Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 095 (Jesus with the Soldiers)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

12. போர்ச்சேவகர்கள் இயேசுவை பரியாசம்பண்ணி, வாரினால் அடித்தல் (மாற்கு 15:16-20)


மாற்கு 15:16-20
16 அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, 17 சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: 18 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, 19 அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். 20 அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.

ரோமப் போர்ச்சேவகர்களால் இயேசு ஈவு இரக்கமின்றி அடிக்கப்பட்டார். வாரின் முனையில் பொதுவாக ஈயத் துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு அடித்தார்கள். அதன் விளைவாக எலும்புகள் வெளியே தெரியும் அளவு சதைகள் பிய்க்கப்படும். ஆழமான காயங்கள் ஏற்படும்.

அநேக நரம்புகள் கடந்து செல்கின்ற சரீரத்தின் அதீத உணர்ச்சிமிக்க ஒருபகுதி முதுகு தண்டுவடம் ஆகும். ஒருவனின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்படும் பொழுது, அந்த மனிதன் தன்னையே பாதிப்புக்குள்ளாக்குகிறான். சிலுவைக்கு முன்பாக அதிகமாக இரத்தம் சிந்த வைத்து ஒரு மனிதனின் சரீரத்தை பலவீனப்படுத்த இந்த அடிகள் கொடுக்கப்படுகின்றன. இவ்விதம் அடிகம் வாங்கிய ஒரு மனிதன் பாதி இறந்தவனாகக் கருதப்படுகிறான்.

உபத்திரவங்கள் முடிந்த பின்பு, போர்ச்சேவகர்கள் இயேசுவை பரியாசம்பண்ண ஆரம்பித்தார்கள். சிலுவையில் அறையப்படும் நேரம் இன்னும் வராததால், தாங்கள் விரும்பியபடி அவரைப் பரியாசம் பண்ணினார்கள். ஆன்டனியா மண்டபத்தின் அருகே அவரைக் கொண்டு வந்தார்கள். கோயிலின் வடது புற முற்றத்தின் அருகே நான்கு கோபுரங்களால் சூழப்பட்டு இந்த இடம் காணப்பட்டது. இங்கு தான் ரோமப் படைகள் தங்கியிருந்தன. நகரத்தில் எந்த ஒரு கலகம் ஏற்பட்டாலும் உடனடியாக இங்கிருந்து கண்காணித்து, அதைத் தடுக்க செயல்படுவார்கள்.

எருசலேமில் தங்கியிருந்த ரோமப் படை வீரர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை உத்தேசமாக 500 முதல் 1000 வரை இருந்தது. போர்ச்சேவகர்கள் சிரித்துக்கொண்டே தங்கள் நண்பர்களிடம் சொன்னார்கள்: “யூதர்களின் ராஜா என்று தன்னை கூறிக்கொண்ட ஒரு அந்நிய மனிதன் இன்று நம் மத்தியில் இருக்கிறான். அவன் மக்களை ஆள விரும்புகிறான். அவனை ஆராதிப்போம். அவன் தன்னை இறைவனின் குமாரன் என்று கூறிக்கொள்கிறான். எனவே அவனை நாம் ஆராதிப்போம்”.

பரியாசம் பண்ணியவர்கள் இயேசுவின் மகிமையை விசுவாசிக்கவில்லை. அவருடைய இரத்தம் தோய்ந்த ஆடையைக் கண்டார்கள். அவருடைய முதுகைப் பார்த்தார்கள். ரோம தேசாதிபதியால் கொடுக்கப்பட்ட இதைப் போன்றதொரு ஆடையை ஓடிச்சென்று கொண்டு வந்தார்கள். அவருடைய தலையின் மீது முட்கிரீடத்தை சூட்டினார்கள். அவருடைய தலையில் ஆழமான காயத்தை அது ஏற்படுத்தியது. இயேசுவின் பாடுகள் எவ்வளவு வேதனை நிறைந்தவையாக இருக்கின்றன.

இயேசு அழாமல் ராஜரீக அமைதியுடன் தொடர்ந்து காணப்பட்டார். அவருடைய சரீரத்தை துன்புறுத்தியதில் அவர்கள் திருப்தியடையவில்லை. தூஷண வார்த்தைகளால் அவருடைய ஆத்துமாவை வேதனைப் படுத்தினார்கள். “வெற்றி பெறாத யூதர்களின் இராஜாவே வாழ்க! படையில்லாத ஒரு நாயகன். எந்த அரசியல் திட்டமும் இல்லாமல் கழுதையின் மீது பவனி வந்தவன். அதிசயமாய் குணமாக்குபவன். ஆனால் தன்னையே குணப்படுத்த முடியாதவன்”.

சிலர் அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டார்கள். அவருக்கு மரியாதை செய்வது போல் பாவனை செய்தார்கள். தாங்கள் செய்வதைக் குறித்து அவர்கள் அறியவில்லை. பிசாசு அவர்களுடைய கண்களைக் குருடாக்கியிருந்தான். ராஜமரியாதை செய்து பரியாசம்பண்ணி, அவரை நிந்தித்தார்கள். அவருடைய கையில் ஒரு நாணல் குச்சியைக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவரை தலையிலும், முதுகிலும் அடித்தார்கள். அவருடைய கையில் ஏற்கெனவே அவர்கள் ஒரு செங்கோலை கொடுத்திருந்தார்கள்.

தங்கம் மற்றும் தந்தத்தினால் செய்யப்பட்ட ராஜாவின் செங்கோலை இயேசு பெற்றிருக்கவில்லை. தனது இடது கையில் தங்க பூமி உருண்டையை அவர் சுமக்கவில்லை. அவர் பரியாசத்திற்கு ஆளானார். புறவின மக்கள் அவரை அடித்தார்கள். அவர் முகத்தின் மீது துப்பினார்கள். உங்கள் கண்கள் முன்பு, உங்கள் மீது யாரேனும் துப்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இயேசு எவ்விதம் பதிலளித்தார் என்பதைக் கவனியுங்கள். அவர் தமது எதிரிகளை நேசித்தார். தன்னை சபிப்பவர்களை ஆசீர்வதித்தார். மனிதர்களின் பகையை முறுமுறுப்பின்றி ஏற்றுக்கொண்டார். அவர் முழு உலகத்தையும் மேற்கொண்டார்.

தங்கள் மனித இருதயங்களின் மூலம் முழு பரியாசத்தையும் போர்ச்சேவகர்கள் வெளிப்படுத்தினார்கள். அவர்கள் இராஜவஸ்திரத்தை கழற்றிவிட்டு, இரத்தம் தோய்ந்த உடையை மீண்டும் உடுத்தினார்கள். தையலில்லாமல் நெய்யப்பட்ட ஒரே துணியிலான ஆடை பிரதான ஆசாரியனின் செயலைக் குறிப்பிடுகிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பிரதான ஆசாரியனின் பணி மக்களை இறைவனுடன் ஒப்புரவாக்குவது ஆகும். தனது குணாதிசயங்களாகிய தாழ்மை அன்பு, சாந்தம், மகிமை, மன்னிப்பு, பரிசுத்தம் ஆகியவற்றை அணியப்போகும் மக்களுக்காக ராஜாதி ராஜா விலைக்கிரயம் செலுத்துகிறார் என்பதை அவர்கள் உணரவில்லை.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது அமைதி மிகவும் வலிமையுடன் பேசுகிறது. உமது அன்பினிமித்தம் பரியாசக்காரர்களை நீர் புறக்கணிக்கவில்லை. பாடுகளில் உமது பொறுமைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். துன்புறுத்துகிற நேரம் நீர் காண்பித்த உமது அன்பிற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் ஏளனம் செய்யப்படும்போது பொறுமையாயிருக்க உதவும். எங்களை துன்புறுத்துவோரை பகைக்காமல் இருக்க உதவும். பகையை மேற்கொண்டு எதிரிகளை நேசிக்கவும், உமது நாமத்தினால் அவர்களை இரட்சிப்பில் வழிநடத்தவும் கிருபை செய்யும். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். வாக்குப்பண்ணப்பட்ட ராஜாவாகிய உமது வருகைக்காக வழியை ஆயத்தம் பண்ணுகிறோம். நீர் இறைவனின் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியானவர். உமது கரங்களில் நாங்கள் எங்களை அர்ப்பணிக்கிறோம். நீர் எங்களுடைய இராஜா. ஆமென்.

கேள்வி:

  1. ரோமப் போர்ச்சேவகர்கள் எவ்விதம் இயேசுவை துன்புறுத்தினார்கள்? அவர்களுடைய பரியாசத்திற்கு அவர் எப்படி பதிலளித்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:48 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)