Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- English -- Mark - 084 (The Plot Against Jesus)
This page in: -- Arabic -- ENGLISH -- Indonesian -- Tamil -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

1. இயேசுவுக்கு எதிராக சதி (மாற்கு 14:1-2)


மாற்கு 14:1-2
1 இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். 2 ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

பழைய உடன்படிக்கையின் மக்களுக்கு மிகப்பெரிய பண்டிகை பஸ்கா பண்டிகை ஆகும். அவர்கள் புளிப்பில்லாத அப்பத்துடன் ஒரு வாரம் அதைக் கொண்டாடுவார்கள். அவர்கள் மீது கடந்து சென்ற இறைவனின் கோபத்தை நினைத்துப் பார்ப்பார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பஸ்கா ஆடு அடிக்கப்பட்டதை எண்ணிப் பார்ப்பார்கள். பஸ்கா பலியைச் சுற்றிலும் ஒவ்வொரு குடும்பத்தாரும் அமர்ந்திருப்பார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை உண்பார்கள். சிறிய குடும்பம் என்றால், அவர்கள் தங்களுடைய அயலகத்தாரையும், நண்பர்களையும் அழைப்பார்கள்.

வீட்டில் இரண்டு நிலைக்கால்களிலும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தெளிப்பார்கள். சங்கார தூதன் அப்போது அவர்களைக் கடந்து போவான். இவ்விதமாக எல்லா மக்களும் இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் மூலம் விடுதலை பெறுகிறார்கள். அவருடைய கிருபையினால் வாழ்கிறார்கள். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்படாதவர்கள் மீது இறைவனுடைய கோபம் வெளிப்படும். அன்று பஸ்கா இரவில் முதற்பேறான அனைத்தையும் சங்கார தூதன் சங்கரித்தான். அப்போது ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் காக்கப்பட்டவர்கள் எகிப்து தேசத்தை விட்டு வெளியேறினார்கள். எனவே மக்கள் புளிப்பில்லாத மாவை பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டார்கள். அவர்கள் வனாந்தரத்தில் கடந்து சென்றார்கள்.

எகிப்து மக்களைவிட யாக்கோபின் மக்கள் சிறந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் கீழ் பாதுகாக்கப்பட தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். இதிலுள்ள இரகசியம் பெரியது. இறைவனுக்கு முன்பாக ஒருவனும் நல்லவன் இல்லை; நீதிமானும் இல்லை. எல்லோரும் மரணத்திற்கும், அழிவுக்கும் பாத்திரர்கள். புதிய உடன்படிக்கையின் கீழ் இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் இரத்தத்திற்கு தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தவர்கள் நியாயத்தீர்ப்பில் பிரவேசிக்க மாட்டார்கள். ஒப்பற்ற இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவரைத் தவிர வேறு எவராலும் இரட்சிப்பு இல்லை. மனிதன் தன்னுடைய நீதி, துதியின் பாடல், காணிக்கை, நற்செயல்களால் எந்த லாபத்தையும் அடைய முடியாது. இவைகள் இறைவன் முன்பு நம்மை நீதிமானாக்காது. பரிசுத்தமானவரை மகிமைபடுத்த நம்முடைய அனைத்து முயற்சிகளும் போதாது. தெரிந்துகொள்ள ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே, அவரை விசுவாசிப்பவர்களுக்கு பாதுகாப்பு, சுத்திகரிப்பு, பரிசுத்தத்தை தருகிறார்.

கிறிஸ்து நமக்காக அடிக்கப்பட்ட இறைவனின் ஆட்டுக்குட்டியானவர். அவர் பிரசங்கியாக, குருவாக தீர்க்கதரிசியாக, மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவார்த்தையாக தனது ஊழியத்தை நிறைவேற்ற முடித்திருந்தார். மனிதர்களுக்கு அவருடைய ராஜ்யத்தைக் குறித்து போதித்தார். அன்பு என்ற இரகசியத்திற்கு நேராக அவர்களை வழிநடத்தினார். அவர்கள் முன்பாக அதை தெளிவுபடுத்திக் காண்பித்தார். அவருடைய போதகப் பணியை முடித்திருந்தார். அவருடைய மரண நேரத்திற்காக அவர் காத்திருந்தார். மனிதனை மீட்க அவருடைய மரணத்தைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அறிந்திருந்தார். சிலுவையின் மூலம் நாம் நீதி, வல்லமை, இரட்சிப்பைப் பெறுகிறோம்.

இயேசு எருசலேமை விட்டு ஓடிப்போகவில்லை. மக்களின் அதிகாரிகள் தன்னைக் கொல்ல திட்டம் தீட்டியதை அவர் அறிந்திருந்தார். அவருடைய மரணத்தின் நேரத்தை அவர் அறிந்திருந்தார். அவருடைய பிதாவின் ஆலோசனைப்படி அது தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர் தற்செயலாக மரிக்கவில்லை அல்லது ஏதோ ஒரு கட்டாயத்தினாலும் அல்ல. அது தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரம். அதே நேரத்தில் தான் பஸ்கா பலி ஆலய முற்றப்பகுதியில் பலியிடப்பட்டது. கிறிஸ்துவே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தெரிந்துகொள்ளப்பட்ட இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக இருக்கிறார்.

சிலமாதங்களுக்கு முன்பு மக்களின் அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டினார்கள். ஏனெனில் நசரேயனாகிய இயேசு இறைவனைப் போல பாவங்களை மன்னித்தார். தமது வார்த்தையால் ஓய்வுநாளில் வியாதியஸ்தனை சுகமாக்கினார். ஜெபஆலயத்தின் அதிகாரத்திற்கு வெளியே திரளான மக்களைக் கொண்டு வந்தார். எனவே தேசத்தில் ஒருபிரிவினை, செலோத்தேயினரின் புரட்சி, ரோம ஆதிக்கத்தின் வல்லமை குறித்து அவர்கள் பயந்தார்கள்.

நசரேய தச்சனை மூப்பர்கள் விரும்பவில்லை. அவர் எல்லோரையும்விட அதிக ஞானமுள்ளவராக, ஆவிக்குரியவராக இருந்தார். அவர்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை. எனவே அவரை அழிப்பதின் மூலம் இறைவனுக்கு சேவை செய்வதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது தான் அவர்கள் அதிகாரம் நிலைத்திருக்கும். தேவாலயத்தின் விதிமுறைகள் நிலைநிறுத்தப்படும். நியாயப்பிரமாணம் காக்கப்படும்.

வேத நிபுணர்கள் இயேசுவைக் கொல்ல எண்ணினார்கள். அந்த மரணம் ஒரு விபத்தாக நேரிட்டது போல பொய்யான தாக்கத்தை உருவாக்க முயற்சித்தார்கள். அவரைக் கைது செய்ய தந்திரமான வழியை யோசித்தார்கள். தேசத்தைக் கலக்குகிறவன் என்ற குற்றச்சாட்டை இயேசுவின் மீது வைத்து, அவரை சட்டரீதியாக கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள்.

முன்பு இயேசு தமது சீஷர்களுடன் இருந்த காலத்தில் அவரைப் பிடிக்கவில்லை. அவர் சுகமளித்த போது, பிரசங்கம் செய்த போது, கலந்துரையாடிய போது அவரைப் பிடிக்கவில்லை. மக்கள் கூட்டத்தின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. இயேசு ஒரு துறவியைப் போலவோ அல்லது தேச மக்களின் மனதில் தெரிந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசியைப் போலவோ இல்லை. பிசாசாசனவன் பண்டிகை நேரத்தில் இயேசுவைக் கொல்லும்படி அவர்களை வழிநடத்தினான். அவரைக் கைது செய்யும்படி ஒற்றர்களை அவர்கள் அனுப்பினார்கள். எப்படி இருப்பினும் இயேசு வருடாந்திர பண்டிகை நாள் தமது மரணநாள் என்று குறித்து வைத்திருந்தார்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனின் ஆட்டுக்குட்டியானவரே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் உலகத்தின் பாவத்தை சுமந்தீர். எங்கள் மீது இரக்கமாயிரும். நீரே உண்மையுள்ள சாட்சி. நீர் எருசலேமை விட்டு ஓடிப்போகவில்லை. உமது எதிரிகள் உம்மைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள். நீர் உண்மையுள்ள மத்தியஸ்தர். எங்களை பரிசுத்தப்படுத்தும். இறைவனின் கோபாக்கினைக்கு நாங்கள் பாத்திரர்கள். நாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் அல்ல. உமது இரத்தம் எங்களுக்கு நீதியைத் தருகிறது. எங்களைப் பரிசுத்தப்படுத்துகிறது. ஆமென்.

கேள்வி:

  1. பஸ்கா ஆட்டுக்குட்டியின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 10:20 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)