Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 096 (Carrying the Cross)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

13. இறுதிவரை சிலுவையை சுமத்தல் (மாற்கு 15:21-23)


மாற்கு 15:21-23
21 சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். 22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், 23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நீ எப்போதாவது மூன்று மீட்டர் நீளமுடைய கம்பை தூக்கியதுண்டா? கிறிஸ்துவின் சிலுவை மிகவும் அகலமாகவும், பாரமாகவும் இருந்தது. இயேசு மிகவும் களைத்துப்போய் சோர்வுற்றிருந்தார். அவர் தனியாக சிலுவையை சுமக்க முடியவில்லை. எனவே அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

நமக்கு எவ்வளவு பெரிய ஆறுதல், நமது வாழ்வின் எல்லா சூழ்நிலைகளையும் இயேசு அனுபவித்தார். ஆனாலும் அவர் பாவம் அற்றவராக இருந்தார். நமது பலவீனங்களில் அவர் நமக்கு இரக்கம் காண்பிக்கிறார்.

நீ உனது வாழ்வில் கவலைகள், பாவங்கள், சுமைகளை சுமந்து கொண்டிருக்கிறாயா? பிரச்சினைகள், பகைகள் அல்லது பசியினால் நீ பாதிக்கபட்டுள்ளாயா? உனது சிலுவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உனக்குப் பதிலாக கிறிஸ்து அதைச் சுமக்கிறார். வலிமைமிக்க கதாநாயகனைப் போல் அல்ல, நொறுக்கபட்டவராக, தமது சரீரத்தின் முழுப்பலத்தோடும் அதைச் சுமந்தார். நீ உனது வழியில் செல்ல முடியாது என்பதை இயேசு புரிந்துகொள்கிறார்.

இயேசு தமது சிலுவையை தூர எறிந்துவிடவில்லை. அவர் கீழே விழுந்தபோது, அந்த சிலுவையின் அடியில் அவர் கிடந்தார். அவர் தொடர்ந்து சிலுவையை சுமக்க முடியாதவராகக் காணப்பட்டார். எனவே போர்ச்சேவகர்கள் அந்த வழியே சென்ற ஒரு யூத வழிப்போக்கனைப் பிடித்து, அவன் சிலுவையைச் சுமக்கும்படி பலவந்தம் பண்ணினார்கள். அவன் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனிதன். அவன் எருசலேமிற்கு இறைவனுடைய பஸ்கா ஆட்டுக்குட்டியின் பண்டிகையைக் கொண்டாடும்படி வந்திருந்தான்.

இன்று இயேசு உனக்கு உதவி செய்யும்படி ஆயத்தமாயிருக்கிறார். நீ தனியாக இல்லை. அவர் உனக்கு அருகில் இருக்கிறார். உன்னைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். அவர் உங்களிடம் சொல்கிறார்: “என்னிடம் வாருங்கள் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் தரும் நுகம் மெதுவாகவும், இலகுவாகவும் உள்ளது. உங்கள் ஆத்துமாக்களுக்கான இளைப்பாறுதலை நீங்கள் அடைவீர்கள்.

இந்த வசனத்தின் மூலம் இயேசு தமது பிதாவுடன் ஒரே நுகத்தில் பிணைக்கப்பட்டு நடந்தார் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த உலகம் என்னும் விளைநிலத்தில் அவருடன் இணைந்து உழுதார். அதுபோல உங்கள் சுமைகளைப் பகிர்ந்துகொண்டு நெருக்கமாகவும், பூரணமாகவும் உங்களுடன் ஐக்கியத்தை ஏற்படுத்த இயேசு விரும்புகிறார். அவருடைய ஆசீர்வாதம், வல்லமை மற்றும் அழைப்பில் உங்களை பங்குபெறச் செய்கிறார்.

நீ சுதந்திரமாக உனது சிலுவையை சுமக்கும்படி சுய பெலத்துடனும், பெருமையுடனும் இருக்கிறாயா? முட்டாள்தனமாய் இராதே, கிறிஸ்து உனக்கு அருகில் இருக்கிறார். உனது பிரச்சினைகளுடன் உன்னை நீ அவருக்கு ஒப்புக்கொடுக்கும் போது, அவர் உன்னை ஏற்றுக்கொள்கிறார். தயக்கப்பட வேண்டாம், உனது வாழ்வை அவருக்கு ஒப்புக்கொடு. இயேசு உன்னை நேசிக்கிறார். அவர் உனக்கு உதவி செய்பவர். அவர் உண்மையுள்ளவர், வல்லமையுள்ள இரட்சகர்.

சிரேனே ஊரானாகிய சீமோன் யார் என்பது நமக்கு தெளிவாகத் தெரியாது. ஒருவேளை அவன் இயேசுவின் சிலுவையை கோபத்துடன் சுமந்திருக்கக் கூடும். அவன் யூத முறைமைகளின்படி இந்தச் செயலின் மூலம் அசுத்தம் அடைந்ததாக எண்ணியிருக்கக் கூடும். பரிசுத்த பூமிக்கு அதிக பணம் செலவழித்து, தியாகம் செய்து வந்தது வீணாகப் போய்விட்டது என்று அவன் நினைத்திருக்க வாய்ப்புண்டு.

இயேசு விழுந்து கிடந்த இடத்தில் அவரின் கண்களை ஒருவேளை அவன் பார்த்திருப்பான். அவருடைய கண்களில் அவன் இரக்கத்தைக் கண்டிருப்பான். சிலுவையைச் சுமந்து செல்வதற்கு யாரேனும் ஒருவர் உதவ வேண்டும் என்ற சூழ்நிலையில் போர்வீரர்கள் பலவந்தம் பண்ணி இவனைப் பிடித்தார்கள்.

பின்பு இயேசுவின் இரக்கத்தினால், சீமோனின் மகன்கள் புதிதாகப் பிறந்த விசுவாசிகளாக மாறினார்கள். அவர்கள் ரோமாபுரி சபையில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய தகப்பன் இயேசுவின் சிலுவையைச் சுமந்தான். ஆனால் இயேசு சீமோன் மற்றும் அவனுடைய மகன்களின் பாவங்களைச் சுமந்தார். சிரேனே குடும்பம் நித்திய கனியைக் கொடுத்தார்கள். நித்திய ஆசீர்வாதத்தினால் நிறைந்து இருந்தார்கள். ஏனெனில் சீமோன் கிறிஸ்துவின் சிலுவையை ஏற்றுக்கொண்டான்.

சிலுவை மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு இயேசு வழிநடத்தப்பட்டார். எருசலேமின் அலங்கச்சுவர்களுக்கு வெளியே குன்றின் மீது அந்த இடம் இருந்தது. சிலுவையில் அறையப்படும் குற்றவாளிகளுக்காக சிலுவையின் நீளமான பகுதி பூமியில் ஆழமாக ஊன்றப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும்.

இந்த இடம் கொல்கதா என்று அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் மண்டை ஓடு என்பதாகும். இங்கு குற்றவாளிகளின் தலைகள் துண்டிக்கப்படும். திருடர்கள் இங்கு தூக்கிலிடப்படுவார்கள். அந்த குன்று மண்டை ஓட்டின் வடிவத்தில் இருந்ததால் அவ்விதம் அழைக்கப்பட்டது என்று சில வேத விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். இயேசுவின் சிலுவை மனிதனின் மண்டை ஓட்டை பிளந்து நிற்கும் அடையாளமாக உள்ளது. தங்கள் ஞானத்தில் பெருமை கொள்ளும் மக்கள் மனவுருவான இறைவனின் ஞானத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் மகிமையின் ஆண்டவரை சிலுவையில் அறைகிறார்கள்.

சிலுவையில் அறையப்படுகிறவர்களுக்கு திராட்சைரசம் அருந்தக் கொடுப்பது வழக்கம். அதில் மிர் என்ற ஒரு பொருளை கலப்பார்கள். அது கசப்பாக இருக்கும். சிலுவையில் கொடூரமாக மரண வேதனை அனுபவிப்பவருக்கு சீக்கிரம் மரணம் நேரிடும்படி இது வழங்கப்படும். ஆனாலும் இயேசு இதை அருந்த மறுத்தார். அவர் மரணத்தின் கடைசி நேரம் வரை வேதனையை அனுபவிக்க எண்ணினார். சாத்தான் அவரை கடைசி வரை சோதித்தான். பகை, தூஷணம், நம்பிக்கையின்மையின் வார்த்தைகள் மூலம் ஏதாவது ஒரு பாவத்தை செய்யும்படி தூண்டினான். இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவரின் செயலை மதிப்பற்றதாக மாற்ற செயல்பட்டான்.

இயேசு சாத்தானை மேற்கொண்டார். அவர் எல்லாவித தீமைகளுக்கும் எதிர்த்து நின்றார். அவர் மரணபரியந்தம் பாடுபட்டார். அவர் எல்லா துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார்.

விண்ணப்பம்: பரிசுத்தமான ஆண்டவரே, நீர் உமது சிலுவைக்கு கீழே பலவீனராக வீழ்ந்தீர். எனது பலம் குறுகியது என்பதையும், எனது பொறுமையின்மையையும் நீர் அறிந்திருக்கிறீர். என் மீது சுமத்தப்படும் சுமையை நான் தூக்கி எறிய விரும்புகிறேன். எனது முறுமுறுப்பை மன்னியும். பாவியாகிய என் மீது இரக்கம் பாராட்டும். எனது சுமைகளை சுமந்திட உதவி செய்யும். உமது நாமத்தினால் பலவீனங்கள், சோதனைகளை உம்முடைய வல்லமை, அன்பு, நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் மேற்கொள்ளச் செய்யும். நீர் வெற்றிவீரர். நீர் எனக்கு வெற்றியைத் தருகிறீர். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு சிலுவையை சுமந்ததின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:51 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)