Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 071 (Problems of the Church of Rome)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

8. ரோம் சபையின் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் (ரோமர் 14:1-12)


ரோமர் 14:1-12
1 விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள். 2 ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். 3 புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. 5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன் தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். 6 நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான். 7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. 8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். 9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். 10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 12 ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.

தடைசெய்யப்பட்டவை, அனுமதிக்கப்பட்டவை குறித்து கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏனெனில் இயேசு இக்காரியத்தில் சட்டம் எதையும் உருவாக்கவில்லை. நமக்கு முழுமையான இரட்சிப்பு, நீதிமானாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் வல்லமையை தந்துள்ளார். அனைவரையும் நேசித்து வாழ்வதற்கு சட்டங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன.

எனவே ஒரு சபைக்கும், இன்னொரு சபைக்கும் வேறுபட்ட கருத்துகள் இருப்பதை நாம் காண்கிறோம். சிலர் பன்றி இறைச்சியை சாப்பிடுவது பாவம் என்கிறார்கள். இயேசு கூறுகிறார், “ வாய்க்குள் போவது அல்ல, வாயில் இருந்து வெளிவருவதே மனுஷனை தீட்டுப்படுத்தும். இருதயத்தில் இருந்து பொல்லாத சிந்தனைகள், களவு, விபசாரம், வேசித்தனம், திருட்டு, பொய் மற்றும் தூஷணங்கள் புறப்பட்டு வரும். இவைகளே மனிதனை தீட்டுப்படுத்தும். பன்றி இறைச்சி சாப்பிடுவது மனிதனுக்கு, அவன் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். ஆனால் அவனது ஆவிக்குரிய வாழ்வை தீட்டுப்படுத்தாது.

சில கிறிஸ்தவர்கள் புகை பிடிக்கிறார்கள். மற்றவர்கள் அதை கொடிய பாவமாக கருதுகிறார்கள். புகைபிடிப்பது அவரையும், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது. ஆனால் அது ஆவியை தீட்டுப்படுத்துவதில்லை. அது கொடிய விஷமாக அவனது உடல் நலத்தை பாதிக்கிறது. ஆகவே புகைப்பிடித்தல் என்ற செயலில் பாவம் இல்லை. ஆனால் புகை பிடிப்பவன் மற்றவர்களைப் போல பாவம் நிறைந்தவனாக இருக்கிறான்.

சிலர் ஆல்கஹால் மற்றும் போதை மருந்துகளை தடை செய்கிறார்கள். ஏனெனில் குடிப்பவன் அதற்கு அடிமையாகிறான். எனவே ஒவ்வொருவரும் அதற்கு விலகி இருக்க வேண்டும் என்று நாம் அறிவுறுத்துகிறோம். ஆல்கஹாலை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வது ஒரு மருந்தாக இருக்கலாம். இறைவனால் நேரடியாக கொடுக்கப்பட்ட ஒரு ஆரோக்கிய பானம் புதிதான தூய்மையான நீர் ஆகும்.

அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்தில் சபைகளில் காணப்பட்ட முக்கியமான கேள்வி இதுதான். “விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை உண்பது பாவமா?” சிலர் அதை ஆசையின் மிகுதியினால் உட்கொண்டார்கள். சிலர் அதை வெறுப்புடன் பார்த்தார்கள். இரு குழுவினரும் சரிதான் என்று பவுல் கூறினான். விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது ஆவி அல்ல, அது ஓர் மாமிசம். ஏனெனில் சில அசுத்த ஆவிகளின் தாக்கம் அதில் இருப்பதாக சிலர் நினைத்தார்கள். ஆனால் இயேசு தமது இரட்சிப்பிற்குள் அனைவரையும் உள்ளடக்கினார். அவர்கள் திருச்சட்டத்திற்கு கீழானவர்கள் அல்ல, இரண்டாம் தரமான, முட்டாள் தனமான காரியங்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

சில விசுவாசிகள் வெள்ளிக்கிழமையிலும், சிலர் ஞாயிற்றுக் கிழமையிலும் ஓய்வுநாளை அனுசரிக்கிறார்கள். பவுல் அவர்களிடம் கூறுகிறான். நீங்கள் அனைவரும் செய்வது சரி தான். ஏனெனில் இயேசு நாட்களை புனிதப்படுத்தவில்லை. மக்களை அவர் பரிசுத்தப்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும், எல்லா நேரத்திலும் நீ இறைவனை ஆராதிக்கலாம், வேண்டுதல் ஏறெடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட மணிக்குத் தான் வேண்டுதல் செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லை. ஒவ்வொரு நாளும், எந்த நேரத்திலும், அனுகூலமான சமயத்தில் விண்ணப்பம் ஏறெடுக்கலாம்.

பிறரை அலட்சியமாக எண்ணக்கூடாது. பிறரை நியாயந்தீர்க்கக் கூடாது. இயேசு கூறுகிறார், “நீங்கள் நியாயந்தீர்க்காதபடிக்கு பிறரை நியாயம் தீர்க்காதிருங்கள்”. எனவே விசுவாசத்தில் பலமுள்ளவன் பலவீனனை அலட்சியமாக எண்ணக்கூடாது. அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். பலவீனனுடன் அமர்ந்து, அவனை உற்சாகப்படுத்தி, அவனுக்கு உதவி செய்ய வேண்டும். அதே சமயத்தில் பலவீனரும் விசுவாசத்தில் பலமுள்ளவர்களை ஏளனமாக பேசக் கூடாது. அவர்களை நேசிக்க வேண்டும். ஏனெனில் இயேசு அனைவரையும் நேசிக்கிறார்.

பவுல் ஒவ்வொருவருக்கும் ஒரு காரியத்தை உறுதிப்படுத்தினான். “நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல, நாம் ஆண்டவராகிய இயேசுவிற்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தால், ஆண்டவருக்காக வாழ்கிறோம். மரித்தால் ஆண்டவருக்காக மரிக்கிறோம். எனவே நாம் வாழ்ந்தாலும், மரித்தாலும், புசித்தாலும், அல்லது குடித்தாலும் நமக்குள் புதிய ஜீவனைத் தந்துள்ள ஆண்டவருக்கு நாம் சொந்தமானவர்கள்.

சபைக்குள் பிறரை நியாயம் தீர்க்கும் ஆவி தீவிரமாய் செயல்பட்ட போது பவுல் பலமுள்ளோர் மற்றும் பலவீனரை எச்சரித்துக் கூறினான். எச்சரிக்கையாயிரு! நாம் அனைவரும் நித்திய நியாயாதிபதி முன்பு நிற்க வேண்டும். பிறரை நியாயந்தீர்க்காதே! உன்னை நீயே நியாயந்தீர்த்துக் கொள். உனது பாவங்களை அறிக்கையிடு. கிறிஸ்துவின் நாமத்தினால் அவைகளை மேற்கொள். மற்றவர்கள் பாவங்களில் இருந்து அவர்களை விடுவிக்க எண்ணினால், பொறுமையுடன், அன்பினால் கட்டப்பட்ட விண்ணப்பங்களுடன் பேசு. மற்றவர்களை விட நீ சிறந்த நீதிமான் அல்ல என்பதை நினைத்துக்கொள். மற்றவர்களின் விசுவாசத்திற்கு தடை ஏற்படாதபடி ஒவ்வொரு செயலையும் கவனித்து செய்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, ஆண்டவரே உமது பரிசுத்தத்தை வைத்து எங்களை அளவிடும் போது, எங்களிடம் கனம், நீதி மதிப்பு என்று எதுவுமே இல்லை. எங்கள் குறைவுகளுக்காக எங்களை மன்னியும். பிறரை நியாயம் தீர்க்காதபடி எங்களுக்கு உதவும். அனைவரையும் நேசிக்கவும், எங்களை தாழ்த்தவும் எங்கள் அன்பை பெலப்படுத்தும்.

கேள்வி:

  1. வாழ்வில் உள்ள இரண்டாம் தரமான காரியங்களைக் குறித்து கிறிஸ்துவை பின்பற்றுவோர் கொண்டுள்ள வேறுப்பட்ட கருத்துக்களைக் குறித்து நாம் எப்படி எண்ண வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 06:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)