Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- The Ten Commandments -- 02 Introduction To the Ten Commandments: God Reveals Himself
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Baoule -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- Finnish? -- French -- German -- Gujarati -- Hebrew -- Hindi -- Hungarian? -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Norwegian -- Polish -- Russian -- Serbian -- Spanish -- TAMIL -- Turkish -- Twi -- Ukrainian -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

TOPIC 6: பத்து கட்டளைகள் - மனிதனை விழாது காக்க இறைவன் கட்டிய மதிற்சுவர்கள்

02 - பத்துக் கட்டளைகளுக்கான அறிமுகம்: இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார்



யாத்திராகமம் 20:2
உன்னை எகிப்தின் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்டப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே
(யாத்திராகமம் 20:2)

கடுமையான சட்ட விதிமுறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு முறையையோ, வான தூதனால் வெளிப்படுத்தப்பட்ட முரண்பாடுள்ள கொள்கைகளையோ பத்துக் கட்டளைகள் மக்கள் மீது திணிப்பதில்லை. ஆனால் பத்துக் கட்டளைகள் மூலமாக இறைவனே மக்களிடம் பேசுகிறார். படைத்தவர் தன்னுடைய படைப்புகளிடம் நெருங்கி வருகிறார், பாவமுள்ள மனிதர்களைத் தேடி பரிசுத்தமுள்ள இறைவன் வருகிறார்.


02.1 - இறைவனுடைய ஆளத்துவம்

பத்துக் கட்டளைகளில் நாம் கவனிக்கிற முக்கியமான வார்த்தை “நான்” என்பதாகும். உயிருள்ள நபராகிய இறைவன் மக்களிடத்தில் பேசுகிறார். ஏதோ ஒரு ஆவியோ அல்லது வெகுதூரத்தில் இடிமுழக்கத்தினால் உண்டாகும் சத்தமோ அல்ல. அவருடைய மொழி இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவர் நம்மோடு தனிப்பட்ட முறையிலும் நம்பிக்கைக்குரிய நிலையிலும் உறவுகொள்ள விரும்புகிறார். அவர் தம்முடைய சட்டத்தினாலும் அல்ல, தம்முடைய கோபத்தினாலும் அல்ல, தம்முடைய கிருபையினாலேயே நம்முடன் பேச வருகிறார். அவர் அன்போடும் இரக்கத்தோடும் நம்மிடம் பேச வருவது எத்தனைபெரிய பாக்கியம்!

மனக்கடினத்தினால் மனிதன் எல்லாம் வல்ல இறைவனிடத்திலிருந்து விலகவும் அவருடைய நன்மைகளை விட்டுவிட்டு ஓடவும் வாய்ப்பிருக்கிறது. ஆயினும் இந்த பரிசுத்தமுள்ள இறைவன் நாம் எங்கிருந்தாலும் நம்மைக் காண்கிறார். நாம் எப்போதும் அவருக்கு முன்பாகவே இருக்கிறோம். அதனால்தான் ஞானமுள்ள எவரும் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். அவர் தன்னை “நான்” என்று குறிப்பிடும்போது நம்மை “நீங்கள்” என்று குறிப்பிடும் அளவுக்கு நமக்கு அவர் ஒரு அடையாளத்தைத் தந்து நம்மை உயர்த்தியிருக்கிறார்.

இதன் மூலமாக நித்திய இறைவனும் எல்லாவற்றையும், தாங்குகிறவரும், நித்திய நியாயாதிபதியுமாகிய அவர் நம்மோடு பேசுகிறார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிய வருகிறது. ஆகவே, நாம் எப்போதும் அவருக்குக் கருத்துடன் செவிகொடுப்போம். அவருடைய வார்த்தையை மகிழ்வுடன் கடைப்பிடிப்போம்.


02.2 - இறைவனுடைய இருத்தல்

“நான் இருக்கிறேன்” என்று சொல்லும்போது இறைவன் தம்முடைய அடிப்படைத் தன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறார். இறைவன் இல்லை என்று எவ்வாறு மக்கள் கூற முடியும்? “நான் இருக்கிறேன்” என்பதுதான் நம்முடைய இருப்புக்குக் காரணமாயிருப்பதால், இறைவனுடைய இந்த சாட்சிக்கு முன்பாக நாத்திகர்களுடைய வாதங்கள் அனைத்தும் நொறுங்கிப் போகின்றன. இறைவன் இருக்கிறார்! மற்ற அனைத்துமே அழிந்து போகக்கூடியது, அவர் மட்டுமே நித்தியராக இருக்கிறார். ஒரு பெரிய மலையை எதிர்ப்பதைப் போல மனிதன் அவ்வப்போது இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறான். ஆனால் மனிதர்கள் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தோ, அறிவியல் அறிஞர்கள் அவரைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தோ இறைவனைக் குறித்த உண்மையை நாம் நிர்ணயிக்க முடியாது. அவரே சத்தியமாக இருந்து இந்த அண்டத்தையே நிரப்புகிறார். ஆனால் இந்த உண்மையை சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பாகவே தாவீதின் காலத்தில் வாழ்ந்த சிலர் புறக்கணித்திருக்கிறார்கள் (சங்கீதம் 14). அவர்கள் யதார்த்தத்தைப் புறக்கணிப்பதாலும், முழு அண்டத்தையும் பராமரித்துக் காப்பாற்றும் அவரை கண்டுகொள்ளாமல் விடுகிறதாலும் தாவீது அவர்களைக் கெட்டுப்போன மூடர்கள் என்று அழைக்கிறார். ஆயினும் நம்பிக்கையற்றவர்களாகிய அவர்கள் மனசாட்சியற்றவர்களாக தங்கள் பாவத்தில் வாழ்கிறார்கள்.

புத்தருடைய சமயம் கட்டப்பட்டுள்ள அடிப்படைக் கண்ணோட்டத்தை இறைவன் தம்மைக் குறித்துக் கூறும் சாட்சி மறுத்துரைக்கிறது. நிர்வாணம் என்ற புத்தருடைய கருத்துப்படி, ஒருவன் மாபெரும் வெறுமையில் (சூனியத்தில்) தனது ஆத்துமாவைக் கலந்துவிடும் வரைக்கும் தன்னுடைய சுயத்தை வெறுத்து, தன்னுடைய ஆசைகளைக் கொல்ல வேண்டும். இது உண்மை அல்ல. மனிதர்கள் வாழ வேண்டும் என்றுதான் இறைவன் விரும்புகிறார். அவர் “நான் இருக்கிறேன்” என்று கூறுவதன் மூலமாக நாமும் உயிருடன் இருக்க வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்துகிறார். அவர் உயிரோடு இருக்கிறார் என்ற உண்மைதான் நம்முடைய வாழ்விற்குப் அர்த்தத்தைக் கொடுக்கிறது. இல்லாமல் போகும் சூன்ய நாம் நிலையை அடைய வேண்டும் என்பது அவருடைய விருப்பம் அல்ல.

இறைவனுடைய இந்த சாட்சி அனைத்து பொருளியல் வாதங்களுக்கும் மரண அடி கொடுக்கிறது. ஆன்மீக உலகத்தின் இருப்பை மறுதலிக்கும் எவரும் பார்வைக் குறைபாடு உள்ளவராவர். உண்மையில் அவர் வானத்தில் பறக்கும் பறவையைப் போல் இல்லாமல் தரையில் கிடக்கும் கல்லைப் போல் இருக்கிறார். இறைவன் உயிரோடு இருந்து உங்களோடு பேசுகிறார். அவர் பொருள் முதல் வாதக்கொள்கைக்காரரிடத்திலும் நாத்திகரித்திலும் பொதுவுடமைக்கொள்கைக்காரரிடத்திலும் பேசுகிறார். அவர்கள் அவருக்குச் செவிகொடுத்து ஞானமடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஒருவர் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி இறைவனுக்குச் செவிகொடுக்க மறுப்பாரென்றால், அவர் சூரியனைப் பார்க்கவில்லை என்பதற்காக சூரியன் என்று ஒன்று இல்லவே இல்லை என்று வாதிடும் குருடனைப் போலிருப்பார்.


02.3 - யார் யாவே?

“நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று மோசேயிடம் இறைவன் சொன்னது யாத்திராகமம் 3:14-ன் எழுத்தின்படியான மொழிபெயர்ப்பாக இருக்கிறது. இது இறைவன் உண்மையாக, நித்தியமாக, நிபந்தனையற்ற நிலையில், எதையும் சாராதவராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. இறைவனைப் போல் உயிருடன் இருக்கும் யாருமில்லை, எதுவுமில்லை. அவர் ஒருபோதும் மாறுவதில்லை. இதுதான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரமாகவும், நம்முடைய இரட்சிப்பின் மூலைக்கல்லாகவும் இருக்கிறது. நாம் எவ்வளவு குறைபாடுகளும், பாவங்களும் உள்ளவர்களாக இருந்தாலும் மாறாத இறைவன் நமக்கு எப்போதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். அவருடைய உண்மையின் காரணமாக நாம் எப்போதும் அவரிடத்தில் வர வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் இவ்வுலகத்தின் முடிவைச் சந்தித்தாலும் அவர் நம்மைத் தேற்றுகிறவராக இருக்கிறார்: “வானமும் பூமியும் ஒளிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்தேயு 24:35).

இறைவன் தம்முடைய இறையாண்மையில் அனைத்திற்கும் மேலாக இருந்து, அனைத்தையும் அறிந்தவராக, அனைத்தையும் காண்கிறவராக, எல்லா ஞானமும் உடையவராக இருக்கிறார். அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டாலும் அவர் நமக்குப் வழியைத் திறக்கிறவராக இருக்கிறார். அவர் நம்முடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் அறிந்திருக்கிறார். நாம் பயந்து நடுங்கி அவர் பாதத்தில் விழ வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. மாறாக அவர் நம்மில் ஒரு ஆழமான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறார். நாம் அவரை நம்பிக்கையோடு கண்ணோக்கிப் பார்க்கத்தக்கதாக அவர் நம்மிடத்தில் பேசுகிறார். அவர் நம்முடைய வாழ்வின் ஆண்டவராக இருக்க விரும்புகிறார். நம்மில் யாரும் இந்த பொறுமையின் இறைவனுடைய முகத்தைவிட்டு மறைந்து ஓட முடியாது. அவர் நம்முடைய பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்! இந்தப் படைப்பாளியிடம் திரும்பும் எவரையும் அவர் இரக்கத்தோடும் நீடிய அன்போடும் ஏற்றுக்கொள்கிறார். அவர் “நான் கர்த்தர்” என்று சொல்லும்போது, தன்னைத் தவிர கர்த்தர் ஒருவரும் இல்லை என்பதையும் அவர் கூறுகிறார். மற்ற அனைத்து ஆவிகளும் தெய்வங்களும் வீணானவைகளே.

நம்முடைய காலத்தில் ஆவிகளும் இரகசியமான போதனைகளும் நவீன மதங்களாக மாறிக்கொண்டிருந்தாலும், பிசாசு பிடித்தவர்கள் உண்மையான ஒரே இறைவனில் நம்பிக்கை வைப்பதால் விடுவிக்கப்படுகிறார்கள். இன்று அஞ்ஞான மார்க்கம் நலிவடைந்து போகிறது. ஆனால் மக்கள் அதன் எதிர்த்திசையில் கடைக்கோடிக்குச் சென்று மந்திரவாத நம்பிக்கைகளில் பிடிபட்டு, அசுத்த ஆவிகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுடைய விளம்பரங்கள் வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் எங்கும் பரவிக் காணப்படுகிறது.

நற்செய்தி நூல்களில் இயேசு “நானே அவர்” என்று சொல்வது, பத்துக் கற்பனைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சொல்லும் வார்த்தையாக இருக்கிறது. இவ்விதமாக அவர் சொல்லும்போது, அவர் தாமே கர்த்தர் என்று சொல்வதுடன், பெத்தலெகேமின் மேய்ப்பர்களுக்கு தேவதூதர்கள் அறிவித்த நற்செய்தியின் பொருள் தனே என்பதையும் குறிப்பிடுகிறார். இயேசு மேலும் தன்னைப் பற்றி கூறும்போது, “நானே வாழ்வுதரும் உணவு”, “நானே இவ்வுலகத்தின் ஒளி”, “நானே வாசல்”, “நானே வழியும், உண்மையும், உயிருமாயிருக்கிறேன்”, “நானே அரசன்” என்றும் “நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்” என்றும் குறிப்பிடுகிறார். அந்தக் காலத்திலிருந்து அவருடைய சீடர்கள் “இயேசுவே ஆண்டவர்” என்பதை எந்தவிதத் தயக்கமுமின்றி அறிவித்து வருகிறார்கள். அவர் ஒருபோதும் மாறாதவராயிருந்து நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுவிக்கிறார். அவர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்ததன் மூலமாக தன்னுடைய நிலைமையையும் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான் அதிலிருந்து “நானே கர்த்தர்” என்று பத்துக் கட்டளைகளைக் கொடுக்கும்போது கேட்ட சத்தம் நமக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.

வரப்போகிற ஆண்டவராகிய இயேசுவின் மனுவுருவாதலைக் குறித்த தெளிவான புரிதல் மோசேக்கு இருக்கவில்லை. “உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று கிறிஸ்துவின் பிறப்பிற்கு சுமார் 1,350 ஆண்டுகளுக்கு முன்பாக இறைவன் தம்மைக் குறித்த அடிப்படையான வெளிப்பாட்டை மோசேக்கு அறிவித்தார்.


02.4 - யார் இறைவன்?

எபிரெய மொழியில் இறைவன் தன்னை “ஏலோஹிம்” என்று அழைக்கிறார். இது அரேபிய மொழியில் “அல்லாஹ்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. “ஏலோஹிம்” என்பதை “எல்லோ-இம்” என்றும் வாசிக்கலாம். அதேபோல “அல்லாஹ்” என்பதை “அல்-எல்-ஹு” என்றும் வாசிக்கலாம். இதில் “அல்” என்பது ஒருமையான ஒன்றைக் குறிக்கும் சுட்டிடைச் சொல். “எல்” என்பது செமித்திய கலாச்சாரத்தில் இறைவனைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. அதற்கு “வல்லமை” என்று பொருள். “எல்” என்ற வார்த்தையின் அடிப்படை அர்த்தத்தை இயேசு அறிவித்தார். அவர் நியாய விசாரணை செய்யப்படும்போது, “அன்றியும் மனுஷ குமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள்…” (மத்தேயு 26:64) என்று வலியுறுத்திக் கூறினார். “இம்” மற்றும் “ஹு” ஆகிய வார்த்தைகள் விகுதிகள் ஆகும். எபிரெய விகுதியாகிய “இம்” என்பதன் மூலம் பன்மை குறிக்கப்படும் சாத்தியம் உள்ளது. ஆனால் “ஹு” என்பது கண்டிப்பாக ஒருமையைக் குறிக்கும் விகுதியாகும். இவ்வாறு “அல்லாஹ்” என்ற வார்த்தையில் இருந்து திரியேக இறைவனுக்குரிய சத்தியப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுகிறது. ஆனால் “ஏலோஹிம்” என்பது திரியேக இறைவனைக் குறிக்கும் வார்த்தையாக இருக்கிறது.

நித்திய கர்த்தர் அனைத்தையும் அறிந்தவரும், அனைத்து ஞானமும் உள்ளவரும், எங்கும் வியாபித்திருப்பவரும் மட்டுமல்ல, அவர் எல்லாம் வல்ல இறைவன். அவர் தம்முடைய வல்லமையுள்ள வார்த்தையினால் ஒன்றுமில்லாமையில் இருந்து முழு அண்டத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவனாயிருக்கிறார். அவர் அனைவரோடும் பொறுமையுடன் நடந்துகொள்கிறார். நம்முடைய கர்த்தர் அழிவை ஏற்படுத்துகிற இறைவன் அல்ல. அவர் தம்முடைய விருப்பப்படி சிலரை அரக்கத்தனமாக அழிவின் பாதையில் வழிநடத்துகிறவரும் அல்ல (சுரா அல்-ஃப(த்)திர் 35:8 மற்றும் அல்-முத்தஸ்ஸிர் 74:31). அதற்கு மாறாக நம்முடைய கர்த்தர் அனைத்து மனிதர்களும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் வேண்டும் என்று விரும்புகிறார் (1 தீமோத்தேயு 2:4).

பழைய ஏற்பாட்டில் சிலருடைய பெயர்களும் இடங்களும் “எல்” என்பதோடு தொடர்புள்ளதாயிருக்கின்றன. இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சாமுவேல், எலியா, எலியேசர் மற்றும் தானியேல் என்று பெயரிட்டார்கள். அவர்கள் தங்கள் நகரங்களுக்கு பெத்தேல், யெஸ்ரீல் மற்றும் இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். இவ்விதமாக அவர்கள் செய்யும்போது தங்களையும் தங்கள் நகரங்களையும் அனைத்தையும் கட்டுப்படுத்துகிற “வல்லமையோடு” இணைக்க விரும்பினார்கள். புதிய ஏற்பாட்டில் மக்கள் தனிச்சிறப்பான முறையில் இறைவனோடு இணைக்கப்படுகிறார்கள். இயேசு தம்முடையவர்களுக்கு வாக்களிக்கும்போது, “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்…” (அப்போஸ்தலர் 1:8) என்று கூறுகிறார். இறைவன் பாவிகளை புறக்கணிக்காமல் அவர்களைச் சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்தி அவர்களில் அவர் குடிகொள்கிறார்.

எல்லாம் வல்லவராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குத்தான் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய சர்வ வல்லமையோடு ஒப்பிடும்போது அணுகுண்டின் சக்திகூட ஒன்றுமில்லை. அவருடைய அதிகாரத்திற்கு முடிவில்லை.


02.5 - இஸ்லாத்தின் இறைவன் யார்?

எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக முஸ்லீம்கள் இறைவனை “அல்லாஹு அக்பர்” என்று அழைக்கிறார்கள். அதற்கு அல்லாஹ் மிகப் பெரியவர் என்று பொருளாகும். இதன் மூலமாக அல்லாஹ் அனைவரையும் விட “அழகானவர்” என்றும் “ஞானமுள்ளவர்” என்றும் கருதுகிறார்கள். ஆகவே, இஸ்லாத்தில் அல்லாஹ் மிகப் பெரியவராக, வலுவுள்ளவராக, தன்னுடைய அடிமைகளால் அணுக முடியாதவராக இருக்கிறார். மனிதர்களுடைய அறிவைக்கொண்டு யாரும் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் நம்மைப் புரிந்துகொள்கிறார். இஸ்லாத்தின் அல்லாஹ் மிகவும் தூரமானவராகவும் அறியப்படாதவராகவும் இருக்கிறார். அவரைக் குறித்த எந்த சிந்தனையும் குறைவுள்ளதாகவும் தவறானதாகவுமே இருக்கின்றது. மனிதர்களால் இறைவனை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். முஸ்லீம்கள் இறைவனுக்கு முன்பாக தாழ விழுந்து அவருக்குப் பயந்து அவரை வணங்குவதை மட்டுமே செய்ய முடியும்.

மகா பெரியவரும் அணுக முடியாதவருமாகிய இறைவனை அடைவதற்கு மனித முயற்சியினால் பாலத்தை உண்டாக்க சூஃபிக்கள் முயற்சித்தார்கள். ஆனால் குர்-ஆனே அனுபவ பூர்வமாக சாத்தியமற்ற தன்னுடைய புடோயின் தர்க்கவாதத்தின் (Bedouin logic) மூலமாக இவ்வித உறவை அனுமதிப்பதில்லை.

இஸ்லாத்தில் அல்லாஹ் காணப்படாதவராகவும் முஸ்லீம்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்தாதவராகவும் இருக்கிறார். முஸ்லீம்களையும் அல்லாஹ்வையும் ஒரு இஸ்லாமிய உடன்படிக்கையின் மூலம் இணைப்பதற்காக, முஹம்மது அல்லாஹ்வுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மத்தியஸ்தராகக் கருதப்படவில்லை. எந்த நிபந்தனையுமின்றி அனைத்து முஸ்லீம்களும் தங்களுடைய ஆண்டவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதையே அவர் கட்டளையிடுகிறார்.

இறைவனுடைய அடிப்படைத் தன்மையில் முஸ்லீம்கள் அவரைப் புரிந்துகொள்வதில்லை. அதன் விளைவாக தங்கள் பாவத்தைப் பற்றிய உண்மையான அறிவை அவர்கள் பெற்றிருக்கவோ, இறைவனுடைய அருளை உண்மையில் அனுபவித்திருக்கவோ அவர்களால் முடியாது. இஸ்லாத்தில் அல்லாஹ் தொழுதுகொள்ளப்படுவது அவர் முஸ்லீம்களை அவர்களுடைய பாவத்திலிருந்து விடுதலை செய்தார் என்பதற்காக அல்ல. வரவிருக்கும் தண்டனையிலிருந்து அவர்களை அவர் காப்பாற்றியிருக்கிறார் என்பதற்காக அவரைத் துதிக்கும்படியும் அல்ல. மாறாக, அடிமைகள் பயத்திலும் சந்தேகத்திலும் தங்களுடைய எஜமானுடைய காலில் விழுவதைப் போன்று தங்களுக்குத் தூரமானவரும், எல்லாம் வல்லவருமான அல்லாஹ்வை அவர்கள் புகழ்கிறார்கள். எப்போதும் தங்களுக்குப் பயத்தை உண்டாக்குகிறவரும் தங்களை ஒருபோதும் பரிசுத்தப்படுத்தாதவருமாகிய அல்லாஹ்வை இஸ்லாம் மேன்மையாகக் காண்பிப்பதால் அவர்கள் முஹம்மதுவைப் பின்பற்ற வேண்டும் என்று தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தங்களை இலவசமாக விடுவித்த விடுதலையாளருக்கு நன்றி செலுத்துவதில்லை, ஏனெனில் அவர்களை விடுவிக்கும் விடுதலையாளர் யாருமில்லை. முஸ்லீம்கள் வெளிப்பிரகாமான, சடங்கு சம்மந்தப்பட்ட தொழுகை முறையில் மட்டுமே எப்போதும் ஈடுபடுவதில் வியப்பேதும் இல்லை!

ஆனால் தம்மை வேதாகமத்தின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கும் உண்மையான கடவுள் தம்முடைய படைப்புக்கு தூரமானவர் அல்ல. “நான் உங்கள் இறைவனாகிய ஆண்டவர்” என்று அவர் சொல்லும்போது, அவர் நமக்கு அருகாமையில் வந்து, ஆதாமின் பிள்ளைகளோடு உடன்படிக்கை செய்கிறார்.


02.6 - இறைவனுடனான உடன்படிக்கை

“உங்களுடைய இறைவன்” என்ற சொற்றொடரில் வரும் “உங்களுடைய” என்ற பிரதிப் பெயர்ச்சொல் சொந்தத்தைக் குறிக்கும் வார்த்தையாகும். அதற்கு இறைவன் நாம் அவரைச் சொந்தம் கொண்டாடும்படி அனுமதிக்கிறார் என்று பொருள். ஒரு குழந்தை தன்னுடைய தகப்பனை நம்புவதைப் போல நாம் அவரை நம்பலாம். நாம் அவருக்கு எதிராகப் கலகம் செய்தவர்களாக இருந்தாலும், அவர் நம்மிடத்தில் இரங்கி நம்மைப் பார்த்து, “நான் உங்களுடையவர். நீங்கள் மனந்திரும்பி என்னிடத்தில் வந்து எனக்கு மட்டுமே உங்களை என்றென்றைக்குமாக ஒப்புக்கொடுக்க மாட்டீர்களா?” என்று கேட்கிறார்.

இது கடவுள் நம்மிடத்தில் கேட்கின்ற பெரிய கோரிக்கை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையுடன்தான் பத்துக் கட்டளைகள் ஆரம்பமாகிறது. இந்த உடன்படிக்கையை கடவுள் மட்டுமே மனிதர்களுக்குக் கொடுக்க முடியும். அதில் நம்மீதுள்ள அன்பையும் நம்முடன் அவர் இருப்பார் என்ற அவருடைய பிரசன்னத்தையும் நமக்கு உறுதிப்படுத்துகிறார். எங்குமிருக்கும் அவருடைய தன்மையை உணர்ந்து நம்முடைய விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் மூலமாக பதில்வினையாற்றும்படி அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பாவிகளுடன் அவர் செய்துகொள்ளும் உடன்படிக்கையில் அவர்களுக்குப் பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும், பாதுகாப்பையும, ஆசீர்வாதத்தையும் கொடுப்பதாக உறுதியளிக்கிறார். “இறைவன் நம் பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிர்த்து நிற்பவன் யார்?” (ரோமர் 8:31). அவர் எப்போதும் நம்முடன் இருந்து நம்முடைய பலவீனங்கள் மூலமாகச் செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலமாக அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார். மனிதனுடைய பாவம் கடவுளுடைய உண்மைத் தன்மையை அற்றுப்போகச் செய்துவிடாது. மனிதனுடைய பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரிசுத்தமுள்ள இறைவன் அதை நியாயம் தீர்ப்பார். அவருடைய பரிபூரண நீதியின்படி ஒவ்வொரு பாவமும் தண்டிக்கப்பட வேண்டியது. ஆனால் அவருடன் உடன்படிக்கை செய்துகொள்கிற அனைவருடைய பாவங்களையும் அவர் தம்முடைய கிறிஸ்துவின் நித்திய அன்பினால் சுத்திகரிக்கிறார். கிறிஸ்து நமக்காக மரணமடைந்ததன் மூலமாக அந்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து சிலுவையே தொடர்ச்சியான கிருபையின் அடையாளமாயிருக்கிறது.


02.7 - பிதாவாகிய இறைவன்

கிறிஸ்துவின் பிறப்பின் மூலமாக மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள பிரிவினை முடிவுக்கு வந்தது. அவர் தம்மைப் பின்பற்றுகிறவர்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், பிசாசின் சங்கிலிகளில் இருந்தும், மரணத்திலும் இறைவனுடைய தண்டனையிலிருந்தும் விடுவித்திருக்கிற காரணத்தினால் அவர்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல. அதற்காகவே அவர் மாம்சத்தில் தோன்றினார். நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக நமக்கு பரிகாரத்தை உண்டுபண்ணும் தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் எல்லாரும் சுத்திகரிக்கப்பட்டு, இறைவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். கிறிஸ்துவின் மூலமாக எல்லாம் வல்ல இறைவன் ஆவிக்குரிய நிலையிலும் சட்டப்படியும் நம்முடைய தகப்பனாக மாறிவிட்டார். நாம் பயங்கரமான பாவத்தைச் செய்தாலும் “நான் உன்னுடைய தகப்பனும் ஆண்டவருமாயிருக்கிறேன்” என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார்.

சிலுவையில் அறையப்பட்டு உயிரோடு எழுந்த கிறிஸ்துவை நேசித்து, அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவன் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொடுக்கிறார். மறுபடியும் பிறந்த இயேசுவின் விசுவாசிகள் தங்களுடைய பரலோக தகப்பனுடைய சாயலை உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் இனிமேல் பயத்திலும் ஆவிக்குரிய மரணத்தின் பிடியிலும் இருப்பதில்லை. பரிசுத்தமுள்ள இறைவன் கிறிஸ்துவோடு நம்மை இணைத்திருக்கிறார். அவர் வாழும் ஆலயமாக நம்மை மாற்றியிருக்கிறார். அவர் நம்முடைய தகப்பன் நாம் அவரது பிள்ளைகள். நாம் அவருக்கு உரியவர்களாயிருக்கிறோம். அவர் நமக்கு உரியவராக இருக்கிறார். கிறிஸ்து நம்முடைய இடத்தில் நமக்குப் பதிலாக மரணமடைந்த காரணத்தினால் இந்தப் புதிய உடன்படிக்கை நிறைவேறியது. அந்த நேரத்திலிருந்து ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் மூலமாக இறைவனோடு தனிப்பட்ட முறையில் உறவு கொள்ளும் அனுபவத்தைப் பெறுகிறான். அவன் விண்ணப்பிக்கும்போது வெற்றிடத்தை நோக்கி கத்துவதில்லை. மாறாக அவனுடைய தொழுகை இறைவனுடனான தொலைபேசி அழைப்பைப் போல நன்றி கூறுதல், பாவ அறிக்கை செய்தல், வேண்டுதல்களை ஏறெடுத்தல், விண்ணப்பங்களை ஏறெடுத்தல் ஆகியவற்றினால் நிறைந்திருக்கிறது. நம்முடைய பரலோக பிதா நமக்கு உண்மையுடன் செவிகொடுக்கிறார். அவர் நமக்குத் தகப்பனாக இருக்கிறார் என்பதால் நாம் அவரிடத்தில் தஞ்சமடைகிறோம். அவருடைய நீதியின் சால்வையினால் அவர் நம்மைப் போர்த்திப் பாதுகாக்கிறார். முஸ்லீம்களைப் போலல்லாது, உண்மைக் கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு அருகில் இருக்கிறார்கள். அவர்கள் இந்துக்களைப் போல கோடானு கோடி தெய்வங்களை வணங்குவதில்லை. பௌத்தர்களைப் போல மாபெரும் சூன்யத்திற்காக காத்திருப்பதுமில்லை.

இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக அவருடைய பிரசன்னத்தில் நாம் இருந்து, அவருடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபமடைய வேண்டும் என்பதற்காக கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களோடு தம்மை இணைத்திருக்கிறார். நம்மை நம்பிக்கையற்றவர்களாக விட அவர் விரும்பவில்லை. அவர் நம்மை இரட்சித்துப் புதுப்பிக்க திட்டம் செய்தார். “நான் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (லேவியராகமம் 11:45) என்று அவர் நமக்கு அழைப்பு விடுகிறார். இறைவனோடு நமக்கிருக்கும் ஐக்கியம் என்பது நமது அறிவுக்குரிய காரியம் மட்டுமல்ல. அந்த ஐக்கியம் நம்முடைய நடத்தையில் ஒரு மாற்றத்தை உண்டாக்குகிறது. இறைவன் தம்முடைய தரத்திற்கு நம்மை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிற காரணத்தினால் இறைவனோடு வாழும்போது நம்முடைய தன்மையும் மாற்றமடைகிறது. “பரலோகத்தில் இறக்கி உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரணராயிருங்கள்” (மத்தேயு 5:48) என்ற இயேசு சொன்னதைப் போல நாம் அவரைப் போல மாற வேண்டும் என்பதே பிதாவின் விருப்பம் ஆகும். இழந்து போன மனிதர்களாகிய நாம் இறைவனுடைய மனிதர்களாக மாற்றமடையும் செயல்முறையில் இந்தப் பத்துக் கட்டளைகள் ஒரு படிநிலையாகக் காணப்படுகிறது. உண்மையில், இறைவன் தம்முடைய கிருபையினால் நாம் விழுந்து போகாமல் இருக்கும்படி நம்மைக் காக்கும் தடுப்பரண்களாக இருப்பது இந்த பத்துக் கட்டளைகளே.

கிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொள்வது முற்றிலும் இயலாத காரியம் என்று நீங்கள் ஒருவேளை கருதலாம். இறைவன் பூரணராக இருப்பதைப் போல நாம் எவ்வாறு பூரணராக இருப்பது? “நீங்கள் தேவர்களைப் போல இருப்பீர்கள்” என்று சாத்தான் ஏவாளுக்கு முன்பாக வைத்த சோதனையைப் போல இது காணப்படுகிறதா? மனிதன் தன்னை இரட்சித்துக்கொள்ள முடியாது. தன்னுடைய முயற்சியினால் அவன் நீதிமானாக மாறவும் முடியாது. அனைத்து சுய நீதிகளும் சட்டங்களின் மீதே கட்டப்பட்டுள்ளது. அது கலகத்தையும் நியாயத் தீர்ப்பையும் உண்டுபண்ணுகிறது. ஆனால் நம்முடைய உண்மையான பரிசுத்தமாகுதல் என்பது பரலோகத்தின் இறைவன் நம்முடைய வாழ்வில் செய்யும் செயலாகும். அவரே நம்மை நீதியின் பாதையில் வழிநடத்துகிறவர். அனுதினமும் சுயத்தை வெறுக்க அவர் நம்மை அழைக்கிறவராகவும், நம்மில் உள்ள தீமையை வெறுப்பதற்கு நம்முடைய ஆத்துமாவில் நித்திய வல்லமையைத் தருகிறவராகவும் அவர் இருக்கிறார். அவருடைய வார்த்தையை நாம் வாசிக்கவும் அதன்படி செய்யவும் நம்மை நடத்துகிறார். சுயநலமுள்ளவர்களாகிய நம்மை வேலைக்காரர்களாக மாற்றும் அவருடைய அன்பை அவர் நமக்குக் கொடுக்கிறார். ஆவிக்குரிய வரங்கள் கிறிஸ்தவர்களில் மிகவும் வெளிப்படையாகக் காணப்பட்ட காரணத்தினால் முஹம்மது நபி அவர்களே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, அவர்கள் சிறப்பான மக்கள் என்றும், “பெருமையற்றவர்கள், இரக்கத்தையும் தயவையும் தங்கள் உள்ளங்களில் பெற்றவர்கள்” என்று கூறுகிறார் (சுரா அல்-மாயிதா 5:82 மற்றும் அல்-ஹதீத் 57:22).


02.8 - நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பு

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க இறைவன் விரும்புகிறார். பத்துக் கட்டளைகளுக்கு அவர் கொடுக்கும் முன்னுரையின் இரண்டாவது வாக்கியத்தில் நாம் நம்மை விடுவித்துக்கொள்ள முடியாது என்பதை தௌவுபடுத்துகிறார். நாம் விசுவாசித்துக் கீழ்ப்படியும்போது நம்மை விடுவிப்பவர் இறைவனே. மோசேயின் மூலமாக கசப்பான அடிமைத்தனத்திலிருந்து இறைவன் தம்முடைய மக்களை விடுவித்து, அவர்களோடு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அவர்கள் நீதியுள்ளவர்களாக இருந்த காரணத்தினால் அவர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தம்முடைய கிருபையினால் அவர்களைத் தெரிந்துகொண்டார். “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய ஆண்டவர் நானே” என்று அவர்களுக்கு அறிவித்தார்.

வெறும் பாறைகள் நிறைந்த மேற்கத்தைய மலைகளின் பகுதிகளிலிருந்து யாக்கோபின் பிள்ளைகள் 3,600 வருடங்களுக்கு முன்பாக கொடிய பஞ்சத்தின் காரணமாக யோர்த்தான் பள்ளத்தாக்கில் சென்று குடியேறினார்கள். பசிக்கொடுமையில் இருந்து தப்பிக்க அவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த செழிப்பான நைல் பள்ளதாக்கை அடைந்தார்கள். அங்கு அவர்களுடைய வாழ்வு இலகுவானதாக இருந்தது. ஒவ்வொருவருடனும் நைல் நதியின் வெள்ளம் தேசத்தைச் செழிக்கச் செய்திருந்தது. யாக்கோபின் பிள்ளைகள் சீக்கிரமாகவே பெருகியது எகிப்தியருக்கு அச்சுறுத்தலாகத் தோன்றியது. அந்நியர்களாகிய எபிரெய பணியாளர்களை எகிப்திய மன்னர்களான பார்வோன்கள் அடிமைகளாக்கி, அவர்களை இரக்கமற்ற முறையில் வதைத்தார்கள். எபிரெயர்களில் சிலர் தங்கள் தந்தையருடைய இறைவனை நினைத்து, அவர் தங்கள் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். அவர்கள் நன்றாக இருந்த காலத்தில் தங்கள் இறைவனை மறந்திருந்தார்கள். ஆனால் ஏழ்மையும் தேவைகளும் தங்களுடைய படைப்பாளியும் விடுதலையாளருமாகிய இறைவனை நோக்கி அவர்களைக் கதறச் செய்தது. அவர்களுடைய கதறலைக் கேட்டு இறைவன் மோசேயை அனுப்பினார். மோசே பார்வோனுடைய அரச மாளிகையில் வளர்க்கப்பட்டவர். அவரை இறைவன் இந்த மக்களை விடுவிக்கும் கருவியாகப் பயன்படுத்துவதற்கென்று முன்பாகவே அரசனுடைய மாளிகையிலும் வனாந்தரத்திலும் ஆயத்தப்படுத்தியிருந்தார். மோசேக்கு இறைவன் ஒரு எரிகிற முட்செடியில் தோன்றினார். ஆனால் அந்த முட்செடி கருகாமல் இருந்தது. இறைவன் மோசேக்கு “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று தன்னை வெளிப்படுத்தினார். “நான் மாறாதவராக இருக்கிறேன். எப்போதும் உண்மையுள்ளவராக இருக்கிறேன். நீங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினால் என்னைக் கண்டுகொள்வீர்கள்” என்று சொன்னார் (எரேமியா 29:13).

எகிப்தியர்களின் இறைவனாகக் கருதப்பட்ட மாபெரும் பார்வோனிடத்தில் ஆண்டவர் மோசேயை அனுப்பி, எபிரெய அடிமைத் தொழிலாளிகளை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நைல் பள்ளத்தாக்கின் தலைவனாகிய பார்வோனோ மலிவுவிலையில் கிடைத்திருக்கும் இந்தக் கூலிக்காரர்களை விடுவிக்க விரும்பவில்லை. அவன் தன்னுடைய மனதை மேலும் மேலும் கடினப்படுத்தினான். அவனுக்கு எதிராக இறைவன் கொடிய நோய்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் தொடர்ந்து அனுப்பவில்லை என்றால் அவன் ஆபிரகாமுடைய சந்ததியரை ஒருபோதும் போக விட்டிருக்க மாட்டான். அவர்கள் தங்களுடைய சுய நீதியின் காரணமாக அல்ல, அவர்கள் இறைவனை நம்பிக் கீழ்ப்படிந்த காரணத்தினாலேயே எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். அவர்களிடத்தில் கூர்மையான ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. அவர்களுக்காக அடிக்கப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் காப்பாற்றப்பட்டவர்களாக இரவு நேரத்தில் அவர்கள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனார்கள். அவர்களுடைய குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது. அவர்கள் அந்த ஆட்டுக்குட்டியின் இறைச்சியை உண்டுவிட்டு, இறைவனுடைய வல்லமையில் தப்பிப் போனார்கள். அவர்கள் செங்கடலைக் கடந்ததும், அந்த செங்கடலிலேயே அவர்களுடைய எதிரிகள் அழிக்கப்பட்டதும் அவர்களுடைய விடுதலையின் கடைசி வெற்றியாக இருந்தது. இன்றும் கெய்ரோவிலுள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் நுரையீரலில் பாசியுடன் உள்ள ஒரு எகிப்திய மம்மி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அது செங்கடலில் தாண்டு போன அந்த பார்வோனுடைய மம்மிதான்.

இறைவன் தங்களுக்குத் துணையாக இருப்பதால்தான் தாங்கள் யுத்தங்களில் வெல்வதாக முஸ்லீம்கள் கூறுகிறார்கள். ஆனாலும் பத்ரு போரில் முஹம்மது மெக்காவின் வியாபாரிகளுடன் யுத்தம் செய்து வெற்றி பெற்றது இறைவன் அவர்களுக்கு உதவிசெய்ததால் அல்ல, அவர்களிடத்தில் இருந்த ஆயுத பலத்தினால். அவருடைய சீடர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்தார்கள். அதனால் அவர்கள் தங்கள் எதிரிகளை மேற்கொண்டது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இங்கே மோசே கத்தியின்றி இரத்தமின்றி இறைவனுடைய அருளால் பெற்றுக்கொண்ட இந்த வெற்றி, இஸ்லாத்தில் ஜிகாத் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அது அனைத்து மக்களும் பங்குகொள்ள வேண்டிய போராக இருக்கிறது. கொடிய போரில் கொலைகள் புரிந்து பிறகு அதற்குக் கூறப்படும் நியாயம்: “நீங்கள் அல்ல, அல்லாஹ்வே அந்தக் கொலைகளைப் புரிந்தான். அவர்கள் மீது நீங்கள் அம்பெய்தால் அம்பெய்தது நீங்கள் அல்ல, அல்லாஹ்வே அம்பெய்தான்” (சுரா அல்-அன்ஃபால் 8:17).

ஆண்டவர் அற்புதமாக இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, கடுமையான வெப்பமான வனாந்தரத்தின் மூலமாக நடத்திக்கொண்டு வந்து, அவர்களுக்கு ஒரு விருந்தை ஆயத்தம் செய்தார். அவர்கள் தம்முடன் இருக்கும் உறவில் பரிசுத்தமடைவதற்காக அவர்களோடு ஒரு தெய்வீக உடன்படிக்கையை ஏற்படுத்த சித்தம் கொண்டார். அவர்கள் தமக்கு ஆசாரி இனமாக செயல்பட வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அனைத்து மனிதர்களுக்கும் ஒப்புரவாகுதலின் பணியை அவர்கள் இறைவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நின்று செய்ய வேண்டும். இந்தப் பத்துக் கட்டளைகள் உடன்படிக்கையின் புத்தகத்தின் மையமாகவும் ஆண்டவருடனான உறவுக்குரிய தங்க விதிகளாகவும் காணப்பட்டன. உடன்படிக்கைப் பெட்டிக்குள் அந்த கட்டளைகள் எழுதப்பட்ட இரண்டு பலகைகளும் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமே இறைவனுடைய இருப்பிடமாகும்.


02.9 - புதிய ஏற்பாட்டின் இரட்சிப்பும் பத்துக் கட்டளைகளின் நோக்கமும்

3,300 வருடங்களுக்கு முன்பாக யாக்கோபின் சந்ததிக்கு இறைவன் கொடுத்த அற்புதமான விடுதலையையும் புதிய உடன்படிக்கையில் இயேசு நிறைவேற்றி முடித்த இரட்சிப்பையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, “உங்கள் இறைவனாகிய ஆண்டவரும் தகப்பனும் நானே, நான் உங்களை நித்தியமாக மீட்டுக்கொண்டேன்” என்று பத்துக் கட்டளைகளின் ஆரம்பத்தை சுருக்கிக் கூறலாம்:

இயேசு இவ்வுலகத்திற்கு வந்து, நம் ஒவ்வொருவருடைய பாவங்களையும் சுமந்து, இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக நமக்காக மரணமடைந்தபடியால், இறைவனுடைய இந்த இரக்கத்தை நாம் அனைவருக்கும் அறிவித்து, அனைத்து மக்களுக்கும் இரட்சகரும் ஆண்டவரும் இயேசுவே என்று பிரசங்கம் செய்கிறோம். கிறிஸ்து பாடுபட்டு சிலுவையில் மரணமடைந்த காரணத்தினால், பாவத்தின் சங்கிலியை முறித்து, சாத்தானுடைய அதிகாரத்தை மேற்கொண்டார். அவர் இறைவனுடைய கோபத்தை சுமந்து தீர்த்து, நமக்காக நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். நம்முடைய இறுதி இரட்சிப்பு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நமக்கு நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் நாம் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய மீட்பை விசுவாசத்தோடு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இறைவனுடைய இரட்சிப்பு எல்லா மக்களுக்கும் ஆயத்தமாக்கப்பட்டு காத்துக்கொண்டிருக்கிறது. எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் நாம் ஒரு தனிச்சிறப்பான முறையில் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையான இரத்தம் சிந்தப்பட்டது. ஆனால் அது எதிரியினுடைய இரத்தமல்ல, நமக்காகத் தம்மையே பலியாகக் கொடுத்த இறைமகனுடைய இரத்தமே அது.

பத்துக் கட்டளைகளை கைக்கொள்வதினால் நம்மை நாமே இரட்சித்துக்கொள்ளவில்லை. அது நியாயப்பிரமாணத்தின் நோக்கம் அல்ல. மாறாக, இரட்சிக்கப்பட்ட நாம் இலவசமாகப் பெற்றுக்கொண்ட இரட்சிப்புக்காக எவ்விதமாக நன்றி செலுத்துவது என்று அது நமக்குப் போதிக்கிறது. பாவம், சாத்தான் மற்றும் இறைவனுடைய கோபம் ஆகியவற்றிலிருந்து ஒருவன் மனித முயற்சியினால் தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ள முடியும் என்று கருதுவானானால் அவன் மிகப்பெரிய தப்பெண்ணம் கொள்கிறான். அப்படிப்பட்டவன் மேலும் மேலும் தன்னைப் பாவத்தின் அடிமைத்தனத்திற்கு ஒப்புக்கொடுக்கிறான். பத்துக் கட்டளைகள் நமக்கு பரிசுத்தமாகுதலையும் உண்டுபண்ண முடியாது. மாறாக, அது நம்மை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது. விசுவாசத்தின் கீழ்ப்படிதலுக்குள் நடத்தி, நமக்காக நிறைவேற்றப்பட்ட இரட்சிப்புக்காக மகிழ்ச்சியடையும்படி வழிநடத்துகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகப் பிதாவை நாம் மகிமைப்படுத்தும்போது மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறோம். கடவுள் நம்மை நியாயந்தீர்க்கவோ, சபிக்கவோ, நியாயப்பிரமாணத்தை நம்மீது பாரமாகச் சுமத்தவோ இறைவன் விரும்பவில்லை. நிச்சயமாக இல்லை! நியாயப்பிரமாணம் வெளிப்படுத்தப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே நம்முடைய இரட்சிப்பை இறைவன் திட்டமிட்டார். இரட்சிக்கப்பட்டவர்களை மனந்திரும்புதலுக்குள் நடத்தவும் கலகம் செய்கிறவர்களை பரிசுத்த ஆவியின் மென்மையில் கீழ்ப்படிகிறவர்களாக மாற்றவுமே அவர் தம்முடைய நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். ஆகவே நியாயப்பிரமாணத்தின் நோக்கம் பிதாவாகிய இறைவனோடு ஐக்கியப்படுவதே தவிர இறுதி நியாயத்தீர்ப்பில் நாம் அழிக்கப்படுவதல்ல.

நாம் எப்போதாவது அடிமைகளாக இருந்திருந்தால் நியாயப்பிரமாணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அடிமைகள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஆரோக்யமாக இருந்தாலும் நோயுற்றிருந்தாலும், வாலிபராக இருந்தாலும், வயோதிபராக இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டும். தாங்க முடியாத கஷ்ட சூழ்நிலைகளிலும் கடுமையாக பணிசெய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அடிமைகளுக்கு எண்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய பெயர் என்ன என்றுகூட யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

இப்படிப்பட்ட பரிதாப நிலையிலும் வலியிலும் இருந்து இறைவன் தம்முடைய மக்களை விடுவித்தார். இந்தக் காரணத்தினால், விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தாங்கள் அனுபவிக்கும் விடுதலையில் எப்படி ஞானமாகவும் தெளிந்த புத்தியுடனும் நடந்துகொள்வது எப்படி என்பதை அறிந்துகொள்வதற்காக கைநூலாக நாம் பத்துக்கட்டளைகளை கருதுகிறோம். நாம் அனுபவிக்கும் சுதந்தரத்தில் நம்மைப் பாவம் செய்யத் தூண்டும் பல காரியங்கள் இருக்கின்றன. நாம் இறைவனின்றி வாழ்ந்தால் சீக்கிரமாகவே நம்முடைய உள்ளுணர்வுகளுக்கும் பாவங்களுக்கும் அடிமைகளாகிவிடுவோம். ஆயினும் இறைவன் தம்முடைய சாயலில் மனிதனைப் படைத்திருக்கிறார். இறைவனின்றி மனிதனால் நீதியுள்ள வாழ்க்கை வாழ முடியாது. இறைவனின்றி பூரணமான விடுதலையில்லை.

மனிதன் பாவத்தில் வாழ்ந்தால் அவன் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான். போதைப் பொருள், கெட்ட எண்ணங்கள், திருடுதல், சோம்பேறித்தனம், பாலியல் வல்லுறவு, கொடூரம் ஆகியவை அவனுடைய சிறைச்சாலையாக மாறிவிடும். சிலர் வெளியில் தெரியாத இரகசிய அடிமைத்தனங்களாகிய சாராயம், புகைப்பிடித்தல், போதைப் பொருள் அடிமைத்தனம், வழக்கமாகப் பொய் சொல்லுதல், பில்லி சூனியம், தீய ஆவிகளுக்கு இடம் கொடுத்தல் ஆகிய தந்திரமான வேதனைகளில் இருக்கிறார்கள். ஆனால் இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களை விடுவித்து, இறைமக்களுக்குரிய பரிசுத்தமான விடுதலை வாழ்வை அவர்களுக்குக் கொடுக்கிறார். கிறிஸ்துவே வெற்றிவீரர், இரட்சிக்கும் ஆண்டவர், ஞானமுள்ள வைத்தியர், நல்ல மேய்ப்பன், உண்மையுள்ள நண்பன். அவரிடத்தில் வருகிற அனைவரும் அவருடைய ஆலோசனையையும் ஆதரவையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

பத்துக் கட்டளைகள் கிருபையினால் விடுவிக்கப்பட்டவர்களைக் காக்கும் மதிற் சுவராக இருக்கிறது. இறைவன் அவர்களுடைய தகப்பனாகவும், கிறிஸ்து அவர்களுடைய இரட்சகராகவும், பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய தேற்றரவாளனாகவும் மாறியிருக்கிறார்கள். அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே இறைவனை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் நன்றியோடும் சமாதானத்தோடும் அவருக்குள் உண்மையான விடுதலையை அனுபவித்திருக்கிறார்கள். பத்துக் கட்டளைகள் அவர்களுடைய வாழ்வின் கஷ்ட நேரங்கள் அனைத்திலும் அவர்களின் துதியின் கீதத்தை உருவாக்கும் இறைவழிகாட்டுதலின் அடையாளமாக மாறியிருக்கிறது (சங்கீதம் 119:54).

www.Waters-of-Life.net

Page last modified on March 16, 2015, at 12:35 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)