Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 087 (Preparing the Passover)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

4. பஸ்காவை ஆயத்தம் செய்தல் (மாற்கு 14:12-16)


மாற்கு 14:12-16
12 பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 13 அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; 14 அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். 15 அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 16 அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

பூமியில் தனது சீஷர்களுடன் இந்தக் கடைசி மாலை நேரத்தைச் செலவழிக்க இயேசு மிகுந்த ஆவலுடன் இருந்தார். தனது ஊழியத்தின் முடிவில் அவர்களுடன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இந்தப் புனிதமான நிகழ்வை தடைசெய்யும்படி அவருடைய எதிரிகளையோ அல்லது சாத்தானையோ அவர் அனுமதிக்கவில்லை. எனவே அவர் யூதாஸ் முன்பாக தமது சீஷர்களுடன் பஸ்காவைக் கொண்டாடும் இடத்தைக் குறித்து பேசவில்லை அதை ஆயத்தம் செய்யப் போகிறவர்களுடன் மட்டும் அவர் குறிப்பாகப் பேசினார். காட்டிக்கொடுப்பவன் அந்த இடத்தில் அவரைக் காட்டிக்கொடுக்காதபடி அப்படிச் செய்தார்.

அதே சமயத்தில் அந்த வீட்டிற்குள் பஸ்காவை அவருடன் கொண்டாட வந்தவர்களுக்கு தான் எப்படிப்பட்டவர் என்பதையும் அந்த நேரத்தில் இயேசு காண்பித்தார்.

பரிசுத்த நகரத்தில் கடைசி இரவு உணவு ஆயத்தம் செய்யும்படி தம்முடைய இரண்டு சீஷர்களை இயேசு அனுப்பினார். எவ்விதம் அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது என்று அவர்களுக்கு விவரித்துச் சொன்னார். ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் அவர்களை நடத்தினார். அவன் இறைவனின் விருந்தினர்களை வரவேற்க ஆயத்தமாக இருந்தான். இந்த மனிதனைக் குறித்த அடையாளம் என்ன?

அவன் தண்ணீர் சுமந்துகொண்டு வருவான். பொதுவாக ஒரு மனிதன் தண்ணீர் சுமந்து வருவதைக் காண இயலாது. ஏனெனில் இது பெண்களுக்குரிய வேலையாகும். இருப்பினும் இந்த மனிதன் அதைக் குறித்து கவலைப்படவில்லை. ஒருவேளை அவனுடைய மனைவி வியாதியுற்றிருக்கலாம். எனவே அவன் தன்னைக் தாழ்த்தி, குடும்பத்தின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டான்.

இது ஒரு தனித்துவமான அடையாளம். இறைவனின் குமாரன் தனது வீட்டிற்குள் வருகின்ற வரைக்கும் பணிசெய்யும் ஆயத்தநிலையில் அவன் இருந்தான்.

இந்த மனிதனைப் பின்பற்றும்படி கிறிஸ்து தனது இரண்டு சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். அவர் அவர்களிடம் சொன்னார்: “உனக்கு ஒரு பணி காத்துக்கொண்டிருக்கிறது”. கிறிஸ்து பெருமையுள்ளவர்களுக்காக அல்ல, தாழ்மையுள்ள வேலைக்காரர்களுக்காகவே வந்தார். மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படியாக வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தனது ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.

இந்த மனிதனிடம் பிச்சைக்காரர்களைப் போல அல்ல, ஆண்டவரின் தூதுவர்களாகப் பேசும்படி கிறிஸ்து தனது இரண்டு சீஷர்களையும் வழிநடத்தினார். அவர்கள் இயேசுவின் வார்த்தைகளில் அடங்கிய முக்கிய செய்தியை அவன் உணரும்படி பேசினார்கள். கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு வருவது கனத்திற்குரியதும், ஆசீர்வாதமுமான ஒரு செயல் ஆகும். அதேசமயத்தில் ஆபத்தும், பாடுகளும் இன்னொரு புறம் இருக்கின்றன. எனவே இயேசுவை வரவேற்கும்படி அவனைக் கட்டாயப்படுத்துவது நல்ல காரியம் அல்ல. மாறாக அவன் முடிவு எடுப்பதற்கு சற்று கால அவகாசம் கொடுப்பது நல்லது. கிறிஸ்து அந்த மனிதனின் வீட்டிற்கு தனியாக வரவில்லை. தனது சீஷர்களுடன் வந்தார். அவர் மகிழச்சியினாலும், சமாதானத்தினாலும் அந்த வீட்டை நிரப்பினார்.

எந்த விலைக்கிரயம் செலுத்தியாவது இறைவனின் குமாரனை வரவேற்க வேண்டும் என்று அந்த மனிதன் ஆயத்தமாயிருந்ததை இயேசு முன்பே அறிந்திருந்தார். நமது நாட்களில் இறைவனின் வழிநடத்துதலுக்கு நற்செய்தியாளர்கள் கீழ்ப்படியும் போது, அவர்கள் திறந்த வாசல்களையும், ஆயத்தப்பட்ட இருதயங்களையும் காண்கிறார்கள். சிலசமயம் நாம் புறக்கணிப்பையும், வெறுப்பையும் காண்கிறோம். ஏனெனில் இரட்சிப்பை விரும்பாத மக்களுக்கு நாம் பிரசங்கிக்கிறோம். எனவே அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆவிக்குரிய அழைப்பைக் கேட்க அவர்கள் ஆயத்தப்படவில்லை.

இறைவனின் இரட்சிப்பிற்காக ஏங்கும் மக்களை பரிசுத்த ஆவியானவர் ஆயத்தப்படுத்தி, அவர்களுக்கு நேராக உன்னை வழிநடத்துகிறார்.

இரண்டு சீஷர்களும் கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் அந்த மனிதனைக் கண்டார்கள். கிறிஸ்துவிற்கும், அவருடைய சீஷர்களுக்கும் அவனுடைய வீட்டில் இரவு உணவு ஆயத்தமாக்கப்பட்டது. நமது பணியின் நோக்கம் இதுதான். நமது கீழ்ப்படிதலின் விளைவு இது தான். மற்றவர்களிடம் கிறிஸ்து வரும்படி நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். பரிசுத்த ஆவியின் நடத்துதலினால் அவர்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில் உம்மை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப்பவர்களுடன் நாங்கள் இணைந்திருக்கும்படி நீர் வழிநடத்துகிறீர். உமது அழைப்பை நாங்கள் புறக்கணித்ததற்காக எங்களை மன்னியும். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நாங்கள் கீழ்ப்படியும்படி எங்களுக்கு உதவும். உமது வருகைக்காக ஏங்குபவர்களை நாங்கள் கண்டுகொள்ளச் செய்யும். உமது இரட்சிப்பை அவர்களுக்கு பிரசங்கிக்க உதவும். எங்கள் விருப்பங்களின்படி நாங்கள் ஊழியம் செய்யாதபடி காத்துக்கொள்ளும். உமது வார்த்தைக்கு கீழ்ப்படியவும், உமது நற்செய்தியைக் கேட்க ஆயத்தமாய் இருப்பவர்களை கண்டுகொள்ளவும் உதவும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு இரவு உணவு ஆயத்தப்படுத்தும்படி விரும்பிய வீட்டில் இருந்த மனிதனை கண்டுகொள்ளும்படி இயேசு தமது இரண்டு சீஷர்களுக்குக் கொடுத்த அடையாளம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 10:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)