Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 075 (Warning Against Deceivers)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

2. ஏமாற்றுக்காரர்களைக் குறித்து இயேசு எச்சரிக்கிறார் (மாற்கு 13:5-8)


மாற்கு 13:5-8
5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. 8 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.

குழப்பத்துடன் இருந்த சீஷர்களுக்கு இயேசு உடனடியாக பதிலளிக்கவில்லை. அவர்கள் அவருடைய வெளிப்பாட்டிற்கு மனிதவழியில் பதிலளித்தார்கள். அவர்கள் பயந்திருந்தார்கள். அவர்கள் இறைவனுடைய நியாயத்தீர்ப்பை அடையாதபடி எச்சரிக்கையுடன் இருக்கும்படி இயேசு விரும்பினார்.

யுத்தங்கள், வலிகள், வியாதிகள், மரணம் இவைகள் விசுவாசிகளுக்கு ஆபத்தானவை அல்ல. ஆனால் நமது உலகில் உள்ள திசைதிரும்பும் கொள்கைகளைக் குறித்த அவர்களுடைய சொந்த மனப்பான்மை தான் மிகவும் ஆபத்தானது. உண்மையான இறைவனை விட்டு நித்தியகாலமாக பிரிக்கப்படுவது தான் நியாயத்தீர்ப்பு ஆகும். எனவே தான் ஏமாற்றுக்காரர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி இயேசு தமது சீஷர்களை எச்சரித்தார். இறைவனை விட்டு விலகுதல் என்பது ஆவிக்குரிய போராட்டத்தில் தடுமாறுவதின் தொடர் விளைவு ஆகும். அவர் கூறினார்: “ ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்”. இயேசு தமது சீஷர்களிடம் அரசியல் மற்றும் யுத்த காரியங்களைக் குறித்து கவனித்துப் பாருங்கள் என்று கூறவில்லை. ஆனால் அவர்களுக்குள் உள்ளான எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தினார். விசுவாசத்தைக் கறைப்படுத்தும் வஞ்சனை உபதேசங்கள், நாத்திக சிந்தனைகள், சத்தியத்தை திரித்துப் பேசி இறைவனை விட்டு விலகுதல், நியாயப்பிரமாணத்தை மீறுதல், இறுதி நியாயத்தீர்ப்பு இவைகளைக் குறித்துப் பேசினார்.

நன்மைக்கு எதிரானவன் பக்தியுள்ளவர்களை அலங்கார வார்த்தைகளால் வஞ்சிக்கிறான். அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை தந்திரமாக பயன்படுத்துகிறார்கள். அவருடைய பெயரை முகமூடி போல் அணிந்துகொள்கிறார்கள். ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விதத்தில் நாத்திக சிந்தனையைக் கொடுக்கிறார்கள்.

எண்ணற்ற தலைவர்கள், வழிகாட்டிகள் தோன்றினார்கள். எவ்விதம் பரதீசை அடைவது என்று மக்களுக்கு கூறினார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் கடந்துபோனார்கள். இன்று அவர்கள் நவீன மனோதத்துவ முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களுடைய திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். மனிதன் நல்லவன் அவனால் அவனுடைய இலக்குகளை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். அவர்கள் துணிகரமாக பொய் பேசுகிறார்கள். அவர்களுக்கு மனிதனுடைய இருதயத்தைக் குறித்த அறிவு இல்லை. நாம் சிறுவயது முதற்கொண்டு துன்மார்க்கராக இருக்கிறோம். நாம் நன்மை செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம். எல்லாரும் வழிவிலகிப் போனார்கள். அவர்கள் இறைவனுடைய கோபத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்காக சிலுவையில் அறையப்பட்ட ஒரு ஒப்புரவாகும் பணியை செய்பவர் தேவை. சிலுவை இல்லாமல் இறைவன் முன்பு எந்தவொரு நீதியும் இல்லை. சிலுவையில் அறையப்பட்டவர் மீது விசுவாசம் இல்லையெனில் அந்த இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வதில்லை. உயிர்த்தெழுந்த ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளாதவன் ஆக்கினையை அடைவான். ஏனெனில் அவன் இறைவனிடம் செல்லும் ஒரேயொரு வழியைப் புறக்கணிக்கிறான்.

கடைசி நாட்களில் பெருகுகின்ற மன சோர்வுகளினால் ஆண்களும், பெண்களும் கள்ளத்தீர்க்கதரிசிகள் மற்றும் தத்துவ மேதைகளின் பொய்யைப் பற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் மதத்தில் உள்ள வித்தியாசமான நம்பிக்கைகளை இணைக்கிறார்கள். அற்புத சுகமாக்குதலை நிகழ்த்திக் காண்பிக்கிறார்கள். தேசங்கள் நடுவில் சமாதானத்தை கொண்டு வர செயல்படுகிறார்கள். அநேக மில்லியன் கணக்கான மக்களை அவர்கள் ஈர்க்கிறார்கள்.

எச்சரிக்கையாயிருங்கள்! தேவபக்தியின் ஆடைகளைத் தரித்துக்கொண்டு கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள். இந்த உலகின் எந்தவொரு சீர்திருத்தவாதியும் கிறிஸ்துவைப் போல இல்லை. கிறிஸ்து தனது இரண்டாம் வருகையை தெளிவாகக் கூறியிருக்கிறார். அவரைப் போல ஒருவரும் இல்லை. கள்ளத்தீர்க்கதரிசிகள் தங்களுடைய இருதயக் கடினத்தினாலும், இறைவனுக்கு கீழ்ப்படியாமையினாலும் மக்களை திசை திருப்புகிறார்கள். பரிசுத்தமானவரின் உடன்படிக்கையை விட்டு அவர்கள் முற்றிலும் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறைவனை விட்டு தூரம் போனதின் ஒரு விளைவாக யுத்தங்கள் உள்ளன. யுத்தங்களை எதிர்பார்த்திருக்கும்படி கிறிஸ்து நம்மை எச்சரிக்கிறார். தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் பொறாமை, பகை, ஒத்துப்போகாத நிலை காணப்படுகிறது. மனிதன் நல்லவன் அல்ல. அவன் மோசமானவன். யுத்தங்கள் நேரிடும் என்று இயேசு கூறினார். சமாதானத்தை நிலைநாட்ட எடுக்கப்படும் அநேக அரசியல் முயற்சிகள் தோற்றுப்போகும் என்பதை இந்தக் கூற்று வெளிப்படுத்துகிறது. வெளிப்பிரகாரமான காரியங்களை மாற்றுவது அல்ல முக்கியமான செயல். மாறாக இருதயங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம். மனமாற்றம் இல்லாமல் உண்மையான சமாதானம் இல்லை. வார்த்தை பிரசங்கிப்படாவிட்டால் மரணம் நேரிடும்.

கிறிஸ்து கூறினார்: “யுத்தங்களின் சத்தங்களை நீங்கள் கேட்கும் போது கலங்கிட வேண்டாம். உங்களுக்கு எதிராக இருக்கும் யோசனையைவிட உங்களுடன் இருக்கும் பரலோகத்தின் சேனை மிகப்பெரியது. அநேக பரிசுத்தவான்கள் இந்த வாக்குத்தத்தத்தை அனுபவித்திருக்கிறார்கள். அவருக்குத் தெரியாமல் நம்முடைய தலையிலுள்ள ஒரு முடி கூட கீழே விழுவதில்லை. கிறிஸ்தவர்கள் மரிக்கும் போது, உண்மையில் அவர்கள் வாழ்கிறார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் மரண பயம் மேற்கொள்ளப்படுகிறது. நமது மார்க்கம் வாழ்வின் மார்க்கம். குண்டுகள் துளைத்து நாம் கொல்லப்பட்டாலும், நாம் பாதுகாப்புடன் இருப்போம். நாம் என்றென்றும் பாதுகாக்கப்பட்டு இருப்போம்.

உபத்திரவங்களும், தவறுகளும் பெருகும். கீழ்ப்படியாமையின் ஆவி மனிதர்களை ஆட்கொள்கிறது. ஆவிக்குரிய சீர்கேடு, கலகம், அதிருப்தி, பகை ஆகிய காரியங்கள் மக்களை அழிக்கின்றன. அதிகாரம், மற்றவர்கள் மீதான பகை ஆகியவை தனிநபர்களை மட்டும் பாதிக்கவில்லை. அவைகள் தேசங்களையும் பாதிக்கின்றன. முன்னேற்றம், நாகரீக வளர்ச்சிக்குப் பதிலாக, அவர்கள் உலகை அழிக்கும்படி திரும்புகிறார்கள். மனிதர்களை சுமக்க விருப்பமில்லாத நிலையில் பூமி அதிர்கிறது. வயல் நிலங்கள் விளைச்சலைக் கொடுப்பதில்லை. பட்டினி பெருகுகின்றது. பெட்ரோலிய விலை உயர்வுக்குப் பின் கோதுமைப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம் ஆகியவற்றை நாம் அனுபவிக்கிறோம்.

இந்த உலகத்தின் அதிபதி இறைவனின் நல்ல படைப்பை அழிக்கும்படி தன்னுடைய மக்களைத் தூண்டுகிறான். எனவே அவர்கள் இரக்கம் நிறைந்த சிருஷ்டிகரை விட்டுத் திரும்புகிறார்கள்.

கிறிஸ்து கூறிகிறார்: ஆச்சரியப்பட வேண்டும். கள்ள உபதேசங்கள், யுத்தங்கள், கீழ்ப்படியாமை இவைகள் எதிர்பார்க்கப்பட வேண்டியவைகள். அவைகள் உலகத்தின் முடிவை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் இறுதி நியாயத்தீர்ப்பு நாளின் அடையாளங்களாக இவைகள் உள்ளன. கிறிஸ்துவின் வருகை முடிவையும், புதிய ஆரம்பத்தையும் கொண்டுவரும்.

விண்ணப்பம்: வல்லமையுள்ள ஆண்டவரே, எங்கள் இருதயங்கள் நடுங்குகின்றன. எங்கள் மீது யுத்தங்கள், உபத்திரவங்கள், பஞ்சங்கள், மரணம் ஆகியவை வருகின்றன. எங்கள் பயத்தை மன்னியும். உம் மீதான எங்கள் நம்பிக்கையை பெலப்படுத்தும். உமது வல்லமையை நாங்கள் சமாதானத்துடன் சார்ந்து கொள்ள உதவும். நீர் எங்களை எச்சரிக்க விரும்புகிறீர். எல்லா வஞ்சிக்கும் உபதேசங்களையும் நாங்கள் புறக்கணிக்க உதவும். உமது கோபத்தில் நாங்கள் அழியாதபடி காத்துக்கொள்ளும். பகுத்தறியும் ஆவியையும் உடனடியான கீழ்ப்படிதலையும் தாரும். எமது உலகில் உள்ள எல்லா விசுவாசிகளைப் போல உமது சித்தத்தை நாங்கள் அறிந்து, மகிழ்ச்சியுடன் அதை நிறைவேற்ற உதவு செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. “யுத்தங்கள் நேரிடும்? என்று இயேசு ஏன் சொன்னார்?”

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 04:20 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)