Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 052 (Jesus Heals a Boy)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

5. தீய ஆவியையுடைய ஒரு சிறுவனை இயேசு குணமாக்குகிறார் (மாற்கு 9:14-29)


மாற்கு 9:14-29
14 பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார். 15 ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள். 16 அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். 17 அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 19 அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 20 அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21 அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22 இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24 உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். 25 அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26 அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான். 27 இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். 28 வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29 அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

இயேசு மறுரூப மலையில் இருந்து இறங்கினார். மற்ற சீஷர்களிடம் ஒரு மனிதன் வந்து சுகவீனமாயிருக்கும் தனது மகனை குணமாக்கும்படி கேட்டுக்கொண்டான். அவர்களால் அது கூடாமற்போயிற்று. அந்த வியாதியுற்ற மகனை ஒரு அசுத்த ஆவி ஆட்கொண்டிருந்தது. அந்த ஆவி சீஷர்களுக்கும் செவி கொடுக்கவில்லை. இந்த ஏழை மனிதனை விட்டுப் போகவும் இல்லை. இந்த சம்பவத்தில் இருந்து நாம் ஒரு காரியத்தை அறிய முடியும். இயேசு கிறிஸ்து மட்டுமே பிசாசின் அடிமைத்தனத்தில் இருந்து நம்மை விடுவிப்பவர். எந்த ஒரு மனிதனாலும், பரிசுத்தவானாலும் முடியாது. எனவே உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை மனிதர்கள், போதகர்கள், மூப்பர்கள் அல்லது பிஷப்மார்கள் மீது கட்ட வேண்டாம். இயேசுவின் மீது நேரடியாக விசுவாசம் கொள்ளுங்கள். அவர் ஆண்டவரும் சர்வவல்லமையுள்ளவருமானவர். அவர் உனக்கு அருகில் இருக்கிறார். உனது விண்ணப்பங்களை கவனிக்கிறார். உனக்கு உதவி செய்ய விரும்புகிறார். உன்னை விடுவிக்கிறார்.

சீஷர்களின் ஆவிக்குரிய பெலவீனத்தின் நிமித்தம் சீஷர்களை விசுவாசிகள் மத்தியில் இயேசு கடிந்துகொண்டார். இதை அவர் விசுவாசக் குறைவாகக் காணவில்லை. இதை விசுவாசமின்மையாகக் கண்டார். நாம் அனைவரும் மனிதப் பாரம்பரியங்கள், பெருமையான பாவங்களை பற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே மற்றவர்களை இரட்சிக்கும்படி இறைவனின் வல்லமை நம்மிடம் இருந்து வெளிப்படுகிறதில்லை. உங்கள் மனம், உணர்வுகள், ஆசைகள் எதுவும் மனிதரை இரட்சிக்காது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பலவீனமான விசுவாசத்தில் இருந்து மனந்திரும்புங்கள். உங்கள் ஆவிக்குரிய பலவீனத்திற்குக் காரணம் உலக சிந்தனை ஆகும். மெய்யான இறைபக்திக்குப் பதிலாக உலகக் காரியங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

வியாதியுற்ற மகனின் தகப்பன் தன்னை விசுவாசித்தால், அவனுக்கு உதவமுடியும் என்று இயேசு கூறினார். இயேசுவை விசுவாசிப்பவர்கள் மிகப்பெரிய அற்புதத்தை அனுபவிப்பார்கள். தங்கள் பலவீனத்தில் இயேசுவின் வல்லமையான செயல்கள் வெளிப்படுவதைக் காண்பார்கள். சர்வவல்லமையுள்ள இறைவன் அன்பினால் நிறைந்தவர் என்பதை மறந்துவிட வேண்டாம். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசம் பரலோக வல்லமையை உங்களிடம் கொண்டு வருகிறது. அது நற்செய்தியின் மூலம் நம் மத்தியில் வெளிப்படுகிறது. அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனில் நிலைத்திருக்கிறான். அவனுக்குள் இறைவனும் நிலைத்திருக்கிறார். தனது மகன் குணமாகும்படி மனந்திரும்புதலின் கண்ணீருடன் தகப்பன் கதறி அழுதான். “ஆண்டவரே எனது விசுவாசத்தை பெருகப்பண்ணும். நான் அவிசுவாசியைப் போல காணப்படாதபடி செய்யும்”. இயேசு இருதயம் நொறுங்குண்ட விண்ணப்பத்தைப் புறக்கணிப்பதில்லை. நாம் அவரிடம் கேட்கும் போது, நமது விசுவாசத்தைப் பெருகப்பண்ணுகிறார். அவர் மீதான நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். மெய் விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியின் கனி ஆகும். நற்செய்தியை கவனமாய் தேடுபவர், ஞானம், அன்பு, வல்லமையை நாடுபவர் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். இயேசுவை அறிந்து கொள்கிறார்கள். தாழ்மையுடன் அவரைப் பற்றிக் கொள்கிறார்கள். அவனிலிருந்து ஜீவத்தண்ணீர் பாய்ந்தோடுகிறது. கிறிஸ்து அந்த தகப்பனின் விசுவாசமின்மையைப் போக்கினார். அவனை உயிருள்ள விசுவாசத்திற்கு நேராக நடத்தினார். பிசாசு பிடித்திருந்த அவனுடைய மகனை விட்டு, அசுத்த ஆவி புறப்பட்டுப் போகவும், ஒருபோதும் அவனுக்குள் மீண்டும் வராமலிருக்கவும் கட்டளையிட்டார்.

இந்த அற்புதத்தில் இருந்து நாம் இரண்டு காரியங்களைக் கற்றுக்கொள்கிறோம். மற்ற எல்லாப் பாவங்களுடன் சேர்த்து ஒவ்வொரு அசுத்த ஆவியையும் துரத்தக் கூடியவராகவும் விருப்பம் உள்ளவராகவும் இயேசு இருக்கிறார். தங்களை அவருக்கென்று அர்ப்பணிக்கும் மக்களுக்கு அவர் உதவுகிறார். இது முதலாவது காரியம். கர்த்தருடைய ஆவியானவர் ஒரு மனிதனில் தங்கியிராவிட்டால். தனது துன்மார்க்கத்திலிருந்து விடுதலை பெற்ற அவனுக்குள் மீண்டும் அசுத்த ஆவி வந்துவிடும் என்பது இரண்டாவது காரியம் ஆகும். கிறிஸ்துவின் அதிகாரத்தை விட்டு நாம் விலகிச் செல்லும்படி சாத்தான் நம்மை கவர்ச்சிக்கிறான். ஆனாலும் கிறிஸ்துவின் கரத்தில் இருந்து நம்மைப் பறித்துக்கொள்ள அவனால் இயலாது. இயேசுவை நேசிப்பவர்களுக்கும் அவருடைய வார்த்தையை கற்றுக்கொள்பவர்களுக்கும் நேரிடும் சோதனைகளைவிட கிறிஸ்துவின் வல்லமை பெரியது.

தீய ஆவியை இயேசு துரத்திய பின்பு அவனை இயேசு தூக்கினார். அவனுக்கு வாழ்வைக் கொடுத்தார். அவனுடைய தகப்பனிடம் அவனைக் கொடுத்தார். அந்த தகப்பனின் விசுவாசம் அந்த மகனை இரட்சித்தது. இயேசுவின் வல்லமையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? தீய ஆவியினால் பிடிக்கப்பட்டுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை விடுதலை செய்ய இயேசுவிற்கு வல்லமை உண்டு. நீங்கள் உங்களுக்காக மட்டும் அல்ல உங்கள் நண்பர்களுக்காகவும் இயேசுவை விசுவாசிக்கும் அளவிற்கு உங்கள் அன்பு வலிமை வாய்ந்ததா?

விண்ணப்பம்: பிதாவே, எங்கள் முழு இருதயத்தோடும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் உமது ஒரே பேறான குமாரனை எங்கள் துன்மார்க்க உலகிற்கு அனுப்பினீர். அவர் எங்களுக்கு மெய் விசுவாசத்தை கற்றுத்தருகிறார். எங்கள் பலவீனமுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம். எங்களுடைய விசுவாசமின்மை, அவநம்பிக்கையை அறிக்கையிடுகிறோம். எங்களுடைய இந்தப் பாவத்தை தயவாய் மன்னியும். உமது ஒப்பற்ற அன்பின் மீதான உறுதியான நம்பிக்கையை எங்களுக்குத் தாரும். மற்றவர்கள் மீதான எங்கள் அன்பை பலப்படுத்தும். அவர்கள் இரட்சிப்பிற்காக நாங்கள் உண்மையாய் மன்றாடுகிறோம். எங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொள்ளும். அவர்களை இரட்சியும். விடுதலை செய்யும். எங்களுக்கு இரட்சிப்பையும், மீட்பையும் தந்தது போல அவர்களுக்கு தாரும். ஆமென்.

கேள்வி:

  1. வியாதியற்றவனை சுகமாக்க முடியாதபடி இருந்த தடை என்ன?

மனனவசனம்:
“விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.”
(மாற்கு 9:23)

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 09:28 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)