Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 063 (Jesus Heals a Blind Man)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)

1. எரிகோவில் ஒரு குருடனை இயேசு சுகமாக்கினார் (மாற்கு 10:46-52)


மாற்கு 10:46-52
46 பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். 48 அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். 49 இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். 50 உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். 51 இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். 52 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

இறைவனுடைய ராஜ்யத்தின் விதிமுறைகளுக்கு சீஷர்கள் குருடர்களாக இருந்தார்கள். அவர்கள் தாழ்மையுடன் வெளிப்பட்ட இயேசுவின் மகிமையைக் காணவில்லை. ஆனாலும் எரிகோவில் பர்திமேயு என்ற குருடன் இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தினால் பார்வையைப் பெற்றான். இயேசு தாவீதின் குமாரன் என்பதை அவன் விசுவாசிக்கும்படி கிறிஸ்து அவனுக்கு ஓர் வெளிச்சத்தைக் கொடுத்தார். இயேசு மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாக்குப்பண்ணப்பட்ட ராஜாவாக இருக்கிறார் என்பதை விசுவாசித்தான். குமாரனுடைய ராஜ்யம் முடிவில்லாதது என்பதை அவன் சாட்சியிட்டான். அவர் இறைவனுடன் வீற்றிருப்பார் என்று வெளிப்படுத்தப்பட்டிருப்பதை அறிக்கையிட்டான். “கர்த்தர் என் ஆண்டவருடன் சொன்னார். “உமது சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என் வலது பாரிசத்தில் உட்காரும்”.

பார்வையுள்ளவர்களை விட அதிகமானவற்றை இந்தப் பார்வையற்ற விசுவாசி கண்டான். அவன் அமைதியாயிருக்கும்படி சீஷர்கள் அதட்டியும், இவன் அமைதியாயிருக்கவில்லை. “தாவீதின் குமாரனே” என்று இன்னும் அதிக சத்தமாக கூப்பிட்டான். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கும்படி, அவன் அமைதியாயிருக்கும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் அவன் அதிக சத்தமாகக் கூப்பிட்டான். வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம் இது. இதை நழுவவிடக் கூடாது என்பதை அவன் அறிந்திருந்தான்.

இயேசு எருசலேமிற்கு செல்லும் வழியில் நின்றார். இந்த ஏழை பார்வையற்ற விசுவாசியின் இதயக் கதறலின் சத்தத்தை அவர் கேட்டார். நீ இறைவன் தரும் வாழ்வைப் பெற ஏங்கும்போது அதைப்போன்றே உனது இருதயத்தின் அழுகையையும் அவர் கேட்கிறார். அவருடைய அழைப்பு சத்தங்கள் நிறைந்த இந்த உலகில் உனக்குக் கேட்கிறதா? உனது தலையில் பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கலாம். நீ உண்மையாய் அவரை நோக்கி வேண்டும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உனது விண்ணப்பத்தை அவர் எதிர்பார்க்கிறார். உனது இதய சத்தத்திற்கு அவர் செவிகொடுக்கிறார். உன்னைப் புரிந்துகொள்கிறார். உன்னை தனிப்பட்ட விதத்தில் அழைக்கிறார். எனவே அவரிடம் வந்து, அவர் வார்த்தையைக் கேள். அவர் உன்னை முழுமையாக இரட்சிக்கிறார்.

பார்வையற்ற மனிதன் இயேசுவின் அழைப்பைக் கேட்ட போது, உடனடியாக குதித்தெழுந்து சென்றான். தனது மேல் வஸ்திரத்தை எடுத்து எறிந்தான். கிறிஸ்துவிடம் ஓடிவர அது தடையாக இருக்கக்கூடாது என நினைத்தான். இயேசுவிடம் விரைந்து வந்தான். இறைவனுடைய குமாரனின் சத்தத்தை அவன் கேட்டான். “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?”

பிரியமான சகோதரனே, இறைவனுடைய குமாரன் உன்னிடம் “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்று கேட்டார் நீ அவருக்கு எப்படி பதில் அளிப்பாய்? அது உனது எதிர்கால வாழ்வின் வழியைத் தீர்மானிக்கும் என்பதை மனதில் வைத்து கவனமாகப் பதிலளி. ஆண்டவர் விரும்புவதை நீ கேட்கும்படி உனது இருதயத்தில் அவரிடம் வேண்டிக்கொள். பின்பு விசுவாசத்துடனும், தாழ்மையுடனும் அவருக்குப் பதிலளி.

பார்வையற்ற அந்த மனிதன் பார்வையடைய வேண்டும் என்று கேட்டான். நீ கிறிஸ்துவிடம் என்ன கேட்பாய்? தேர்வில் வெற்றி, வியாதி நீங்கி சுகம், எதிர்காலத்திற்காகப் பணம், உனது பாவமன்னிப்பு அல்லது பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வந்து வாசம் செய்வதன் மூலம் கிடைக்கும் நித்திய வாழ்வு இவைகளில் எதைக் கேட்பாய்?

கிறிஸ்து உனது விண்ணப்பங்களைக் கேட்பார். நீ அவரை முழு இருதயத்தோடும் தேடி, அவரை உறுதியாகப் பற்றிக்கொள் எரிகோவில் இருந்த அந்தக் குருடன் தனது இருதயத்தை இயேசுவிற்கு திறந்தான். அவருடைய அன்பை ஏற்றுக்கொண்டான். அவன் இரட்சகரின் வல்லமையை விசுவாசித்தான். விசுவாசத்தின் பலனைப் பெற்றுக்கொண்டான். அவன் சத்தமாகக் கூப்பிட்டது அல்லது இயேசுவிடம் விரைவாக ஓடி வந்ததினால் அல்ல, அவனுடைய விசுவாசம் தான் அவனுக்கு பார்வையைக் கொடுத்தது. இயேசு அதைக் கனப்படுத்தினார். இந்த விசுவாசம் அவனில் வெளிப்பட்டு அது எல்லோருக்கும் காணப்பட்டது. அவன் இயேசுவை தெய்வீக ராஜாவாக அங்கீகரித்தான். இயேசு பெரியவராய் இருந்தும், இந்த ஏழை மனிதனின் கூப்பிடுதலைக் கேட்டு, அவனுக்கு உதவி செய்தார்.

பர்திமேயுவின் விசுவாசம் உண்மையானது. அவன் பார்வையைப் பெற்ற போது, உடனடியாக தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களைத் தேடிச்செல்லவில்லை. அவன் உடனடியாக இயேசுவைப் பின்பற்றி நடந்தான். அவனுடைய கண்கள் இரக்கம் நிறைந்த தெய்வீக ராஜாவைக் கண்டன. துன்பங்கள், எதிர்ப்புகள், அவமதிப்புகள் மத்தியிலும் அவன் உறுதியாக நின்று, அவருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தான்.

பிரியமான வாசகரே, உங்களைக் குறித்து என்ன? உங்களது பார்வையை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? கிறிஸ்துவை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் உலக ஆசைகளினால் குருடராய் இருக்கிறீர்களா?

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நீர் எளியவர், வியாதியுற்றோர், ஏழைகள் மீது கரிசனை கொள்வதால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது அறுவடைக்கு ஆயிரம் வேலைக்காரர்களை இன்று அனுப்பும். அறுப்பு மிகுதி. இருதயங்கள் சத்தியத்திற்காக ஏங்குகின்றன. ஆனால் வேலைக்காரர்களோ கொஞ்சம். சிலர் உண்மையற்றவர்கள். என்னை உமது ராஜ்யத்தில் தாழ்மையுள்ள, கடினமாக வேலை செய்கிற, கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக மாற்றும். உமது இரக்கத்தை நான் அனுபவித்து, உம்மை எல்லா நேரங்களிலும் காண கிருபை செய்யும். உம்மையும், உமது விருப்பத்தையும் மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற உதவும். ஆமென்.

கேள்வி:

  1. எரிகோவில் பர்திமேயு குருடன் பார்வையடைந்ததின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 03:44 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)