Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 088 (A New Covenant)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

5. கர்த்தருடைய பந்தியின் போது புதிய உடன்படிக்கை உருவாக்கப்பட்டது (மாற்கு 14:17-25)


மாற்கு 14:17-25
17 சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார். 18 அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19 அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள். 20 அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; 21 மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 22 அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 23 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். 24 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. 25 நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை யென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கர்த்தருடைய இராப்போஜனத்திற்காக கிறிஸ்து தமது சீஷர்களை ஆயத்தப்படுத்தினார். அவர்களுக்கு சத்தியத்தை வெளிப்படுத்தினார். அவர்களை நொறுங்குண்ட இருதயங்களுடன் ஆழமான மனந்திரும்புதலுக்கு நேராக நடத்தினார். ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குபெற நாம் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால் தொடர்ச்சியான மனந்திரும்புதல் அவசியம் ஆகும்.

கிறிஸ்து ஆரம்பத்தில் இருந்து தமது சீஷர்களில் ஒருவன் அவரைக் காட்டிக்கொடுக்கப் போவதை சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களுடன் இணைந்து ஐக்கியப்பட்டார். அவர்களுடன் மன்றாடினார். காட்டிக்கொடுப்பவன் கிறிஸ்துவின் கிருபையை அனுபவித்தான். தனது சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அவன் ஆண்டவருடைய வல்லமையைப் பயன்படுத்தினான். அவன் தனது சொந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் தோற்றுப்போனபோது இயேசுவை வெறுக்க ஆரம்பிததான். அவரை முற்றிலும் அழிக்க முற்பட்டான்.

இந்த அறிவிப்பு சீஷர்களை விழிப்படையச் செய்தது. அவர்கள் மத்தியில் வெடிகுண்டு வெடித்ததைப் போல், அனைவரும் நொந்துபோன மனநிலையில் இருந்தார்கள்.

என்ன ஓர் வியப்பு! அவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டவில்லை. ஒவ்வொருவரும் தன் மீதே சந்தகேம் கொண்டு, தனது சொந்த இருதயத்தில் அவரைக் காட்டிக்கொடுக்கும் சாத்தியக் கூறு குறித்து சிந்தித்தார்கள்.

ஒவ்வொரு அப்போஸ்தலரின் வாயில் இருந்தும் இப்படிப்பட்ட வார்த்தை வருவதைக் குறித்து உன்னால் உணர முடிகிறதா? ஒருவரும் தனது சொந்த இறைபக்தி குறித்த உறுதியான நிலையில் இல்லை. ஒருவன் கிறிஸ்துவினால் இரட்சிப்பை அடையாதவரை, அவனுடைய இருதயத்தில் இருந்து தீமையின் ஊற்றுப் புறப்பட்டு வருவதை உணருவான்.

உனது பாவத்தைக் குறித்து நீ வெட்கப்பட்டால், நீ பாக்கியவான். கிறிஸ்துவையும், அவர் தரும் இரட்சிப்பையும் விட்டுவிலக் கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் குறித்து நடுக்கத்துடன் எண்ணினால் நீ பாக்கியவான்.

இயேசு யூதாசைக் காப்பாற்ற விரும்பினார். கடைசி நேரத்தில் இந்தக் காரியத்தை அவர் அன்புடன் வெளிப்படுத்தினார். காட்டிக்கொடுப்பவனையும் அவர் நேசித்து, இரக்கம் நிறைந்தவராக அவனுடைய இருதயத்தில் தனது வல்லமையுள்ள வார்த்தைகளைக் கொண்டு மனந்திரும்புதலைக் கொண்டுவர செயல்பட்டார். மனுஷகுமாரன் மரிக்கவேண்டும் என்பது நித்தியத்தில் ஏற்படுத்தப்பட்ட திட்டம் என்பதை நாம் மறுக்க முடியாது. அதே சமயத்தில் யூதாஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்த செயலுக்கு, அவன் தான் பொறுப்பு என்பதும் உண்மை.

அவனுடைய பாவமும், அதற்கான தண்டனையும் மிகவும் பெரியது என்று இயேசு அவனைத் தெளிவாக எச்சரித்தார். அவன் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும் என்று கூறினார். இவ்விதமாக இயேசு யூதாஸின் தீர்மானத்தை அசைத்தார். ஆனாலும் அவன் மனம் கடினப்பட்டது.

அந்தத் துரோகி அவரைக் காட்டிக்கொடுக்கத் தீர்மானித்தான். அவன் இயேசுவின் அன்புள்ள வார்த்தைகளைக் கேட்கவில்லை. அவைகளை அவன் புரிந்துகொள்ள முடியாதபடி, இருதயம் கடினப்பட்டவனாக இருந்தான். அவன் இறைவனுடைய அன்பின் சொரூபத்திற்கு எதிராக நின்றான்.

பிரியமான சகோதரனே! பிரியமான சகோதரியே, உடைந்த இருதயத்தோடும், மனந்திரும்புதலின் கண்ணீரோடும் இயேசுவிடம் வா. உனது பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிடு. இவ்விதமாக கிறிஸ்துவினால் ஆயத்தமாக்கப்பட்ட கர்த்தருடைய பந்தியில் பங்குபெற நீ தகுதி பெறமுடியும். பொய்யான இறைபக்தி அல்ல. உடைந்த உள்ளமும், மனந்திரும்புதலும் அவசியம். இன்று அவருடைய சத்தத்தை நீ கேட்டால், உனது இருதயத்தைக் கடினப்படுத்தாதே.

ஆசீர்வதிக்கப்பட்ட இராப்போஜனத்தின் நேரத்தில், கிறிஸ்து நன்றி செலுத்தி அப்பத்தைப்பிட்டார். சிலுவையில் அறையப்படும் தனது சரீரத்தின் அடையாளமாக அதைக் கொடுத்தார். அப்பத்தை ஏற்றுக்கொள்வது போல, அவர்களுடைய இருதயங்களில் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அவர் சீஷர்களிடம் கூறினார்.

கிறிஸ்து உன்னில் தங்க விரும்பினார். நீ நீதிமான் என்பதினால் அல்ல. அவர் உன்னை நேசிப்பதால், உன்னுடன் இருக்கவும் எல்லா நேரத்திலும் அவர் உனக்குள் இருக்கவும் விரும்புகிறார்.

இறைவனின் அன்பு எவ்வளவு பெரியது. ஏழைப் பாவிகளாகிய நம்மை அது புறக்கணிப்பதில்லை. அவர் தனது வார்த்தையின் மூலம் கர்த்தருடைய பந்தியின் நேரம் நமக்குள் தங்குகிறார். விசுவாசியின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கிறார். கிறிஸ்துவிற்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் அனைவருக்குள்ளும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவன் தங்குகிறார்.

தனது இரத்தத்தின் அடையாளமாக இயேசு திராட்சை இரசத்தை எடுத்தார். ஆசீர்வதிக்கப்பட்ட அவருடைய இரத்தம் அவர்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்தும் என்று கூறினார். திராட்சை இரசத்தைக் குடிக்கும்போது அது உள்ளிறங்குவது போல அவருடைய இரத்தம் அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறது. கிறிஸ்துவின் இரத்தம் ஒரு சாதாரண மனிதனின் இரத்தம் அல்ல. அது மனித ரூபத்தில் வந்த இறைவனுடைய குமாரனின் இரத்தம். அவர் ஒரே தரம் தனது இரத்தத்தை சிந்தி, அவர் மூலமாக இறைவனுடன் புதிய உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் சுத்திகரித்தார்.

பாவங்கள் கழுவப்படாமல் இறைவனுடன் ஐக்கியமும், ஒப்புரவாகுதலும் இல்லை. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும். ஒரு குறிப்பிட்ட இனம், நாடு, மக்களுக்கும் மட்டும் உரிய புதிய உடன்படிக்கை அல்ல. இது எல்லா மக்கள், இனங்கள், நாடுகளுக்கும் உரியது ஆகும். இந்த பரிசுத்த இரத்தத்தைக் குடிக்கிறவன் தனது பாவங்கள் நீங்கி, சுத்திகரிக்கப்படுகிறான். கிருபையினால் பரிசுத்தமாக்கப்படுகிறான். புதிய உடன்படிக்கையில் பிரவேசிக்கிறான்.

பரிசுத்தமான நித்திய இறைவன் கீழ்ப்படியாமையுள்ள, சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுடன் இணைக்கப்படுகிறார் என்பதை உன்னால் அறிய முடிகிறதா? எனவே தான் அவர் மனந்திரும்பும்போது உன்னை தன்னுடன் இணைத்துக்கொள்கிறார். கிறிஸ்து தமது மரணத்தின் மூலம் நம்மை நீதிமானாக்குகிறார்.

இறைவனுடன் உடன்படிக்கைக்குள் நீ தீர்மானத்துடன் பிரவேசித்திருக்கிறாயா? கிறிஸ்து உனது இருதயத்தில் வாசம் செய்கிறாரா? உனது அசுத்தத்திலும், பாவத்திலும் இருந்து அவருடைய இரத்தம் உன்னை சுத்திகரித்துள்ளதா?

தனது பரலோக விருந்திற்கு பிதாவாகிய இறைவன் உன்னை இன்று அழைக்கிறார். தனது கிருபைகள் அனைத்தையும் தமது குமாரனுக்குள் உனக்குத் தருகிறார். எனவே நீ என்ன செய்யப்போகிறாய்? நீ எப்படி அவருக்கு நன்றி செலுத்துவாய்?

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனின் ஆட்டுக்குட்டியானவரே, நீர் எங்கள் இடத்தில் அடிக்கப்பட்டீர். கர்த்தருடைய பந்தியில் அப்பம் மற்றும் இரசத்தின் மூலம் உமது சரீரத்தைப் புசிக்கும்படியும், உமது இரத்தைத்தைக் குடிக்கும்படியுமான பாக்கியத்தை எங்களுக்குத் தந்தீர். எங்களிடம் வாரும். எங்களில் தங்கியிரும். நித்திய வாழ்வுக்காக எங்களைப் பெலப்படுத்தும். எல்லாப் பாவத்திலும் இருந்து எங்களை சுத்திகரியும். உமது பிதாவுடனும், உம்முடனும் புதிய உடன்படிக்கையில் என்றென்றும் நிலைத்திருக்க உதவும். உமது வருகையை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம். மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் உமது இரட்சிப்பிற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

கேள்வி:

  1. கர்த்தருடைய இராப்போஜனத்தின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 10:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)