Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 105 (The Angle in the Empty Tomb)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 9 - இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (மாற்கு 16:1-20)

2. காலியான கல்லறையில் தூதனின் வார்த்தை (மாற்கு 16:5-8)


மாற்கு 16:5-8
5 அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். 6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். 7 நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 8 நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்.

இருட்டான திறந்த கல்லறையின் அருகில் பெண்கள் வந்தார்கள். அதற்குள் பயத்துடன் நுழைந்து, செத்த சரீரத்தைக் காண எதிர்பார்ப்புடன் சென்றார்கள்.

அவர்கள் சூரிய உதய நேரத்தில் இருட்டான கல்லறையை நோக்கி வந்தார்கள். அவர்கள் சீலைகள் சுற்றப்பட்ட இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதற்குப் பதிலாக பிரகாசமான வெண்மையுடன் ஓர் வாலிபனைக் கண்டார்கள். கல்லறையின் ஒரத்தில் அவன் உட்கார்ந்திருந்து அவர்களைப் பார்த்தான். அவனிலிருந்து ஒளியும், வல்லமையும் வெளிப்பட்டது. அவர்கள் ஓர் ஆவியைக் காணுவதாக எண்ணி பயந்தார்கள்.

அந்தச் செய்தியாளர் இறைவனுடைய தூதன். அவன் புரிந்துக்கொள்ளக்கூடிய வார்த்தைகளில் பேசினான். பயத்துடனும், மனச்சோர்வுடனும் இருந்த பெண்களுக்கு பரலோக நற்செய்தியை பகிர்ந்துகொண்டான்.

பெத்லகேமின் வயல்வெளியில், இயேசு பிறந்த செய்தியை மேய்பர்களுக்கு தூதன் அறிவித்த போது அவர்களின் பயம் நீங்கியது போல, அவர்களுடைய பயம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது.

அந்த தூதனின் அமைதியான வார்த்தைகள் பெண்களின் மனதில் இருந்த காரியங்களை அவன் அறிந்திருந்தான் என்பதை வெளிப்படுத்துகிறது. நாசரேத்தூர் இயேசு மெய்யாகவே சிலுவையில் மரித்தார் என்பதை அவன் உறுதிப்படுத்தினான். இப்போது அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிவிக்க வந்த தூதன் அவரை சிலுவையிலறையப்பட்ட இயேசு என்று அறிவித்தான்.

சிலுவையிலறையப்பட்டவர் வெற்றியடைந்தார். அவர் சிலுவையில் இறைவனுடைய கோபாக்கினையை ஏற்றுக்கொண்டார். எல்லா மனிதர்களின் பாவத்தையும் ஏற்றுக்கொண்டு, சாத்தானின் சோதனைகளை மேற்கொண்டார். கிறிஸ்து சாத்தானை ஜெயித்த பரலோக வெற்றியாளராக இருக்கிறார்.

இயேசுவின் வெற்றி என்பது ஒரு விசுவாசம் சார்ந்த கருத்தாக்கம் மட்டும் அல்ல. அது மெய்யானது. மரணத்தை மேற்கொண்ட முழுமையான வெற்றி அது. ஜீவாதிபதியை மரணம் கட்டிவைக்க முடியவில்லை. தீய சாத்தானுக்கு பரிசுத்தமான இறைவன் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார்.

அவர் அமைதியாய் கல்லறையை விட்டு வெளியேறினார். அவர் சீஷர்கள் கூடியிருந்த மூடப்பட்ட அறைக்குள் சத்தமின்றி வந்தார். இயேசு காலம், இடம், பொருள் மற்றும் புவிஈர்ப்புவிசை அனைத்தையும் மேற்கொண்டார். அவர் மரணத்தின் பிடியில் இருந்து வெளியேறி அழியாத நித்தியத்திற்குள் பிரவேசித்தார்.

இயேசு எந்தவொரு பாவமும் செய்யவில்லை. எனவே மரணம் அவரைப் பற்றிக்கொள்ள முடியவில்லை. எல்லா தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்தவர்கள். ஆனால் இயேசு பரிசுத்தமானவர். அவர் மரணத்தில் இருந்து எழுந்தார். அவருடைய சொந்தப் பாவங்களுக்காக அல்ல, நம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையில் மெய்யாகவே மரித்தார். உண்மையில் நமது மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டு அவர் மரித்தார். நாம் வாழும்படி அவர் மரித்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு காலியான கல்லறையில் தோன்றிய சீஷன் முதல் சாட்சி.

பெண்கள் காரியங்களைப் புரிந்துகொண்டார்கள். இயேசு கல்லறையில் இல்லை என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டது. அவர் ஆவியைப் போல மறைந்துபோகவில்லை. அவர் வேற்றுலக வாசியைப் போல் தோன்றவில்லை. அவர் கடந்து சென்றார். கல்லறை காலியானது. இயேசுவின் சரீரத்தைக் கிடத்தியிருந்த இடத்தை பெண்கள் பார்க்கும்படி தூதன் கூறினான். அங்கே சீலைத் துணிகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அவருடைய தலையைச் சுற்றியிருந்த துணிகள் தனியே மடித்துக் காணப்பட்டது. இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒழுங்குடனும், தெளிவாகவும் நடைபெற்றதற்கான அடையாளம் இது.

ஆண்டவராகிய இயேசு உடனடியாக தனது பரலோகப் பிதாவிடம் செல்லவில்லை. அவர் பூமியில் தான் இருக்கிறார் என்ற செய்தியை தூதன் அவர்களுக்கு கூறினான். அவர் உங்களுக்கு முன்னே கல்லேயாவிற்கு போகிறார். அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்ற இடம் அது. உயிருள்ள ஆண்டவரை அவர்கள் பின்பற்றிச் செல்லும்படி கூறினான். அவர் அவர்களை விட்டுவிலகமாட்டார். அவர்களுக்கு முன்னே செல்லும் நல்ல மேய்ப்பன் அவர்.

முதன்முதலில் உயிர்த்தெழுந்த நற்செய்தியை அறிவித்தது பெண்கள் தான். தூதன் அவர்களை பேதுரு மற்றும் சீஷர்களிடத்தில் அனுப்பினான். இந்த செய்தியை புரிந்துகொள்ள வேண்டிய ஆண்களின் பெருமை உடைக்கப்பட்டது. இறைவனின் தூதன் பெண்களை நம்பி, மகிமையுள்ள உயிர்த்தெழுதலின் சத்தியத்தை ஒப்புவித்தான்.

பெண்களின் புரிந்துகொள்ளுதலில் மாற்றத்தையும், புதிய சிந்தனைகளையும் இந்தக் காரியம் கொண்டு வந்தது. இயேசுவின் சரீரம் கல்லறையில் இல்லை என்பதை அவர்கள் கண்டார்கள். அங்கே பேசிய ஓர் வாலிபனின் சத்தத்தையும் கேட்டார்கள். சிலுவையிலறையப்பட்டவர் உயிர்த்தெழுந்தார். கல்லறை காலியானது. அவர் கடந்து சென்றார். வாக்குப்பண்ணியபடியே அவர் நம் முன் செல்கிறார்.

அதிர்ச்சியடைந்த பெண்கள் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் பயந்ததினால் எதையும் பேசாமல் நடுக்கத்துடன் விரைந்து சென்றார்கள்.

விண்ணப்பம்: பரிசுத்தமான ஆண்டவரே, நீர் உயிருள்ளவர், மத ஸ்தாபகர்களைப் போல நீர் கல்லறையில் தங்கியிருக்கவில்லை. நீர் உயிர்த்தெழுந்தீர். நீர் பாவமின்றி வாழ்ந்தீர். நீர் எங்களுக்காக மரித்து, நாங்கள் நீதிமான்களாக்கப்படும்படி எழுந்தீர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் சிலுவையிலறையப்பட்ட உயிருள்ள ஆண்டவர். இதைக் குறித்த சத்தியத்தை மக்கள் உணர்ந்துகொள்ளும்படி கிருபை தாரும். அவர்கள் மனந்திரும்பி, உம்மை விசுவாசிக்க வழிநடத்தும். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உம்மைப் பின்பற்ற உதவி செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. தூதன் பெண்களுக்கு விவரித்துக் கூறிய அடிப்படைக் காரியங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:47 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)