Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 055 (Warning to not Cause Little Ones to Sin)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

8. சிறியவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்காதபடி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை எச்சரிக்கிறார் (மாற்கு 9:42-50)


மாற்கு 9:42-50
42 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 44 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 46 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 48 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். 50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

கிறிஸ்து சிறியவர்களை பாதுகாக்கிறார். அவர் புதிய விசுவாசிகளை நேசிக்கிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் பெருமை கொள்ளும்போது தனது வல்லமையுடன் எதிர்த்து நிற்கிறார். கிறிஸ்துவினிடம் உள்ள நெருங்கிய உறவின் நிமித்தம் புதிய விசுவாசிகளைவிட தங்களை இவர்கள் சிறப்பானவர்களாகக் கருதினார்கள்.

தங்கள் பெருமை, சுயநலம், பெருமைமிக்க வார்த்தைகள் மூலம் ஆரம்பநிலை விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்விற்கு தடையாக இருக்கக் கூடிய போதகர்கள், மூப்பர்கள், பிரசங்கிமார்களுக்கு ஐயோ, தனது பணியாளர்களின் கரங்களில் கிறிஸ்து இழந்துபோன ஆத்துமாக்களைத் தேடுகிறார். பரிசுத்தமானவரின் கோபாக்கினையையும், இறைவனின் நியாயத்தீர்ப்பையும் உணராமல் கிருபையையும், பரிசுத்தமாக்குதலையும் வெறும் வாய் அளவில் பேசுகிறவர்களுக்கு ஐயோ!

உனது வாழ்வு, உள்ளம் அனைத்தையும் முழுமையாக கிறிஸ்துவுக்கு கொடுக்கும்படி, அவர் கேட்கிறார். பெருமை மற்றும் சுயநலத்துடன் நீங்கள் இருந்தால், அவருடைய ஆவியானவரின் பள்ளியில் இணைந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்களை பெருமைக் கொள்வீர்கள். உங்கள் சரீரத்தை வெட்டிக்கொள்வது அல்ல. நீங்கள் சரீரத்திலும், மனதிலும் புதுப்பிக்கும்படி அவர் விரும்புகிறார். தீமையான கண்ணை பிடுங்கி எறிந்துவிடும்படி இயேசு கூறுகிறார். பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டார். உங்கள் இச்சையுடன் அவர் இணங்கிச் செல்ல மாட்டார். மனிதனுடைய ஆசை, இச்சைகள் சிலுவையிலறையப்பட வேண்டும். கிறிஸ்துவுடனான ஐக்கியத்தில் அவைகள் நசுக்கப்பட வேண்டும். நீங்கள் கிறிஸ்துவுடன் சிலுவையிலறையப்படாதவரை, சமாதானத்தை பெற முடியாது. நீங்கள் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குபெற்று உயிர் பெறுகிறீர்கள்.

நரகத்தைக் குறித்து இறைவனின் குமாரன் பேசுகிறார். நாம் வாசிக்கின்ற பகுதியில் ஆறுமுறை, அவர் நமக்கு குறிப்பிடுகிறார். நரகத்தின் அக்கினி அவிந்துபோவதில்லை. பரலோகம் மற்றும் நரகம் இருப்பதை மறுப்பவர்களுக்கு ஐயோ, அவர்களுடைய பொய்யான மனந்திரும்புதலினால் அக்கினியில் அவர்கள் எரிவார்கள். அவர்கள் இறைவனை விட்டு தூரம் போனவர்கள். அங்கே புலம்பலும், நடுக்கமும், கூக்குரலும் இருக்கும். அவர்களுடைய மனச்சாட்சி அவர்களை உறுத்தும். அவர்களது காயங்கள் ஆறாது. கிறிஸ்து அவர்களிடம் தாழ்மையுடன், உண்மையுடன் வந்தும், அவரை ஏற்றுக்கொள்ளாததை அப்போது உணருவார்கள். அவருடைய வார்த்தையை அலட்சியம் பண்ணினார்கள். அவரை விசுவாசிக்கவில்லை. அவருடைய இரட்சிப்பைப் புறக்கணித்தார்கள்.

பிரியமான சகோதரனே, இறைவன் உன்னை பரிசுத்த ஆவியின் அக்கினியினால் அபிஷேகிக்க விரும்புகிறார். நீங்கள் எரியும் நரகத்திற்கு போக வேண்டிய அவசியம் இல்லை. கிறிஸ்து உங்களுடைய உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறார். நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள். ஆனால் கிறிஸ்து உங்களை அவருடைய ஆலயத்தின் தூணாக மாற்றியிருக்கிறார். நீங்கள் உங்கள் சரீரத்தையும், வரங்களையும் அவருக்கென்று கொடுத்துள்ளீர்கள். அவர் உங்களுக்கு தனது தாழ்மையைக் கற்றுத் தருகிறார். அவர் உங்களுக்கு பரிசுத்தத்தையும், பொறுமையையும் தருகிறார். அவருடைய சமாதானத்தினால் உங்களை நிரப்புகிறார். உங்களை மனமாற்றம் அடையச் செய்கிறார். சிறியவர்களை நேசிக்கச் செய்கிறார். விலகிப்போனவர்களை தேடவும், சுயத்தை வெறுக்கவும் உதவுகிறார்.

விண்ணப்பம்: பிதாவே, எனது பெருமை, இச்சைகள், கடினத்தன்மைகள், அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை மன்னியும். என்னை முழுமையாக சுத்திகரியும். உமது குமாரனின் பலி மரணத்தினால் என்னை எரிநரகத்திலிருந்து இரட்சியும். அது என்னை விழுங்கும்படி தனது வாயைத் திறக்கிறது. உமது ஆவியின் மகிழ்ச்சியில் நான் வாழும்படி அருள்புரியும். எனது சரீரம், எனது சிந்தனைகளை உமது வல்லமையினால் ஆளுகை செய்ய உதவும். இரக்கம், நேர்மையுடன் வாழ உதவி செய்யும். பிறருக்கு இடறலாக இருக்காதபடி கவனமாயிருக்க உதவும். மற்றவர்களை உமக்கு நேராக நடத்த கிருபை தாரும். எனது நடக்கை உமது வல்லமைக்கு சாட்சியாக இருக்கும்படி என்னை பரிசுத்தப்படுத்தும்.

கேள்வி:

  1. புதிய விசுவாசிகளுக்கு தடைகளாக இருக்கக் கூடிய சூழ்நிலைகள் எவை?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 03:23 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)