Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 009 (Outpouring of the Holy Spirit at Pentecost)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

5. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதல் (அப்போஸ்தலர் 2:1-13)


அப்போஸ்தலர் 2:1-4
1பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

சூரியன் பூமியின் மீது விழுந்தால் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்? வாயுக்களால் ஆன இந்த மிகப்பெரிய உருண்டை நம்முடைய பூமிக்குச் சற்று அருகில் வந்தால்கூட, பூமி அதிலுள்ள அனைத்துப் படைப்புகளோடும் அழிந்துபோய்விடும். அப்படியிருக்கும்போது பூமியின் மீது சூரியன் விழுவதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் ஆவியாகிவிடுவோம். இந்தச் சூரியன் நம்மிடத்தில் வராவிட்டாலும் அதைப் படைத்தவரே அக்கினிச் சுழல்காற்றில் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் உலகத்திலிருப்பவர்களை நியாயம் தீர்க்கும்படி வராமல், அவருக்காகக் காத்திருந்தவர்கள்மேல் இரக்கம் காண்பிக்கும்படி வந்தார். இறைவன் மனிதனிடத்திற்கு வருகிறார். இதைப் புரிந்துகொள்பவர்கள் அவரை ஆராதனை செய்கிறார்கள். மேலும் இறைவன் மனிதனில் வாழ்கிறார். இந்த உண்மை மனிதர்களாகிய நமது புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. திருச்சபையின் தோற்றத்தைக் குறித்த இந்த வரலாற்றுக் குறிப்பை கவனமாக வாசித்துப் பாருங்கள். தீமை நிறைந்த இந்த உலகத்திற்கு இறைவனுடைய அன்பும், கிருபையும், பொறுமையும் எவ்வாறு வந்தது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.

யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்காவிற்குப் பிறகு ஐம்பது நாட்கள் சென்று அவர்கள் கொண்டாடும் பழங்காலப் பண்டிகைதான் பெந்தகொஸ்தே பண்டிகையாகும். அது கோதுமை அறுவடைக்காக நன்றி செலுத்தும் ஒரு தருணமாகும். கிறிஸ்து ஒரு கோதுமை மணியைப் போல விழுந்து தம்முடைய உயிரைக் கொடுத்தார். அவருடைய உயிர்த்தெழுதல், இறைவனுக்குப் படைக்கப்படும் முதற்பலன்களைப் போல, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் அவருக்குப் பிரியமான பலியாகக் காணப்பட்டது. சீடர்களும் தங்கள் கர்த்தருக்காகக் காத்திருந்து விண்ணப்பிக்கும்போது இறைவனுடைய முழுமையான அறுப்பின் முதற்பலன்களாகவே காணப்பட்டனர். ஆவிக்குரிய அறுவடை இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் கோதுமை மணியாகிய கிறிஸ்துவினால் விளைந்த பலனாயிருக்கிறோம். நாம் இன்று அறுவடை செய்துகொண்டிருக்கும் பலன்களைத்தான் தீர்க்கதரிசிகள் காண ஆசைப்பட்டார்கள். குமாரன் மரணத்தை அனுபவித்தபடியால் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வந்தார்.

கிருபையின் ஆவியானவர் எல்லா மனிதர்களுக்கும் இரக்கத்தையும் வெளிச்சத்தையும் காண்பிப்பதில்லை. எருசலேம் தலைநகரத்தில் இருந்த அனைவரும் இறை அன்பைப் பெற்றுக்கொள்ளவில்லை. இறைவனுடைய அன்பின் சுழல்காற்று கிறிஸ்துவை நேசித்து அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்தவர்களையே சூழ்ந்துகொண்டது. இறைவனுடைய வல்லமை எருசலேமிலிருந்த தேவாலத்தைத் தொடவில்லை. அங்கிருந்த ரோம இராணுவமும் இறைவனுடைய நித்திய வாழ்வினால் தொடப்படவில்லை. பிதாவினுடைய வாக்குத்தத்தத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரப்பப்பட்டார்கள்.

அங்கிருந்த மக்களில் இயேசுவின் சீடர்களும் அவருடைய குடும்பத்தவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்து எழுந்தருளிச் சென்ற வானத்திலிருந்து பலத்த சத்தத்தை திடீரெனக் கேட்டபோது அவர்கள் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள். அது பயங்கரமான பெருங்காற்றின் சத்தத்தைப் போல இருந்தது. அந்த காற்றின் சத்தத்தினால் ஜன்னல்கள் அசைக்கப்படவில்லை, கதவுகள் அடிபடவில்லை, இலைகள் அசையவில்லை. ஆனால் அது அவர்கள் கூடியிருந்த வீடு முழுவதையும், அறைகள் முழுவதையும், ஏன் அந்த வீடிருந்த பகுதி முழுவதையும் சூழ்ந்துகொண்டது. அவர்கள் ஆச்சரியத்தினால் தங்கள் கண்களையும் காதுகளையும் அகல விரித்தவர்களாய் உட்கர்ந்திருந்தார்கள். அவர்கள் புயல்காற்றை உணரவில்லை. ஆனால் அதன் சத்தத்தைத் தெளிவாக தங்கள் காதுகளினால் கேட்டார்கள். அவர்கள் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கும்போதே இந்த நிகழ்வு நடந்தேறியது. அவர்கள் தங்கள் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் திறந்துகொடுத்தார்கள். அவருடைய வல்லமை அவர்களில் விளங்கியது. திடீரென அவர்கள் அக்கினி மயமான நாவுகள் அந்த புயல்காற்றிலிருந்து அவர்கள் மேல் விழுவதைப் பார்த்தார்கள். ஆனால் அந்த நெருப்பு மேலும் கீழும் அசையவோ அல்லது அங்கிருந்த வீட்டையோ வீட்டுப் பொருட்களையோ எரித்துப் போடவோ, அவர்களைச் சுட்டெரிக்கவோ இல்லை. அவை அவர்களுடைய விண்ணப்பங்களின் மேல் அமைதியாக வந்தமர்ந்தது. இந்த வித்தியாசமான அக்கினி மயமான நாவுகள் அவர்கள் மூலமாக கிறிஸ்து என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் காண்பித்தது. அசுத்தமும், பொய்யும் உலக ஞானமும் நிறைந்த அவர்களுடைய நாவுகள் எரிக்கப்பட்டு நீக்கப்படும் என்பதையும் அதற்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு புதிய வல்லமையான நாவுகளைக் கொடுப்பார் என்பதையும் அதன் மூலமாக அவர்கள் இறைவனுடைய தெய்வீக அன்பைப் பற்றிப் பேசுவார்கள் என்பதையும் அவை சித்தரித்தன.

கர்த்தருடைய ஆவியினால் நிறைந்தவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியையும் ஆழமான ஆறுதலையும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பாவத்தின் பாரம் அவர்களை விட்டு நீங்கிற்று, அவர்களுடைய இருதயம் மென்மையானது, அவர்களுடைய துக்கங்கள் கடந்துபோனது, அவர்களுடைய மங்கிய கண்கள் பிரகாசமடைந்தது, அவர்களுடைய சோர்வுற்ற நாவுகள் இறைவனைத் துதிக்க ஆரம்பித்தன. “பிதாவே, உம்முடைய குமாரனுடைய மரணத்தினாலே நீர் எங்களுடைய பிதாவானீர். அவருடைய இரத்தம் எங்களுடைய பாவங்களை மன்னித்தது. தகுதியற்ற எங்களில் உம்முடைய ஆவியானவர் வாழ்ந்து, எங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்துகிறார். உம்முடைய கிருபையின் மகிமையினால் நீர் எங்களுக்கு வாழ்வளித்திருப்பதால் நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி, உம்மைத் துதிக்கிறோம்.”

இறைவனுடைய அன்பின் புயல்காற்று, நன்றிப் பெருக்கை உண்டுபண்ணியது. அது பரிசுத்த வார்த்தைகளையும் அறியப்படாத பரலோக சிந்தனைகளையும் பல வாய்களிலிருந்து புறப்படப்பண்ணியது. பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய பேச்சை வழிநடத்தி, அவர்களுடைய சிந்தைகளை நிரப்பி, அவர்களுடைய சித்தங்களை ஆசீர்வதித்தார். அவர்கள் தங்கள் மனிதத் தன்மையில் கிளர்ச்சியடைந்தவர்களாகக் காணப்படவில்லை. மாறாக, மனதையும் ஆத்துமாவையும் கூட கட்டுப்படுத்தும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார்கள். அவருடைய வல்லமையும் நற்குணமும் வெளிப்பட்ட காரணத்தினால், அவர்கள் முழுவதும் இறைவனுடைய ஆலயமாக மாறிப்போனார்கள்.

தயவு செய்து கவனியுங்கள். பேதுருவும் யோவானும் மட்டும் பரிசுத்த ஆவியானவரினால் நிறையப்படவில்லை. அங்கிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார்கள். தெய்வீக புயல்காற்றில் இறங்கிவந்த அக்னி மயமான நாவுகளினால் அவர்கள் வருத்தப்படவில்லை, மாறாக அவர்கள் இறைவனுடைய பிரசன்னத்தினால் சூழப்பட்டார்கள். பிதாவினுடைய வாக்குத்தத்தம் அப்பொழுது நிறைவேறியது. அப்போது விண்ணப்பித்துக் கொண்டிருந்த அனைவரும் இறைவனுடைய பிள்ளைகளானார்கள். அவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டு அவருடைய சத்தியம், அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றினால் நிறையப் பெற்றார்கள். பெந்தகொஸ்தே நாளன்று மரணத்திற்கு உட்பட்ட இந்த உலகத்தில் தெய்வீகமானதும், இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டதுமான காரியம் நிகழ்ந்தது. இவ்வாறு நம்பிக்கையும் ஆன்மீக எழுப்புதலும், பரிசுத்த திரித்துவ இறைவனுக்குச் செலுத்தப்படும் துதியோடும் நன்றிகளோடும் எருசலேமிலிருந்து புறப்பட்டு வரத்தொடங்கியது.

விண்ணப்பம்: ஓ பரலோக பிதாவே உம்முடைய குமாரன் தமது மரணத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் எங்களில் வந்து வாசம்பண்ணும் வழியை ஏற்படுத்தியதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் பாவங்கள் முழுவதும் மறைந்துபோய், எங்கள் ஆழ்ந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் ஒன்றித்து எங்கள் துதியாக உமக்கு செலுத்தத்தக்கதாக எங்கள் அனைவரையும் உமது பிரசன்னத்தினால் நிரப்பும்.

கேள்வி:

  1. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு வெளிப்பட்டார்?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:55 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)