Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 060 (Jesus Speaks about His Death and Resurrection)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

13. இயேசு தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து மூன்றாம் முறை பேசுகிறார் (மாற்கு 10:32-34)


மாற்கு 10:32-34
32 பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்: 33 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். 34 அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

இயேசு தமது திட்டத்தை அறிந்திருந்தார். அவருடைய சீஷர்களுக்காகவும், எல்லா மனிதர்களுக்காகவும் பதிலாள் பலியாக அவர் மரிக்கும்படி இந்த உலகிற்கு வந்தார். அவருடைய கட்டளைகளும், வாக்குத்தத்தங்களும் அவர்களை மாற்றாததை இயேசு கண்டார். அவர்கள் பெருமையுடனும், இருதயக் கடினத்துடனும் அன்பற்றவர்களாக இருந்தார்கள். இறைவனின் ஆட்டுக்குட்டியாக அடிக்கப்பட்டு, தமது மரணத்தின் மூலம் இறைவனுடன் அவர்களை ஒப்புரவாக்க விரும்பினார். நீதிமானாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, மாற்றம் அடைந்து, முழுவதும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களிடம் ஆண்டவருடைய ஆவியானவர் தங்கி வாசம் செய்கிறார்.

எனவே இந்தக் காரணத்திற்காக, இயேசு தமது மரண இடமான எருசலேமுக்கு செல்ல தீர்மானித்தார். அவர் பயந்து ஓடவில்லை. ஆனால் அவருடைய சீஷர்கள் முற்றிலும் பயந்தார்கள். யூதர்களின் உச்ச நீதிமன்றமான ஆலோசனைச் சங்கத்தார், நியாய சாஸ்திரிகள் இயேசுவை வேவு பார்த்தார்கள். அவர் மீது குற்றம் சுமத்துவற்காக தந்திரமான முறையில் தொடர்ந்து செயல்பட்டார்கள். அவர்கள் இயேசுவின் மீதும், சீஷர்கள் மீதும் குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்கு உதவுபவர்கள் அல்லது அவர்களுடன் இணைந்திருப்பவர்கள் தேச ஒற்றமைக்கு, குந்தகம் விளைவிப்பதாக கூறினார்கள்.

ஆனாலும் இயேசு தைரியத்துடன் சிங்கங்களின் குகைக்குள் சென்றார். உலகத்தை மீட்பதற்கு சிலுவையைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அறிந்திருந்தார். அவர் பன்னிரெண்டு சீஷர்களையும் கவனத்துடன் ஆயத்தப்படுத்தினார். தனது சொந்த மரணம் மற்றும் அதைச் சுற்றி நிகழக்கூடிய கொடிய சம்பவங்கள் அனைத்தையும் அவர் மிகத்தெளிவாக முன்பே அறிந்திருந்தார். இருப்பினும் அவர் தைரியமாக அதைச் சந்திக்கச் சென்றார்.

இயேசு தமது வாழ்வு மற்றும் மரணம் குறித்த தீர்க்கதரிசனத்தை உரைத்ததின் சிறப்புத் தன்மையை நீ உணருகிறாயா? தனக்கு நேரிடும் முடிவை அவர் தெளிவாகக் கண்டார். ஆனாலும் அவர் எதிரிகளை நோக்கி முன்னேறினார். வரப்போகிற நிகழ்வுகளைக் குறித்து அவருடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார். அவர் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார். அவர் நமக்காகப் பிறந்தார். ஆண்டவருக்கு எதிராக மனிதர்கள் கலகம் பண்ணியபோது, அதன் மத்தியில் இறைவனின் அன்பு முழுமையாக வெளிப்பட்டது. அவர்களது அக்கிரமங்களையும், நோய்களையும் அவர் சுமந்தார். அவர்கள் அவரை அடித்தார்கள். அவருடைய அன்பின் முகத்தில் துப்பினார்கள். அவருடைய சரீரத்தை காயப்படுத்தினார்கள். சபிக்கப்பட்ட மரத்தில் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் சாகும்படி அப்படிச் செய்தார்கள். சிலுவையில் அறையப்பட்டவரை பரியாசம் பண்ணினார்கள். இறைவனை அவர் நிந்திப்பதைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர் நீடிய பொறுமையுடன் பாடுகள், துன்பங்களைச் சகித்தார். நமக்காக சிலுவையில் மன்றாடினார். சிலுவையில் தன்னை அறைந்தவர்களின் பாவங்களை மன்னித்தார். இறைவன் தன்னை கைவிட்டாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. ஆண்டவரின் கோபாக்கினைக் பாத்திரத்தில் அவர் குடித்தார். இறைவன் தன்னுடைய முகத்தை அவருக்கு மறைத்த போதும் தனது பிதாவின் கைகளில் அவர் தன்னையே ஒப்புக்கொடுத்தார். இறைவனின் கோபாக்கினை அக்கினியின் மத்தியில், இயேசு நித்தியத்தையும், தனது உயிர்த்தெழுதலையும், முடிவில் ஏற்படும் மிகப்பெரிய வெற்றியையும் விசுவாசித்தார்.

பரிசுத்த ஆவியினால் தனது பிதாவின் மூலம் கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டை இயேசு விசுவாசித்தார். அவர் உடனடியாக எருசலேமை நோக்கி முன்னேறினார். நீ இறைவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதன்படி செயல்படுகிறாயா? உனது வாழ்வு போராட்டங்கள், சோதனைகள், இருள் மற்றும் பயங்களினால் நிறைந்திருக்கக் கூடும். கிறிஸ்துவும் இறைவனை விட்டு தூரம் போன நம்முடைய இடத்தில் நின்று, இறைவனால் கைவிடப்பட்டதைக் குறித்து நினைத்துப்பார். அவர் எல்லா நேரங்களிலும் நித்தியமானவரை சார்ந்து வாழ்ந்தார். உங்கள் பரலோகப் பிதாவை முற்றிலும் நம்புங்கள். விசுவாசத்தின் மூலம் உங்கள் பாடுகளை நீங்கள் மேற்கொள்ள முடியும். அவருடைய உதவியுடன் உங்கள் பிரச்சினைகளை அணுகுங்கள். உங்கள் எதிரிகளை நேசியுங்கள். உங்கள் எதிராளிகளை ஆசீர்வதியுங்கள். சர்வவல்லமையுள்ள இறைவன் உங்களுடன் இருக்கிறார். எனவே பயப்பட வேண்டாம்.

விண்ணப்பம்: எங்கள் ஆண்டவராகிய இயேசுவை நாங்கள் ஆராதிக்கிறோம். நீர் எங்கள் பாடுகள், மரண நேரத்தில் எங்களை விட்டுவிலகிச் செல்லவில்லை. அவைகளை ஏற்கெனவே அறிந்திருக்கிறீர். எங்களுக்காக சிலுவையை சுமந்தீர். எங்களை நீதிமானாக்குவதற்காக வலிகள், அடிகள், பரியாசங்கள், நிந்தனைகளை ஏற்றுக்கொண்டீர். உமது அன்பிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். எங்களை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். தகுதியற்ற எங்களை ஏற்றுக்கொள்ளும். எங்களை பரிசுத்தப்படுத்தும். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும். நாங்கள் எங்களுக்காக வாழாதபடி, உமக்காக மட்டும் வாழச்செய்யும். எங்கள் பலவீனத்தில் உமது பெலன் வெளிப்படட்டும். தங்கள் பாவங்களினால் அடிமைப்பட்டவர்களுக்கு உதவி செய்யும். அவர்கள் தங்கள் பெருமையிலிருந்து விடுபட உதவும். உமது அன்பினால் அவர்களை அலங்கரியும். ஆமென்.

கேள்வி:

  1. ஏன் இயேசு எருசலேமுக்குப் போகும் போது சீஷர்களுக்கு முந்திச் சென்றார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 18, 2021, at 02:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)