Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 086 (The Betrayal of Judas Iscariot)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

3. யூதாஸ்காரியோத் காட்டிக்கொடுத்தல் (மாற்கு 14:10-11)


மாற்கு 14:10-11
10 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான். 11 அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னை நளத தைலத்தால் அபிஷேகித்த மரியாளுக்கு சாதகமாக இயேசு பதிலளித்ததின் மூலம் யூதாஸ்காரியோத்தை கடிந்துகொண்டார். யூதாஸ் மனம் நொந்து போனான். ஏனெனில் இயேசு அவனைக் குறித்து வெளிப்படுத்திவிட்டார். குறிப்பாக அவனுடைய ஆண்டவர் ஒரு பெண் சார்பாக நின்று அவனைக் குற்றம்சாட்டிவிட்டார். இயேசு தனக்கு அளித்த பதிலின் மூலம் அவன் மறைவான கடிந்துகொள்ளுதலைக் கேட்டான். அவனுடைய உண்மையான விருப்பம் ஏழைகளுக்கு உதவி செய்வது அல்ல. பணத்தை தனக்காக பெற்றுக்கொள்வது தான் அவன் விருப்பம்.

மேலும் இயேசு தமது உடனடியான மரணத்தைக் குறித்துப் பேசியிருந்தார். அவர் இறைவனுடைய அரசியல் ராஜ்ய முன்னேற்றம், பொருளாதாரம், புரட்சி இவைகளைக் குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த அறிக்கைக்குப் பின்பு யூதாஸின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போயின. அவன் இயேசுவின் அதிகாரம் மூலம் ஏதேனும் லாபம் அடையாளம் என்று நினைத்தான். இயேசு அவனையும் தெரிந்துகொண்டார். மற்ற சீஷர்களுடன் இணைந்து பிரசங்கிக்கவும் குணமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவும் அவனை அனுப்பினார். அவன் இந்தக் காரியங்களை செய்தாலும் இயேசுவை அறியாதவனாக இருந்தான்.

ஆரம்பத்தில் யூதாஸ் இயேசுவைக் குறித்தும், அவருடைய வல்லமையைக் குறித்தும் அறிய மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான். ஆனால் ஆண்டவர் தாழ்மை, சாந்தம், மனதிருப்தியைக் குறித்து அதிகம் பேசினார். ரோமர்கள் மீது வெற்றி பெறும்படி அவர் பயிற்சி தரவில்லை. நிர்வாகப் பணிகளைக் குறித்து கற்றுத்தரவில்லை. படைகள் ஆவிக்குரிய பொக்கிஷம் இல்லாத ராஜ்யத்தைக் குறித்து அவர் பேசினார். அவர் எளிமையானதும், வசதியானதுமான வாழ்வைக் குறித்துப் பேசவில்லை.

மேலும் யூதர்களின் ஆலோசனைச் சங்கம் இயேசுவை பொய்யான தீர்க்கதரிசி என்று தேசம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தேசத்தை ஏமாற்றுகிறவர், சட்டத்தை மீறுகிறவர் என்று கூறினார்கள். அவரைப் பின்பற்றுபவர்கள் இறைவனுடைய உடன்படிக்கைக்கு புறம்பானவர்கள் என்றும், அவருடைய சீஷர்களுக்கு ஆசீர்வாதம் வராது என்றும், இறைவனின் நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்கள்.

இவ்வித சிந்தனைகள் கடைசி நேரத்தில் தன்னைத்தானே காத்துக்கொள்ளும்படி யூதாசைத் தூண்டின. இயேசுவையும், அவருடைய சீஷர்களையும் பழிவாங்க வகை தேடினான். ஒரு யூதனாக அவன் பிரதான ஆசாரியனின் வீட்டை அறிந்திருந்தான். இயேசுவைக் குறித்து தகவல் கொடுப்பவருக்கு பரிசு வழங்குவதாக அவன் அறிவித்திருந்தான். யூதாஸ் கோபத்துடன் அங்கு வந்தான். யூத அதிகார மையத்திற்குள் நுழைந்தான். இயேசுவை அவர்களுக்கு காட்டிக்கொடுக்க ஆயத்தமாக இருப்பதாகச் சொன்னான்.

பிரதான ஆசாரியர்கள் இயேசுவால் அப்போஸ்தலனாக அழைக்கப்பட்ட ஒரு சீஷனைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவின் இயக்கத்தைவிட்டு அவன் பிரிந்து வந்திருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் நினைத்தது போல் நடந்தது. நசரேயனாகிய இயேசுவை உண்மையாய் பின்பற்றுபவர்கள் கூட புதிய உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாததை இது காண்பித்தது. அவர்கள் யூதாசைப் புரிந்துகொண்டவர்களாக, இயேசுவை காட்டிக்கொடுத்தால் அவனுக்கு பணம் தருவதாக பேரம் பேசினார்கள். இந்த சூழ்நிலைகள் மத்தியில் பண்டிகைக்கு முன்பு இயேசுவிற்கு மரணதண்டனை தீர்ப்பை பெறும்படி அவர்கள் துரிதமாய் செயல்பட்டார்கள். இப்படிப்பட்ட அற்புதமான சூழல் இனி ஒருபோதும் வராது என்று எண்ணி செயல்பட்டார்கள்.

இதற்கு பின்பு, இயேசுவை எவ்விதம் காட்டிக்கொடுக்கலாம் என்று யூதாஸ் சிந்திக்க ஆரம்பித்தான். காட்டிக்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை மட்டும் அவன் சிந்திக்கவில்லை. கிறிஸ்தவ இயக்கத்தின் தலைமையை முற்றிலும் அழிக்கும்படி திட்டமிட்டான். இனி அந்த இயக்கம், அவன் பணத்தைக் கையாளுவதற்கு உதவி செய்யாது என்று யோசித்தான். அவன் பணத்தை எண்ணுவதில் மகிழ்ச்சியைக் கண்டான். இப்போது இன்னொரு புறம் இருந்து அவனுக்கு பணம் வரப்போகிறது. அவன் இயேசுவைப் பின்பற்றியவனாக இருந்தாலும், அவரைக் காட்டிக்கொடுக்க ஆயத்தமானான்.

யூதர்களின் ஆலோசனை சங்கத்தாருடைய சந்திப்பின் போது யூதாஸ் நினைத்தது போல் இயேசு செயல்படவில்லை. இறைவனுடைய அரசை தனது வல்லமை மற்றும் ஒரு குறிப்பிட்ட அற்புதத்தின் மூலம் அவர் காண்பிக்கவில்லை.

எனவே அவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்க தீர்மானித்தான். தனது கோபத்தினால் அவரை பழிவாங்க நினைத்தான். அவனுக்கென்று எந்த திட்டமும் இல்லை. இந்நேரத்தில் சாத்தான் அவனுக்குள் புகுந்தான். தீமையைப் பின்பற்றுபவனாக அவன் மாறினான் (லூக் 22:3; யோ 13:2,27).

எவ்வளவு பெரிய வீழ்ச்சி! பின்னடைவு! இயேசு தமது பணிக்கென்று தெரிந்தெடுத்த சீஷன், அவரைப் பின்பற்றியிருந்தும், அவரை வெறுப்பவனாக மாறிப்போனான். எனவே அவரைக் காட்டிக்கொடுக்கத் தீர்மானித்தான்.

இயேசுவின் வார்த்தைகளை அதிகமாகக் கேட்டவனின் இருதயத்தில் இப்படி ஒரு மாற்றமும், இருதயக் கடினமும் ஏற்பட்டதைக் கண்டு நாம் வருத்தப்படுகிறோம். நமது உலகில் அவருடைய சாட்சியாகவும், அவருடைய அன்பை உணர்ந்தவனாகவும், அவருடைய பரலோக வல்லமையை அனுபவித்தவனாகவும் அவன் இல்லை. யூதாஸ் ஆவிக்குரிய வளர்ச்சியில் தடைப்பட்டுப் போனான். அவன் தனது சொந்த திட்டங்களுடன் அவரைப் பின்பற்றினான். அவனுடைய ஆழமான வேரூன்றிய பாவங்களை விட்டுவிடவில்லை. பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கும் சுயநலமுள்ள கிறிஸ்தவனுக்கு அடையாளமாக அவன் மாறிப்போனான்.

பிரியமான வாசகரே, இயேசுவை நீ விசுவாசித்திருந்தும், இறைவனுக்கு எதிராக எவ்விதம் நீ சிந்திக்கிறாய் என்றும், செயல்படுகிறாய் என்றும் ஆராய்ந்து பார். உனது பணம், உனது ஜீவன், உனது பதவி ஆசையை ஆண்டவருக்கென்று விட்டுவிட ஆயத்தமா? உலகப்பிரகாரமான வழிகளைக் கொண்டு பரலோகத்தை அடைய முயற்சிக்கிறாயா? உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே. இறைவன் தன்னைப் பரியாசம்பண்ண வொட்டார். நீ என்றென்றும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும் இருக்க அவர் விரும்புகிறார்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, நான் யூதாசைவிட சிறந்தவன் அல்ல. எனது பணஆசையைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். நானே எல்லாவற்றிற்கும் மையமாக இருக்க விரும்புவதை நீர் அறிகிறீர். எனது பாவத்தை மன்னியும். என் சுயநலத்திலிருந்து என்னை விடுவியும். உமது வல்லமையால் என்னை நிரப்பும். உமது கிருபையின் பலபீடத்தில் என் சரீரத்தை நன்றிப்பலியாகப் படைக்கிறேன். என்னை இரட்சியும் ஆண்டவரே. உமது கரத்தை விட்டு நான் பறிக்கப்படாதபடியும், உமது சபைக்கு நான் துரோகியாக மாறாதபடியும் என்னைக் காப்பாற்றும். என்னை அபிஷேகியும். ஆமென்.

கேள்வி:

  1. யூதாஸ் இயேசுவையும், சீஷர்களையும் காட்டிக்கொடுக்க ஏன் நினைத்தான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 10:32 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)