Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 015 (Christ Heals a Paralytic and Forgives His Sins)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - இயேசுவிற்கும், யூதத் தலைவர்களுக்கும் இடையே போராட்டம் (மாற்கு 2:1 - 3:6)

1. இயேசு திமிர்வாதக்காரனை சுகமாக்குகிறார். மேலும் அவனுடைய பாவங்களை மன்னிக்கிறார் (மாற்கு 2:1-12)


மாற்கு 2:1-12
1 சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு; 2 உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். 3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; 4 ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். 5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: 7 இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். 8 அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? 9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? 10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: 11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 12 உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இறைவனுடைய வல்லமை பாய்ந்தோடுவது எங்கெல்லாம் காணப்படுகிறதோ, அங்கே மக்கள் கூட்டங்கூடுகிறார்கள். அவர்கள் இறைவனுடைய புதுப்பிக்கும் வல்லமைக்காக தாகத்துடன் இருக்கிறார்கள். அது மரணத்தின் மத்தியில் வாழ்வு தருகின்றது. இயேசு தமது பிதாவின் வல்லமையினால் நற்செய்தியை பிரசங்கித்தார். அநேகர் அவருடைய வார்த்தையைக் கேட்க வந்தார்கள்.

திமிர்வாதத்தினால் அநேக ஆண்டுகள் பாடுப்பட்ட மனிதன் கப்பர் நகூமில் வாழ்ந்து வந்தான். அவர் இயேசுவிடம் நடந்து வர இயலாதவனாக இருந்தான். அவனுடைய குடும்பத்தார் இரட்சகர் இயேசுவைக் குறித்தும், அவருடைய இரக்கமுள்ள வார்த்தைகள், அற்புத வல்லமை குறித்தும் அவனுக்குச் சொன்னார்கள். எனவே அந்த மனிதன் கிறிஸ்துவின் வல்லமையை விசுவாசித்தான். அவரைக் காண ஆவலாய் இருந்தான். இயேசுவிடம் தன்னை சுமந்து கொண்டு செல்லும்படி தனது நான்கு நண்பர்களுக்கு கூறினான். தேவையுள்ள நண்பனை இரட்சகரிடம் சுமந்து சென்ற நான்கு நண்பர்களைக் காண்பது எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் காரியம், உனது விண்ணப்பத்தின் மூலம் பாடுபடுகின்ற மனிதனை நீங்கள் எப்போதாவது உதவும் ஆண்டவரிடம் கொண்டு வந்ததுண்டா?

இயேசுவைச் சுற்றி அதிக கூட்ட மக்கள் இருந்ததால் இயேசுவிடம் அவனைக் கொண்டுவர முடியவில்லை. அவர்கள் வீட்டின் மேற்புரம் திறப்புண்டாக்கினார்கள். இயேசுவைச் சுற்றியுள்ள கூட்டத்தின் மத்தியில் கயிறுகளைக் கொண்டு அவனை இறக்கினார்கள். அந்த நான்கு நண்பர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதையும் அவர்களுடைய விசுவாசத்தையும் இயேசு புரிந்துகொண்டார். அவர்களுடைய உறுதியைக் கண்டார். தனது இறைவல்லமையுடன் அவனிடம் பேசினார். “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.

கூட்டத்தின் மத்தியில் இடிமுழக்கத்தைப் போல இந்த வார்த்தை தொனித்தது. வியாதியஸ்தனின் இருதயத்தில் நுழைந்தது. அவன் தனது சரீர சுகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் மன்னிப்பை உடனடியாக பெற்றுக்கொண்டான். மனிதனின் அனைத்து வலிகளுக்கும், வியாதிக்கும் அடிப்படைக் காரணம் பாவம் என்பதை அவன் ஒருவேளை உணர்ந்திருக்கக்கூடும். எல்லாக் கட்டுகளில் இருந்தும், இயேசு அவனை விடுதலையாக்கினார். அவனை மகனே, என்று அழைத்தார். கிறிஸ்துவை விசுவாசிப்பவன் எவனோ, அவன் இறைவனின் பிள்ளையாக மாறுகிறான். உங்கள் பாவங்களுக்கான கிறிஸ்துவின் மன்னிப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவரிடம் வாருங்கள். அவர் உங்களை கடிந்துகொள்ளமாட்டார். உங்களை புறக்கணிக்க மாட்டார். விசுவாசத்துடன் வரும்போது அவர் உடனடியாக உங்களைக் காப்பாற்றுவார்.

கூட்டத்தின் மத்தியில் இருந்த வைராக்கியமிக்க மதப் போதகர்கள் இறைவனுக்கு சமமாக இயேசு தன்னைப் பேசியதைக் குறித்து அதிர்ச்சியடைந்தார்கள். இறைவனுக்கு மட்டுமே பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு. அவர்கள் தங்கள் இருதயங்களில் கலக்கமுற்று இப்படியாக சிந்தித்தார்கள்: “அவன் இறைதூஷணம் செய்கிறான். இறைவனைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க இயலாது”.

கிறிஸ்து இருதயங்களை ஆராய்ந்திருக்கிறார். மனித இருதயத்தில் இருப்பதைக் காண்கிறார். அவர்களுடைய தவறான எண்ணங்களுக்காக அவர்களைக் கடிந்துக்கொண்டார். அவரே நித்திய இறைவன், மீட்பர், ஆறுதல் தருபவர், எல்லாக் காலங்களிலும் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உடையவர் என்பதை அவர்களுக்குக் காண்பித்தார். அவர் திமிர்வாதக்காரனை நோக்கி, “எழுந்திரு, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்கு போ, “என்று கட்டளையிட்டார். இந்த ஏழை மனிதனிடம் இருந்து அவர் விண்ணப்பங்களையும் பாவ அறிக்கையுடன் கூடிய மனந்திரும்புதலையும் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் அதிகாரத்துடன் கூறினார்: “நான் உனக்குச் சொல்லுகிறேன். எழுந்திரு, படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்குப் போ”.

“நானே” ஆண்டவர் என்று இயேசு கூறினார்”. நான் உங்கள் இறைவனாகிய கர்த்தர். என்னையன்றி வேறே தேவர்கள் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டாம்” என்று அவர் கூறியிருக்கிறார். இயேசு உலகில் இருந்தபோது, பல்வேறு சமயங்களில் இந்த வார்த்தையைப் பேசினார். “நானே உலகத்திற்கு ஒளி”, “நானே ஜீவ அப்பம்” “நானே வழி, சத்தியம், ஜீவன்”. என்றார். என்னையல்லாம் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். அவர் சிறைபிடிக்கப்பட்டபோது இந்தப் பெயரைப் பயன்படுத்தினார். “நானே அவர்”. அவருடைய சரீரத்தில் இறைவன் பரிபூரணமாக வாசமாயிருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துக் கொள்ளும்படி இப்படிச் செய்தார்.

இயேசுவை நேசிப்பவர்கள் அவருடைய தன்மையை உணர்ந்துகொள்கிறார்கள். தன்னை நேசிப்பவர்கள், நியாயப்பிரமாணத்தில் உறுதியாக இருப்பவர்கள், சுய நம்பிக்கை உடையவர்கள் குருடர்களைப் போல இருக்கிறார்கள். அவர்கள் பரலோகில் இருந்து நமக்காக வந்தவரை வெறுக்கிறார்கள். சர்வவல்லமையுள்ளவரின் அன்பைப் புறக்கணிக்கிறார்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் உண்மையான இறைவனிலிருந்த உண்மையான இறைவன். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் எங்களுடைய பாவங்களை மன்னித்தீர். எங்கள் கட்டுகளை அவிழ்த்தீர். நாங்கள் மகிழந்திருக்கிறோம். நீரே எல்லாப் பாடுகளில் இருந்தும் விடுவிப்பவர். எங்கள் விண்ணப்பங்களில் நாங்கள் மன்றாடுகிற எங்கள் நண்பர்களை இரட்சியும். ஆண்டவரே, எங்கள் மீதும், இன்று மன்னிப்பைக் கேட்கும் ஒவ்வொருவர் மீதும் இரக்கமாயிரும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு எவ்விதம் பாவங்களை மன்னிக்கும் தனது அதிகாரத்தைக் காண்பித்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 08:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)