Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 097 (The Crucifixion)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

14. சிலுவையிலறையப்படுதல் (மாற்கு 15:24-25)


மாற்கு 15:24-25
24 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். 25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.

எல்லா நற்செய்தி நூல்களிலும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைக் குறித்த முழு விபரங்களும் இல்லை. அவர் சிலுவையில் கைகளிலும், கால்களிலும் ஆணியறையப்பட்டதைக் குறித்த சில விபரங்களை நாம் வாசிக்கிறோம். அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் அவரை கீழே தள்ளிவிட்டார்கள். அவரை அடித்தார்கள். ஈவு இரக்கமின்றி அவருடைய கைகளை சிலுவை மரத்தில் அறைந்தார்கள்.

இருதயமே சற்று யோசித்துப் பார், மனமே சற்று சிந்தித்துப் பார், உலகம் படைத்தவரை துன்புறுத்துகிறது. சுகமாக்கிய கரம் துளையிடப்பட்டது. பரிசுத்தமான அவருடைய இரத்தம் கீழே விழுந்தது. ஒருவரையும் புறக்கணியாத அன்புள்ளவர் கொல்லப்பட்டார்.

இறைவனின் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியானவரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பவரே, நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். நீர் எனது பாவத்தையும் நீக்கி, என்னைப் பரிசுத்தப்படுத்துகிறீர்.

சிலுவை மரணதண்டனை நிறைவேற்றப்படும் வழக்கத்தின்படி சிலுவை மரத்தில் சரீரம் கைகளில் ஆணியடிக்கப்படும். பின்பு நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தின் மீது இந்த குறுக்கு மரம் உயர்த்தப்படும்.

இறுதியாக கால்கள் அந்த மரத்தில் அறையப்படும். நகரத்தின் தெருக்களில் சிலுவையைச் சுமந்து நடந்த கால்கள் மீக நீண்ட உறுதியான ஆணியால் அறையப்படும்.

மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் சபிக்கப்பட்ட பூமியில் துன்புறுத்தப்பட்டதும், பரிசுத்தமுமான இரத்தம் சிந்தப்பட்டது எவ்வளவு பெரிய காரியம். அவர்கள் மெய்யான இறைவனின மனுவுருவான பரிபூரணமான மனிதனைப் புறக்கணித்தார்கள். அவரை சிலுவையில் அறைந்து உயர்த்தினார்கள். அவருக்கும் இந்த உலகிற்கும் எந்தவொரு உறவையும் நாங்கள் விரும்பவில்லை என்று சொன்னார்கள். அவர்களுக்காக வந்த அவரை புறக்கணித்தார்கள்.

சிலுவையிலறையப்படுதல் அரக்கத்தனமான தண்டனை ஆகும். அது குற்றவாளியை உடனடியாகக் கொல்லாது. ஆயிரம் முறை மரணவேதனை அடையச் செய்து மரிக்க வைக்கும்.

முதலாவது அவருடைய காயப்பட்ட சரீரத்தில் எடையின் நிமித்தம் மேலும் காயங்கள் பெரியதாக மாறும். அவருடைய நரம்புகள் முழுவதும் வேதனை அதிகரிக்கும். அவருடைய தலையிலும், வயிற்றுப் பகுதியிலும் போதுமான இரத்த ஓட்டம் இல்லாததால் கடுமையான தலைவலி ஏற்படும். மனதில் மிகப்பெரிய குழப்பம் நேரிடும். மனச்சோர்வு அதிகரிக்கும். பயமுறுத்தும் காட்சிகள் அவரைத் தாக்கும். அவருடைய இருதய துடிப்பு அதிகரித்து குறையும். நம்பிக்கையின்மை அதிகரிக்கும். பண்டைய உலகில் மிகவும் கொடூரமான தண்டனை முறைகளில் ஒன்றாக சிலுவையிலறையப்படுதல் இருந்தது.

இறைவனின் பரிசுத்தமான ஆட்டுக்குட்டியானவரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது சரீரத்தில் உலகத்தின் பாவங்களைச் சுமந்தீர். இந்த வார்த்தைகளை வாசிப்போருக்கும் நீர் மீட்பை வழங்குகிறீர். முழுமையான இரட்சிப்பையும், உமது பாடுகள் நிறைந்த மரணத்தின் மூலம் இறைவனுடன் ஒப்புரவாகுதலையும் தருகிறீர்.

காலை 9.00 மணிக்கு இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். நாளின் முதல் பகுதி யூதர்களைப் பொறுத்தமட்டில் காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறது. நமக்கு அது 9.00 மணி ஆகும்.

இங்கே குறிப்பிடப்படும் மூன்றாம் மணி வேளை என்பது இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த யூத ஆசாரியர்கள் மற்றும் ரோம அதிபதிகளின் வேகம் நிறைந்த துன்மார்க்கத்தன செயலைக் குறிப்பிடுகிறது. அவரை கொல்கதாவிற்கு மிக விரைவாக கொண்டு சென்றார்கள்.

பொதுவாக குற்றவாளியை சிலுவையில் அறையும் முன்பு போர்ச்சேவகர்கள் அமர்ந்து ஆடைகளைப் பங்கிட்டுக் கொள்வார்கள். இயேசு தமது ஆசாரிய உடையை இறுதிவரை உடுத்தியிருந்தார். அதைக் கிழிக்க அவர்களுக்கு விருப்பமில்லை. அது விலையேறப்பெற்றதாக இருந்ததினால், அதற்காக சீட்டுப் போட்டார்கள்.

இன்று மக்கள் கூட்டம் நிறைந்த சந்தைப் பகுதிகளில் வேகமாகச் செல்கிறார்கள். தங்கள் கைகளில் பணத்தை வைத்து எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இலாபத்தைக் குறித்து கணக்குப் போடுகிறார்கள். அவர்கள் இயேசுவின் பிரசன்னத்தையும், அவருடைய சிலுவையைக் குறித்த சத்தியத்தையும் அறியவில்லை. அவருடைய தியாக பலி மரணத்தின் அர்த்தத்தை உணரவில்லை. அவர் பாவமற்றவர். தனது பரிசுத்த ஜீவனை ஒவ்வொருவருக்காகவும் கொடுக்கிறது.

பிரியமான வாசகரே, உனது வாழ்வு சிலுவையை நோக்கி உள்ளதா? உனது வாழ்வின் நோக்கமாகவும், சிந்தனையின் மையமாகவும் சிலுவை காணப்படுகிறதா? இரக்கமுள்ள மீட்பரின் கிருபையை அடைய நீ நாடுகிறாயா? அப்போஸ்தலனாகிய பவுல் சிலுவையிலறையப்பட்ட மீட்பரின் அன்பினால் உந்தித் தள்ளப்பட்டவராக இப்படி எழுதினார்: “நான் கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப்பட்டேன். இனி ஜீவப்பது நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்” (கலாத்தியர் 2:20).

சிலுவையிலறையப்படுகிற ஆரம்ப நேரத்தில் இயேசு பேசிய வார்த்தைகளை லூக்கா நமக்கு குறிப்பிடுகிறார்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்கள் அறியாதிருக்கிறார்கள்” (லூக்கா 23:34).

இயேசு தமது ராஜரீக விண்ணப்பத்தில், இயேசு அனைவரையும் உள்ளடக்கி மன்றாடினார். வேலைக்காரர்கள், பிரதான ஆசாரியர்கள், ரோம தேசாதிபதிகள் மற்றும அனைவருக்காகவும் விண்ணப்பம் ஏறெடுத்தார். மகா பிரதான ஆசாரியர் தன்னைக் கொல்லுபவர்களை சபிக்கவில்லை. திரளான பாவிகளை அவர் புறக்கணிக்கவில்லை. அவர்களை இரட்சித்தார். அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்காக மன்றாடினார். பரிசுத்தமான இறைவன் அவருடைய விண்ணப்பத்திற்கு பதிலளித்தார். இயேசு சிலுவையிலும் மன்றாடினார். அதை நீங்கள் உணரும்போது இரட்சிக்கப்படுவீர்கள். நீங்கள் இரட்சிப்பில் நிலைப்படுவீர்கள். அவருக்கு நன்றி செலுத்தி, உங்களை அவருக்கு அர்ப்பணியுங்கள்.

விண்ணப்பம்: துன்பங்களைச் சகித்தவரே, உமது அன்பு எங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. உமது பலவீனத்தில் உமது வல்லமை மிகப்பெரியதாக இருந்தது. சிலுவையில் ஆணியறைந்தவர்களை நீர் சபிக்கவில்லை. அவர்களுக்காக மன்றாடினீர். எங்களையும் நீர் இரட்சித்தீர். நீர் கூறியபோது எங்களுக்காகவும் மன்றாடினீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்கள் அறியாதிருக்கிறார்கள்”. உம்மை நேசிக்கவும், எங்கள் வாழ்வின் மையமாக சிலுவை காணப்படவும் எங்களுக்கு உதவும். சிலுவையே எங்கள் விசுவாசத்தின் ஆதாரம். இறைவனின் பரிசுத்தமான ஆட்டுக்குட்டியானவரே எங்களை உமக்கு அர்ப்பணிக்கிறோம். நீர் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தீர். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு எப்படி சிலுவையிலறையப்பட்டார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:55 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)