Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 083 (Keep Watching)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

10. புத்தியுள்ள வேலைக்காரன் விழிப்பாயிருக்கிறான் (மாற்கு 13:34-37)


மாற்கு 13:34-37
34 ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான். 35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். 36 நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். 37 நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

இயேசு ஒரு பயணம் செய்யும் மனிதனைப் போல இருக்கிறார். அவர் சிலுவையிலறையப்பட்ட பின்பு, கல்லறையோடு அவர் பயணம் முடியவில்லை. உயிர்த்தெழுந்து அவர் பரமேறிய பின்பு ஒன்றுமில்லாத நிலைக்கு செல்லவில்லை. அவர் ஜீவிக்கிறார். பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். தமது வல்லமையால் இந்த பிரபஞ்சத்தை தாங்குகின்றார். அவர் நமக்காகப் பரிந்து பேசுவதால் நியாயத்தீர்ப்புகள் நம்மை அழிக்கவில்லை.

இயேசு தமது ஆவிக்குரிய வீட்டையும், ஆலயத்தையும் விட்டுவிடவில்லை. அவர் வேலைக்காரர்களை அழைக்கிறார். அவர்களுக்கு பணியைக் கொடுக்கிறார். அவர்களுக்கு வரங்களைக் கொடுக்கிறார். வேலைகளை அவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கிறார். விசுவாசிகள் இறைவனுடைய வல்லமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். ஆண்டவருடைய பணிக்கென்று பாடுபடுகிறார்கள். அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆண்டவர் ஒரு குறிப்பிட்ட பணியை ஒருவனுக்கு கொடுக்கிறார். அவருக்கு கீழ்ப்படிந்து பணிசெயய விரும்புவருக்கு தேவையான வல்லமையைக் கொடுக்கிறார். நாம் பழைய உடன்படிக்கையின் கீழ் வாழவில்லை. அவர்கள் கடவுளின் மக்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தார்கள். புதிய உடன்படிக்கையின் கீழ் இயேசு நமக்கு அன்பின் வல்லமையை தந்துள்ளார்.

பரிசுத்தமாகுதலின் மூலம் நித்திய வாழ்வை நாம் பெறுவது மட்டும் நோக்கம் அல்ல. கிறிஸ்து நம்மை அவர் பணிக்கென்று பரிசுத்தப்படுத்துகிறார். அவருக்கு சாட்சியாக வாழும்படி நம்மை அனுப்புகிறார். எனவே அன்புடன் கிரியைகள் செய்து நமது நாட்களை ஞானமாய் பயன்படுத்துவோம். நமது பணி என்று சொன்னால், தியானம், மன்றாட்டு, உபதேசம் என்பவைகள் மட்டும் அல்ல. கடினமாக அவருக்கு பணி செய்வதாகும். ஆண்டவருக்காக தங்களையே தியாகம்பண்ணி செயல்பட்ட அநேகர் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆண்டவருக்காக பணிசெய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்லது அல்ல. நமது சரீரங்களை இறைவனுக்கு உகந்த ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் (ரோமர் 12:1).

இறைவன் உன்னை நம்பி கொடுத்திருக்கிற பணியைக் குறித்து உனக்குத் தெரியுமா? விசுவாசத்துடன் மன்றாடு. நீ என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அவரிடம் கேள். நடைமுறையில் எவ்விதம் ஆண்டவருக்கு பணி செய்வது என்று உனக்குத் தெரியவில்லையா? அப்படியெனில் எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் சூழ்நிலையில் நீங்கள் எவ்விதம் பணிசெய்ய முடியும் என்பதை உங்களுக்கு தெரிவிப்போம்.

ஆண்டவர் தமது வேலைக்காரர்களில் ஒருவனை காவற்காரனாக நியமித்தார். அவன் எப்போதும் விழிப்பாயிருந்து ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கி இருப்பான். இது தீர்க்கதரிசன வரத்தை குறிக்கின்றது. ஆண்டவரின் வருகைக்காக ஆவலுடன் மன்றாடுவதைக் காண்பிக்கிறது. இந்த வரம் சபையில் முழுமையாக நின்றுபோகவில்லை. இயேசு தமது சரீரத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் சிறப்பான வரத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய வார்த்தையின் அடிப்படையில் ஏற்படும் அடையாளங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். தாங்கள் கற்றுக்கொண்டதை சபை மக்களுக்கு சொல்லுகிறார்கள்.

இந்த வரத்தோடு சேர்த்து, ஆண்டவர் தமது வேலைக்காரர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி கட்டளையிடுகிறார். அவர்கள் பொறுப்புடன் தங்கள் பணியை நிறைவேற்ற வேண்டும். நமது நேரம், பணம், வார்த்தைகள், சிந்தனைகள், செயல்கள், விண்ணப்பங்கள் அனைத்திற்கும் நாம் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை சிந்தையில் வைத்து செயல்பட வேண்டும். நீ சோம்பேறியா அல்லது கடின உழைப்பாளியா என்பதை ஆண்டவர் உனக்கு காண்பிப்பார். நீ ஞானமாய் செயல்படுகிறாயா? மூடத்தனமாய் நடக்கிறாயா? நீ உன்னையும், உனது குடும்பத்தையும் மட்டும் சிந்திக்கிறாயா? அல்லது பலவீனர், எளியவரைக் குறித்து அக்கறைப்படுகிறாயா? ஆண்டவர் உன்னை நேசித்தது போல, நீ அவரை நேசிக்க வேண்டும். அவருடைய வார்த்தையின் வல்லமை, வழிநடத்துதல் உனக்கு உண்டு.

நீ ஆவியில் விழித்திருக்கிறாயா? அல்லது உனது இச்சைகளில் தூங்கிக் கொண்டிருக்கிறாயா? இந்த உலகக் கடிகாரத்தின் முள் நடு இரவு நேரத்தை நெருங்கிவிட்டது. திரளான மக்கள் டிவி முன்பு அமர்ந்து தங்கள் விலையேறப்பெற்ற நேரத்தை வீணாக்கி, இறைவனை மறக்கிறார்கள்.

உனது இருதயம் இறைவனின் உயிருள்ள வார்த்தையால் நிரப்பப்பட்டுள்ளதா? உனது ஒளி இருளில் பிரகாசிக்க வேண்டும். நீ எப்போதும் ஆண்டவருடைய வருகையை எதிர்நோக்கி விழிப்பாயிருக்க வேண்டும். ஆண்டவருக்கு நீ எப்போதும் கதவைத் திறக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். அவருக்கு நீ கணக்கு கொடுக்க வேண்டும். உனது அலுவலகத்தில் உள்ளவர்கள் அல்லது உனக்கு நெருங்கியவர்களை நீ ஆயத்தப்படுத்தி இருக்கிறாயா? உனது வாழ்வும், வேலையும் நன்கு திட்டமிடப்பட்டு நடக்கிறதா? அல்லது உனது வாழ்வும், உனது சிந்தனைகளும் சீர்குலைந்து போயுள்ளதா? தெரிந்த ஒரு பாவத்தை நீ மறைத்து வைக்கிறாயா? உனது இருதயத்தில் இறைவனின் ஆவிக்கு எதிராக ஒரு தீமையை வைத்துக்கொண்டிருக்கிறாயா?

பரிசுத்த ஆவியின் உதவியோடு செயல்படு. உனது வாழ்வை ஆயத்தப்படுத்து. இப்போதே மிகவும் காலதாமதமாகிவிட்டது. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். நீங்கள் யாரைக் காயப்படுத்தினீர்களோ, அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். உங்களுடையதல்லாத திருடிய பொருட்களை திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஆண்டவர் கூறுகிறார்: “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது. மகிமையின் ஆண்டவர் உன்மேல் உதிப்பார்”.

நீ ஊழியக்காரன் என்றால், உன்னுடைய நண்பர்களின் வாழ்விற்கு நீ ஆவிக்குரிய காரியங்களில் பொறுப்புள்ளவன். ஆண்டவர் உன்னையும், உனது குடும்பத்தையும் ஆயத்தப்படுத்தும்படி அவரிடம் மன்றாடு. அவர் இயேசுவின் இரத்தத்தால் உன்னை சுத்திகரிப்பார். அவர் வருகைக்காக உன்னை ஆயத்தப்படுத்துவார். அவர்களிடம் தாழ்மையுடன் பேசு. இறைவனுடைய அன்பைக் குறித்த அனைத்து வாக்குத்தத்தங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களை நீ எச்சரிக்கைவில்லையென்றால், ஆண்டவர் அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு உன்னிடம் கணக்கு கேட்பார். ஆண்டவர் உனக்கு வெளிப்படுத்திய இரகசியங்கள் அனைத்தையும் நீ அவர்களுக்குத் தெரியப்படுத்தியும், அவர்கள் மனந்திரும்பவில்லை என்றால், அவர்களுடைய பாவங்களை அவர்களே சுமப்பார்கள். ஊக்கமாகவும், இடைவிடாமலும் உங்கள் மக்களுக்காக மன்றாடுங்கள். இறைவனுடைய அன்பினால் அவர்கள் பெருமை தகர்ந்து போகும். அவர்கள் இயேசுவின் நல்ல வேலைக்காரராக, மகிழ்ச்சியின் ஆரவாரத்துடன் அவரை சந்திக்க ஆயத்தமாக இருப்பார்கள்.

விண்ணப்பம்: ஆமென்! கர்த்தராகிய இயேசுவே வாரும், உம்மை சந்திக்க நாங்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல. நீர் எங்களுக்கு கட்டளையிட்டதை நாங்கள் நிறைவேற்ற தவறிவிட்டோம். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் எங்களை சுத்திகரியும். நீர் உமது மகிமையுடன் தோன்றும் போது, நாங்கள் பயமின்றி உமது சமூகத்தில் காணப்பட உதவும். உமது ஞானமுள்ள ஆவியால் எங்களை வழிநடத்தும், பலப்படுத்தும். உமது வருகையை எதிர்நோக்கி நாங்கள் ஆயத்தமாக இருக்க வழிநடத்தும். எங்கள் வாழ்வு உம்முடைய மீட்பிற்கு ஒரு நன்றிபலியாக இருக்கச் செய்யும். வாரும்! ஆண்டவராகிய இயேசுவே எல்லா மக்களுக்கும், குறிப்பாக ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு உமது வழியை ஆயத்தப்படுத்துகிறோம். ஆமென்.

கேள்வி:

  1. ஆண்டவருடைய வருகைக்காக நாம் எப்படி விழிப்பாயிருந்து காத்திருக்க முடியும்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 08:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)