Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 009 (Temptation of Jesus Christ)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1-13)

4. இயேசு கிறிஸ்துவிற்கு சோதனை (மாற்கு 1:12,13)


மாற்கு 1:12-13
12 உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். 13 அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.

சாத்தான் இறைவனைக் குறித்து குறைவாக அறிந்திருக்கிறான். அவருடைய திட்டத்தின் சில காரியங்களை அவன் உணர்ந்துகொள்கிறான். கிறிஸ்துவின் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கியதை பயத்துடன் உற்று நோக்கினான். மனித வரலாற்றில் முக்கியமான நேரம் அது என்பதை அவன் அறிந்திருந்தான். இறைவனின் குமாரன் தமது பிதாவுடன் மனிதர்களை ஒப்புரவாக்கும் பணியை ஆரம்பித்திருந்தார். எனவே சோதனைக்காரன் இறைவனின் ஆட்டுக்குட்டியை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானித்தான். அவரை வஞ்சனை வலையில் சிக்கி வைக்க வகை தேடினான். அவருடைய தியாகப் பணியின் மதிப்பை குறைக்க முயற்சித்தான்.

ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்தவுடனே வனாந்தரத்தில் அவர் போரிடும்படி வழிநடத்தினார். இறைவனின் குமாரன் சாத்தானுக்குப் பயப்படவில்லை. ஒரு கடைநிலை பரிசுத்தவானும் மிகப்பெரிய சாத்தானைவிட பலமுள்ளவனாய் இருக்கிறான். ஏனெனில் இறைவனுடைய பிள்ளைகளிடம் அவர் வாசம்பண்ணுகிறார்.

சாத்தானின் சோதனைகளுக்கு மத்தியில் கிறிஸ்து பயமற்றவராக நின்றார். அந்த சோதனைகள் அழிக்கின்ற இடிமுழக்கங்களைப் போல அவரைத் தாக்கியது. சாத்தானின் வார்த்தைகளை அவர் கவனிக்கவில்லை அல்லது அவன் பக்கம் சாயவில்லை. அவர் ஏழ்மை மற்றும் தாழ்மையின் பாதையைத் தெரிந்துகொண்டார். அவருடைய பிதாவின் அன்பை அவர் சந்தேகிக்கவில்லை. தமது குமாரன் என்ற உரிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. அவர் சிலுவையை நோக்கிய தமது பாதையில் கவனமாக இருந்தார். அவர் எந்த ஒரு சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சரீரத்தை பலியிடுவதின் மூலம் மட்டுமே உலகம் சீரடையும் அல்லது மீட்படையும் என்பதை அறிந்திருந்தார்.

சாத்தானுடைய சோதனைகளின் அனைத்து தந்திரங்களையும் கிறிஸ்து மேற்கொண்டார். வனாந்தரத்தில் உள்ள காட்டு மிருகங்களும் அவருக்கு தீங்கு இழைக்க முடியவில்லை. அவர் இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற உறுதியுடன் இருந்தார். உலகத்தின் பாவங்களை மன்னிக்கும்படி தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியின் பாதையையும், இருளை சுமக்கின்ற வழியையும் தெரிந்துகொண்டார். அவருடைய மரணத்தில் இறைவன் அன்பாக இருக்கிறார் என்பதை நிரூபித்தார். அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனில் நிலைத்திருக்கிறான். அவனுக்குள் இறைவனும் நிலைத்திருக்கிறார்.

இந்த ஆவிக்குரிய போராட்டத்தின் முடிவில், அவருக்கு தூதர்கள் பணிவிடை செய்தார்கள். இந்த போராட்டத்தின் முடிவைக் காண அவர்களும் ஆவலாயிருந்தார்கள். கிறிஸ்து இறைவனின் வல்லமைமிக்க எதிரியை தோற்கடித்தபோது மகிழ்ச்சியடைந்தார்கள்.

இயேசு வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார். 40 என்ற எண் முக்கியத்துவம் நிறைந்தது. வனாந்தரத்தில் அவருடைய மக்கள் அலைந்து திரிந்த நீண்ட வருடங்களை வெளிப்படுத்துகிறது. சீனாய் மலையின் மீது மோசே செலவழித்த நாட்களை வெளிப்படுத்துகிறது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் உள்ள போராட்டம் கிறிஸ்துவின் ஊழிய ஆரம்பத்தில் நாற்பது நாட்கள் காணப்பட்டது.

விண்ணப்பம்: அன்பின் ஆவியினால் பிறந்த உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். நீர் உமது ஊழிய ஆரம்பத்தில் சாத்தானை மேற்கொண்டீர். அவனுடைய சோதனைகளுக்கு அடிபணியவில்லை. நீர் பணம், வல்லமை, கொலை போன்ற அனைத்தையும் புறக்கணித்தீர். நன்மை, பரிசுத்தம், தாழ்மையின் வழியைத் தெரிந்துகொண்டீர். எங்கள் பெருமை, அசுத்தங்களை மன்னியும். உமது இரக்கத்தின் வல்லமையினால் எங்களை நிரப்பும். நாங்கள் இறைவனின் ஆட்டுக்குட்டியினுடைய வழியை பின்பற்றச் செய்யும்.

கேள்வி:

  1. ஏன் பரிசுத்த ஆவியானவர் முதலாவது இயேசுவை சாத்தானால் வனாந்தரத்தில் சோதிக்கப்படும்படி வழிநடத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 07:52 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)