Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 042 (Jesus and the Syro-Phoenician Woman)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

14. இயேசுவும் சீரோபெனிக்கியா பெண்ணும் (மாற்கு 7:24-30)


மாற்கு 7:24-30
24 பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. 25 அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். 26 அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். 27 இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 28 அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 29 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். 30 அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.

இறைவனின்றி மனிதன் சில சமயங்களில் மிருகங்களைப் போல நடந்துகொள்கிறான். இச்சைகள் மற்றும் பகையினால் நிறைந்திருக்கிறான். ஆனால் உண்மையில் இறைவன் தமது மகிமையின் சாயலில் நம்மை முதலாவது படைத்திருந்தார். நமது வாழ்வில் அவருடைய அன்பைத் தந்திருந்தார். ஆனால் மனிதன் இறைவனை விட்டு விலகி, அசுத்த ஆவிகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் போது, அவன் தனது சரீரத்தை அசுத்த எண்ணங்களினால் திருப்திப்படுத்துகிறான். தீய ஆசைகள் அவனை ஆட்கொண்டு, அவன் விரும்புவதை செய்கிறான். அவன் ஆபத்து நிறைந்த ஊளையிடும் நாயைப் போல மாறுகிறான்.

பன்றிகள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றும்படி செயல்படுவது, காட்டு மிருகங்கள் கொடுமையாய் ஒன்றையொன்று தாக்குவது ஆகியவற்றைப் போல மனிதர்கள் செயல்படுவதைக் காணும் வரைக்கும் ஒரு அறிவு சார்ந்த மனிதன் அதை நம்புவதில்லை.

யூதர்கள் இயேசுவைக் கொல்ல முயற்சித்தார்கள். எனவே அவர் லெபனோனுக்குச் சென்றார். புதிய இருதயம் இல்லாமல் பாவிகள் அசுத்தமுள்ளவர்களாகவும், நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகவும் இருக்கிறார் என்பதை இயேசு தெளிவுப்படுத்தியிருந்தார். முன்னோர்களுக்கு அளித்த வாக்குத்தத்தத்தின்படி பாவம் நிறைந்த, எதிர்த்து நிற்கின்ற யூதர்களுக்குத் தான் முதலாவது தமது குமாரனை இறைவன் அனுப்பினார். ஆனால் தோராவைப் பின்பற்றிய அநேகர் கிறிஸ்துவின் அழைப்பை புறக்கணித்தார்கள். அவரை சிலுவையில் அறைந்தார்கள். பரிசுத்த ஆவிக்கு எதிராக இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். அப்போது இறைவன் இரட்சிப்பின் கதவை புறவின மக்களுக்குத் திறந்தார். தமது மந்தைக்குள் எல்லா தேசத்தாரையும் அழைத்தார்.

லெபனோனைச் சேர்ந்த ஓர் ஏழைப்பெண் இயேசுவின் வல்லமை, அன்பை விசுவாசித்தாள். அவருடைய மகிமையை அறிக்கையிட்டு, அவரை ஆராதித்தாள். மற்ற மக்களைப் போலவே, அவளுடைய இருதயமும் அசுத்தமாக இருந்தது. ஆனாலும் அவள் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டாள். அவள் கிறிஸ்துவிடம் மிகவும் தாழ்மையுடன் வந்தாள். இயேசுவின் கண்டனத்தை அவள் ஏற்றுக்கொண்டாள். இறைவனுடைய ராஜ்யத்தை யூதர்கள் ஏற்றுக்கொள்வதைவிட புறவினத்தார் அதிக ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்வதை இயேசு கண்டார். புறவினத்தார் மத்தியில் இரட்சிப்பிற்காக ஆயத்தம் பண்ணப்பட்டவர்களுக்குள் பரிசுத்த ஆவியனாவர் தாழ்மையைக் கொண்டு வந்தார். அந்தப் பெண்ணின் விசுவாசத்திற்கு இயேசு பதில் அளித்தார். அவளுடைய மகளை துன்புறுத்திய அசுத்த ஆவியை வெளியேறும்படி இயேசு கட்டளையிட்டார்.

உலகளாவிய இரட்சிப்பின் வரலாற்றில் இந்த சம்பவத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியுமா? புறவினத்தார் மத்தியில் உண்மையான இறைவனை ஏற்றுக்கொண்ட முதல் பெண் இந்த லெபனோனியப் பெண் ஆவாள். இறைவனுடைய வல்லமை செயல்படும்படியாக, அவள் பாதையை ஆயத்தப்படுத்தினாள். அவளைப் போல நீங்களும் உங்களைத் தாழ்த்துவீர்களா?

இன்று உலகம் முழுவதிலும் கிறிஸ்துவின் நற்செய்தி பரவியிருக்கிறது. தனது மறைவான பாவங்களை இறைவனுக்கு முன்பு அறிக்கையிடுகிற அனைவரும் நிலைவாழ்வைப் பெறுகிறார்கள். இறைவனுடைய குடும்பத்தில் இணைகிறார்கள். யூதர் அல்லது புறவினத்தார் யாராக இருந்தாலும் சரி, கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் புதிய உடன்படிக்கையின் கீழ் வருகிறார்கள். கிறிஸ்து இழந்துபோனவர்களை, அசுத்தமானவைகளை ஏற்றுக்கொள்கிறார். தமது இரத்தத்தினால் அவர்களை தூய்மையாக்குகிறார். இறைஅன்பு மற்றும் சமாதானத்தினால் அவர்களை நிரப்புகிறார். ஆவிக்குரிய வாழ்வில் நீ வளருகின்றாயா? அல்லது உன் வாழ்வில் விசுவாசம் குறைவுபடுகின்றதா?

விண்ணப்பம்: பிதாவே, நாங்கள் எங்கள் இருதயங்களில் மிருகங்களைப் போல கோபத்துடனும், வெறியுடனும் இருப்பதை அறிக்கையிடுகிறோம். எங்களில் தங்கியிருக்கும் தீமையை எங்களுக்கு மன்னியும். உமது குமாரனின் அன்பு, தூய்மை, பொறுமையினால் எங்களை நிரப்பும். நாங்கள் மற்றவர்களை மன்னிக்க உதவும். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வைத் தாரும். எங்கள் நண்பர்கள், உறவினர்களை பெருமை என்ற பாவத்திலிருந்து விடுவியும். உமது பரிசுத்த ஆவியானவர் அவர்களில் தங்குவதன் மூலம் அசுத்தமான எண்ணங்கள் அவர்களை விட்டு விலகட்டும். ஆமென்.

கேள்வி:

  1. சீரோ-பேனிக்கியா பெண்ணின் விசுவாசத்திற்கு பதில் அளித்து இயேசு செய்த அற்புதத்தின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 03:49 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)