Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 062 (Jesus Gives His Life)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

15. இயேசு தமது ஜீவனைக் கொடுக்கிறார் (மாற்கு 10:41-45)


மாற்கு 10:41-45
41 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். 42 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 43 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். 44 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

மனிதர்கள் வியாதிப்படுகிறார்கள். பெருமை அவர்களைப் பாதிக்கின்றது. சாத்தானின் பாவம் அவர்களுடைய சிந்தனைகளைத் தாக்குகின்றது. யோவான், யாக்கோபு என்ற சகோதரர்கள் மட்டுமல்ல, சீஷத்துவ பரீட்சையில் எல்லா சீஷர்களும் தோற்றுப்போனார்கள். அவர்கள் செபெதேயுவின் குமாரர்கள் மீது கோபப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் பெருமைமிக்கவர்களாக மாறிப் போனார்கள். அவர்கள் இயேசுவின் உபதேசத்தைக் கேட்டார்கள். அதை ஒத்துக்கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அவருடைய வார்த்தைகள் அவர்களில் தங்கியிருக்கவில்லை. சிலுவைக்கும், பரிசுத்த ஆவியின் வருகைக்கும் முன்பு வரை அவர்கள் சாதாரண மக்களாகவும், வழி தவறுகிறவர்களாகவும், சுயநலமுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.

ஆனாலும் இயேசு அவர்கள் மீது இரக்கம் கொண்டார். பரிசுத்த திரியேகத்துவத்தையும் குறித்து மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். இறைவனின் குமாரன் தாழ்மையுள்ளவர். ஆவியினால் பிறந்த அவர் தாழ்மையுடன் செயல்பட்டு பிதாவின் சித்தம் நிறைவேற்றினார். அவர் சுயத்தை வெறுத்து வாழ்ந்தார். இயேசு இவ்விதமாகத் தான் வாழ்ந்தார். அவர் எல்லா நேரங்களிலும் தனது பிதாவை மகிமைப்படுத்தினார். முழுமையாக அவரை சார்ந்து வாழ்ந்தார். கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்தினார். பிதா அவருக்கு வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரத்தையும் கொடுத்தார். அவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார். அவருடைய தற்சுரூபமாக இவர் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இவரை மகிமைப்படுத்துகிறார். உயிருள்ளவரும், வருகிறவரும், சிலுவையில் அறையப்பட்டவருமான இறைவனின் குமாரன் இரட்சிப்பைக் கொண்டு வருகிறார். திருச்சபையை அவர் நிறுவுகிறார். இது எவ்வளவு பெரிய இரகசியம், நம்முடைய இறைவன் தாழ்மை, அன்பு, இரக்கம் உள்ளவர்.

இந்தவிதமான ஆவி முற்றிலும் உலகத்தின் ஆவிக்கு நேர் எதிரானது ஆகும். இந்த உலகின் அதிபதிகள் ஆயுதங்கள் மற்றும் வன்முறையினால் ஆளுகிறார்கள். மக்கள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆனால் அவர்களோ அதிகாரத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் பெருமை, பணம், கனத்தை தேடுகிறார்கள். மற்றவர்களை அலட்சியம் செய்கிறார்கள்.

இந்த உலகத்தின் ஆவியோடு ஒத்துப்போகாதபடி இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களையும், சபையையும் பாதுகாக்கிறார். அவர் பணிவிடை செய்யும் சிந்தனையைக் கொண்டு வருகிறார். உண்மையுள்ள ஊழியக்காரன் தனது எஜமானைவிடப் பெரியவன் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். பிஷப்மார்கள், போதகர்கள் மன்றாடுகின்ற தாய் அல்லது உண்மையுள்ள குழந்தையைவிடப் பெரியவர்கள் அல்ல. பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒரே விதமாக உருவாக்குகிறார். இயேசுவின் அன்பு நம்மைத் தாழ்த்துகிறது. மற்றவர்களுக்கு நாம் பணிசெய்யும்படி நம்மைத் தூண்டுகிறது. ஆவியினால் பிறந்தவர்கள் பதவியை நாட மாட்டார்கள். நிறுவனங்கள் அல்லது கூட்டங்களில் முதன்மை இடத்தை தேடமாட்டார்கள். பார்வையற்றோர், குடிகாரர்கள், வழிவிலகிப்போனவர்கள், புறக்கணிக்கப்பட்டோர்களுக்கு பணிவிடை செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்துகிறார். அவர்கள் தங்களுடைய பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

நீ ஒரு வேலைக்காரனா? அல்லது எஜமானனா? இறைவனுக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்துகிறாயா? உனது குறைவை நீ ஒத்துக்கொள்கிறாயா? கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறாயா? அல்லது நீ பெருமையுடன் இருக்கிறாயா? இயேசு நமக்கு நல்ல முன்மாதிரியை காண்பித்துள்ளார். அவரைப் பின்பற்றுகிறவன் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறான். அவர் பணிவிடை கொள்ளும்படி வரவில்லை. பணிவிடை செய்யும்படி வந்தார். நம்முடைய இறைவன் ஓர் பணிவிடைக்காரர். இந்த வாக்கியத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். இயேசு உன்னிடம் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை இது காண்பிக்கிறது.

இயேசு தனது உயிரையே கொடுத்தார். நாம் பெருமையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படும்படி அவருடைய இரத்தம் மீட்கும்பொருளாக உள்ளது. இயேசுவின் இரக்கம் நிறைந்த வார்த்தையைக் கேட்டு, அவருடைய பலிமரணத்தின் வல்லமையை விசுவாசிப்பவர்கள் பெருமையின் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். அன்பு, பொறுமை, மற்றவர்களுக்காக மன்றாடும் குணம் இவைகளுடன் நல்ல முன்மாதிரியாக அவர்கள் செயல்படும்படி மாற்றுகிறார். கிறிஸ்துவின் மீட்பு நம்மை அன்புள்ளவர்களாக மாற்றுகிறது. மற்றவர்களுக்கு உதவும்படி நமது வாழ்வைக் கொடுக்க உதவுகிறது. மகிழ்ச்சி மற்றும் நன்றியுடன் ஓர் பலியை நீ அவருக்கு கொடுக்கிறாயா?

விண்ணப்பம்: பிதாவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது நேச குமாரனை துன்மார்க்க உலகிற்கு அனுப்பினீர். அவர் உம்மை எல்லா நேரங்களிலும் மகிமைப்படுத்தினார். எங்கள் மத்தியில் பணிவிடைக்காரனாக வாழ்ந்தார். எங்களை பெருமையிலிருந்து விடுவிக்கிறார். அவருடைய சிலுவை மரணத்தின் மூலம் நீர் எங்களை பரிசுத்தப்படுத்துவதற்காக நாங்கள உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் சாத்தானுடைய பாவத்தினால் விஷமாக்கப்பட்டிருக்கிறோம். நீர் எங்களுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறீர். உமது பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு தந்திருக்கும் விடுதலைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களை பணிவிடை செய்பவர்களாக நீர் மாற்றுகிறீர். இதன் மூலம் மற்றவர்களுக்கு பாவங்களில் இருந்து இரட்சிக்கப்பட வழிநடத்துகிறீர். ஆமென்.

கேள்வி:

  1. பாவிகளுக்கு பணிவிடைக்காரனாக இயேசுவின் முன்மாதிரி நமக்கு என்ன பொருள் தருகிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 18, 2021, at 02:44 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)