Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 011 (Calling of the First Four Disciples)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - கலிலேயாவில் இயேசுவின் ஊழிய ஆரம்பம் (மாற்கு 1:14 - 1:45)

2. இயேசு தமது முதல் நான்கு சீஷர்களை அழைக்கிறார் (மாற்கு 1:16-20)


மாற்கு 1:16-20
16 அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். 17 இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 18 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 19 அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, 20 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

மீன்களால் நிரப்பப்பட்ட கடல் போல உலகம் காணப்படுகிறது. இரக்கம் நிறைந்தவராக கிறிஸ்து மனிதர்களைப் பிடிக்கின்றவராக இருக்கிறார். தற்போது அவர் எல்லா மீன்களையும் ஒரே சமயத்தில் பிடிப்பதில்லை. இறைவனால் யாருக்கு ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்குக் கொடுக்கிறார். உலகத்தில் இருந்து மீன்களைப் பிடிக்கின்றவர்களின் ஐக்கியமாக சபை இருக்கிறது. இவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். இறைவனுடைய பணிக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். இவர்கள் இணைந்து உலகம் என்னும் மனிதக் கடலில் அவருடைய வார்த்தை என்ற வலையை வீசி இறைவனுக்கென்று அநேக மக்களைப் பிடிக்கிறார்கள்.

இயேசு பேதுருவையும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவையும் முதலில் பிடித்தார். அவருடைய இறைபார்வையில், இயேசு மனந்திரும்புதலுக்கான அக்கினியையும், பரிசுத்தத்திற்கான ஏக்கத்தையும் அவர்களுடைய இருதயங்களில் கண்டார். யோவான்ஸ்நானகன் அவர்களைப் படைத்தவரிடம் திரும்பும்படி அழைத்த போது இது தூண்டப்பட்டது.

பேதுருவும், அந்திரேயாவும் கல்லாதவர்களாக இருந்தாலும் திறமை மிக்க மீனவர்களாக கடற்பகுதியில் நல்ல அனுபவத்துடன் இருந்தார்கள். அவர்கள் தத்துவஞானிகள் அல்ல. ஆனாலும் கடினமான வேலைக்காக அவர்கள் ஆயத்தமாக இருந்தார்கள்.

அவர்கள் கிறிஸ்துவை ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். யோவான்ஸ்நானகனின் சாட்சியைக் கேட்டு கிறிஸ்துவே இறைவனின் ஆட்டுக்குட்டி என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவரை விசுவாசித்தார்கள். அவர்களுடைய முன்னாள் ஆசிரியர் சிறைச்சாலையில் இடப்பட்டபோது, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மறுபிறப்பிற்கான அழைப்பைக் கேட்டுக் கீழ்ப்படிந்து, உடனடியாக அவரைப் பின்பற்றினார்கள்.

இயேசு கலிலேயாப் பகுதியில் பணி செய்தபோது யோர்தான் பகுதியில் இருந்து திரும்பியவுடன் ஒருவேளை பேதுருவும், அந்திரேயாவும் தங்கள் வலைகளை எடுத்துக்கொண்டு போயிருக்கக் கூடும். இருப்பினும் ஆண்டவர் அவர்களுடைய கப்பர்நகூம் பட்டணத்திற்கு வந்தார். அவர்கள் கட்ற்கரைப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். அவருடைய அழைப்பு அம்பைப் போல அவர்களை தாக்கியது. அவர்கள் உடனடியாக படவுகளையும், வலைகளையும் விட்டு அவரைப் பின்பற்றினார்கள். அதுதான் அவர்களின் வாழ்வு ஆதாரம். எல்லா உலகப் பாதுகாப்பையும்விட ஆண்டவர் பெரியவராக இருக்கிறார்.

இறை அரசர் நம்மை அவரிடம் வரும்படி அழைக்கும் போது, நாம் உடனடியாகக் கீழ்ப்படிந்து, அவரை பின்பற்ற வேண்டும். அவிசுவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். நம்மை பரியாசம் செய்யலாம். பணத்தைக் குறித்தும், உடைமைகளைக் குறித்தும் சிந்திப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. நமது அனுதின ஆகாரத்தை ஆண்டவர் நமக்குத் தந்தருளுவார்.

கிறிஸ்து உங்களையும் மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக மாற்ற விரும்புகிறார். உங்கள் அறிவுத்திறமை அல்லது பணத்தினால் அவர்களை ஜெயிக்க முடியாது. உங்கள் தாழ்மை மற்றும் இரக்கத்தினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் நிறைவேற்ற முடியும். கிறிஸ்துவின் ஊழியர்களுக்கு இறைவனுடைய வார்த்தை தான் வலையாக இருக்கிறது. அவர்கள் இணைந்து விண்ணப்பம் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினால் வலையை வீசுகிறார்கள். கிறிஸ்து அவருடைய வழிநடத்துதலின்படி அவருடைய அன்பின் வலைக்குள் அநேகரை இழுக்கின்றார்.

கிறிஸ்துவைப் பின்பற்றும் போது மனிதர்களைப் பிடிப்பது நாம் அல்ல, நமக்குள் இருக்கும் ஆண்டவர் தான் என்பதை கற்றுக்கொள்கிறோம். அவர் நமக்குள் பணிசெய்கிறார். அவரே உங்களை அழைத்தவர், பரிசுத்தப்படுத்தியவர், வெற்றியுள்ள பணிக்கென்று உங்களை வழிநடத்தியவர். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுபாவத்தின்படி தகுதியற்றவனாகவும், இறைவனுக்குப் பணி செய்ய இயலாதவனாகவும் இருக்கிறான். நாம் அனைவரும் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள். ஆனாலும் ஆண்டவர் நம்மை அழைக்கிறார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:14-16).

அதே நாளில் கிறிஸ்து நற்செய்தியாளர் யோவானையும், அவனுடைய சகோதரன் யாக்கோபையும் சந்தித்தார். அவர்களுடைய குடும்பத்தை தமது அழைப்பின் மூலம் ஆசீர்வதித்தார். இறைவனுடைய பணிக்கென்று அழைத்தார். உடனடியாக இந்த மீனவர்கள் தங்கள் வலைகளைப் போட்டுவிட்டு அவரை பின்பற்றினார்கள். அவர்கள் தங்கள் வாழ்விற்கான ஒரே ஆதாரத்தை விட்டுக்கொடுத்தார்கள். அவர்கள் உண்மையுள்ள ஊழியர்களாக பின்வரும் காரியத்தை அறிந்திருந்தார்கள். “நாங்கள் இறைவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்யக் கூடாது”. ஆண்டவருக்குப் பணி செய்கிறவர்கள் பணத்தைத் தேடுகிறவர்களாக இருக்கக் கூடாது. அவர்களுக்குள் வாசம் செய்கின்ற இறைவனை அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் அனுபவிக்கிறார்கள். இந்த ஆவியானவர் உலகப்பொருட்களை தனக்காக சேகரிப்பவர் அல்ல, அவைகளை மேற்கொள்கின்றார். அன்பின் நிமித்தம் அதைப் பகிர்ந்துகொடுக்கிறார்.

யோவானும், யாக்கோபும் இனிமேல் வலைகளைப் பழுதுபார்க்க மாட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஐக்கியத்துடன் கிறிஸ்துவின் சபையில் இணைந்துவிட்டார்கள். திருச்சபையில் ஊழியம் செய்வதற்கு நீடிய பொறுமை, தேவைப்படுகிறது. இரக்கம் மற்றும் அன்புள்ள இறைவனின் குணாதிசயங்கள் தேவைப்படுகிறது. ஏனெனில் திருச்சபை அன்புள்ளது. இல்லையெனில் அது சபை அல்ல.

இன்று நீங்கள் கடந்துபோகும் போது கிறிஸ்துவின் அழைப்பைக் கேட்டீர்களா? ஆயத்தமாக்கப்பட்டவர்களை ஊழியத்திற்கென்று பயிற்றுவிக்கும்படி அழைக்கிறார். அவருடைய அழைப்பிற்கு நீங்கள் உடனடியாகக் கீழ்ப்படிவீர்களா? தீர்மானத்துடன் கிறிஸ்துவைப் பின்பற்றுவீர்களா? அவருடைய ஆவியின் வழிநடத்துதலினால் நீங்கள் நடத்தப்படுகிறீர்களா? யாரேனும் ஒருவரை இரட்சிக்கப்படும்படியும், பரிசுத்தமாக்கப்படும்படியும் இரட்சகரிடம் நடத்தியிருக்கின்றீர்களா? நீங்கள் எதைச் செய்ய நாடுகிறீர்கள்? அக்கறையின்றி நீங்கள் தூங்குகிறீர்களா? நீங்கள் உங்கள் மகிமைக்கென்று பணி செய்கிறீர்களா அல்லது உயிருள்ள ஆண்டவருக்கும் சேவை செய்கிறீர்களா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்முடைய பணிக்கென்று நீர் எங்களை அழைத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்று அறிக்கையிடுகிறோம். இந்த அழைப்பிற்கு நாங்கள் தகுதியற்றவர்கள். எங்கள் பாவங்களை தயவாய் மன்னியும். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும் விசுவாசத்துடன் கீழ்ப்படியும்படி எங்களை வழிநடத்தும். நாங்கள் உமக்கு சிறப்பாகப் பணிபுரிய உதவும். உமது அன்பின் பணியை உண்மையுடன் செய்ய கிருபை செய்யும். பணத்தை சார்ந்து வாழாதபடி எங்களை விடுவியும். உமது பராமரிப்பின் மீதான நம்பிக்கையைத் தாரும். எங்கள் விண்ணப்பங்களுக்கு பதில் தாரும். எங்களை நீர் இரட்சித்தது போல எங்கள் நண்பர்களை அவர்களுடைய பாவங்களில் இருந்து இரட்சியும். நாங்கள் யாருக்கெல்லாம் இடைவிடாமல் விண்ணப்பம் பண்ணுகிறோமோ, அவர்களை நீர் அறிந்திருக்கிறீர். நீர் அனைத்தையும் கேட்கின்ற இறைவன்.

கேள்வி:

  1. இயேசுவின் அழைப்பின் பொருள் என்ன?” என்னைப் பின்பற்றி வாருங்கள். நான் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்”?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 08:15 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)