Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 074 (Prediction of the Temple's Destruction)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

1. தேவாலயத்தின் அழிவை இயேசு முன்னறிவித்தார் (மாற்கு 13:1-4)


மாற்கு 13:1-4
1 அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். 2 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். 3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து: 4 இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

இறைவனுடைய வீடாகிய பரிசுத்த ஆலயத்திற்குள் இயேசு தமது அப்போஸ்தலர்களுடன் சென்றார். அவருடைய மக்கள் மத்தியில் அவரது பிரசன்னம், அவருடைய பாதுகாப்பிற்கான உத்திரவாதம், தேசத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு இது அடையாளமாக உள்ளது. கலாச்சாரத்தின் மையம், இறைவனுடன் ஒப்புரவாகும் இடம், யாத்திரை செய்பவனின் இலக்கு, ஆசீர்வாதத்தின் ஊற்றாக அந்த தேவாலயம் இருந்தது.

முற்றத்தைச் சுற்றியுள்ள கட்டிடம் தேவாலயத்தின் மூன்றாவது கட்டுமானப் பணி ஆகும். இது அழிக்கப்பட்டிருந்த காலத்தில் இரண்டு முறை கட்டப்பட்டது. சிறையிருப்பிற்கு பின்பு இந்த ஆலயம் பாதுகாப்பு நிறைந்த ஓர் இடமாக இல்லை. மகா ஏரோது யூத மார்க்கத்தை தழுவிக் கொண்ட பின்பு, ஆலயத்தை புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தான். யூதர்களை பிரியப்படுத்தும்படி அப்படிச் செய்ய நினைத்தான். ஆனால் அவன் தேச மக்களிடம் இருந்து அன்பைத் திரும்பிப் பெறவில்லை.

இந்த புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மத்தியில் சடங்குகள், பலிகள், மன்றாட்டுகள் ஏறெடுக்கப்பட்டன. ஆலயத்தின் முற்றப்பகுதி ஒரு சந்தைப் பகுதியைப் போல மாறிவிட்டது. இயேசு அதனுடைய சில அறைப்பகுதிகளை சுத்திகரித்தார். அந்த மக்கள் மீதான இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு அடையாளமாக அப்படிச் செய்தார். “என் வீடு ஜெப வீடாயிருக்கிறது. நீங்கள் அதை கள்ளர் குகையாக்கினீர்கள்”.

இயேசு தனது போதகப் பணியை நிறைவேற்றி முடித்தபின்பு, பழைய உடன்படிக்கையின் மக்கள் மனந்திரும்பாததைக் கண்டார். அவர்கள் இறைவனிடம் முழுமையாகத் திரும்பவில்லை. அவர்களின் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய எண்ணினார்கள். ஆண்டவராகிய இயேசு தேவாலயத்தை விட்டு வெளியே சென்றார். அவர் வெளியே சென்றதின் மூலம் தேவாலயத்தை விட்டு கர்த்தருடைய மகிமை நீங்கி ஒலிவ மலைக்குச் சென்றது என்ற எசேக்கியல் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். இறைவன் தம்முடைய பிரசன்னத்தினால் தேசத்தைப் பாதுகாத்த செயலும் நின்றுபோனது. அவர்களை இறை நியாயத்தீர்ப்புக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் மீது பகைவர்கள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்தார்கள்.

ஆண்டவர் தேவாலயத்தை விட்டு வெளியே சென்றபோது, அவருடைய சீஷர்கள் பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் இயேசுவின் ஒரு புதிய அத்தியாயம் துவங்குவதை அறியவில்லை.

சீஷர்களில் ஒருவன், அவர்களுடைய நாட்டின் பிரகாசமான மையத்தைக் குறித்து இயேசுவிடம் கேட்ட போது, அவன் பின்வரும் பதிலைப் பெற்றான். இது கிறிஸ்து அளித்த மிக முக்கியமான பிரசங்கம் ஆகும். மாற்கு இதை முக்கியமானதாகக் கருதி, தனது நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் இந்த ஒரே ஒரு பிரசங்கத்தை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற நற்செய்தியாளர்கள் இயேசு கிறிஸ்துவின் பல்வேறு வார்த்தைகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆண்டவருடைய எல்லா வார்த்தைகளிலும் இவை மிக முக்கியமானவை என்று மாற்கு உணர்ந்தான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இதைப்புரிந்துகொண்டு, கடைப்பிடித்து, இதன்படி வாழ வேண்டும்.

இயேசுவின் முதல் சுருக்கமான பதிலை மட்டும் பார்ப்பவர்கள், அவர் சொல்லாத அநேக வார்த்தைகளை சிந்திக்க நேரிடும். அவன் தனது பதிலுடன் சேர்த்து கசப்பான ஓர் புன்னகையையும் வெளிப்படுத்தினார். தன்னுடைய கீழ்ப்படியாத தேசம், கீழ்ப்படியாத சீஷர்களை நினைத்து அவர் அழுதார். அவர் கூறியதுபோல, அறியாமையுள்ள சகோதரனே, நீ இன்னும் செத்தகற்களையும், அழியக்கூடிய கட்டிடத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாயா? இயேசுவே இறைவனுடைய ஆலயமாக இருக்கிறார். அவருடைய சரீரமாகிய ஆலயத்தில் இறைவனுடைய பரிபூரணமெல்லாம் அடங்கியிருக்கிறது. கற்களும் கட்டிடங்களும் முக்கியமானவை அல்ல. நானே புதிய உடன்படிக்கையின் மையமாக இருக்கிறேன் என்று இயேசு தன்னைக் குறித்து பேசியதை நீ உணராமல் இருக்கிறாயோ?

பின்பு அவர் தொடர்ந்து பேசினார். “ஒரு கல்மேல் ஒரு கல் இராதபடிக்கு இவைகள் அனைத்தும் இடிக்கப்பட்டுப் போகும்”. இந்த வார்த்தைகள் சீஷர்களின் மனங்களில் இடிமுழக்கத்தைப் போல் ஒலித்தன. இருள் சூழ்ந்த இரவின் மத்தியில், அந்த அமைதியான வேளையில், ஆலயத்தின் அழிவு முடிவைக் குறிக்கும் அடையாளம் என்பதை அவர்கள் படிப்படியாக உணர்ந்து கொண்டார்கள். உடனடியான நியாயத்தீர்ப்பு, எருசலேமின் வீழ்ச்சி, உலகத்தின் முடிவு குறித்து இயேசு பேசியதை உணர்ந்தார்கள். அவர்கள் பயத்துடன் நடுங்கினார்கள். பழைய உடன்படிக்கையைக் குறித்த சிந்தனைகள் மீது கட்டடிப்பட்டிருந்த அவர்களுடைய பொய்யான பாதுகாப்பு விரைவில் நொறுங்கப் போகிறது.

கெதரோன் பள்ளத்தாக்கிலிருந்து ஒலிவமலையை நோக்கி இயேசு தமது சீஷர்களுடன் நடந்து சென்றார். அங்கே எருசலேம் நகரத்தைப் பார்த்து அவர் அமர்ந்தார். என்ன ஓர் அருமையான காட்சி! அவர் முன்பாக ஆலய முற்றப்பகுதி இருந்தது. அனைவரும் அமைதியாக இருந்தார்கள். அவருடைய சீஷர்களில் நான்கு பேர், அவரை நோக்கி வந்தார்கள். அவர்களில் ஒருவன் அவரை நோக்கி உலகத்தின் முடிவைக் குறித்த இரகசியத்தைக் கேட்டான். நமது தேசத்தின் மீது எப்போது இறைவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் இப்பொழுதோ அல்லது இனிமேலா? சீக்கிரத்திலா அல்லது சிறிதுகாலம் கழித்தா? நமது காலத்திலா அல்லது எதிர்காலத்திலா? இந்த மத மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான அடையாளங்கள் என்ன? இறைவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து எப்படி தப்பிப்பது, உன்னதமானவரின் கோபத்தில் இருந்து எப்படி காப்பாற்றப்படுவது என்ற அர்த்தத்தில் அவர்கள் கேட்டார்கள்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்குள்ளும் ஆழமான பயத்தை உருவாக்குகிறதா? நமது கண்களை பணம், புகழ், விஞ்ஞானம், உலகப்பதவி இவைகளை விட்டு விலக்கி, பரிசுத்தமான இறைவனிடம் நொறுங்குண்ட இருதயம் மற்றும் தாழ்மையுள்ள மனத்துடன் திரும்ப வேண்டும்.

ஆயுதக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் இந்த உலகை பலமுறை தீயினாலும், விஷத்தினாலும் அழிக்கக்கூடிய வலிமை படைத்தவை. நாம் அறிந்திருப்பதைவிட மிக அருகில் முடிவு உள்ளது. இறைவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க நீ ஆயத்தமாக இருக்கிறாயா? அல்லது நீ லோத்தின் மனைவியைப் போல இருக்கிறாயா? நெருப்பு எரிந்து கொண்டிருந்த இடத்தை இச்சையுடன் அவள் திரும்பிப்பார்த்தாள். மனந்திரும்ப தாமதிக்கும் அனைவருக்கும் அவள் ஒரு அடையாளமாக மாறிப்போனாள்.

விண்ணப்பம்: பரிசுத்தமான ஆண்டவரே, நீர் எங்களுக்கு உலகத்தின் முடிவைக் குறித்தும், மனிதனின் பாவங்களுக்கு எதிரான இறைவனின் கோபத்தைக் குறித்தும் வெளிப்படுத்தியிருக்கிறீர். எங்கள் பொய்யான நம்பிக்கைகளுக்காக எங்களை மன்னியும். அன்பும் நம்பிக்கையும் உடைய விசுவாசத்தை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு வெளிச்சத்தைத் தாரும். எதிர்காலம் குறித்த மறைந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்ள உதவும். உமது வருகைக்கு முன்பாக மக்கள் மனந்திரும்ப இறுதி வாய்ப்பைத் தாரும். ஆமென்.

கேள்வி:

  1. தேவாலயத்தின் அழிவைக் குறித்து இயேசு கூறிய வார்த்தைகளின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 04:15 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)