Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 033 (Jesus Restores a Synagogue Ruler's Daughter to Life)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
6. புயல், ஆவிகள், மரணத்தின் மீது இயேசுவின் வல்லமை (மாற்கு 4:35- 5:43)
இ) பெரும்பாடுள்ள பெண்ணை சுகமாக்கிய பின்பு, இயேசு ஜெபஆலயத் தலைவனின் மகளை உயிருடன் எழுப்பினார் (மாற்கு 5:21-43)

(ii) ஒரு பெண் குணமடைந்தாள் (மாற்கு 5:25-34)


மாற்கு 5:25-34
25 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, 26 அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, 27 இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; 28 ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 29 உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். 30 உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். 31 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். 32 இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். 33 தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். 34 அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

வேதனை நிறைந்த சூழ்நிலைகளை நீங்கள் கடந்து வந்ததுண்டா? நாம் புரிந்துகொள்ள முடியாத அநேக மறைவான பாடுகளை சுமந்து கொண்டிருக்கிற மக்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் சுமை சுமப்பவர்களைப் போல பாரமான மனச் சுமைகளை தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுடைய பாவங்கள், கவலைகள், வியாதிகள் மற்றும் தவறுகள் இதற்குக் காரணமாக உள்ளது.

இயேசுவின் காலத்தில் ஒரு ஏழைப் பெண் இருந்தாள். தனது வியாதியின் நிமித்தம் அவள் சோர்வுற்றிருந்தாள். அவளை மக்கள் புறக்கணித்தார்கள். அவள் அசுத்தமானவள் என்று கருதப்பட்டாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக பெரும்பாடுபட்டாள். அவள் அநேக மருத்துவர்களை நாடிச் சென்றும் சுகம் பெறவில்லை. அவள் நிலைமை மேலும் மோசமாகியது.

அவள் உலகின் நம்பிக்கையும் பாடுபடுகிறவர்களின் இரட்சகருமாகிய இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டாள். அவரிடம் தனது பிரச்சினையைக் குறித்து நேரடியாகப் பேசுவது நன்றாக இருக்காது என்று அவள் நினைத்தாள். அவருடைய வல்லமையை அவள் விசுவாசித்தாள். அவரைத் தொட விரும்பினாள். அவருடைய உடையின் ஓரத்தைத் தொட்டால் தனக்கு சுகம் கிடைக்கும் என்று நம்பினாள்.

விசுவாசத்துடன் இயேசுவைத் தொடுவது மின் சக்தியைத் தொடுவதைப் போன்றதாகும். அவரிடமிருந்து இறைவல்லமை பாய்ந்தோடி வருகின்றது. விசுவாசம் என்பது இரட்சகருடனான உண்மையான ஐக்கியம் ஆகும். நமது விசுவாசம் என்பது வெற்றுக் கற்பனை அல்ல. அது புதிய சிந்தனைகளை உருவாக்கும் வல்லமை உடையது.

இந்தப் பெண்ணை அவளுடைய விசுவாசம் இரட்சித்தது. இரட்சகருடன் அவள் தொடர்புகொள்ளவும், அவரை அடையவும் இது உதவியது. தன்னிடமிருந்து சுகமளிக்கும் வல்லமை புறப்பட்டுச் சென்றதை கிறிஸ்து உணர்ந்தார். தனது ஆவியில் அவள் யார் என்பதை அவர் அறிந்திருந்தார். தன்னைத் தொட்டு சுகம் பெற்ற அந்த நபரை அவர் தேடினார். தனது நீண்ட கால துன்பத்தையும், சுகம்பெற்ற அனுபவத்தையும் அவள் அறிக்கையிடும்படியாக அவர் அப்படிச் செய்தார். மறைவாக உள்ள அனைத்தும் வெளிப்படுத்தப்படும். ஒவ்வொரு பாவமும், ஆண்டவருடைய ஒளியில் வெளியரங்கமாக கொண்டு வரப்படும்.

அந்தப் பெண் அறிக்கையிட்ட போது, இயேசு தமது வல்லமையினால் அவளுக்கு முழுமையான இரட்சிப்பைக் கொடுத்தார். அவளுக்கு நித்திய சமாதானத்தை தந்தார். கிறிஸ்து நமது சோதனைகள், வியாதிகள், பரீட்சைகளில் மட்டும் நமக்கு உதவி செய்ய விரும்பாமல், எல்லா மனிதர்களையும் இறைவனுடன் ஒப்புரவாக்கவும், தமது சமாதானத்தினால் அவர்களை நிரப்பவும் விரும்புகிறார்.

நீ விசுவாசத்தினால் இயேசுவைத் தொட்டதுண்டா? ஆசீர்வாதம், சுகம், பரிசுத்தம் மற்றும் சமாதானத்திற்காக அவரிடம் மன்றாடியதுண்டா? உனது நண்பர்கள், உனது குடும்பத்தினருக்காக அவரை வேண்டியதுண்டா? உனது விசுவாசம் உன்னை இரட்சிக்கிறது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். மனிதன் செய்ய முடியாததை செய்யக் கூடிய சர்வ வல்லமையுள்ளவராக நீர் இருக்கிறீர். நீர் இறைவனுடன் எங்களை ஒப்புரவாக்கினீர். நமது இருதயங்கள் மற்றும் மனங்களில் அவருடைய சமாதானம் தங்குகிறது. எங்கள் குறைகள் நீங்க எங்களை சுத்திகரியும். உமது ஆவியின் வல்லமையினால் எங்களை பரிசுத்தப்படுத்தும். நாங்கள் உம்மை விசுவாசத்துடன் தொடுகிறோம். நீர் எங்களை ஆசீர்வதித்தால் ஒழிய நாங்கள் உம்மைவிட மாட்டோம். அநேக பாரங்களை சுமந்து கொண்டிருக்கும் எனது நண்பர்களுக்கு இளைப்பாறுதல் தாரும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசுவைத் தொட்ட போது ஏன் அந்தப் பெண் சுகமடைந்தாள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 02:12 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)