற்கு குறிப்பிடும் ஆறாம் மணி வேளை என்பது நம்முடைய நேரத்தில் மதியம் பன்னிரெண்டு மணியைக் குறிக்கிறது. சூரியனின் பிரகாசம் நிறைந்த மதிய நேரத்தில் பயம் நிறைந்த காரிருள் சூழ்ந்துகொண்டது. எருசலேமின் மலைப் பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. வெப்பம் மிகுந்த காற்று மூன்று மணி நேரங்களாக வீசியது. அது சரீரத்தில் எஞ்சியிருந்த சக்தியையும் உறிஞ்சிக் கொண்டது.

இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் காயப்பட்ட நிலையில், அவரை பாவம் செய்யத் தூண்டும்படி தீய ஆவிகள் அனைத்தும் தமது வல்லமையினால் மேற்கொள்ள முயற்சித்ததினால் இருள் சூழ்ந்தது என்று சில விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

இயேசு இறைவனுடைய வார்த்தையினால் நிறைந்திருந்தார். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவனுடைய வார்த்தையாக இருக்கிறார். எனவே மரிக்கும் நேரத்திலும் அவர் பரிசுத்தமான வார்த்தைகளைப் பேசினார். வார்த்தையில் விவரிக்க முடியாத பெருமூச்சுகளோடு பரிசுத்த ஆவியானவர் அவருக்காகச் செயல்பட்டார்.

ஒன்பதாம் மணிநேரம், அதாவது பிற்பகல் மூன்றாம் மணி வேளையில் இயேசு மிகுந்த சத்தத்துடன் கூப்பிட்டார். சிலுவையில் அவர் பேசிய வார்த்தைகள் சிலுவையின் இரகசியத்தின் ஆழத்தை நமக்கு விவரிக்கிறது. பரிசுத்தமான ஆவியானவர் சிலுவையிலறையப்பட்டவரின் குரல் மூலமாக சாட்சியிட்டார். பரிசுத்தமான இறைவன் தமது குமாரனை விட்டு விலகி, தன் முகத்தை மறைத்துக்கொண்டார். நியாயம் தீர்க்கும் இறைவனாக அவர் தோன்றினார். இறைவனுடைய கோபாக்கினை கைவிடப்பட்ட குமாரன் மீது விழுந்தது. இருள் சூழ்ந்துகொண்டது. ஆனாலும் அது பரிசுத்தமானவரை மேற்கொள்ள முடியவில்லை. குமாரன் இறைவனுடைய கோபாக்கினையின் பாத்திரத்தைக் குடித்தார்.

எபிரெயம் மற்றும் கிரேக்க மொழியில் இந்த பயம் நிறைந்த, புரிந்துகொள்ள முடியாத வார்த்தையை எழுத அப்போஸ்தலர்கள் துணியவில்லை. அவர்கள் அதை அரமேயு மொழியில் எழுதி அதன் அர்த்தத்தை கிரேக்க மொழியில் எழுதினார்கள்.

இயேசு கூறினார்: “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்”. இப்போது அவர் சாட்சியிடுகிறார். அன்பின் ஐக்கியம் உடைக்கப்படுகிறது. நித்திய ஐக்கியம் பிரிக்கப்படுகிறது. எனவே அவர் கதறினார்: “நீர் ஏன் என்னைக் கைவிட்டீர்? இது முடியாத காரியம், நீர் அன்புள்ளவர். நீர் என்னைக் கைவிட முடியாது”.

சிலுவையிலறையப்பட்டவரின் வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்குவும் குறிப்பிடுகிறார்கள். அவிசுவாசிகளுக்கு இவர் இடறுதற்கான கன்மலையாக இருக்கிறார். இயேசுவின் சிலுவையின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தச்சனாகிய இயேசு தமது சோர்வினால் இப்படிக் கதறினார் என்றும் இறைவனுடைய கோபத்தினால் தண்டிக்கப்பட்டார் என்றும் நினைத்தார்கள்.

இறைவன் மீதான விசுவாசத்தின் நிரூபணத்தையும் நாம் இந்த வார்த்தையில் காண்கிறோம். விலகிச் செல்பவர்கள் மீதான தொடர்ச்சியான அன்பைக் காண்கிறோம். அவர் பிதாவுடனான தனது உறவையும், ஐக்கியத்தையும் கூட தியாகம் செய்தாக பரிசுத்தமானவரை விட்டு விலகிச்சென்ற நம்மை இரட்சிக்கும்படி அப்படிச் செய்தார்.

இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவரைத் தவிர வேறு யாரும் நமக்காக மரிக்க முடியாது. அவர் மனிதசரீரத்தில் வெளிப்பட்ட இறைவன். அவர் குற்றமற்றவர். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிறவர். இறைவன் ஒருவராக இருக்கிறார். அவர் இருவராக இல்லை. நமது மீட்பில் பரிசுத்த திரியேக இறைவன் செயல்படுகிறார். அவர் தன்னை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்துகிறார். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (எபி 9:14).

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் இந்த இரகசியத்தை அறிந்துகொள்பவன் பிதாவையும், குமாரனையும் ஆராதிக்கிறான். தனது வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கிறான். அவன் வாழ்வு ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறது. அவன் இறைவனுக்கு சேவை செய்கிறான். நமக்கு இரண்டு தெரிந்தெடுப்புகள் உள்ளன. ஒன்று சிலுவையிலறையப்பட்டவரை பரியாசம் செய்தல் மற்றொன்று அவருடைய நித்திய அன்பிற்காக நன்றியுடன் அவருக்கு பணி செய்வது.

ரோமப் போர்வீரர்களும், காவலாளிகளும் அரமேயு மொழியில் சிலுவையிலறையப்பட்டவர் பேசிய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை. எலியா தீர்க்கதரிசியை அவர் கூப்பிடுவதாக அவர்கள் எண்ணினார்கள். இருள்சூழ்ந்த நேரத்தில் அவன் தோன்றி சிலுவையிலிருந்து அவரை இறக்கி விட்டுவிடுவான் என்று பயந்தார்கள். அவருடைய தாகத்திற்கு கடற்காளானில் தோய்த்த கசப்பான காடியைக் கொடுக்க எண்ணினார்கள். புழுதிப்புயல் வீசிய நேரத்தில் அவர்கள் ஒரு மனித சேவையை செய்ய நினைத்தார்கள்.

விண்ணப்பம்: பிதாவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உம்மில் நித்திய அன்புடன் இருந்த உமது குமாரனை விட்டு நீர் விலகிய போது உமது இருதயம் உடைக்கப்பட்டது. உமது குமாரன் மூலமாக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். எங்கள் பாவங்களை நீர் மன்னித்துவிட்டீர், எங்கள் பாவங்கள் மீதான கோபாக்கினையை உமது பரிசுத்தமான குமாரன் மீது ஊற்றினீர். அவர் எங்களைக் கைவிடாதபடி, நீர் அவரைக் கைவிட்டீர். நாங்கள் உம்மில் என்றென்றும் நிலைத்திருக்கும்படி, நீர் உம்மை நீரே அவரிடமிருந்து பிரித்துக்கொண்டீர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். எங்களை உமக்கென்று அர்ப்பணிக்கிறோம். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உமக்கு நித்திய காலமும் சேவை செய்கிறோம். ஆமென்.

கேள்வி:

  1. சிலுவையிலறையப்பட்டவரின் வார்த்தைகளின் அர்த்தம் என்ன: “என் தேவனே, என் தேவனே, நீர் ஏன் என்னைக் கைவிட்டீர்?”

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:30 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)