Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 056 (About Marriage)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

9. திருமணத்தைக் குறித்த இயேசுவின் வார்த்தைகள் (மாற்கு 10:1-12)


மாற்கு 10:1-12
1 அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். 2 அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன்தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். 3 அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். 4 அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவு கொடுத்திருக்கிறார் என்றார்கள். 5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். 6 ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். 7 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; 8 அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். 9 ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். 10 பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள். 11 அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். 12 மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.

திருமணம் என்பது இறைவனின் பரிசு. அது சாத்தானின் சோதனை அல்ல. நமது பாவங்களினால் நாம் அனைவரும் அசுத்தமுள்ளவர்களாக இருக்கிறோம். பரிசுத்தமாக வாழ இயலாதவர்களாக உள்ளோம். ஒரு மனைவியை திருமணம் செய்து வாழும் ஒழுங்குமுறையை இரக்கமுள்ள சிருஷடிகர் உருவாக்கியுள்ளார். ஆண்டவரின் வழிநடத்துதலில் செய்யப்படும் திருமணம் பரதீசு தோட்டத்திற்கு இணையானது. அது வனாந்தரத்தில் உள்ள பாலைவனச் சோலை போன்று உள்ளது. ஏனெனில் திருமணத்தில் இறைவன் மூன்றாவது துணையாளராக இருக்கிறார். எனவே திருமணத்தை அசுத்தம் என்று எண்ண வேண்டாம். அது கிறிஸ்துவின் பிரசன்னத்தில் பரிசுத்தமாகவும், அவருடைய ஆவியினால் வல்லமையாகவும் இருக்கிறது.

ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக முந்தைய காலத்தைவிட தற்போது விவாகரத்து அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் இறைவன் அவர்களை இணைக்கவில்லை. அவர்கள் சாதாரணமாக சந்திக்கிறார்கள். எதையும் யோசிக்காமல் உடனடியாக திருமணம் செய்கிறார்கள். எனவே அவர்கள் மனமுடைந்து விவாகரத்து செய்கிறார்கள். தங்களது திருமண உறவைத் தொடர்வதற்கு அவர்கள் விரும்பவில்லை.

இருதயங்களிலும், இல்லங்களிலும் இறைவனைக் குறித்த பயம் ஆட்கொள்ளாவிட்டால், தீய ஆவிகள் தெருக்கள் வழியாக வந்து இல்லங்கள், இருதயங்களில் புகுந்து ஆட்கொள்ளும். அப்போது விவாகரத்து எளிதாக நேரிடும். இறைவனின்றி ஆண்களும், பெண்களும் படுகின்ற சொல்ல முடியாத பாடுகள் குறித்து நமக்குத் தெரியாது. அவருடைய வழிநடத்துதல் இல்லாமல் திருமணம் செய்கிறார்கள். அவருடைய விருப்பத்திற்கு எதிராக பிரிந்து சென்று விவாகரத்து செய்கிறார்கள்.

கடினமுள்ள அவிசுவாச இருதயங்கள், கேடான விவாகரத்துகள் இவைகளினால் கண்ணீரின் ஆறுகள் ஓடுகின்றன. இருதயங்கள் இணைந்து வாழ முடியாமல் பிரிகின்றார்கள். தம்பதியர் இணைந்து வாழ்ந்தாலும் பகையுணர்வுடன் இருக்கிறார்கள். இது பிள்ளைகளின் இருதயங்களில் பயம் ஏற்படக் காரணமாக உள்ளது. உடைக்கப்பட்ட குடும்பங்களின் பெற்றோர்களுக்கு ஐயோ, ஏனெனில் அவர்கள் பிள்ளைகள் துன்பப்படக் காரணமாக இருக்கிறார்கள்.

இறைவனின் பொதுவான நியதி அன்பும், பரிசுத்தமும் ஆகும். அவர் திருமணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தம்பதியர் இணைந்து வாழ்வது உடல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதாக அல்ல, அது அன்புடன் பணிவிடை செய்வதாகும். தாழ்மையுடனும், பொறுமையுடனும் ஒருவரையொருவர் கனம்பண்ணவேண்டும்.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையேயுள்ள தூய்மையான அன்பு ஓர் இரகசியம் ஆகும். முதலாவது அவர்கள் இணைக்கப்பட்டார்கள். அவர்களது சிந்தனைகள் ஒருமித்தன. ஒரு மன்றாடும் மனைவி உன்னை பரலோக வாழ்விற்கு நேராக நடத்த முடியும். அவள் உனது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமானவள். ஆனால் உண்மையற்ற மனைவி, பணத்தைûயும், பதவியையும் நாடுபவள் உன்னை அலட்சியம் செய்வாள். உன் மீது அதிகாரம் செலுத்துவாள். உனது ஆத்துமாவை கறைப்படுத்துவாள். அவள் உன்னை நரகததிற்கு நேராக கொண்டு செல்வாள். கிறிஸ்துவின் ஆவி அவளை விடுதலை செய்ய வேண்டும். தொடர்ச்சியான அன்பு, விசாரிப்பு, இரக்கம், சமாதானம் அவளுக்குத் தேவை. திருமணத்திற்கு முன்பு ஓர் உண்மையான மனைவியைத் தரும்படி நீ ஆண்டவரிடம் கேட்க வேண்டும். பணம், அழகு, அறிவு இவற்றைவிட இது முக்கியமானது. இந்த உலகின் நன்மைகள் கடந்துபோகும். ஆனால் இறைஅன்பு ஒருபோதும் ஒழியாது.

பிரியமுள்ள சகோதரியே, விசுவாசியை மட்டும் திருமண வாழ்வில் ஏற்றுக்கொள். கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் திருமணத்தினால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். “அவிசுவாசிகளுடன் அந்நிய நுகத்தில் இணைக்கப்பட வேண்டாம்.

Pவிண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே, திருமணம் என்ற உமது ஈவிற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்தத்தில் வாழும்படி எங்களுக்குக் கற்றுத் தாரும். கிறிஸ்து தமது சபைக்கு சேவை செய்ததைப் போல, நாங்கள் ஒருவருக்கொருவர் சேவை செய்ய உதவும். எங்கள் இச்சைகளிலிருந்து எங்களை விடுவியும். எங்கள் சுய விருப்பத்தின்படி திருமணம் செய்யாதபடி காத்துக்கொள்ளும். உமது ஆவியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கைத் துணையை ஒவ்வொரு விசுவாசிக்கும் தாரும். அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிப்பார்கள். இந்தப் பூமியிலேயே ஒரு பரதீசைப்போல அவர்கள் திருமண வாழ்வு இருக்கும். ஆமென்.

கேள்வி:

  1. கிறிஸ்தவ திருமணத்தின் விதிமுறைகள் என்ன?

மனன வசனப் பகுதி:
“ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும்
பெண்ணுமாக உண்டாக்கினார். இதினிமித்தம் புருஷனானவன் தன்
தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள்
இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால், தேவன்
இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

(மாற்கு 10:6-9)

www.Waters-of-Life.net

Page last modified on August 16, 2021, at 05:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)