Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 034 (Jesus Restores a Synagogue Ruler's Daughter to Life)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
6. புயல், ஆவிகள், மரணத்தின் மீது இயேசுவின் வல்லமை (மாற்கு 4:35- 5:43)
இ) பெரும்பாடுள்ள பெண்ணை சுகமாக்கிய பின்பு, இயேசு ஜெபஆலயத் தலைவனின் மகளை உயிருடன் எழுப்பினார் (மாற்கு 5:21-43)

(iii) மறுவாழ்வைப் பெற்றுக்கொண்ட சிறுமி (மாற்கு 5:35-43)


மாற்கு 5:35-43
35 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். 36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; 37 பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; 38 ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, 39 உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 40 அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, 41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். 42 உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 43 அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.

பொறுமையுடன் இருந்த ஜெபஆலயத் தலைவனின் விசுவாசத்தை கிறிஸ்து பாராட்டினார். ஏனெனில் அவனுடைய மகள் மரிக்கும் தருவாயில் இருந்தாள். கிறிஸ்துவை துரிதமாக தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவன் விரும்பினான். ஆனால் இயேசு வழியிலே நின்று ஒரு ஏழைப் பெண்ணை சுகமாக்கினார். ஜெபஆலயத் தலைவன் தாழ்மை மற்றும் சாந்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அவன் காத்திருப்பது அவசியமாக இருந்தது. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்றவனுக்கு இயேசுவின் தாமதம், அவரே மெய்யான கிறிஸ்து என்பதை நிரூபித்தது. அவர் மங்கியெரிகிற நெருப்பை அணைக்கிறவர் அல்ல. அவர் சிலருக்கு மட்டும் உயர்ந்த இடங்களை அளிக்கிறவர் அல்ல. தன்னை தாழ்மையுடனும், விசுவாசத்துடனும் தேடுபவர்கள் மத்தியில் செயல்படுகிறார்.

இயேசு வியாதியுற்ற பெண்ணை சுகமாக்கிய அதே நேரத்தில், ஜெபஆலயத் தலைவனின் மகள் மரித்திருந்தாள். யவீருவின் வீட்டிலிருந்து வேலைக்காரர்கள் வேகமாக வந்து, சோகமான குரலில் சொன்னார்கள். “சரியான நேரத்தில் வராத இந்த போதகரை விட்டுவிடும். உமது மகள் மரித்துவிட்டாள்”.

ஆனாலும் இந்த மனிதனின் இருதயத்தில் நம்பிக்கையின் ஒளி மிளிர்வதை இயேசு கண்டார். அவர் அவனை தைரியப்படுத்தினார். அவன் அருகில் இருந்த கிறிஸ்துவாகிய இறைவன் மீது அவன் விசுவாசம் வைக்கும்படி கட்டளையிட்டார். அவனை விசுவாசப் பள்ளியில் பயிற்றுவித்தார். தனது நம்பிக்கையின் வார்த்தையினால் அவனைப் பலப்படுத்தினார். நமது விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரமாக இறைவனுடைய வார்த்தை இருக்கிறது. ஜெபஆலயத் தலைவன் விசுவாசத்தோடு இயேசுவுடன் இணைந்து வந்தான். சத்தமாக அழுது புலம்பும் மக்கள் மத்தியில் கிறிஸ்துவின் வெற்றிகள் அமைதியாக அரங்கேறுகின்றன. அழுபவர்கள், சந்தடி செய்பவர்கள், குழல் ஊதுபவர்கள் மத்தியில், அமைதியுடன் பேசும் அவருடைய வார்த்தையைக் கேட்பது முக்கியமானதாகும்.

அழுது புலம்பிக் கொண்டிருந்த அனைவரும் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். ஏனெனில் இயேசு அந்த சிறுபிள்ளை சாகவில்லை, நித்திரையாய் இருக்கிறாள் என்று கூறியிருந்தார். அவள் உண்மையில் தூங்கிக் கொண்டிருந்தால், அவர்களது சத்தத்தைக் கேட்டு, அவள் எழுந்திருப்பாள்.

மரணத்தின் இரகசியங்களை கிறிஸ்து அறிந்திருந்தார். அவர் மரணத்தைக் கடிந்துகொண்டார். அவர் வந்தார், மரணக் கோரப்பிடியிலிருந்து, அவளை விடுவித்தார். அவர் அதை நித்திரை என்றார். மரணத்திற்கு பின்பு மனிதன் எதையும் செய்ய முடியாது. இறுதி நியாயத்தீர்ப்பு அவனுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அவர் பரலோகம் அல்லது நரகத்திற்குச் செல்ல வேண்டும். மனிதனே நீ எங்கு இருப்பாய்? இறுதி நியாயத்தீர்ப்பிற்கு நீ ஆயத்தமாக இருக்கிறாயா?

இயேசுவைப் பரிகாசித்த சந்தடி போட்டு புலம்பிய மக்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இயேசு அவரே ஜீவனாக இருக்கிறார். மரித்துப்போன சிறுமியைத் தூக்கினார். அவரிடமிருந்து ஜீவன் புறப்பட்டது. அவளுக்குள் கடந்து சென்றது. அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட வார்த்தை மரித்த அவளை ஜீவனால் நிரப்பியது. அவள் எழுந்தாள். ஆச்சரியத்துடன் சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்தாள்.

அவளுடைய பெற்றோர்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள். சிறுமிக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். நமது சரீரங்களின் இயல்பான தேவைகளை இயேசு சந்திக்கிறார். அவர் நம் மத்தியில் மெய்யான மனிதனாக வாழ்ந்தார்.

ஓ மனிதனே, இயேசு உன் அருகில் நின்று கொண்டிருக்கிறார். நீ பாவத்தில் மரித்திருக்கிறாய். இயேசு உன்னைத் தூக்கிவிட்டு சொல்கிறார்: “எழுந்திரு” என்று உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார். உனது இறைவன் உன் அருகில் இருக்கிறார் என்பதைக் குறித்து கவனமாயிரு. அவர் உனக்கு நிலைவாழ்வைத் தருகின்றார். அவருடைய சத்தத்திற்குச் செவிகொடு. அவருடைய அன்பின் வல்லமையில் நீங்கள் வாழும்படி அவருடைய வார்த்தைகளை விசுவாசியுங்கள். எழுந்திருந்து உங்கள் இரட்சகரைப் பின்பற்றி அவரைக் கனப்படுத்துங்கள்.

விண்ணப்பம்: ஜீவாதிபதியே, பரலோகத்தின் ஒளியே, நீர் எங்களைப் படைத்தீர். எங்களை தூய்மையாக்கினீர், எங்கள் பாவங்களை மன்னித்தீர். ஆவிக்குரிய மரணத்தில் இருந்து எங்களை உயிர்ப்பித்தீர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். துன்பங்களின் மத்தியிலும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். நீர் எங்களுக்கு நித்திய நம்பிக்கையையும் அழியாத சந்தோஷத்தையும் தந்தீர். உம் மீது நாங்கள் கொண்டுள்ள விசுவாசம் ஓர் கனவு அல்ல. அது எங்கள் இருதயங்களில் உமது வல்லமையைக் கொண்டு வருகிறது. நீர் எங்கள் நண்பர்களை ஆசீர்வதியும். உமது கிருபையால் எங்கள் நண்பர்களை ஆசீர்வதியும். உமது கிருபையால் எங்களை உயிர்பித்தது போல, எங்கள் நண்பர்களை அவர்கள் பாவங்களினால் அடைந்த மரணத்தில் இருந்து உயிர்ப்பியும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு மரித்த சிறுமியை உயிர்ப்பித்ததின் மூலம், இயேசுவின் ஆள்த்துவத்தைக் குறித்து நாம் என்ன புரிந்துகொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 02:37 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)