Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 014 (Christ Heals a Leper)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - கலிலேயாவில் இயேசுவின் ஊழிய ஆரம்பம் (மாற்கு 1:14 - 1:45)

5. இயேசு குஷ்டரோகியை சுகமாக்குகிறார் (மாற்கு 1:40-45)


மாற்கு 1:40-45
40 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். 43 அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; 44 ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். 45 அவனோ புறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

இயேசுவின் காலத்தில் ஜெபஆலயம் குஷ்டரோகத்தை மிகக்கொடிய பாவத்திற்கான இறைவனுடைய தண்டனையாக கருதியது. எனவே அவர்கள் குஷ்டரோகியை வெறுப்புடன் புறக்கணித்தார்கள். அவர்கள் சரீரத்திலும், ஆத்துமாவிலும் இறைவனுடைய கோபம் சுமத்தப்பட்ட மக்களாக பாடுபட்டார்கள்.

நம்பிக்கையிழந்த குஷ்டரோகிகளில் ஒருவன் கிறிஸ்துவின் இரக்கத்தையும் வல்லமையையும் குறித்து கேள்விப்பட்டான். அவன் தூரத்திலிருந்து அவரிடம் ஓடி வந்தான். அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டான். இயேசு ஆண்டவர், அவரே குஷ்டரோகத்தை சுகமாக்குகிறவர் சர்வ வல்லமையுள்ளவர், அவனுடைய ஆத்துமாவை இறைவனின் கோபாக்கினையிலிருந்து விடுவிப்பவர் என்று விசுவாசித்தான். இந்த இரக்கமுள்ள இரட்சகரின் பராமரிப்பிற்கு தன்னை நிபந்தனையின்றி அவன் ஒப்புவித்தான்.

இயேசு அவனுடைய இருதயத்தில் அன்பு, இரட்சிப்பு, குணம்பெறுதல் மீதான தாகம் இருப்பதைக் கண்டார். மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்துடன் தன்னிடம் வரும் பாவியை அவர் புறந்தள்ளுவதில்லை. அவர் இந்த உலகிற்கு பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வந்தார். இறைவனுடைய ராஜ்யத்தைக் கட்டும்படி வந்தார். இயேசு இந்த பரிதாபமான மனிதன் மீது இரக்கப்பட்டார். இயேசு அவனைத் தொட்டார். இந்தப் பெரிய செயலை குஷ்டரோகி கவனித்துப் பார்த்தான். இறைவனின் குமாரன் என்னை நேசிக்கிறார். அவர் என்னை சுகமாக்குகிறார். அவர் என்னை இரட்சிக்கிறார். அவர் என்னுடைய ஒரே நண்பர்.

பின்பு இயேசு இறைவனுடைய சித்தம் குறித்த ஒரு ஒப்பற்ற வார்த்தையைப் பேசினார்: “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு”.

இறைவனின் புரிந்துரைக்கூடிய சித்தத்தை உங்களால் இந்த வாக்கியத்தில் அறிய முடிகிறதா? நீங்களும் அனைத்து மனிதர்களும் இரட்சிக்கப்பட, ஆசீர்வதிக்கப்பட, நித்திய வாழ்வைப் பெற பரிசுத்தமானவர் விரும்புகிறார். எல்லா மனிதரும் இரட்சிப்படையவும், சத்தியத்தை அறிகிற அறிவையும் பெற இறைவன் விரும்புகிறார்.

இறைவனின் விருப்பத்துடன் உங்கள் சித்தம் இணைந்து போகிறதா? கிறிஸ்து உங்களை நித்தியமாகவும், முழுமையாகவும் இரட்சிக்க ஆயத்தமாயிருக்கிறார். அவரிடம் வாருங்கள். அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுங்கள். உங்கள் விண்ணப்பத்தில் சுகமாகவும், இரட்சிப்படையவும் அவரிடம் கேளுங்கள்.

கிறிஸ்து உங்களை தூய்மையாக்குகிறார். இறைவனின் குமாரன் உங்களை மன்னிக்கிறார். உங்கள் மனதை இரக்கம் நிறைந்தவர் பரிசுத்தப்படுத்துகிறார். பரிசுத்தமானவர் தமது தூய அன்பால் உங்களை நிரப்புகிறார். உங்கள் மனம் ஒளிரூட்டப்படுகிறது. உங்கள் கண்கள் மகிழ்ச்சியால் பிரகாசிக்கிறது. கிறிஸ்து உங்கள் வாழ்வின் ஒளியாக இருக்கிறார். அவர் நமது நீதியின் சூரியன். நம்பிக்கையற்ற மக்களுக்கு ஆறுதல் அவரே.

சுகமாக்கப்பட்ட மனிதனை கிறிஸ்து பிற மனிதர்களிடம் அனுப்பவில்லை. அவரை இறைவனுக்கு முன்பாக அனுப்பினார். அவன் குணமானதைக் குறித்து சிந்திக்கவும், நன்றி செலுத்தவும், துதிக்கவும் வழிநடத்தினார். கிறிஸ்து இயேசுவுக்குள் இறைவனின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருக்கிறது.

இயேசு அவனை ஆசாரியர்கள் முன்பு அனுப்பினார். இறைவனுடைய ராஜ்யம் அவர்களை எப்படி அணுகுகின்றது என்பதைக் குறித்து அவர்களும் உணரும்படி செய்தார். இறைவனின் குமாரன் அவர்கள் மத்தியில் ஊழியக்காரராகவும், குணமாக்குகிறவராகவும், இரட்சிக்கிறவராகவும் இருப்பதற்கு குணமாக்கப்பட்ட குஷ்டரோகி யூதத்தலைவர்கள் முன்பு சாட்சியாக இருந்தான்.

இருப்பினும் அவனுடைய அளவற்ற மகிழ்ச்சியினால், கிறிஸ்துவின் கோரிக்கைகளை அவன் மறந்துவிட்டான். அவன் தனியாக விண்ணப்பம் பண்ணும்படி செல்லவில்லை. ஆனால் அவன் எல்லோரிடமும் சென்று தனக்கு நிகழ்ந்ததைக் கூறினான். அநேக திரளான மக்கள் அவரிடம் குணமாகும்படி வந்தார்கள். ஆனால் இயேசு சரீரங்களை மட்டும் குணப்படுத்த விரும்பவில்லை. அவர் இருதயங்களை மனமாற்றத்திற்கும், புதுப்பிக்கப்படுதலுக்கும் நேராக நடத்த விரும்பினார். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இருதயத்தில் வியாதிப்பட்டிருக்கிறான். நமக்குள் இருக்கும் இறைவனின் சாயலை பாவம் பாதிக்கின்றது. இயேசு பாவம் என்ற குஷ்டரோகத்தில் இருந்து நம்மை இரட்சிக்க வந்தார். நம்முடைய முகங்கள், இருதயங்கள் மற்றும் முழு வாழ்விலும் இறைவனுடைய சாயலைக் கொண்டுவருகிறார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் சர்வவல்லமையுள்ளவர், நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது வார்த்தையின் வல்லமையினால் நீர் குஷ்டரோகியை சுகமாக்கினீர். இன்று எங்களுடைய பாவங்கள், பெருமை, வியாதிகளை நீர் குணமாக்க விரும்புகிறீர். உமது சித்தத்துடன் இணைந்த நம்பிக்கையையும் அன்பையும் எங்களுக்குத் தாரும். எங்கள் சரீரங்களில் உமது வல்லமையை உணரச் செய்யும். நாங்கள் முழுமையான குணமாக்குதலை அனுபவிக்க உதவும். அப்போது நாங்கள் முழுமையான சுகத்தையும், எல்லா அசுத்தங்களில் இருந்து உண்மையான விடுதலையையும் அனுபவிப்போம். ஆமென்.

கேள்வி:

  1. புரிந்துணரக்கூடிய இறைவனுடைய சித்தம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 08:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)