Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 064 (Jesus’ Entry into Jerusalem)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)

2. இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தல் (மாற்கு 11:1-10)


மாற்கு 11:1-10
1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: 2 உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். 3 ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4 அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். 5 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். 6 இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். 7 அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். 8 அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். 9 முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; 10 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

கிறிஸ்து பர்திமேயுவின் கண்களைத் திறந்தார். எனவே எருசலேமிற்குள் கிறிஸ்து பிரவேசிப்பதன் அர்த்தத்தை அவன் புரிந்துகொண்டான். பிரதான ஆசாரியர்களின் வேவுகாரர்கள் அங்கு இருந்தாலும், நாசரேத்தூர் இயேசு வாக்குப்பண்ணப்பட்ட கிறிஸ்து, தாவீதின் குமாரன், மெய்யான இராஜா என்பதை அவன் அறிந்துகொண்டான்.

கூட்டத்தார் அவரைச் சூழ்ந்திருந்த போதும் இயேசு இந்த இராஜரீகப்பட்டத்தை மறுக்கவில்லை. அவருடைய வல்லமையை சாட்சியிட்டவனை அவர் சுகப்படுத்தினார். அவன் மேசியாவை எதிர்பார்த்திருந்ததற்கு இது ஓர் அடையாளம் ஆகும். இவ்விதமாக அவன் நம்பிக்கையை சீஷர்கள் மற்றும் மக்களின் மனங்களில் விதைத்தான். அவர்கள் அனைவரும் இறைவனின் வெற்றியில் பங்குபெற விரும்பினார்கள். எனவே அவர்கள் வெப்பம் நிறைந்த பாலைவனப் பாதை வழியாக இயேசுவுடன் கிரீடம் போல மலைமேல் அமைந்திருந்த எருசலேமை நோக்கி மலைப்பாதையில் ஏறிச்சென்றார்கள்.

அவர் ஒலிவமலையைக் கடக்கும் முன்பு, சகரியாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். அவர் போர்க்குதிரையின் மீதோ அல்லது படையுடன் பெருமை மிக்க ஒட்டகத்தின் மீதோ வந்து தலைநகரைப் பிடிக்கின்ற கொடூர இராஜா இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். அவர் தாழ்மையுடன் கழுதைக்குட்டியின் மீது பவனி வந்தார். மேலும் வல்லமைமிக்க ஆண்டவர் தாழ்மையுடன் இருந்தார். அவர் ஏழ்மையுடன், தேவையுள்ளவராக இருந்தார். அவருக்கென்று ஒரு கழுதைக் குட்டி கூட சொந்தமாக இல்லை. எனவே அவர் ஒரு சிநேகிதனிடம் இருந்து அதை கடன் வாங்கினார். இறைவனின் குமாரனுக்கு ஓர் சால்வை கூட இல்லை. அவர் தமது மக்களின் ஆடைகளைப் பயன்படுத்திக் கொண்டார். அதை கழுதைக்குட்டியின் மீது போட்டார்கள். அவர் அதன் மீது அமர்ந்து சென்றார். இவ்விதமாக அவர் சமாதானத்தின் நகரத்தினுள் தாழ்மையுடன் பிரவேசித்தார். ரோமப் போர் வீரர்கள் அவர் கடந்து சென்றபோது தடை செய்யவில்லை. குறிப்பாக பண்டிகை நேரங்களில் ஆண்டவரை சத்தமிட்டு துதிப்பது ஜனங்களின் வழக்கம். அப்படியிருந்தும் அவருடைய தாழ்மையின் செயல் அதிகாரங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை.

அவருடன் இருந்த ஜனங்கள் பஸ்கா பண்டிகை சமயத்தில் பாடக்கூடிய துதியின் சங்கீதத்தைப் பாடி அவரை துதித்தார்கள். தேவாலயத்திற்குள் பிரதான ஆசாரியன் வரும்போதும், மக்களை இறைவனுடன் ஒப்புரவாக்கும் பணியை செய்யும்போதும் இதைப் பாடுவது வழக்கம். இவ்விதமாக திரளான மக்கள் அவரை ராஜா என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.

கிறிஸ்து மெய்யான பிரதான ஆசாரியன். அவர் நம்மை இறைவனுடன் முழுமையாக ஒப்புரவாக்குகிறார். நமது இருதயங்களில் அவருடைய ராஜ்யத்தின் சமாதானத்தைக் கொண்டு வருகிற ராஜாதி ராஜாவாக அவர் இருக்கிறார். உனது இருதயத்தில் வீட்டில், கிராமத்தில், பட்டணத்தில் ஆண்டவர் வரும்படி அவருக்கு நீ வழியை ஆயத்தம் செய்து இருக்கிறாயா? தெய்வீக ராஜாவாகிய இயேசு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறாரோ, அங்கு நித்திய ராஜ்யத்தின் சமாதானம் தொடங்குகிறது. பரிசுத்த ஆவியின் மூலமாக தாவீது இராஜாவிற்கு இக்காரியம் ஏற்கெனவே முன்னுரைக்கப்பட்டிருந்தது.

தாழ்மையுள்ள கிறிஸ்து வருவதைக் குறித்த மகிழ்ச்சியை நீ உணருகிறாயா? அவர் இராஜாவாக மட்டுமல்ல, இறைவனின் ஆட்டுக்குட்டியாகவும் வந்தார். அவரை பின்பற்றுபவர்கள் தாழ்மையுள்ள ராஜாவை தங்கள் இருதயங்களில் கொண்டிருப்பதன் மூலம் இந்த துன்மார்க்க உலகத்தின் மத்தியில் இறைவனுடைய ராஜ்யத்தின் பிரசன்னத்தை உன்னால் அனுபவிக்க முடிகிறதா? உனது சூழ்நிலையில் எவ்விதம் அவருக்கு நீ வழியை ஆயத்தப்படுத்துகிறாய்?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் தாவீதின் குமாரன், தெய்வீக ராஜா. உம்மிடத்தில் ஒரு குற்றமும் இல்லை. நீர் அன்பின் தற்சுரூபம். உம்மில் நாங்கள் பரிசுத்தம், நீதி, இரக்கம், பொறுமை மற்றும் கிருபையைக் காண்கிறோம். உமது ராஜ்யத்தின் ஐக்கியத்தில் எங்களை சேர்த்துக்கொள்ளும். நாங்கள் உம்மைப் பின்பற்றும்படி எங்களை தூய்மையாக்கும். இந்த பிரபஞ்சத்தின் மையமாக உம்மை மட்டுமே நாங்கள் எப்போதும் காண எங்கள் மனக்கண்களைத் திறந்தருளும். நீர் தாழ்மையுடன் வந்தீர். எல்லா மகிழ்ச்சியின் ஆரவாரத்துடன் மில்லியன்கணக்கான மக்கள் உம்மை ஏற்றுக்கொள்ள வழிநடத்தும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்ததை ஏன் ரோமப் போர் வீரர்கள் தடுக்கவில்லை?

www.Waters-of-Life.net

Page last modified on August 18, 2021, at 03:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)