Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 050 (Jesus’ Transfiguration)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

3. உயர்ந்த மலையின் மீது இயேசு மறுரூபமடைதல் (மாற்கு 9:1-7)


மாற்கு 9:1-7
1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 2 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். 3 அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. 4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 5 அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். 7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

இயேசுவின் வருகைக்கான காரணம் தனது வல்லமையோடும், மகிமையோடும் இறைவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பது ஆகும். பயமுறுத்துகிற, சர்வாதிகார அரசு அல்ல. அது அன்புடனும் பரலோக மகிழ்ச்சியுடனும் வாழும் மக்களைக் கொண்ட அரசு ஆகும். இந்த ராஜ்யம் ஆவிக்குரியது. இது முழுவதும் ஒளி, சத்தியம், நற்செயல்களினால் நிறைந்தது ஆகும்.

பெந்தெகொஸ்தே நாளின் போது இந்த இறைத்திட்டம் நிறைவேறியது. பரிசுத்த ஆவியானவர், காத்திருந்த சீஷர்கள் மீது இறங்கினார். அவர்கள் கோழைத் தனத்தை விட்டுவிட்டு தைரியம் உள்ள மனிதர்களாக மாறினார்கள். சந்தேகத்தை விட்டுவிட்டு விசுவாசிப்பவர்களாக மாறினார்கள். அவர்கள் உலகின் ஒளியாக மாறினார்கள். எல்லோருக்கும் இயேசுவின் நாமத்தை சுமந்து சென்றார்கள்.

இயேசு இந்த மிகப்பெரிய காரியத்திற்கு முன்பு தனது மரணத்தைக் குறித்து வெளிப்படுத்தினார். தமது சீஷர்களை சுயமறுப்பிற்கு அழைத்தார். இறைவனுடைய அரசின் அழகான மகிமையைக் காண்பிக்கும்படி மூன்று பேரை அழைத்துச் சென்றார். செசரியா பிலிப்புவிற்கு அருகில் எர்மோன் மலையில் இச்சம்பவம்(8:27) நடந்தது என்று சில விளக்கவுரையாளர்கள் நம்புகிறார்கள்.

அங்கே இயேசு ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா, பரிசுத்தமுள்ளவர், பாவமற்றவர், சூரியனைவிட பிரகாசிப்பவருமாகிய கிறிஸ்துவாகத் தோன்றினார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய வஸ்திரங்கள் முழுவதும் வெண்மையாய் இருந்தது. இது முழுமையான பரிசுத்தத்தின் அடையாளமாக உள்ளது. அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் இதை அனுபவிக்க முடியும். இந்த பரிசுத்தமாகுதல் இல்லையெனில், நாம் இறைவனுக்கு முன்பு நிற்கத் தகுதியற்றவர்கள்.

நமது உலகில் உள்ள தற்கால பரிசுத்த விசுவாச சந்ததிகளை மட்டும் உள்ளடக்கியுள்ளது அல்ல கிறிஸ்துவின் ராஜ்யம். கர்த்தருக்குள் மரித்தவர்கள் உண்மையில் மரிக்கவில்லை. அவர்கள் இறைவனுடன் நித்திய பரிசுத்தத்தோடு வாழ்கிறார்கள். இந்த மறுரூப மலையில் நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாக மோசே சீஷர்களுக்குத் தோன்றினார். தீர்க்கதரிசிகளின் பிரதிநிதியாக எலியா தோன்றினார். அவமானம் மற்றும் சுய மறுப்பின் வழியையும், சிலுவையையும் இயேசு தெரிந்துகொண்டதினால், அவரே மெய்யான கிறிஸ்து என்பதை இவர்கள் சாட்சி பகிர்ந்தார்கள்.

நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகள் வெளிப்படுத்திய இயேசுவை, இந்த இரண்டு சாட்சிகளும் பயந்திருந்த சீஷர்கள் முன்பு தோன்றியதின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். சபிக்கப்பட்ட சிலுவைக்கு அவர் செல்வது தான் உலகை மீட்கும் ஒரே வழி ஆகும்.

இந்தப் பரலோக ஒளியின் பிரசன்னத்தில், ஒவ்வொரு மனிதனின் இருதயமும் இறைவனுடன் நெருங்கி வாஞ்சிப்பதை பேதுரு காண்பித்தான். இந்த நிகழ்ச்சிக்கு சற்று முன்பு இயேசு பேதுருவை “சாத்தான்” என்று அழைத்தார். ஆனால் அப்போஸ்தர்களில் மிகவும் பிரதானமான இவன் வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டதைப் போல, மற்ற மக்களுக்கும் வெளிச்சத்தைக் கொண்டு செல்ல விரும்பினான். கிறிஸ்து பெந்தெகொஸ்தே நாளில் இதை அவனுக்கு அனுக்கிரகம் பண்ணினார். வாழ்வு, வல்லமை, அன்பு நிறைந்த பரிசுத்த ஆவியின் ஆலயமாகத் திகழந்தனர்.

ஜென்ம சுபாவ மனிதன் இறைவனுடைய மகிமையைக் காண இயலாதவனாக இருக்கிறான். இறைவன் தன்னை மகிமையின் ஒளியுடன் வெளிப்படுத்தும் தருணத்தில் அவன் அதிர்ச்சியுற்று, குழப்பமடைந்து, பயந்து, செத்தவனைப் போல விழுகிறான். சீனாய் மலையில் மின்னல் மற்றும் இடிகளின் மத்தியில் அவர் தோன்றியது போல இப்போது வெளிப்படவில்லை. பரிசுத்தமான அன்பின் நற்செய்தியை அறிவிக்கும் இத்தருணத்திலும் அவர் மகிமையை வெளிப்படுத்தினார். பரிசுத்தமான இறைவன் இயேசுவே தமது ஒரே பேறான குமாரன் என்பதை மனிதர்களின் பிரதிநிதிகளுக்கு தனிப்பட்ட விதத்தில் சாட்சியிட்டார். அவர் மோசேயைவிடவும், தீர்க்கதரிசிகள் அனைவரையும் விடவும் பெரியவர். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜீவனுள்ளவர், ஜீவனைத் தருபவரான இயேசு மரிப்பது என்பது கூடாத காரியம். ஆனாலும் அவர் மனப்பூர்வமாக தன்னைத் தாழ்த்தினார். நம் மீதான இறைவனின் கோபாக்கினையை ஏற்றுக்கொண்டு நமக்காகப் பாடுபடுவதை தெரிந்துகொண்டார். அவர் தமது சீஷனின் ஆலோசனையை தள்ளிவிட்டு, சிலுவைக்குச் சென்றார்.

முதலாவது யோர்தான் நதியில் ஞானஸ்நானம் எடுத்த போது, அவர் தன்னைத் தாழ்த்தினார். சிலுவைக்கு செல்லும் படியான தனது உறுதியான முடிவை அவர் அறிவித்த போது, பிதாவாகிய இறைவன் முழு திருப்தியடைந்தவராக இப்படிச் சொன்னார். “இவர் என்னுடைய நேச குமாரன். இவருக்குச் செவி கொடுங்கள்” நமக்குப் பதிலாக அவர் மரிக்க வேண்டும். அவர் உலகை மீட்கின்ற இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவர். நமக்கு அவரே மகிமையைத் தருகிறார். இறைவனின் குமாரன் சிலுவையில் மரித்தார். அவரில் அன்பு இறைவன் மாம்சமாக வெளிப்பட்டார். மனிதர்களுக்கு சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர வேறு எவராலும் இரட்சிப்பு இல்லை. அவருடைய வார்த்தையைக் கேட்டு அவரை விசுவாசிப்பவர்கள் புதுவாழ்வைக் கண்டடைகிறார்கள். இறைவனின் பிள்ளைகளோடு இணைகிறார்கள். இறைவனின் அன்பால் நிரப்பப்படுகிறார்கள்.

விண்ணப்பம்: மகிமையுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீரே எனது ராஜா. எனது அசுத்தங்கள், பாவங்களை மன்னியும். உமது பரிசுத்தத்தினால் என்னை உடுத்துவியும். உமது மகிமை என்னில் தங்கட்டும். அப்போது உமது பரிசுத்த ஆவியினால் நான் மாற்றம் அடைவேன். சுயநலத்தை ஒழித்து பிறர் மீது அன்பு செலுத்துவேன். உமது வல்லமையினால் எங்களை சுற்றியிருப்பவர்களின் இருதயங்களை ஆட்கொள்ளும். அப்போது அவர்கள் மாற்றம் அடைந்து, உமது ஆவியின் ராஜ்யத்தில் இன்று பிரவேசிப்பார்கள். ஆமென்.

கேள்வி:

  1. இயேசுவின் சீஷர்கள் கண்ட “இயேசுவின் மறுரூபமடைதலின்” முக்கியத்துவம் என்ன?

மனன வசனம்:
“இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்”
(மாற்கு 9:7)

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 09:16 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)