Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 051 (Coming Down From the Mountain)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

4. மலையிலிருந்து கீழே இறங்கி வருதல் (மாற்கு 9:8-13)


மாற்கு 9:8-13
8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். 10 மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: 11 எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள். 12 அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். 13 ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நாம் அனைவரும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பரலோகிற்கு செல்லவில்லை. மரணம் நமக்கு எதிர்த்து நிற்கிறது. சோர்வுகளும், பகைகளும் நம்மை சிறைப்படுத்துகிறது. இந்த துயரமான, வலிநிறைந்த உண்மையை சீஷர்கள், கிறிஸ்துவில் இறைவனின் மகிமையை மலை மீது கண்டபோது உணர்ந்து கொண்டார்கள். கிறிஸ்து அவர்களுடன் இல்லாததைப் போன்ற ஓர் சோர்வு நிலைக்கு அவர்கள் வந்தார்கள். எல்லா விசுவாசிகளுக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருப்பவர் கிறிஸ்து மட்டுமே. அவர்கள் பிரிந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் அச்சாரமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறார். மறுபடியும் பிறந்த ஓர் கிறிஸ்தவன் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை. தீமையான நாட்களிலும், வல்லமையுள்ள இறைவன் அவனுடன் வாசம்பண்ணுகிறார். கிறிஸ்தவன் இறைவனுடன் தங்கி வாழ்கிறான். அவருடைய அன்பில் தொடர்கிறான்.

மரித்த பின்பு உயிர்த்தெழுவதைக் குறித்த நற்செய்தியை கிறிஸ்து தனது சீஷர்களுக்கு அறிவித்தார். தமது மரணத்திற்கு முன்பு, உலகில் எல்லா தீய வல்லமைகள் மீதான தனது வெற்றியை அவர் சாட்சியிட்டார். தனக்குள் மறைந்திருக்கும் ஜீவனை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ஆனாலும் சீஷர்கள் இந்த அற்புதத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு இறைவனின் குமாரன் என்று நினைத்தார்கள். அவர் தமது வாக்குத்தத்தின்படி, அவருடைய இறைதன்மைக்கு அடையாளமாக மரித்தோரை எழுப்புவார் என்று எண்ணினார்கள். மேலும் யூதர்கள் அவருடைய மகிமையின் வருகையை விசுவாசித்தார்கள். மேசியா மரித்தோரை எழுப்புவார். தமது நீதியின் ராஜ்யத்தை ஸ்தாபிப்பார். அதனுடைய நகரம் எருசலேம். இறைபக்தியுள்ளோர் எலியாவின் ஆவியுடையவன் தோன்றுவான் என்பதை அறிந்திருந்தார்கள். அவன் கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துவான். அநீதியுள்ளவர்களை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணுவான்.

மூன்று சீஷர்களும் எலியா தீர்க்கதரிசியைக் கண்செபோது குழப்பமடைந்தார்கள். அவர்கள் இறைவனுடைய அரசு உடனடியாக வந்துவிட்டது என்று எண்ணினார்கள். அவர்கள் சிலுவையின் அவசியத்தைப் புரிந்துகொள்ளவில்லை. எனவே தான் இயேசு மீண்டும் ஒருமுறை தனது பாடுகள் மற்றும் புறக்கணிப்பு குறித்து பேசினார். இறைவனுடைய அரசு முதலில் மகிமையுள்ளதாக வரவில்லை. இயேசு பாவிகள் அனைவருக்காகவும் பதிலாளராக மரித்து தனது உயிரைக் கொடுக்க ஆயத்தமானார். பரிசுத்த ஆவியின் செயலினால் அன்றி, எந்தவொரு மனிதனும் இந்த இரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இறைவனுடைய அரசு என்பது அரசியல் போராட்டங்கள் மற்றும் விளைவுகளால் ஆரம்பிக்கப்படுவது இல்லை. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் விசுவாசிகள் நீதிமானாக்கப்படுவதினாலும், பரிசுத்தமாக்கப்படுவதினாலும் இது நிகழ்கிறது. உனது வாழ்வில் இந்தக் காரியத்தைக் குறித்த நீ புரிந்திருக்கிறாயா? நீ இதை அனுபவித்திருக்கிறாயா?

யோவான்ஸ்நானகனின் வருகை இதை தெளிவுபடுத்தியது. அவன் மனந்திரும்பும்படி மக்களை அழைத்த போது, அவனுடைய கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினான். கிறிஸ்து அக்கினியினால் ஞானஸ்நானம் கொடுப்பார். அநீதியுள்ளவர்களை சுட்டெரிப்பார் என்பதை பரிசுத்த ஆவியானவர் மூலமாக யோவான்ஸ்நானகன் அறிந்திருந்தான். மேலும் கிறிஸ்து இறைவனின் ஆட்டுக்குட்டியாக உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பார் என்றும் அறிந்திருந்தான். ராஜாவாகிய கிறிஸ்து தன்னை சிறையிலிருந்து விடுவிக்கும்படி யோவான்ஸ்நானகன் துரிதப்படுத்தவில்லை. அவன் கொல்லப்படும்படி கிறிஸ்து விட்டுவிட்டார். அவர்கள் அவனைச் சிரச்சேதம் பண்ணினார்கள். இறைவனின் அரசு என்பது உலக ஆதாயம் மற்றும் வெற்றியின் மீது கட்டப்படுவது அல்ல. அது மரணத்தருவாயிலும் விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் கட்டப்படும் ஆவிக்குரிய வாழ்வு ஆகும். கிறிஸ்துவில் நிலைத்திருப்பவன் ஒருபோதும் மரிப்பதில்லை.

விண்ணப்பம்: உயிருள்ள ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களை கைவிடவில்லை. கடினமான நேரங்களிலும், மரணத்தருவாயிலும் நீர் எங்களுடன் இருக்கிறீர். நீரே எங்கள் ஜீவன். பாடுகளின் நேரத்திலும் நீர் எங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களை நாங்கள் வெறுக்க எங்களுக்கு கற்றுத்தாரும். உமது பரிசுத்த ஆவியின் வழிகளில் எங்களை நிலைப்படுத்தும். நாங்கள் பொறுமையுடன் பாடுகளை அனுபவிக்கவும், உமது நாமத்தினிமித்தம் பாடுபடுவதற்கு வெட்கப்படாமலிருக்கவும் செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. கிறிஸ்து சிலுவைக்கு போக வேண்டிய அவசியத்தை ஏன் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 09:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)