Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 104 (From Tyre to Caesarea)
This page in: -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

11. தீருவிலிருந்து செசரியாவுக்கு பயணம் (அப்போஸ்தலர் 21:7-14)


அப்போஸ்தலர் 21:7-14
7 நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தைவிட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.8 மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியா பட்டணத்துக்குவந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.9 தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். 10 நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.12 இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.13 அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.14 அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.

தென்பக்கமாக இன்னொரு கப்பலில் பவுல் பயணம் செய்தான். அக்கா என்ற இடத்தில் ஒரு நாள் நின்று, அங்குள்ள சகோதரர்களை வாழ்த்தினான். பின்பு செசரியாவை நோக்கி தனது பயணத்தை அவன் தொடர்ந்தான். ஆண்டவர் முதலாவதாக தமது பரிசுத்த ஆவியை பெருந்திரளான புறஜாதி மக்கள் மீது பொழிந்தருளியது இந்த பட்டணம் தான். இது பாலஸ்தீனாவில் ரோமர்களின் தலைமையகமாக இருந்தது. புறஜாதிகளின் இந்த சபையைக் குறித்து நாம் எதுவும் வாசித்து அறிய முடியாமலிருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் மற்ற பட்டணங்களுக்கு போய் குடியேறியிருக்க வேண்டும். ரோம அதிகாரிகள் தங்கள் தகுதிநிலைக்கு ஏற்ப மற்ற பகுதிகளில் பணிமாற்றம் செய்யப்படும் இடைப்பட்ட குறுகிய காலத்தில் வந்து தங்கியிருக்கும் ரோம மையமாக செசரியா காணப்பட்டது.

உற்சாகமான நற்செய்தியாளர் பிலிப்பு செசரியாவில் வாழ்ந்தார். தெரிந்துகொள்ளப்பட்ட ஏழு உதவிக்காரர்களில் பிலிப்புவும் ஒருவன். அவனது உடன் நற்செய்தியாளர் ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட போது, வைராக்கியமிக்க சவுலை விட்டு தூரமாய் செல்லும்படி, எருசலேமில் இருந்த வெளியேறியவன் இவன். இப்போது அவனுடைய வீட்டிற்கு கனத்திற்குரிய விருந்தாளியாக பவுல் வருகிறான். இறைவனுடைய அன்பின் மூலமாக கிறிஸ்துவிற்குள் சத்துருவாய் இருந்தவன் சகோதரனாக மாறுகிறான். அந்த இரண்டு சகோதரர்களும் கிறிஸ்துவின் கிருபையை எண்ணி எவ்விதம் நன்றி செலுத்தியிருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். லூக்கா அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதும்படி, நிச்சயம் இந்த சாட்சியிடமும் சபையின் ஆரம்ப காலத்தை சுற்றி நடந்த வரலாற்று நிகழ்வுகளை கேட்டிருப்பான். புறஜாதிகளுக்கு நற்செய்தியை பிரசங்கிப்பதில் பிலிப்பு முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் ஏற்கெனவே கந்தாகே என்பவளுக்கு மந்திரியாய் இருந்த எத்தியோப்பியனுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தான். (மற்ற எந்த அப்போஸ்தலருக்கும் முன்பு). அநேக இடங்களில் அவருடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கும்படி கிறிஸ்து அவனைப் பயன்படுத்தினார். அநேக நாட்கள் பவுல், பிலிப்புவின் வீட்டில் தங்கியிருந்தான். அங்கே ஆவிக்குரிய ஐக்கியமும், மிகப்பெரிய மகிழ்ச்சியும் காணப்பட்டது.

இந்த புகழ்வாய்ந்த நற்செய்தியாளர் திருமணம் செய்தார். திருமணம் என்பது வெட்கப்பட வேண்டிய காரியம் அல்ல. அது ஆண்டவரிடம் இருந்து வரும் ஈவு. அவனுடைய நான்கு குமாரத்திகள் விசுவாசிகள் ஆவார்கள். அவர்கள் மெய்யான தீர்க்கதரிசன ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். அவர்கள் மூலமாக பரிசுத்தஆவியானவர் இறைவனுடைய சித்தத்தை வல்லமையுடன் ,தெளிவுடன் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் சபையில் பேசினார்கள். அவனுடைய வீடு முழுவதும் பிதாவின் ஆசீர்வாதம் ஆளுகை செய்தது.

இந்த சபையை சந்திக்க அகபு என்கிற தீர்க்கதரிசி யூதேயாவில் இருந்து வந்தான். லூக்கா இதைக் குறிப்பிடுகிறான். (அப்போஸ்தலர் 11:28) ஆரம்பகால தீவிர வளர்ச்சி பெற்ற சபையில் அவன் தீர்க்கதரிசன ஊழியம் செய்தான். பவுல் கடல் வழியாக எருசலேமிற்கு வந்து கொண்டிருப்பதை ஆண்டவருடைய ஆவியானவர் அவனுக்கு காண்பித்தார். பவுல் எருசலேமில் காத்திருக்கும் பாடுகளுக்கு ஆயத்தமாயிருக்கும்படி, அகபு அப்போஸ்தலனை எச்சரித்தான். யூதர்கள் பவுலைக் கட்டி மரணத்தீர்ப்புக்கு ஒப்புக்கொடுப்பார்கள் என்பதை தீர்க்கதரிசி தெளிவாக உரைத்தான். இயேசுவையும் இவ்விதமாக அவமானப்படுத்தும்படி புறஜாதிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்தவர்கள் இவர்கள். தீர்க்கதரிசிகளின் முத்திரையாயிருக்கும் கிறிஸ்து தாமே பவுலுக்கு, அவனது பாடுகளின் வழியைக் குறித்து முன்னறிவித்தார். பவுலுக்கு ஏற்கெனவே சபையின் மூலம் பாடுகள் முன்னுரைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துவில் இருந்த தீர்க்கதரிசன ஆவி அநேக விசுவாசிகளுக்குள் கடந்து சென்றது.

செசரியா சபையின் கண்களுக்கு முன்பாக பவுலின் வாழ்வில் நேரிடப் போவது இறைவனால் வெளிப்படுத்தப்பட்டபோது, பேதுருவைப் போல சகோதரர்கள் செயல்பட்டார்கள். ஆண்டவர் சிலுவைக்கு செல்வதை பேதுரு இதற்கு முன்பாக தடுக்க முயற்சித்திருந்தான். ஆனால் பவுலும் மற்ற எல்லா உண்மையான தீர்க்கதரிசிகளும், ஆண்டவருடைய சித்தத்தை அறிந்திருந்தார்கள். அவன் இறைவன் நோக்கம் நிறைவேற ஒப்புக்கொடுத்திருந்தான். பாடுகளில் கிறிஸ்துவின் முன்மாதிரியை அவன் பின்பற்றினான். இந்த உலகத்தில் இருந்து தனது ஊழியத்தை முடித்து கடந்து செல்ல ஆயத்தமாக இருந்தான். சபைகளை விட்டுப் பிரியாதிருப்பதை விட, திட்டம் தவறாமல் நிறைவேறுவதை அவன் தெரிந்துகொண்டான். இருப்பினும் அவனது இருதயம் நொறுங்குண்டதாயிருந்தது. விசுவாசத்தினால் கீழ்ப்படிதல் மூலம் ஆண்டவராகிய இயேசு மகிமைப்படுவதை அவன் விரும்பினான்.

இந்த நிகழ்வின் போது ஆரம்பகால சபையின் உபதேசத்தை பவுல் பேசினான். மனிதனாகிய இயேசு ஆண்டவர் என்று உரைத்தான். இறைதன்மையின் முழுமையும், சரீரத்தில் மனித தன்மையுடன் தாழ்மையுடன் மறைந்திருப்பதை இந்த இரண்டு பெயர்கள் மூலம் நாம் காண்கிறோம். இந்த மகிமையின் ஆண்டவர் பவுலை மேற்கொண்டிருந்தார். பவுல் தனது வாழ்வு முழுவதும் அவரை ஆராதிக்கிறவனாக மாறினான். கடைசி நிமிடம் வரை அவன் ஆண்டவரை பின்பற்ற விரும்பினான். இறைவனின் ஆட்டுக்குட்டியைப் போல அவனும் ஆயத்தமாக இருந்தான். அவனைச் சுற்றியிருந்த கடினமான சோதனைகள் மத்தியிலும் அவன் உறுதியாக நின்றான். மனித எண்ணங்களுக்கு பவுல் ஒப்புக்கொடுக்கவில்லை என்பதை எல்லா சபையாரும் உணர்ந்தார்கள். ஆண்டவருடைய சித்தத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவன் நிறைவேற்ற விரும்பினான். இதைத் தொடர்ந்து நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த நிச்சயம் உந்துசக்தியாக இருந்தது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் மெய்யான இறைவன், மெய்யான மனிதன். நீர் எங்களை மரணம், பயம் மறறும் பொறாமையில் இருந்து விடுவித்திருக்கிறீர். நீர் எங்களை பலப்படுத்துகிறீர். எங்கள் இறுதிப் பயணம் வரை நீர் எங்களை பலப்படுத்துவீர். அப்போது நாங்கள் சோர்வு, பாடுகளின் பயணத்தில் நிச்சயத்துடன் கடந்து செல்வோம். உமது மகிமையுள்ள நாமத்தை சாட்சி பகர்வோம்.

கேள்வி:

  1. எருசலேமில் தனக்கு காத்திருந்த துன்பங்களுக்காக ஏன் பவுல் பயப்படவில்லை.

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:18 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)