Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 073 (Jesus Warns Against the Scribes)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)

11. இயேசு வேதபாரகர்களை எச்சரித்தார். ஏழை விதவையைக் குறித்துப் பேசினார் (மாற்கு 12:38-44)


மாற்கு 12:38-44
38 பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், 39 ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, 40 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். 41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். 42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். 43 அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; 44 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

அநேக இறையியலாளர்கள், எழுத்தாளர்கள், தாழ்மையுடன் இருப்பதைப் போல் காண்பிக்கிறார்கள். கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள். நன்றாக உடையணிகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களை மரியாதையுடன் வாழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தை நாடுகிறார்கள். அவர்கள் பேசும் போது, புன்னகைத்து மெதுவாகப் பேசுகிறார்கள். தங்களுக்கு பின்பாக அமர்ந்திருப்பவர்கள் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு தலையசைக்கிறார்கள். திக்கற்ற அனாதைகள், விதவைகளின் பணத்தை அபகரிக்கிறார்கள். அவர்கள் புகழாரத்தைப் பெற இரகசியமாக வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட மாய்மாலங்களை இயேசு எச்சரிக்கிறார். பொய் வசனிப்புகளை எச்சரிக்கிறார். நம்முடைய சொந்தக் கைகளினால் நாம் வேலை செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களிடம் வாங்கி வாழக்கூடாது என்றும் கற்றுக்கொடுக்கிறார். நீ ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்து, இறைவனுக்கு முன்பு மனந்திரும்பி, அவருடைய கிருபைக்காக நன்றி செலுத்தும்போது, மற்றவர்களின் ஆத்துமாக்களை தொடக்கூடியதாக உன் வாழ்வு இருக்கும்.

மக்கள் தேவாலயத்தின் காணிக்கைப் பெட்டிக்குள் காணிக்கை போடுவதை இயேசு கவனித்தார். தனது மிகுதியான ஐசுவரியத்தில் இருந்து காணிக்கைப் போட்ட பணக்காரனைக் குறித்து அவர் பேசினார். அவர்கள் தங்கள் மிகுதியில் இருந்து போட்டார்கள். அவர்கள் தங்களுடைய பணத்தினால் இறைவனின் கிருபையை வாங்க நினைத்தார்கள்.

பின்பு ஒரு ஏழை விதவை வந்தாள். அவள் தனது பிள்ளைகளுக்கு உணவளிக்கக் கூட மிகவும் சிரமப்பட்டாள். அவள் இரண்டு சிறிய நாணயங்களை கொண்டு வந்தாள். அதை வைத்து ஒரு நாள் தான் உயிர் வாழ முடியும். அவள் கைகளில் வைத்திருந்த நாணயம் ஒருவேளை முந்தைய நாளில் வீட்டைத் துப்புரவு செய்து கிடைத்த கூலியாக இருந்திருக்கலாம். அவள் தனது காணிக்கையின் மூலம் இறைவனை மகிமைப்படுத்த விரும்பினாள். தனக்குரிய அனைத்தையும் அவள் கொடுத்தாள். இது தான் மிகச் சிறந்த காணிக்கை என்று இயேசு கூறினார். நீ இறைவனுக்கு எப்படி தியாகத்துடன் கொடுக்கிறாய்? நீ இறைவனை உண்மையாக நேசிக்கிறாயா? உனது பணத்தை தியாகத்துடன் கொடுப்பதின் மூலம், நீ இறைவனுடனான உனது உறவைக் காண்பிக்கிறாய்.

விதவையின் காணிக்கை மிகக்குறைவானது என்றாலும் இயேசு அதைப் புகழ்ந்து பேசினார். அவருடைய இருதயத்தை அது அசைத்தது. விசுவாசம் மற்றும் கனத்துடன் அந்த காணிக்கை செலுத்தப்பட்டது.

அனாதை விடுதிகள், மருத்துவமனைகள், சபைப்பணிகள் மற்றும் அருட்பணிகள் ஏழை விசுவாசிகளின் தொடர்ச்சியான காணிக்கைகளால் ஆதரிக்கப்படுகின்றன என்பது இறைவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களுள் ஒன்றாகும். இந்தக் காணிக்கைகள் இறைவனை பிரியப்படுத்துகின்றன. நிறைவான ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றன. அதனுடைய அளவைவிட, அதினுடைய ஆசீர்வாதம் தான் மிகவும் முக்கியமானது. நீயும் உனது பணத்தை கூடுமானவரை தொடர்ச்சியாக அருட்பணிக்கென்று கொடுப்பது நல்லது. உண்மையாகக் கொடுப்பது மட்டுமல்ல, தியாகத்துடன் கொடுப்பதும் அவசியமானது. தேவையுள்ள மனிதனைக் காண்பிக்கும்படி இறைவனிடம் கேள். நீ பங்கு பெறும் திருச்சபைப் பணிக்கென்று கொடு. உனது காணிக்கையின் சரியான பயன்பாட்டிற்காக விண்ணப்பம் செய். நீ இறைவனை ஆராதிப்பதில் அதுவும் ஒரு பகுதியாகும்.

விண்ணப்பம்: பரிசுத்த பிதாவே, எங்கள் பண ஆசையையும், மற்றவர்களின் துன்பநேரங்களில் உதவி செய்யாத நிலையையும் மன்னியும். எங்கள் கல்லான இருதயத்தை மாற்றும். தியாகமுள்ள ஆவியைத் தாரும். நீர் அருளிய இரட்சிப்பிற்காக, நாங்கள் எங்களையே ஒப்புக்கொடுக்கவும், எங்கள் பணத்தை நன்றியுடன் கொடுக்க உதவி செய்யும். எங்கள் உதவி தேவைப்படும் மனிதனை எங்களுக்கு காண்பியும். உமது ராஜ்யத்தின் வருகையோடு இணைந்து செய்யப்படுகின்ற அருட்பணிகள், தர்மகாரியங்களில் எங்களை இணைத்து செயல்பட கிருபை தாரும். கொடுக்கும் ஆவியை எழுப்பும். எடுக்கும் சிந்தனையை அகற்றும். உமது பிதாவின் நாமம் மகிமைப்படட்டும். நாங்கள் கிருபையின் மேல் கிருபையையும், உமது பரிபூரணத்தையும் பெற்றிருக்கிறோம். ஆமென்.

கேள்வி:

  1. மக்களின் காணிக்கையைக் குறித்து இயேசு என்ன நினைத்தார்?

மனன வசனம்:
“அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்;
இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு
உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.”

(மாற்கு 12:44)

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 03:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)