Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 061 (Request of the Sons of Zebedee)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

14. செபெதேயுவின் குமாரர்களின் வேண்டுகோள் (மாற்கு 10:35-40)


மாற்கு 10:35-40
35 அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். 36 அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். 37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். 38 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். 39 அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். 40 ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

சீஷர்கள் அரசியல், பதவி, அதிகாரம், உலக மகிமை இவைகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது இறைவனின் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியானவர் தனது உயிரை பலியாகக் கொடுக்க பலிபீடம் நோக்கி முன்னேறினார். அவர்கள் சிலுவையின் அவசியத்தை உணரவில்லை. அவர்கள் மனந்திரும்புதல் மற்றும் மறுபிறப்பு இல்லாமல் இறைவனுக்கு பணிசெய்ய முடியும் என்று நினைத்தார்கள். அவர்கள் பெருமையுடன் இருந்தார்கள். யோவானும், யாக்கோபும் இயேசுவைப் பின்பற்றி வந்தவர்கள். அவர்கள் மீனவ வேலையை விட்டு வந்தார்கள். மற்றவர்களை விட தாங்கள் சிறந்தவர்கள் என்று எண்ணினார்கள். இயேசுவுடன் அவர்கள் குடும்பம் நெருக்கமான உறவுடன் இருந்தது. ஆசாரியக் குடும்பத்துடன் நெருக்கமான உறவுடன் இருந்தார்கள். இயேசு பூமியில் மகிமை மற்றும் ஆரவாரத்துடன் ஆட்சி செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவருடைய வெற்றியின் நாளில் அவர்கள் தனித்துக் காணப்பட விரும்பினார்கள்.

இயேசு அவர்களுடைய வேண்டுதலை உடனடியாக மறுக்கவில்லை. அவர்கள் கேட்பது இன்னதென்று அறியாதபடியினால் அவர்கள் மீது குற்றம்சாட்டினார். அவர்களுடைய நோக்கங்களை அவர் கடிந்துகொண்டார். அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்தினார். அவருடைய கேள்வியின் மூலம் அவர்களின் குறுகிய கண்ணோட்டத்தை காண்பித்தார். இறைவனின் கோபாக்கினையினுடைய பாத்திரத்தை அவர்கள் குடிக்கக் கூடுமோ, சிலுவைப் பாடுகளின் ஞானஸ்நானத்தை அவர்கள் தாங்க முடியுமோ? அவர்களுடைய பதிலில் இது வெளிப்பட்டது. அவர்கள் தங்களுடைய பலவீனம், தவறை அறியவில்லை. பட்சிக்கின்ற பரிசுத்த இறைவனை அவர்கள் அறியவில்லை. இறைவனின் ஆட்டுக்குட்டியானவர், இயேசுவின் மரணத்தின் அவசியத்தை அவர்கள் உணரவில்லை.அவர்கள் இயேசுவைப் பின்பற்றுவதின் பரீட்சையில் தோற்றுப்போனர்கள். அவர்களிடத்தில் இன்னும் பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கவில்லை. அவர்கள் தங்களுடைய பாவங்களையும், சிலுவையினால் நீதிமானாக்கப்படுதலையும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஆவிக்குரிய குருடர்களாகவும், அகங்காரமிக்கவர்களாகவும் இருந்தார்கள்.

அவர்கள் புதுப்பிக்கப்படாதிருந்தும், அவருடன் இணைந்துபாடுபடுவதற்காக அவர்கள் ஆயத்தமாயிருந்ததை இயேசு மறுதலிக்கவில்லை என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. அவரைப் பின்பற்றுதல் என்பது மற்றவர்களுக்காக பணிசெய்வதில் பாடுபடுதல் என்பதை அவர்களுக்குத் தெரிவித்தார். நீதியுள்ள இயேசு பாவிகளுக்காகப் பாடுபட்டார். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது சந்தோஷம், வரங்கள், மகிமையின் நிச்சயம் என்பது மட்டுமல்ல. சாத்தானின் சோதனைகள், பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டவர்களின் பகைகள் என்பவைகளும் அதில் அடங்கியுள்ளன.

இயேசுவைப் பின்பற்றுபவதற்கான விலையை நீ செலுத்த ஆயத்தமா? கிருபையை மட்டும் அனுபவிக்க விரும்புகிறாயா? அல்லது பரியாசம் பண்ணுகிறவர்கள் மற்றும் பகையுள்ளவர்கள் மத்தியில் உனது உயிரையும் கொடுக்க ஆயத்தமா?

இறைவன் மற்றும் அவருடைய குமாரனுடன் உள்ள நமது ஐக்கியத்திற்கு பலன் என்பது யோவானும், யாக்கோபும் கற்பனை செய்ததைப் போல் அல்ல. கிறிஸ்துவின் இடது பாரிசத்தில் மனிதன் உட்காருவது என்பது கூடாத காரியம். அது தனது வலதுபாரிசத்தில் குமாரன் வீற்றிருக்கக் கூடிய பிதாவின் இடம். செபெதேயுவின் குமாரர்களின் வேண்டுதல் பிசாசினுடைய பெருமையைக் காண்பிக்கிறது. அவன் எஜமானுடைய ஆவிக்கு எதிராக அவர்களைத் திசைதிரும்பும்படி இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டு வந்தான்.

பரலோகத்தில் நமது இடம் எங்கே இருக்கிறது? அருகில் இருப்பவர்களில் நாமும் ஒருவராக இருப்போமா? அல்லது கைவிடப்பட்டவர்களில் ஒருவராக இருப்போமா? கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்அனைவரும் அவருடைய ஆவியுடன் இணைந்திருப்பார்கள். நாம் அவருடைய ஆவிக்குரிய சரீரமாக இருக்கிறோம். நம்மை அவரிடமிருந்து பிரிக்க முடியாது. பரலோகத்தில் அன்பு, சமாதானம், ஐக்கியம் உண்டு. அங்கே பெருமைக்கு இடமில்லை. இயேசு தமது பிதாவிடம் கேட்டார். “பிதாவே நான் உம்மிலும், நீர் என்னிலும் இருப்பதைப் போல அவர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கச் செய்யும்”.

விண்ணப்பம்: ஆண்டவரே, பெருமையும், அகங்காரமும் நிறைந்த எங்கள் மீது நீர் பொறுமையாய் இருக்கிறீர். நீர் எங்களைப் புறக்கணிக்கவில்லை. உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் வாழும்படி கோபாக்கினையின் பாத்திரத்தை நீர் குடித்தீர். நீர் சிலுவைப் பாடுகளை எங்களுக்காக ஏற்றுக்கொண்டீர். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்புகிறீர். எங்கள் மதியீனம், சுயநலம், அதிகார ஆசையை மன்னியும். உமது சாயலுக்கு ஒப்பாக எங்களை மறுரூபப்படுத்தும். நாங்கள் தாழ்மையுடன், பிறருக்கு சேவை செய்ய உதவும். அவர்களுடைய பரியாசம், புறக்கணிப்பு, அடிகளைப் பொறுத்துக்கொள்ளவும், அவர்கள் இரட்சிக்கப்படவும் உதவும். ஆமென்.

கேள்வி:

  1. செபெதேயுவின் குமாரர்களுடைய கேள்வியும், பதிலும் எவ்விதம் அவர்களுடைய ஆவிக்குரிய நிலையை வெளிப்படுத்திக் காண்பித்தது?

www.Waters-of-Life.net

Page last modified on August 18, 2021, at 02:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)