Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 012 (Christ Heals a Demon-Possessed)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - கலிலேயாவில் இயேசுவின் ஊழிய ஆரம்பம் (மாற்கு 1:14 - 1:45)

3. ஜெப ஆலயத்தில் பிசாசு பிடித்திருந்த ஒரு மனிதனை கிறிஸ்து சுகமாக்குகிறார் (மாற்கு 1:21-28)


மாற்கு 1:21-28
21 பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார். 22 அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். 23 அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். 24 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். 25 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். 26 உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. 27 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.28 அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.

அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான். பரிசுத்த ஆவியைத் தவிர வேறு ஏதேனும் ஆவிகள் இன்று உங்கள் சபைகளில் இருக்கின்றனவா? அப்படியெனில் உங்கள் சபையில் இருந்து எல்லா அசுத்த ஆவிகளையும் துரத்தும்படி இயேசுவிடம் கேளுங்கள். அப்போது மக்கள் இரட்சிக்கப்படுவார்கள். அசுத்த ஆவியிடம் இருந்து விடுதலை பெறுவார்கள். அப்போது அவர்கள் உங்கள் கூடுகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக கலந்து கொள்வார்கள்.

இறைவனின் அன்பினால் பிறந்தவர் கிறிஸ்து. அவரிடமிருந்து மிகப்பெரிய வல்லமை வெளிப்படுகிறது. பிசாசுகள் அவரை அறிந்திருந்தன. அவருக்குப் பயப்பட்டன. இறைவனின் எதிரிகளாகிய அவைகளால், அவருடைய அன்பைக் காண முடியவில்லை. அவருடைய கிருபையை புரிந்துகொள்ள முடியவில்லை. அவைகள் அவருடைய பட்சிக்கும் பரிசுத்தத்தின் முன்பு நடுங்கின. கிறிஸ்துவே நித்திய நியாயாதிபதி. வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அவைகள் அறிந்திருந்தன. பிசாசுகள், அசுத்த ஆவிகள் நித்திய அழிவை நோக்கிச் செல்கின்றன. அவைகள் மீது வரவிருக்கிற நியாயத்தீர்ப்பைக் குறித்து பயந்து நடுங்குகின்றன.

இன்று அநேக மக்கள் ஆவிகள் இருப்பதை நம்புவது இல்லை. அவைகளைக் குறித்துப் பேசும் போது அவர்கள் சிரிக்கிறார்கள். சாத்தானும், அவனுடைய பெரிய சேனையும் இருப்பதை நற்செய்தி நூல்கள் தெளிவாக சாட்சியிடுகின்றன. அவனுடைய ஆவிகள் அநேக மக்களை தாக்குகின்றன. அநேகரை ஆட்கொள்கின்றன. எனவே இது உண்மையில்லை என்று கூற வேண்டாம். உங்கள் சொந்த வல்லமையினால் அசுத்த ஆவிகளைத் துரத்த முயற்சிக்க வேண்டாம். கிறிஸ்துவின் மூலமாக அவருடைய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும். உங்கள் முழு இருதயத்தோடும், நீங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் அவர் உங்களை நரகத்தின் பிடியிலிருந்து விடுவித்துள்ளார். இறைவனின் பிள்ளைகளாக மாற்றி, உங்களை தூய்மைப்படுத்தியுள்ளார். கிறிஸ்துவின் மீதான விசுவாசமும் கிருபையும், ஈவுமாகவும் உள்ளது. அது உங்கள் சொந்த செயல் அல்ல. கிறிஸ்துவின் ராஜ்யத்தினுடைய பாதுகாப்பில் நம்பிக்கையாயிருங்கள். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையாக உங்களுடைய ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கும் போது, அவர் சாத்தானிடம் இருந்து உங்களை பாதுகாப்பார்.

பிசாசுகள் இறைவனையும், அவராலே அபிஷேகம் பண்ணப்பட்டவரையும் விசுவாசித்தன. அவைகள் பயந்து அவருக்கு முன்பு நடுங்கின. நரகத்தின் ஆவிகள் கிறிஸ்துவின் சத்தியத்தை அறியவில்லை என்று சொல்ல முடியாது. அவைகள் அறிக்கையிட்டன. தங்கள் பற்களை கோபத்துடன் கடித்தன. அநேக மக்களும், வேறுபட்ட மதத்தைச் சார்ந்தவர்களும் இயேசுவின் இறைத்தன்மையை மறுதலிக்கும் போது, பிசாசுகள் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை பயத்துடன் அறிக்கையிட்டன. அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டன. ஆனாலும் அவைகளின் அறிக்கைகள் முழுமையானது அல்ல, அசுத்த ஆவிகள் முழுமையான சத்தியத்தை அறியவில்லை. கிறிஸ்து அழிக்கும்படியாக வரவில்லை. தன்னை நித்திய நியாயாதிபதி என்று பிரகடணப்படுத்தவும் வரவில்லை. அவர் இரக்கமுள்ள இரட்சகராக நம்மிடம் வந்தார். நமது விசுவாசத்தை அவர் எதிர்பார்க்கிறார். பயத்தினிமித்தம் அல்ல, அன்பின் நிமித்தம் அவரை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே தான் அவர் பிசாசுகளை அதட்டினார். நரகத்தைக் குறித்துப் பேசி, இயேசு தமது ராஜ்யத்தை கட்டியமைக்க விரும்பவில்லை. அவருடைய அன்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிரியமான சகோதரனே, சாத்தான், அசுத்த ஆவியின் வல்லமையை நம்ப வேண்டாம். அவன் பேசும் வஞ்சக வார்த்தைகளை கேட்க வேண்டாம். அவன் ஏமாற்றுபவன். கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் பிசாசு பிடித்திருந்த மனிதன் இருந்த போது, இறைவனுடைய வார்த்தையின் மீது பற்று கொண்டுள்ள பரிசேயனைக் கூட அவன் தூண்டுபவனாக இருந்தான்.

கிறிஸ்து வெற்றியாளர். அவர் அசுத்த ஆவிகளைத் துரத்திய செயல், இந்த உலகில் இறைவனுடைய ராஜ்யம் வருவதைத் தெரிவித்தது. நமது உலகத்தின் அதிபதியாக இனிமேல் சாத்தான் இருக்க மாட்டான். அவனால் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை கிறிஸ்து விடுவிப்பார். கிறிஸ்துவின் ஆவியின் முன்பாக எல்லா அசுத்த ஆவிகளும் ஓடும். பிசாசு பிடித்திருந்த மக்களிடம் இருந்து ஒரே வார்த்தையினால் கிறிஸ்து பிசாசைத் துரத்துவார். பரிசுத்த நற்செய்தியை நீங்களும் சாட்சியிட வேண்டும். விசுவாசத்துடன் மன்றாட வேண்டும். இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்படுதலுக்கு உங்கள் வாழ்வை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். சாத்தானின் பிடியில் இருந்து கிறிஸ்து நமது தேசத்தின் அநேக மக்களை விடுதலை செய்வார். நற்செய்தி மட்டுமே மனிதனின் இரட்சிப்புக்கு ஆதாரம். வெற்றியாளரிடம் வாருங்கள். நீங்களும் உங்கள் வீட்டாரும் வாழ்வடைவீர்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய கிறிஸ்துவே, நீர் எங்கள் சிறந்த ராஜா, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் எங்களை அசுத்த ஆவிகளிடம் இருந்து விடுதலை செய்தீர். உமது பரிசுத்த ஆவியினால் எங்களைத் தொட்டீர். உமது அன்பிலும், சத்தியத்திலும் எங்களை நிலைப்படுத்தும். உமது பாதுகாப்பு எங்களை தொடரட்டும். நாங்கள் தூய்மையுடன் நடக்கச் செய்யும். சாத்தானின் ஆவியினால் பிடிக்கப்பட்ட மக்களை விடுதலை செய்யும். உமக்காக ஏங்குகிற மக்களை பிரகாசிப்பியும். அவர்கள் உமது ஒளியைக் கண்டு, உமது வல்லமையினால் இருளில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

கேள்வி:

  1. பிசாசுபிடித்திருந்தவனை இயேசு எப்படி விடுதலையாக்கினார்? இன்று அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டவர்களை அவர் எவ்விதம் விடுதலை செய்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 08:34 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)