Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 068 (Parable of the Unfaithful Vinedressers)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)

6. உண்மையற்ற திராட்சைத் தோட்டக்காரர்கள் குறித்த உண்மை (மாற்கு 12:1-12)


மாற்கு 12:1-12
1 பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். 2 தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். 3 அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். 4 பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். 5 மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். 6 அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். 7 தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 8 அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். 9 அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? 10 வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; 11 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார். 12 இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஜனத்துக்குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

பழைய உடன்படிக்கையின் மக்களை கனிதரும் திராட்சைத் தோட்டமாக இறைவன் நாட்டினார். தன்னுடைய நியாயப்பிரமாணம் என்ற வேலியை அவர்களைச் சுற்றிப் போட்டார். பலிகள் என்ற ஒழுங்கை திராட்சை ஆலையைப் போன்று வைத்தார். தேசத்தின் நடுவிலே தீர்க்கதரிசிகள் என்ற காவற்கோபுரங்களைக் கட்டினார். அதிகாரத்தையும், பொறுப்பையும் மதத் தலைவர்களுக்குக் கொடுத்தார்.

இறைவன் தனது தீர்க்கதரிசிகளை உண்மையுள்ள ஊழியக்காரர்களாக அனுப்பினார். மனம்திரும்புதல், உண்மை மற்றும் அன்பு என்ற நற்கனிகளை ஆண்டவருக்கு அவர்கள் தரும்படி அனுப்பினார். ஆனால் அங்கே கனிகள் இல்லை. சுயநீதி, அகங்காரம், இருள், கீழ்ப்படியாமை, கடினப்பட்ட தேசம் தான் இருந்தது. இறைவனுடைய செய்தியாளர்களை துன்புறுத்தி, அடித்து, பரியாசம்பண்ணி, சிலரைக் கொன்றும் போட்டார்கள்.

இறைவனுடைய பொறுமை எவ்வளவு பெரியது. அவர்களுடைய கடினத்தன்மையின் நிமித்தம் அந்த தேசத்தை அவர் அழிக்கவில்லை. தொடர்ந்து தன்னுடைய ஊழியக்காரர்களை அனுப்பினார். தனது வேலைக்காரர்களிடம் இப்படிப்பட்ட பொறுமையுடன் செயல்படுகின்ற ஒரு மனிதனைக் காண்பது இயலாத காரியம். இறைவன் பொறுமையுள்ளவர், இரக்கமுள்ளவர். அதிகாரத்தினால் அல்ல, அன்பினால் மனிதர்களை கீழ்ப்படியச் செய்து அவர்களை ஆதாயப்படுத்துவது தான் அவருடைய திட்டம் ஆகும்.

நித்தியத்திலிருந்து இறைவன் தான் நேசிக்கிற ஒப்பற்ற குமாரனை உடையவராக இருந்தார். அவர் இறைவனுடைய தற்சுரூபமானவர். அன்பின் ஆவியினால் பிறந்தவர். அவரே அனைத்தையும் படைத்தவர். அவர் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் ஆண்டவர். அவருடைய மகிமையையும், பரிசுத்தத்தையும் கண்டு தூதர்கள் அவரை ஆராதித்தார்கள். அவருடைய பெயரைக் கேட்டாலே பிசாசுகள் நடுங்குகின்றன. ஆனாலும் பழைய உடன்படிக்கையின் மக்கள் அவருக்குப் பயப்படவில்லை. அவரை அவமதித்தார்கள். நமது தலைமுறை மக்கள் அவரைப் புறக்கணிக்கிறார்கள். மனிதர்கள் தங்களுடைய ஆண்டவரைக் கொல்லும்படி ஆயத்தமாகிறார்கள் என்பதைக் கூறுவதற்கு இந்த உலகில் எந்தவொரு துக்கமான வார்த்தைகளும் இல்லை. தங்களுடைய சிருஷ்டிகராகிய இறைவனின் குமாரனை அழிக்க முற்படுகிறார்கள். இறைவன் தமது அன்பின் நிமித்தம் பொறுமையுடன் நம்மை அணுகுகிறார். நமது கடின இருதயங்கள் மத்தியிலும் அவருடைய பிரியமான குமாரன் நம்மை மீட்கிறார். நாம் அவருடன் மனந்திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். அவருடைய இரக்கத்தினால் நம்மை மாற்றி அமைக்கிறார்.

ஆனாலும் மக்கள் தங்களுடைய சிருஷ்டிகரை வெறுத்தார்கள். அவருக்கு கீழ்ப்படியவில்லை. சதித்திட்டம் தீட்டி அவருடைய குமாரனைக் கொலை செய்தார்கள். அவர்கள் இறைவனுடைய தன்மையை அறியவில்லை. பழைய உடன்படிக்கை மக்களுக்கும், புறவினத்தாருக்கும் கிறிஸ்துவின் மரணம் பெரிய தோல்வியாகத் தெரிகிறது. ஆனால் அது இறைவனுடைய உண்மையான அன்பின் உச்ச நிலையைக் காண்பிக்கிறது.

இறைவனுடைய பொறுமை மற்றும் அன்பின் மத்தியில் உனது நிலை என்ன? உனது இரட்சகருக்கு, அவர் தந்த இரட்சிப்பிற்கு நன்றியாக உன் வாழ்வில் கனிகளை நீ தருகிறாயா? அல்லது நீ இன்னும் உனக்காகவே வாழ்கிறாயா? உனது புகழ்ச்சியை விரும்புகிறாயா? துணிகரமாக பாவம் செய்கிறாயா? பழைய உடன்படிக்கையின் தேசமக்களின் இடத்தில் இறைவன் உன்னை நாட்டியிருக்கிறார். அவர் யூதர்களை நியாயம்தீர்த்தார். நீ கனிகொடாத பட்சத்தில் உன்னையும் நியாயம்தீர்ப்பார். அவருடைய அன்பில் தொடர்ந்து முன்னேறு. அவருடைய சத்தியத்தினால் பரிசுத்தத்தை காத்துக்கொள். பரிசுத்தமான இறைவன் உன்னிடம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கிறார். முதலாவது அவருடைய குமாரனை நீ கனத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்ளும்படி எதிர்பார்க்கிறார். உனது வாழ்வில் ஆவியின் கனிகளை நீ அவருக்கு கொடுக்க வேண்டும்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, எங்கள் சுய நலத்தை மன்னியும். உமது சத்தியத்தை நான் புறக்கணித்த நேரங்களை எண்ணி வெட்கப்படுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். உமது வழிநடத்துதலுக்கு எதிராக கீழ்ப்படியாமல் கலகம் செய்திருக்கிறேன். என்னை புறக்கணியாதிரும். என்னை பரிசுத்தப்படுத்தும். நான் எல்லா நேரங்களிலும் உமக்காகவும் உமது குமாரனுக்காகவும் வாழும்படி என்னை மாற்றும். உமது அற்புதமான பொறுமைக்காக நன்றி செலுத்துகிறேன். எனக்கு ஞானத்தையும், பொறுமையையும் தாரும். உமது நல்ல ஆவியினால் உமக்கு கனிகளைத் தரும்படி கிருபை செய்யும். உமது நேசகுமாரனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்பட உதவும். ஆமென்.

கேள்வி:

  1. துன்மார்க்கமான திராட்சத்தோட்ட வேலைக்காரர்கள் உவமை மூலம் இயேசு எவ்விதம் இறைவனின் அன்பை வெளிப்படுத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 18, 2021, at 05:02 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)