Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 053 (Jesus Predicts His Sufferings)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

6. இயேசு மறுபடியும் தனது பாடுகளை முன்னறிவிக்கிறார் (மாற்கு 09:30-37)


மாற்கு 9:30-37
30 பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார். 31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலேஉயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். 32 அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். 33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். 34 அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள். 35 அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும்,எல்லாருக்கும் ழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி; 36 ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: 37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்ன அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

இயேசு தான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவதைக் குறித்து மறுபடியும் சீஷர்களிடம் பேசினார். ஆனால் அவர்கள் இந்த தீர்க்கதரிசன வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. நித்திய நியாயாதிபதி மனப்பூர்வமாக தன்னை பரிகாரபலியாக ஒப்புக்கொடுக்கப் போகிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. இந்த அற்புதமான காரியம் நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. அவர் மரித்தாலும் உயிர்த்தெழுவார். அவரைப் பின்பற்றியவர்களுக்கு இந்த காரியம் புரியவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியின் மறுஜென்ம முழுக்கின் அனுபவத்தை இன்னும் பெறவில்லை. இன்றும் சிலுவையில் வெளிப்பட்ட இறைவனின் அன்பை அறியாத செவிடர்களாகவும், குருடர்களாவும் அநேக மக்கள் இருக்கிறார்கள். சத்தியத்தை வாஞ்சிப்பவர்கள், இறைவனின் ஒரே குமாரனை விசுவாசிப்பவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருப்பார் என்ற சத்தியத்தை அவர்கள் அறியவில்லை.

இவர்களின் மனங்களில் இருந்து இப்படிப்பட்ட ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை நீங்க வேண்டும் என்று இயேசுவிடம் மன்றாடும் மக்கள் இன்றைக்கு உலகிற்கு தேவை. அப்போது அவர்கள் புதுப்பிக்கப்படுவார்கள், பலப்படுத்துவார்கள், இறைவனின் வார்த்தையைக் கேட்பார்கள்.

இயேசுவைப் பின்பற்றியவர்களும் அவருடைய வார்த்தையை தவறாகப் புரிந்தகொள்ளும்படி சோதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை மற்றும் குருட்டுத் தன்மைக்கு காரணம் பெருமை ஆகும். அது அவர்களின் இருதயத்தை கடினப்படுத்தி, அவர்களை குருடாக்குகிறது. அவர்கள் சுயத்தை மையமாகக் கொண்டு சிந்தித்து, மற்றவர்களை தங்களுக்கு கீழானவர்களாகக் கருதினார்கள்.

இந்தக் காரியத்தில் அவர்கள் இயேசுவை முன் உதாரணமாகக் காணவில்லை. இயேசு இறைவனின் தாழ்மையுள்ள வேலைக்காரனாக தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார். எனவே அவர் புறக்கணிக்கப்பட்டு, அசட்டைப்பண்ணப்பட்டார். அவர் சிலுவையில் நமக்காக அறையப்பட்ட போது இறைவன் தனது முகத்தை அவருக்கு மறைத்தார்.

ஆனால் சீஷர்கள் தங்கள் மத்தியில் யார் பெரியவன் யாருக்கு அதிகாரம், மேன்மை என வாக்குவாதம் பண்ணினார்கள். அவர்கள் தங்களுடன் இருப்பவர்களை ஏளனமாக எண்ணினார்கள். அனைவரும் பெருமை என்ற பாவத்தில் வீழ்ந்தார்கள். அவர்களுடைய ஒவ்வொரு சிந்தனையும், தான் பெரியவன் என்பதாக இருந்தது. அவர்களுடைய உண்மையான பாவம் சாத்தானிடம் ஆரம்பித்தது ஆகும். அது மனிதர்களின் மனங்களை விஷமுள்ளதாக்குகிறது.

அருமையான சகோதரனே, உங்கள் இருதயத்தில் தங்கியுள்ள பெருமை என்ற பாவத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உங்களை நீங்கள் நம்புவதைக் குறித்து கவனமாயிருங்கள். உங்களைத் தாழ்த்துங்கள். இழந்துப்போனதைத் தேடுங்கள். கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்தமுள்ளோர் பரிசுத்தமாக்கப்பட்ட வேண்டும். எளிமையுடன் பணிசெய்யுங்கள். எஜமானாக இருப்பதை நாட வேண்டாம். தாழ்மையுள்ள இயேசுவைப் பின்பற்றுங்கள். நீங்கள் இறைவனின் முன்பு உயர்த்தப்படுவீர்கள்.

இயேசு ஒரு சிறுபிள்ளையை தூக்கியெடுத்து, சீஷர்கள் நடுவில் நிறுத்தினார். அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்துப் பேசினார். குழந்தை தன்னில்தானே நல்லதோ அல்லது பாவமற்றதோ அல்ல. எல்லோரும் சிறுவயது முதற்கொண்டு துன்மார்க்கர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் குழந்தை தனது தகப்பனை சார்ந்து வாழ்கிறது. தனது தாயை நேசிக்கிறது. நாம் குமாரனுடைய ஆவியைக் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும். நாம் சுயாதீன எஜமானர்கள் என்று நினைக்கக் கூடாது.

நமது குடும்பங்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களையும் நேசித்து வாழும்படி கிறிஸ்து நம்மை வழிநடத்துகிறார். நாம் நம்மை அல்ல, வீடற்றவர்கள், அனாதைகளையும் நோக்கிப்பார்க்க வேண்டும். நாம் அவர்களை தத்தெடுக்க வேண்டும். நமது வீடுகளை அவர்களுக்குத் திறக்க வேண்டும். இந்த சிறியரில் ஒருவனுக்கும், எளியவனுக்கும் உதவி செய்பவன் இயேசுவைப் பின்பற்றுகிறான். அவர் நம்மை இறைவனின் பிள்ளைகளாக தத்தெடுத்திருக்கிறார். இயேசுவைப் போல உங்களைத் தாழ்த்துங்கள். பலவீனருக்கும், சிறியவருக்கும், எளியவருக்கும் சேவை செய்யுங்கள். பணக்காரர்கள், ஞானிகள், உயர்ந்தவர்களைப் பார்க்க வேண்டாம். பொதுவாக அவர்களுக்கு செவிகொடுக்கக் கூடிய விருப்பம் இல்லை.

விண்ணப்பம்: கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில் நீர் சிறியோரை நேசித்தீர். அவர்கள் மீது அக்கறை பாராட்டினீர். நாங்களும் சிறியவர்கள் என்பதை அறிக்கையிடுகிறோம். எங்கள் பெருமையை மன்னியும். உமது தாழ்மையை எங்களுக்கு கற்றுத்தாரும். நாங்கள் வறியோரை நேசித்து, ஏற்றுக்கொள்ளச் செய்யும். அவர்கள் பிரச்சினைகளில் உதவவும், எங்கள் வீடுகள் மற்றும் இருதயங்களை அவர்களுக்காகத் திறக்கவும் உதவி செய்யும். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உமக்காக பணி செய்யவும், பிறருக்காக தொடர்ந்து சேவை செய்யவும் கிருபை தாரும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு எவ்விதம் சீஷர்களை தாழ்மைக்கு நேராக நடத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 11:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)