Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 010 (First Preaching of Jesus)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - கலிலேயாவில் இயேசுவின் ஊழிய ஆரம்பம் (மாற்கு 1:14 - 1:45)

1. இயேசுவின் முதலாவது பிரசங்கம், அவருடைய செய்தியின் அடையாளம் (மாற்கு 1:14-15)


மாற்கு 1:14-15
14 யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: 15 காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.

ஆண்டவருடைய செய்தியாளராக யோவான்ஸ்நானகன் தனது பணியை முடித்திருந்தார். அப்போது இயேசு கிறிஸ்துவாக தனது பணியை ஆரம்பித்தார். சாத்தான் இயேசுவினால் வெளியரங்கமாக மேற்கொள்ளப்பட்டான். அவன் இறுதி சோதனையை தீர்க்கதரிசி யோவானுக்குத் தரும்படி கோபத்துடன் சென்றான். ஏரோது ராஜா மூலமாக அவன் பயம் மற்றும் சந்தேகங்களைக் கொடுத்து இருட்டு சிறைக்குள் அவனைப் போட்டான். அவனை எதிர்நோக்கியிருந்த மரணத்தை அவனுக்குக் காண்பித்தான்.

தனது செய்தியாளரை படையின் வலிமையினால் இயேசு வெளியே கொண்டுவர முயற்சிக்கிவில்லை. அவர் காலங்களின் அடையாளங்களை புரிந்திருந்தார். காலம் நிறைவேறியது என்பதையும் உலகில் நடைபெற வேண்டிய மாற்றத்தையும் பிதாவின் சித்தத்தினால் அறிந்திருந்தார். அநேக ஆண்டுகளாக முழு படைப்பும் ஆண்டவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தன. ஆண்டவர் இந்த உலகை பாவங்கள், மரணம் மற்றும் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுவிப்பார். யோர்தான் நதிப்பகுதியிலிருந்து கலிலேயா மலைகள் பக்கம் இயேசு திரும்பி வந்தார். காலம் மிகவும் குறுகியதாய் இருந்தது. அவருக்குள் கிருபை பெருகி இருந்தது. சூரியக்கதிர்களை குவியப்படுத்தி ஒரு இடத்தில் வெளிப்படுத்தும் லென்ûஸப் போல அவருக்குள் கிருபை அனைத்தும் வெளிப்பட்டது. அந்த பிரகாசிக்கும் ஒளியை ஒருவரும் மறைக்க இயலாது.

கிறிஸ்துவே ஆண்டவர். வல்லமையை சரியாகப் பயன்படுத்த அறிந்திருந்த ஞானமுள்ளவர். அவர் மூலமாக (வார்த்தை) இறைவன் உலகங்களைப் படைத்தார். அவருக்கு அனைத்தும் சொந்தமாக உள்ளன. நாம் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும், நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்.

இயேசு அரசராகவும், ஆண்டவராகவும் தனது பணியை ஏற்றுக்கொண்டார். அவர் இந்த உலகில் இறைவனுக்கு உலகை ஜெயித்துக் கொடுக்கும்படி வந்தார். இறைவனின் வல்லமைகள் அனைத்தும் அவருக்குள் மறைந்துள்ளன. இருப்பினும் அவர் கலகத்தை ஏற்படுத்தவில்லை. தன்னுடைய எதிரிகளை குழுக்களாகவோ அல்லது தனியாகவோ கொல்லவில்லை. தனது வல்லமையை தவறாகப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர் தன்னை கோதுமை மணியுடன் ஒப்பிட்டார். அது முதலாவது சாகவேண்டும். அப்போது தான் இறைவனுக்கு மிகப்பெரிய அறுவடையை அது கொடுக்கும். அரசராகிய இயேசு தனது ஜீவனை இறையரசின் மக்களுக்காகக் கொடுத்தார். இழந்துபோன மற்றும் கீழ்ப்படியாமற் போன மக்களை அவர் தகுதிப்படுத்துகிறார். பரந்த இறைவனிடம் அவர்கள் நெருங்கி சேரும்படி செய்கிறார்.

அவருடைய வருகையின் போது, அவருடைய அன்பின் ராஜ்யத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையாக எதையும் சொல்லவில்லை. அவருடைய கிருபையின் ராஜ்யத்தையும், பரலோக வல்லமையையும் அவர் இலவசமாகத் தருகிறார். இறைவன் கடினமான கட்டளைகளை நிறைவேற்றும்படி நம்மிடம் கேட்கவில்லை. நம்மிடம் அவர் தனிப்பட்ட விதத்தில் வருகிறார். அவருடைய பரிசுத்த அன்பின் பிரசன்னத்தை நமக்குத் தருகிறார். மனந்திரும்புதலுக்கு நேரான முதற்படி நம்முடைய இயலாமையில் இருந்து நம்மீது அருளப்பட்ட இறைவனின் வல்லமையை பெற்றுக்கொள்ளும்படி நம் மனம் மாற வேண்டும். “மனந்திரும்புதலுக்கான” கிரேக்க வார்த்தை கண்ணீர் சிந்துவதையோ அல்லது அழுவதையோ குறிப்பிடவில்லை. அது மனமாற்றத்தைக் குறிப்பிடுகிறது. நம் உள் மனதில் மாற்றம். மற்றும் சிந்தனையிலும் கருத்தாக்கத்திலும் ஏற்படும் புதிய மனப்பான்மையை இது வெளிப்படுத்துகிறது. இயேசு திரளான மக்களிடம் கூறினார்: “நான் உங்களுடனே இருக்கிறேன். பூமியில் எனக்குள் இறைவனுடைய அரசு இருக்கிறது. என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். எனது அன்பு எனது தூய்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் என்னைப் போல் மாறுவீர்கள்.

ஆவிக்குரிய மனந்திரும்புதல் மூலமாக மனிதனில் ஏற்படும் இந்த முழுமையான மாற்றம் நற்செய்தியினால் ஏற்படுகிறது. இது மந்திரத்தாலும் தீர்மானத்தாலும் ஏற்படுவது கிடையாது. கிறிஸ்துவில் நமது விசுவாசம் மற்றும் நம்பிக்கை மூலம் வருகின்றது. நாம் அவருக்கு முழுமையாக நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். நமது பலவீனத்தில் அவர் பெலன் பரிபூரணமாக வெளிப்படுகிறது. அவரை விசுவாசிப்பவன் இன்று நித்தியவாழ்வைப் பெறுகிறான்.

கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு பூமியில் இறை அரசு இல்லை. இப்போது ஆண்டவர் தனது ராஜ்யத்தை அவருடைய நீதி என்னும் அஸ்திபாரத்தில், அவருடைய ஆவியின் வல்லமையினால், மனந்திரும்பும் எல்லா விசுவாசிகளுக்கும் ஆயத்தம் செய்கிறார். அவருடைய அடுத்த வருகையில் பாராட்டு, அன்பு, தாழ்மை மற்றும் மகிழ்ச்சியினால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, அவர்கள் இருப்பார்கள். அப்போது அவர் பூமியில் இறை அரசை ஸ்தாபிப்பார். தாழ்மையுள்ள மக்களுக்கு தமது மகிமையை வெளிப்படுத்துவார்.

கிறிஸ்துவின் நற்செய்தியை படியுங்கள். உங்கள் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். நீங்கள் இறைவனுடைய வார்த்தையினால் நிரப்பப்படுவீர்கள். நீங்கள் ஆவியினாலும், சத்தியத்தினாலும் மறுபடியும் பிறப்பீர்கள். இறை அரசர் உங்கள் முன்பு நின்றுகொண்டிருக்கிறார். அவர் உங்களை அழைக்கிறார். நீங்கள் அவரிடம் வருவீர்களா? அவருடைய பரிசுத்தத்தில் நீங்கள் பரிசுத்தமாக்கப்பட வருவீர்களா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய கிறிஸ்துவே, நீர் எங்களுக்கு இரக்கம் உள்ள ராஜா. நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள். நாங்கள் எங்களுக்குச் சொந்தமானவர்கள் போல உம்மைவிட்டு தனியாக வாழ முயற்சித்திருந்தால் எங்களை மன்னியும். நாங்கள் உமக்கு கீழ்ப்படியாமல் இருந்த போதும் நீர் எங்களிடம் வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களை அழிக்கவில்லை. எங்கள் மத்தியில் தாழ்மையுடனும், சாந்தத்துடனும் உமது வல்லமையை மறைத்து வாழ்ந்தீர். உமது பரிசுத்தத்தில் உமது அன்பைக் காண்பித்தீர். நீர் எங்களுடைய ஆண்டவரும், ராஜாவுமாக இருக்கிறீர் என்று அறிக்கையிட்டு உம்மை ஆராதிக்கிறோம். எங்கள் மனங்களை மாற்றும். எங்களை பரிசுத்தப்படுத்தும். உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் எங்களை மறுபடியும் பிறக்கச் செய்யும். எங்களை நீதிக்குட்படுத்தும். உமது இரண்டாம் வருகைக்கான ஆயத்தத்தில் உமது ராஜ்யத்தை பரவச் செய்ய ஒவ்வொரு முயற்சியையும் எடுக்க உதவும். வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

கேள்வி:

  1. “இறைவனுடைய ராஜ்யத்தின்” சிறப்புத் தன்மைகள் என்ன?

மனன வசனம்:
"காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று;
மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.”
(மாற்கு1:15)

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 07:59 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)